எங்கள் வீட்டைப் பார்க்காதீர்கள்; உங்கள் வீட்டை மட்டும் பாருங்கள்; மூக்கை நுழைத்தால் காயப்படுவீர்கள்-! அகில இந்திய மஜ்லீஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கடும் கண்டனம்!
இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள கல்லூரியொன்றில் நிலவுகின்ற ஹிஜாப் ஆடை சர்ச்சையை துரும்பாக வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுகமாக செயற்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிஜாப் ஆடை சர்ச்சையை பாகிஸ்தான் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தி வருவதாக இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் அவசியமின்றி தலையிடக் கூடாதென்றும் இந்திய முக்கியஸ்தர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்தியாவில் உள்நாட்டு மதமோதல்களைத் தூண்டும் விதத்தில் பாகிஸ்தான் செயற்படுவதாக அகில இந்திய மஜ்லீஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா சம்பந்தப்பட்ட மேற்படி விடயத்தில் பாகிஸ்தானில் இருந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளுக்கு அகில இந்திய மஜ்லீஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளாரர்.
"இது எங்கள் வீட்டுப் பிரச்சினை. இதில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது” என்று உத்தர பிரதேசத்தில் வைத்து ஒவைஸி கண்டிப்பாகக் கூறினார்.
“பாகிஸ்தான் மக்களிடம் நாங்கள் ஒன்றைச் சொல்கிறோம். இங்கே என்ன நடக்கிறது என பார்க்காதீர்கள்! அங்கேயே பாருங்கள். உங்களுக்கு பலூச்சிஸ்தான் பிரச்சினை, உள்நாட்டு சண்டைகள் என பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பாருங்கள். இந்த நாடு என்னுடையது. இது உங்களுடையது அல்ல. இது எங்கள் வீடு. உங்கள் கால் அல்லது மூக்கை இங்கே நுழைக்க முயன்றால் காயமடையும்” என்று ஒவைஸி எச்சரிக்கும் தொனியில் பேசினார்.
ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வரும் ஆதரவான கருத்துகளுக்கு அகில இந்திய மஜ்லீஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கடுமையாக இவ்வாறு எதிர்வினையாற்றியிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க அண்டை நாட்டில் உள்ள பயங்கரவாத குழுக்கள், ஐ.நா வின் தடைக்கு அஞ்சி மனிதநேய அமைப்புகள் போல உருமாறி செயல்பட்டு வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத குழுக்கள் தொடர்பாகவே இக்குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு மனிதநேய அடிப்படையில் சலுகைகள் வழங்கும் போது தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுப்பது முக்கியமாகும். இந்தியாவின் அண்டை நாட்டில், ஐ.நாவினால் தடை செய்யப்பட்டவை உட்பட பல பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.
சில தீவிரவாத அமைப்புகள் மனிதநேய அமைப்புகள் போல உருமாறி, அதன் வாயிலாக பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுகின்றன. பயங்கரவாத தாக்குதலுக்கும், மனித கேடயமாக பயன்படுத்துவதற்கும் ஆட்களை தெரிவு செய்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை விரிவுபடுத்துகின்றன. இவற்றைத் தடுக்க மனிதநேய அடிப்படையில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து ஐ.நா கண்டிப்பாக தீவிர ஆய்வு நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.