13க்குள் எமது உரிமையை முடக்குகின்றோம் என்று சொல்வது விதண்டாவாதம் | தினகரன் வாரமஞ்சரி

13க்குள் எமது உரிமையை முடக்குகின்றோம் என்று சொல்வது விதண்டாவாதம்

அரசாங்கம் சமஷ்டி தீர்வைத் தரப் போவதில்லை. நாங்கள் கனவில் வாழ்கின்றோம்.என்கிறார் இலங்கைத் தமிழரசு கட்சியின் துணைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம்.

அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வி பின்வருமாறு:

 

கேள்வி:- 13வது திருத்தம் குழப்பம் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- 13வது திருத்தம் எமது தீர்வாக அமையாது என அன்றைய தலைவர்களே ராஜீவ் காந்தியிடம் கூறியிருக்கின்றார்கள். அதே நிலைப்பாட்டில் தான் விடுதலைப் புலிகளும் இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் 13வது திருத்தத்தை எதிர்த்தார் என்று சொல்வதில் உடன்பாடில்லை. ஏனெனில் நான் அதற்குள் சம்பந்தப்பட்டனான். 13வது திருத்தம் ஒரு தீர்வில்லை என்பது அனைவரினதும் முடிவு. அதை எதிர்க்கின்றோம் நீக்குகின்றோம் என்பதில் நான் உடன்படவில்லை. 13வது திருத்தம் அரசியலமைப்பில் உண்டு அதை அமுல் செய்ய வேண்டுமென்று கூட்டம் கூடி, ஊடகங்களுக்கு கூறி இந்தியாவிடம் கேட்கத் தேவையில்லை என்பதே எமது பதில். இது தேவையற்ற முயற்சி என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

இந்தியாவை கோர வேண்டிய நிலை ஏற்பட்டால் அமைதியாக மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கலாம். அரசியலாக்கி 6 கட்சியோ 7 கட்சியோ இணைந்தது, அதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழரசு கட்சியையும் சேர்த்துத் தான் சொல்கின்றேன். இந்தியா மிகப்பெரிய நாடு, இந்தியா எங்களை கேட்டு ஒன்றுமே செய்யவில்லை. நாங்கள் கேட்டதையும் செய்யவில்லை.

எனவே இதை குழப்பியது துரதிர்ஷ்டமானது என்பதே எனது கருத்து. 13வது திருத்தத்தில் அதிகாரங்கள் இல்லையென்று சொல்கின்றார்கள். 13வது திருத்தத்தால் உருவாக்கப்பட்ட மாகாண சபை பாராளுமன்றம் அல்ல. 13க்குள் எமது உரிமையை முடக்குகின்றோம் என்று சொல்வது விதண்டாவாதம். 1988 இல் இருந்து இன்றுவரை அதிகாரப்பகிர்விற்காகப் போராடித்தானே வந்திருக்கின்றோம். இதை ஒரு பெரிய விடயமாக்கி, இந்தியா கேட்டதென்று, இந்தியா கேட்டிருந்தால், சம்பந்தன் ஐயாவிடம் கேட்டிருப்பர்கள். ஏனென்றால் அவர் தேசிய கட்சியின் தலைவர். 7 கட்சியிடம் இந்தியா கேட்டதென்று இந்தியாவையும் அவமானப்படுத்தி, தனித்தனி கட்சியாக கேட்டிருக்கலாம் தானே, ஏதோ சாதனையென்று, உள்ளதையும் கிண்டிவிட்டது போல, நிராகரிப்பதென்பது அராசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடம்கொடுப்பதை போல உள்ளது. புதிய அரசிலமைப்பு வந்தால், மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென்பது அரசாங்க மட்டத்தில் பலமாக உள்ளது. சர்வதேசம் என்றால் யார் அந்த சர்தேசம். இந்தியாவை மீறி ஒரு சர்வதேசமும் இலங்கைக்கு வராது.

13வது திருத்தம் எமது அரசியல் அபிலாஷைகளுக்கு எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு அல்ல. 13வது திருத்தத்தில் பல விடயங்கள் உள்ளன. அது எமது உரிமையை சரணாகதி செய்வதாக அல்ல. 13வது திருத்தத்தை நிராகாரிக்கவும் இல்லை. ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.இது தான் தீர்வென்றல்ல. ஒரு கட்டமைப்பு உச்ச கட்ட தீர்வை பரிசீலிக்கத் தயார் என்று சொன்னவர். அவரை இந்த கூட்டுக்களில் இழுக்கத் தேவையில்லை 'பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டிய கோவணமும்' இல்லாமல் போகப் போகின்றது.

