தமிழ்த் தரப்புடன் எவை தொடர்பாக பேசவுள்ளோம் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்த் தரப்புடன் எவை தொடர்பாக பேசவுள்ளோம் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும்

தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வழங்கிய செவ்வி

கேள்வி:- பயங்கரவாத தடைச்சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் குழுவினரால் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதே அது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- கையெழுத்தை யாரிடம் சமர்ப்பிப்பது என்பது பற்றி இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இது வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படப் போகின்றதா அல்லது இந்த கையெழுத்து ஆவணத்தை வைத்து குளிர்காயப் போகிறார்களா என்ற கேள்வி இருக்கின்றது. இலங்கையில் கையெழுத்து இயக்கம் நடத்துவதென்பது எருமை மாட்டில் மழை பெய்த மாதிரி. ஆகவே இதில் பிரயோசனம் இல்லை. ஏட்டிக்குப் போட்டி போல இவர்கள் செயல்படுவதாகவே தெரிகிறது.

அரசியல் கைதிகளின் விடுதலையைப் பற்றி அவர்களிடம் எந்தத் திட்டவட்டமான கொள்கையும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி பெயரளவில் கைதி விடுதலை பற்றிப் பேசுகிறார்கள். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் தான். ஆனால் அது கட்சிகள் செய்வதைப் போன்று ஏட்டிக்குப் போட்டியான விடயமல்ல மாவை சேனாதிராஜா என்ன செய்தார்? கட்சிகள் தயாரித்த ஆவணத்தில் கையெழுத்து வைத்துவிட்டு, கூட்டத்திலும் சம்மதம் தெரிவித்துவிட்டு இறுதியாக கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. இது என்ன நாடகம் என கேட்க விரும்புகின்றேன். பயங்கரவாத தடைச்சட்டத்தை நல்லாட்சி காலத்திலேயே நீக்கியிருக்க வேண்டும். இப்பொழுது கையெழுத்து வேட்டையை ஆரம்பித்திருப்பது வேடிக்கையாக இல்லையா?

கேள்வி:- கானல் நீராகிப் போன ஜெனிவா தீர்மானத்தை நம்பி இருப்பது தமிழ் மக்களை ஏமாற்றுவதாக இல்லையா?

பதில்:- எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இன்றைக்கு பல தீர்மானங்களை கொண்டு வந்து பல்வேறு அழுத்தங்களை இலங்கை அரசு மீது திணிப்பதைப் பார்க்க முடிகிறது. எனினும் காலம் பிந்திவிட்டதாக உணர்கிறோம். ஆனால் நிச்சயமாக பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன. ஆகவே, அதன் ஊடாக சர்வதேச அழுத்தத்தை இலங்கை மீது பிரயோகிக்க முடியும். என்று நினைக்கின்றேன். எங்களுக்கான சர்வதேச நீதியும் கிடைக்கும் என நம்புகிறேன். ஒரு நீதியாக சர்வதேச அழுத்தத்தின் மூலம் இலங்கையில் நாங்கள் எங்களை ஆளக்கூடிய ஆட்சி முறையை வென்றெடுக்க முடியும் நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

கேள்வி:- தமிழ் தரப்புக்கள் பிரிந்து இருப்பது சிங்கள தரப்பிற்குள் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறதே! சிங்கள அரசியல் தரப்பினரின் செயற்பாடுகள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம். 13ஆம் திருத்த சட்டத்தில் உள்ள இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துங்கள் என்று கேட்பதில் முரண்பாடு இருக்கின்றது. இதில் சிங்கள தலைமைகள் மகிழ்ச்சியடைய முடியாது.

அரசு கொண்டு வருகின்ற புதிய அரசிலமைப்பு ஒரு வேளை சாத்தியப்படுமானால் அது ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பாக இருக்கும். தமிழர் அரசியலமைப்பை நிராகரிக்கின்ற பொழுது தமிழர்களின் பிரச்சினையை அப்போது சிங்கள சமூகம் முழுமையாக புரிந்து கொள்ளலாம்.

கேள்வி:- 13வது திருத்தத்தை இல்லாமல் செய்வதற்கு அரசும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரும் செயற்படுகின்றார்கள். 13ஐ நீக்குது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதா?

பதில்:- 13ஐ அமுல் செய்வோம் என்று கேட்பது இந்தியாவை நிஜமான உலகிற்கு கொண்டு வரும். இந்திய இலங்கை ஒப்பந்தம் உயிருடன் இருக்கின்றதா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலமை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. நாங்கள் எல்லோரும் தெளிவாக இருக்கின்றோம். புதிய அரசியலமைப்பு ஒரு வேளை வந்தால், ஏற்கனவே உள்ள சட்டத்தை முழுமையாக செயற்படுத்துங்கள் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

கேள்வி:- தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்களில் இந்தியா மௌனம் சாதிக்கும் போது, தொடர்ந்தும் இந்தியாவை நம்புவது நன்மை அளிக்குமா?

பதில்:- இந்தியாவிற்கு இன்று பூகோள நலன் சார்ந்த நிலமையில் மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. இன்று அமெரிக்கா, சீனா, ஜப்பான், அவுஸ்ரேலிய நாடுகள் அடங்கிய குவாட் அமைப்பு இறுக்கமாக நின்று செயற்பட வேண்டிய தேவை வந்திருக்கின்றது. ஆகவே, வடகிழக்கில் உள்ள அரசியல் உரிமையைப் பலப்படுத்துவதிலும், எமது நியாயத்தை நிலைநாட்டுவதிலும், இந்தியா அதிக கரிசனை கொள்ளவேண்டும்.

கேள்வி:- ஜெனிவா கூட்டத்தொடரின் பின்னர் உங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் எனக் கருதுகிறீர்கள்?

பதில்:- இலங்கை மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் சாட்சியங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் சூழ்நிலையில், சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை வைத்துக்கொண்டு, சர்வதேச நீதிப் பொறிமுறைக்குள் நாங்கள் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

அதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். அச் சூழலில் ஒரு அரசியல் தீர்வும் ஏற்படும் நீதியும் கிடைக்கும் என நம்புகிறோம் சர்வதேச சமூகத்துடன் இணைந்தும், எமது புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்தும், முன்னேறி மிக விரைவில் ஒரு தீர்வை எமது மக்களுக்குப் பெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக காணப்படுவதாகவே தெரிகிறது.

கேள்வி:- இலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது. பேச்சுவார்த்தை தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- இலங்கை அரசாங்கம் என்ன விடயம் தொடர்பாக பேசவுள்ளது என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். புதிய அரசியலமைப்பை பற்றி பேசுவதாக இருந்தால், இவ்வளவு காலத்திற்குள் பேசியிருக்க வேண்டும். ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்கள் தமது யோசனைகளை சமர்ப்பித்து, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கையளித்த பின்னர், அதில் ஒரு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும் பேசலாம். தேர்தல் முடிந்து இரண்டாண்டுகள் கடந்த பின்னரா பேச வேண்டும்?

சுமித்தி தங்கராசா

Comments