![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/21/nw05.jpg?itok=0-TOt66O)
விமர்சனங்களுக்குப் பதிலளிக்க தயாராகும் இலங்கை அரசு!
இலங்கையை சர்வதேச அரங்கில் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக தமிழர் விவகாரத்தை துரும்புச்சீட்டாக பயன்படுத்தும் சில மேற்கு நாடுகள்!
சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கை ஆர்வம்
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கை விவகாரம் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இலங்கை பற்றிய தனது அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சர் பச்லட் சமர்ப்பிக்கவிருக்கும் அதேவேளையில், அதற்குப் பதிலளிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் குறித்து முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு எதிர்வரும் நாட்களில் இலங்கை தனது பதிலை எழுத்து மூலம் அனுப்பி வைக்கவிருக்கும் இன்றைய பரபரப்பான நிலையில், ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தின் விளக்கம் தொடர்பாக அரசுக்கு சாதகமான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜெனீவா மாநாட்டில் நீதி கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடனேயே தாங்கள் இதில் கலந்து கொள்ளவிருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“இலங்கையுடன் நட்புறவுடன் செயற்படும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். இவ்வாறு செயற்படுவதன் ஊடாக பிரச்சினையைத் தீர்க்க முடியும் என நம்புகின்றோம். எதிர்வரும் நாட்களில் ஆரம்பமாகவுள்ள 49 ஆவது அமர்வில் இந்த விடயங்களை முன்வைக்க எதிர்பார்த்திருக்கின்றோம்” என்று அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே புலிகளும் இராணுவப் படையும் போரிட்டமையால் இராணுவத்தினர் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய தேவை கிடையாது என்றும், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக விடயங்களைக் கையாள்வதே பொருத்தமானது என்றும் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சமர்ப்பிக்கும் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் மார்ச் 03ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறான பின்னணியில், சர்வதேசத்துக்கு தமது சார்பில் நிலைமைகளை எடுத்துக் கூறுவதற்காக இலங்கையின் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளது. இக்குழுவில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அலி சப்ரி உள்ளிட்டவர்களுடன் உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ளவிருப்பதாக வெளிவிகார அமைச்சுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சர்வதேசத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் காணப்படுவதாக மேற்கத்தேய நாடுகள் பல குற்றஞ்சாட்டியுள்ளன. இலங்கை தொடர்பான பிரேரணையைக் கொண்டு வந்த பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இதுவிடயத்தில் தமது அக்கறையைக் காண்பித்து வருவதுடன், சில தமிழ் அரசியல்வாதிகளும் வழமைபோன்று இலங்கைக்கு எதிரான தமது பிரசாரங்களை முன்னெடுப்பதில் இப்போது முனைப்புக் காட்டியுள்ளனர்.
இருந்தபோதும் இலங்கை அரசாங்கம் சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதை நாம் மறுக்க முடியாது. 1979ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்தல், யுத்தத்தினால் போரில் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், சட்டத்தரணி ஹிஸ்புல்லா வழக்கில் பிணை வழங்குவது தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டமை போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
இதில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், இதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் பொருட்டு ஒழுங்குப் புத்தகத்திலும் இவ்விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இச்சட்டத்தைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்தத் திருத்தத்தின் ஊடாக தடுத்து வைக்கப்படும் காலம் குறைக்கப்படுதல் உள்ளிட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்துக்கு உறுதியளித்திருப்பதால், தற்பொழுது முன்வைக்கப்படும் சட்டத்திருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்விடயத்தைப் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிப் பேசியிருந்ததுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்துக்களைத் திரட்டும் போராட்டமொன்றையும் ஆரம்பித்துள்ளார். இதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்து வேட்டையில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட மதத் தலைவர்கள் பலரும் தமது கையொப்பத்தை வழங்கியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்த பேச்சுக்கள் எழுத்துள்ளன. அது மாத்திரமன்றி, இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருவேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருந்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதும், சுதந்திர தின உரையின் போதும் இவ்விடயத்தை அவர் வலியுறுத்திக் கூறியிருந்தார்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இழப்பீடுகள் வழங்கும் அலுவலகம் மற்றும் காணாமற் போன ஆட்களுக்கான அலுவலகம் உள்ளிட்டவற்றின் செயற்பாடுகள் முன்னேற்றகரமான நிலையில் காணப்படுகின்றன. இதுபோன்ற சாதகமான விடயங்களை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.
மறுபக்கத்தில் ஒவ்வொரு வருடமும், மார்ச் மற்றும் செப்டெம்பர் ஆகிய மாதங்களாகும் போது தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அக்கறை காண்பிப்பதும், அதன் பின்னர் அவற்றைக் கைவிடுவதும் வழமையான நிகழ்வுகளாக மாறியுள்ளன என்பதையும் மறந்து விட முடியாது.
யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதும் சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகள் எந்தளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளன என்பதற்கான விடை இதுவரை தெளிவாக இல்லை. அதுமாத்திரமன்றி சர்வதேச நாடுகள் தமக்கு சார்பான அரசாங்கமொன்று இலங்கையில் அமையும் போது தமது பிடியை தளர்த்துவதும், தமக்கு சார்பான அரசாங்கமொன்று அமையாதவிடத்து அதன்மீது தமது பிடியை இறுக்குவதையும் நாம் இங்கு அவதானிக்க வேண்டும்.
பூகோள ரீதியாக இலங்கையின் அமைவிடம் மற்றும் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் என்பனவும் இந்த விடயத்தில் தாக்கம் செலுத்துகின்றன. வெறுமனே தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விட வேண்டும் என்பதில் சர்வதேசம் அதீத அக்கறை கொண்டுதான் தமது காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றது என்று கூறிவிட முடியாது.
இருந்த போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமக்கு எப்படியாவது ஒரு தீர்வு கிடைத்து விடாதா என்ற அங்கலாய்ப்பு மக்கள் மத்தியில் காணப்படத்தான் செய்கிறது. இதனை யார் பெற்றுத் தந்தாலும் சரி நீதி கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
எனினும், அரசியல்வாதிகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு மக்களை ஏமாற்றி வருகின்றனரே தவிர நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்குத் தயாராக உள்ளது என பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவை தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழர்களின் பிரச்சினை என்பது தமக்குப் பிடிக்காத அரசாங்கத்தை சர்வதேச அரங்கத்தில் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கான ஒரு துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தப்படக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையில் நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்பாடாக அமைய வேண்டும். அதனை விடுத்து, இலங்கையின் பூகோள அமைவிடத்தை உள்நோக்கமாகக் கொண்டு உலகநாடுகள் காண்பிக்கும் அக்கறையும், அதற்கு எதிர்வினையாற்றும் ஏனைய நாடுகளின் செயற்பாடுகளும் மக்களின் உண்மையான பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்காது என்பதே நிதர்சனமாகும்.