இருக்கின்ற மாகாண சபையில் சாதிக்கக் கூடியவற்றைக் கூட நாங்கள் செய்யவில்லை. செய்யவிடவும் இல்லை. 13வது திருத்ததில் தவறில்லை.

 

கேள்வி:- சம்பந்தன் ஐயா கையொப்பமிட்டுள்ளார் அதை தவறென்று சொல்கின்றீர்களா?

பதில்:- தேவையற்ற விடயம். கையொப்பமிடாவிட்டால் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று சொல்லிவிடுவார்கள். இந்தியா சொன்னதென்றால், இந்தியா முதலாவதாக சொல்ல வேண்டியது சம்பந்தருக்கு. உங்களுக்கு அல்ல . எமது 10 கட்சி கூட்டத்தைக் குழப்பியது ரெலோ கட்சியினர் தான். பின்னணி யார். 7 கட்சிக்காரர்களும் கையொப்பமிட்டதும் வந்துவிட்டதா? இல்லையே? நாங்கள் தான் முதன்முதலில் சமஷ்டி கேட்டோம். இன்றும் இணைப்பாட்சியைத் தான் கேட்கின்றோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. 13 வேண்டாம்,என்றால் இருக்கிறதையும் இழந்துவிட்டு நிற்க வேண்டியது தான். வடகிழக்கு இணைந்தது தான் மாகாண சபை சமஷ்டி அமைப்பு வெறேங்கும் சேர்ந்தா வருகின்றது. இந்த தாயகத்தில் தானே மாகாண சபை முறைமை வரப் போகின்றது. சமஷ்டி தான் தீர்வு அது தான் எங்களின் கோரிக்கை. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

 

கேள்வி:- தந்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திடம் இருந்து சமஷ்டியைப் பெற முடியும் என நினைக்கின்றீர்களா?

பதில்:- இருக்கிறதை வைத்துக்கொண்டு சமஷ்டிக்காக போராடலாம். உடனடியாக நிறைவேறாவிட்டாலும், பின்னர் நிறைவேறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கலாம். உடனடியாக அதற்கான வாய்ப்பு இல்லை.

 

கேள்வி:- இந்த காலகட்டத்தில் 13வது திருத்தம் தொடர்பான இந்த சர்ச்சைகளால், அரசாங்கம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் கரிசனை கொள்ளும் என நினைக்கின்றீர்களா?

பதில்:- அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இணையவில்லை. அவர்கள் சில விடயங்களைக் கையாள்வார்கள். சர்வதேச ரீதியாக கையாள்வார்கள். இந்திய உயர்ஸ்தானிகரை நாங்கள் சந்தித்த போது, 46/1 தீர்மானத்தின் அடிப்படையில் எதுவுமே அவர்கள் செய்யவில்லை. பங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவில்லை என கூறியிருந்தோம். ஆனால், அரசாங்கம் தற்போதுள்ள கடுமையான போக்கில் இருந்து நடுநிலையான போக்கிற்கு வரலாம். சமஷ்டி என்பதை இந்த அரசாங்கம் தராது. நாங்கள் தன்னாட்சி சம்பந்தமான தீர்மானத்தை எடுக்க முடியும். சுயநிர்ணய உரிமையைப் பற்றி 1944 ஆம் ஆண்டே பேசிவிட்டோம். இருக்கிறதை வேண்டாம் என்று சொல்வதைப் போன்ற முட்டாள் தனம் ஒன்றுமில்லை. நீங்கள் ஒரு தளத்தில் இருந்து கொண்டு சமஷ்டி தான் தேவை.இணைப்பாட்சி தான் வேண்டும் என்று கேட்பதில் தப்பில்லை. இருப்பதையும் நாங்கள் செய்யவில்லை என்பதைக் கூட யாரும் கணிக்கவில்லை. அதிகாரம் எங்களிடம் இருக்கு தானே. கடைசி ஒரு தடைக்கல்லாக கூட நாங்கள் இருந்திருக்கலாம்.

 

கேள்வி:- ஜெனிவா தீர்மானங்கள் அமர்வுகள் என தமிழ் தரப்புக்கள் பேசுகின்றார்கள். ஜெனிவா அமர்விற்குள் அரசியலமைப்பு வெளிவரும் என நம்புகின்றீர்களா?

பதில்:- மார்ச் மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பு வர வாய்ப்பு இல்லை. நாங்கள் தான் ஜெனிவா தீர்மானம் அது இது என்று கனவில் வாழ்கின்றோம். அரசாங்கம் அதில் அக்கறை கொள்ளவில்லை. அது தான் உண்மை என்றார்.

சுமித்தி தங்கராசா

Comments