74 வருடங்களாக அபிவிருத்தியடையும் நாடாகவே இந்த நாடு திகழ்வது ஏன்? | தினகரன் வாரமஞ்சரி

74 வருடங்களாக அபிவிருத்தியடையும் நாடாகவே இந்த நாடு திகழ்வது ஏன்?

இலங்கை தனது 74வது சுதந்திர தினத்தை அனுட்டித்துள்ளது. சாதனைகள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக எதையும் கூறமுடியாத நிலையில் சவால்களின் பட்டியல் மட்டும் நீண்டு செல்லும் காலப்புறச்சுழலில் இம்முறை சுதந்திர தினம் வந்துசென்றிருக்கிறது. தியாகங்களைச் செய்யதயாராகுமாறு நாட்டு மக்களுக்குசெய்தியொன்றும் விடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு புறம் கோவிட் பெருந்தொற்றின் நவீன பிறழ்வுகள் நாட்டில் பெருகி வருகின்றன. மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளன. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. சாதாரண மக்களால் நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்தத் தேவையான வருவாயை பெற முடியாத நிலை உருவாகி வருகிறது.  

உற்பத்தித் துறைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களையும் ஏனைய உள்ளீடுகளையும் இறக்குமதி செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தொழிற்றுறைத் தகவல்கள் கூறுகின்றன. நிதி நடவடிக்கைகள் டொலர் நெருக்கடி காரணமாக தினசரி சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. நாட்டில் மின்சாரத் துண்டிப்புகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டும் அறிவிக்கப்படாமலும் நடைபெறுகின்றன.

ஒரு இறுக்கமான பொருளாதார சூழலில் நாடும் அதன் மக்களும் பயணிப்பது அனுபவரீதியாக ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிகிறது. அரசியல்வாதிகளுக்கு அது தெரிகிறதா இல்லையா என்பது தான் தெரியாத ஒன்றாகக் காணப்படுகிறது.  

1948இல் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டபோது அப்போது நிலவிய அளவு கோல்களின் அடிப்படையில் ஆசியாவிலேயே வளமான நாடுகளில் ஒன்றாக இலங்கையை அடையாளம் காட்டினார்கள். பிரித்தானிய சாம்ராச்சியத்தின் கீழிருந்த நாடுகள் பலவற்றின் மத்தியில் சிறப்புச் சலுகைகளை பெற்று நல்ல பிள்ளையாக நடந்து கொண்ட நாடாக இலங்கை இனங் காணப்பட்டிருந்தது.  

பிரித்தானியாவில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்பட்ட அபிவிருத்திகள் உடனடியாகவே இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையின் சனநாயக ஆட்சி முறைமை, அதன் அடிநாதமாகிய மக்களின் வாக்குரிமை, ரோமன் டச்சு நீதிப்பொறிமுறை, நாட்டின் நிருவாகக் கட்டமைப்புகள், பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான உட்கட்மைப்புகள் போன்ற ஒரு நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் தன்னை கட்டமைத்து வளர்த்துக்கொள்ளத் தேவையான முன்நிபந்தனைகள் அத்தனையையும் ஒருங்கே பூர்த்தி செய்து கொண்டிருந்த ஒரு நாடாக இலங்கையை நாம் தயக்கமின்றி அடையாளம் காட்ட முடியும்.  

இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவது பற்றி பிரித்தானியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மீது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இலங்கையின் அப்போதைய பொருளாதார நிலைமைகள் குறிப்பாக அந்நியச் செலாவணி நிலைமைகள் பிரித்தானியாவை விட சிறப்பாக இருந்ததாகச் சுட்டிக்காட்டியிருந்தனர்.  

அத்துடன் இலங்கை சுயமாக ஆட்சிபுரியத் தகுதியான கட்டமைப்புகளையும் மக்களையும் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர். ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் வாண்மை பற்றியும் ஆங்கிலமொழிப் புலமை பற்றியும் சிலாகித்துப் பேசியிருந்ததுடன் அவர்களை பிரித்தானிய சாம்ராச்சியத்தின் நிர்வாகத்துடன் இணைத்துக்கொள்வது பற்றியும் ஆலோசித்திருந்தனர். அத்துடன் இலங்கை இனரீதியில் பிளவுறக்கூடிய அபாயம் பற்றியும் சிங்களவர்கள் தமிழர்களை ஆட்சியதிகாரத்தில் இணைத்துக் கொள்ளாவிட்டால் ஏற்படக்கூடிய அபாய நிலை குறித்தும் எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர்.  

