கலவர பூமியாக மாறிய கொழும்பு! | தினகரன் வாரமஞ்சரி

கலவர பூமியாக மாறிய கொழும்பு!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரநெருக்கடி மற்றும் ஸ்திரமற்ற அரசியல்சூழல் என்பவற்றால் நாடு பல்வேறுபிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதுடன், நாட்டின்அபிவிருத்தியானது பல வருடங்கள் பின்னோக்கித்தள்ளிச் செல்லப்பட்டுள்ளது. அரசியல் நோக்கத்தைக்கருத்திற் கொண்டு எடுக்கப்பட்ட சில தீர்மானங்களும், அரசியல் சக்திகள் தமது பலத்தை நிரூபிக்கின்றோம்என்ற போர்வையில் மக்களை உசுப்பேற்றும்வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இந்தக்குழப்பகரமான சூழ்நிலைக்கு எண்ணெய்ஊற்றுவதாக அமைந்து விட்டன.

கொழும்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அரசியல் அரசியல் கூட்டம் நாட்டின் பதற்றமான நிலைமையை மோசமடையச் செய்ததுடன், நிச்சயமற்ற சூழலொன்றுக்கு வழிவகுத்திருந்தது என்பதே உண்மை. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள போதிலும், நாட்டில் நிலவி வருகின்ற அரசியல் நெருக்கடியானது இன்னும் முடிவுக்கு வரவில்லையென்பதை மறுக்க முடியாதுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் கடந்த திங்கட்கிழமை காலை தனது பதவி விலகல் முடிவை அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இது தொடர்பான ஊகங்கள் நாடெங்கும் பரவியிருந்தன. ஆனால் அவர் பதவி விலகலை அறிவித்தாலும், அது பாரிய வன்முறையொன்றுக்குப் பின்னரான அறிவிப்பாக அமைந்தமை துரதிர்ஷ்டமானதாகும்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருந்த அரசியல்வாதிகள் தமக்கு ஆதரவாகவும் மக்கள் இருக்கின்றார்கள் என்பதைக் காண்பிப்பதற்காக கையாண்ட முறையானது நிலைமைகளைச் சிக்கலாக்கி விட்டது என்றே கூற வேண்டும்.

கடந்த திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி அவருக்கு விசுவாசமான அரசியல்வாதிகள் மேற்கொண்ட முயற்சியே பெரும் களேபரத்தில் முடிந்தது. அந்த அரசியல்வாதிகளில் முன்னாள் அமைச்சர்கள் மாத்திரமன்றி உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்படப் பலரும் அடங்கியிருந்தனர்.

அவர்கள் தமது பகுதிகளிலிருந்து ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு கொழும்புக்கு வந்திருந்தனர். தனியார் பஸ்கள், இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ்கள் எனப் பல வாகனங்களில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் முதலில் அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதேசமயம் அமைதியான முறையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களைக் குழப்பும் நோக்கில் குண்டர்களும், பாதாள உலகக் குழுவினரும் கொழும்புக்கு அழைத்து வரப்படவிருப்பதாக முன்னைய தினமே ஊடகவியலாளர்கள் சிலர் எச்சரித்திருந்தனர். இவ்வாறான பின்னணியில் கடந்த திங்கட்கிழமை காலை கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட மஹிந்த ஆதரவாளர்கள் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கியிருந்தனர்.

அலரி மாளிகையில் அரங்கம் நிறைந்த கூட்டத்தின் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். அங்கு உரையாற்றிய ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ போன்றவர்கள் அங்கிருந்த கூட்டத்தவர்களை உசுப்பேற்றும் வகையில் உரையாற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுவே அன்றைய தினம் வன்முறைக்கு வழிவகுத்து விட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் செல்வதற்கான நேரம் இதுவே என்று ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ அங்கு கூறியிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றுகையில், எவ்வாறான சவால்களையும் தான் எதிர்கொள்ளத் தயார் என்றும், மக்களுக்காக எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்ய முடியும் என்றும் கூறியிருந்தார்.

இவர்கள் மாத்திரமன்றி இங்கு உரையாற்றிய பவித்ரா வன்னியாராச்சி போன்றவர்களும் தமது ஆதரவாளர்களை உசுப்பேற்றும் விதத்தில் பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கூட்டம் முடிவடைந்ததும் ஆக்ரோஷமாக வெளிக்கிளம்பிய மஹிந்த ஆதரவார்கள், அலரிமாளிகைக்கு முன்னால் கூடாரம் அமைத்து அமைதியான முறையில் போராடி வந்தவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். இரும்புக் கம்பிகள், மரக்கட்டைகளால் அங்கிருந்தவர்களைத் தாக்கியதுடன், கூடாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

இவற்றை அடித்து நொருக்கி விட்டு காலி முகத்திடல் நோக்கி அந்தக் குழு முன்னேறியது. இவர்களைத் தடுப்பதற்குப் பொலிஸார் கடுமையான முயற்சிகள் எதனையும் முன்னெடுக்கவில்லையென்பதுதான் அங்கு பலராலும் அவதானிக்கப்பட்ட விடயமாகும்.

போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்களைத் தடுக்க பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளுக்கும், வன்முறைக் கும்பலைத் தடுப்பதற்குப் பொலிஸார் மேற்கொண்டு முயற்சிகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசத்தைக் காண முடிந்ததாக சம்பவத்தை நேரில் கண்டோர் கூறுகின்றனர்.

ஆக்ரோஷமாக முன்னேறிச் சென்ற அவர்கள், காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களையும், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் சரிமாரியாகத் தாக்கினர். சில நிமிட நேரங்களில் காலிமுகத்திடல் கலவர பூமியாக மாறியது. பொலிஸார் மிகவும் தாமதாக நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், ஒருசில கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதல்களால் எதிர்ப்பை வெளியிட்டு வந்த இளைஞர், யுவதிகள் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து கேள்வியுற்ற ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பிரமுகர்கள் உடனடியாக காலிமுகத்திடலுக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு வந்தார். இருந்த போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சஜித்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரைத் தடிகளால் தாக்குவதற்கு முயற்சித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பாதுகாப்பாக அங்கிருந்த வெளியேற்றினர்.

இதற்கிடையில் தாக்குதல்கள் குறித்து கேள்வியுற்று புறக்கோட்டை, கம்பனிவீதி மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலர் காலிமுகத்திடலுக்கு ஓடி வந்ததுடன், தாக்குதல் நடத்திய மஹிந்த ஆதரவாளர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். தப்பியோடிய மஹிந்த ஆதரவாளர்கள் இடைவழியில் ஆங்காங்கே மறித்து தாக்கப்பட்டனர்.

பெரும் எண்ணிக்கையானவர்கள் கங்காராமவில் அமைந்துள்ள பேரை வாவிக்குள் தள்ளி விடப்பட்டனர். 'நிராயுதபாணிகளாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த எமது இளைஞர்கள் மீது ஏன் தாக்குதல் நடத்தினீர்கள்' எனக் கேட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்கள் வாவியிலிருந்து வெளியேறுவதற்கும் இடமளிக்கப்படவில்லை. அன்று இரவு 9மணிக்கு மேலாகவும் அவர்கள் வாவிக்குள்ளேயே தவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மறுபக்கத்தில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினரை ஏற்றி வந்த பேருந்துகள் பல கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் தாக்குதல்களுக்கு உள்ளாகின. இரண்டு பேருந்துகளும், மஹிந்த தரப்பினருக்கு ஆதரவான அரசியல்வாதிகள் சிலரின் வாகனங்களும் பேரை வாவிக்குள் தள்ளி விடப்பட்டன. 20இற்கும் அதிகமான பேருந்துகள் அடித்து நொருக்கப்பட்டு சில தீயிடப்பட்டிருந்தன.

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் பிரதிபலனாகவே பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. அது மாத்திரமன்றி கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வீதிகளில் மறிக்கப்பட்டு சாதாரண பொதுமக்களால் சோதனையிடப்பட்டிருந்தன.

நிட்டம்புவ பிரதேசத்தில் இவ்வாறு சோதனையிடப்பட்ட வாகனமொன்றில் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல காணப்பட்டார். இவருடைய வாகனத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இவர்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார். இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினரும் அவருடைய பாதுகாப்பு அதிகாரியும் உயிரிழந்திருந்தனர்.

இது இவ்விதமிருக்க, அன்றையதினம் மாலையும், இரவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான மற்றும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய வீடுகளை கும்பல்கள் தீயிட்டுக் கொழுத்தியிருந்தன. பல வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியிருந்தன. ஒரு சில மணி நேரத்தில் நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்கனவே திட்டமிட்பட்டவையா என்ற சந்தேகம் வலுவாகக் காணப்படுகிறது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் ஆத்திரமடைந்தவர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இருந்தபோதும் திட்டமிட்ட வகையில் வன்முறைகள்  கட்டவிழ்த்து விடப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

இவ்வாறான வன்முறைகளைத் தொடர்ந்தே திங்கட்கிழமை பிற்பகல் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார். இருந்த போதும் மறுநாள் அதிகாலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகளால் அலரி மாளிகையிலிருந்து வெளியேறிச் செல்ல முடிந்தது. அதேநேரம், திங்கட்கிழமை பிற்பகல் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. முதலில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் ஒரு சில இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சேதங்கள் விளைவிக்கப்பட்டன. இருந்தபோதும் இந்த நிலைமைகள் தற்பொழுது ஒரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கடந்த வியாழக்கிழமை புதிய பிரதமராகப் பதவியேற்றார். நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் பிரதமர் பதவியை அவர் ஏற்றுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ளது. இந்த நிலைமையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் எவ்வாறு நிலைமைகளைச் சரிசெய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சம்யுக்தன்

Comments