எனவே பிரித்தானியர்களின் பிரித்தாளும் தந்திரத்தால் இலங்கையில் இனப்பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறுவது மிகப்பெரிய பொய்யாகும். ஆங்கில மொழிப்புலமையுள்ள வாசககர்கள் பிரித்தானியப் பாராளுமன்ற ஹான்சாரட் குறிப்புகளை இணையவாயிலாகத் தேடினால் இலத்திரனியல் பதிவுகளை தரவிரக்கம் செய்து செய்து வாசித்துப்பார்க்கலாம். 

எல்லாவற்றுக்கும் மேலாக பிரித்தானியர் இலங்கையை விட்டுச் செல்லும் போது இங்கிருந்து எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட்டதாகப் பலரும் கதையளக்கின்றனர். உண்மையில் சுதந்திர இலங்கையின் அபிவிருத்தி நிதித்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவசியமான பணத்தையும் பிரித்தானியர்கள் விட்டுச் சென்றிருந்தனர்.

அப்போதைய மதிப்பில் அதன் பெறுமதி சுமார் 997மில்லியன் இலங்கை ரூபாய்களாக இருந்தது. 1948இல் இந்தத்தொகை மிகப்பெரிய ஒரு அளவு என்பது வெளிப்படையானது.

1953இல் உலக வங்கியானது இலங்கைப் பொருளாதாரத்தை அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்து ஒரு அகராதியின் பருமனில் வெளியிட்ட வெகு விபரமான ஆய்வறிக்கையில்,  இலங்கை தனது பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான போதியளவு நிதிவளத்தைக் கொண்டிருப்பதாகவும் ஆகவே அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு நிதி நெருக்கடிகள் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தது. அதிகரித்துச் செல்லும் சனத்தொகையும் உணவுக்கான செலவினங்களும் சவாலாக அமையும் என அதில் குறிப்பிடப்பட்டது.  இந்த அறிக்கையும் உலக வங்கியின் இணையத்தளத்தில் இருக்கிறது.

இவ்வாறு வேறெந்தக் குடியேற்ற நாடும் கொண்டிராத அபிவிருத்தியின் ஆரம்பத்திற்கு அவசியமான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்த ஒரு நாடு 74வருடங்களின் பின்னரும் ஒரு அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடாகவே தொடர்வது யாருடைய குற்றம்? பிழையான பொருளாதாரக் கொள்கைத் தெரிவுகளும் உலக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு மாற்றங்களை மேற்கொள்ள மறுத்து அடம் பிடிக்கும் போக்குகளும்.

இலங்கை ஒரு பல்லின சமூகம் என்பதையும் பன்மொழி பேசும் பலமதங்களைப் பேணும் பல்வேறு கலாசாரங்களின் ஐக்கியம் என்பதையும் புரிந்து அனைவரையும் அரவணைத்துச் செல்ல மறுக்கும் சிந்தனைப் போக்குகளும் இந்நாட்டைச் சீரழித்துக் குட்டிச் சுவராக்கிவிட்டிருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடியாத ஒரு நாடாக இலங்கை இன்னமும் இருக்கிறது.

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கத் தேவையான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமாக தீர்வைக்கண்டு அனைத்து இனங்களும் தத்தமது சமய கலாசார தனித்துவங்களை பேணி மதித்து வாழக்கூடிய சட்டரீதியான புறச்சூழலை உருவாக்கி நடைமுறைப்படுத்தி உலக சமூகம் மதிக்கக்கூடிய ஒரு நாடாக இலங்கையைக் கட்டியமைக்க முயல்வதே நீண்டகாலரீதியில் இலங்கையின் நிலைத்த அபிவிருத்திக்கும் நிலைத்திருக்கும் அமைதிச் சூழலுக்கும் வழிவகுக்கும். அதைவிடுத்த மாற்றுத் தெரிவுகள் இலங்கைக்கு இல்லை. அத்தகைய தெரிவுகள் இன்னும் பல தலைமுறைகளுக்கு இலங்கையை ஒரு அபிவிருத்தியடைந்து வரும் நாடாகத் தொடர்ந்து வைத்திருக்கவே உதவும்.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments