![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/21/nw02.jpg?itok=xcsTpFL6)
நேபாள விவசாயிகளின் கால்நடை மேய்ச்சலை சீனா கட்டுப்படுத்தி வருவதாக முறைப்பாடு; கைலாயமலையில் சமய நடவடிக்கைகளுக்கும் இடையூறு!
எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க தயார் நிலையில் இந்தியா! எல்லையில் நவீனரக ஆயுதங்களுடன் இராணுவத்தினர் குவிப்பு!
இந்திய நாட்டு எல்லைக்குள் சீனா ஊடுருவுவதாக தெரிவிக்கப்படுகின்ற குற்ற ச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, இதேவிதமான குற்றச்சாட்டை
நேபாளமும் சீனா மீது சமீபத்தில் முன்வைத்துள்ளது. சீனா தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு அண்மையில் முதன்முறையாக அதிகாரபூர்வமாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீன- நேபாள நாடுகளுக்கு இடையே பொதுவான எல்லைக் கோடு இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்து நேபாள அரசு சமீபத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு நேபாளத்தின் ஹூம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறுவதாக கூறப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் இது சம்பந்தமாக அறிக்கையைத் தயாரிக்க நேபாள அரசால் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகமோ இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. சமீபத்திய சில ஆண்டுகளாக நேபாள அரசு, சீனாவுடனான தன் உறவை மேம்படுத்திக் கொள்ள முயற்சித்து வந்துள்ள போதிலும் சீனா தனது நாட்டு எல்லையை விஸ்தரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றது.
ஒருபுறம் இந்தியாவின் பிரதேசங்களை தன்வசப்படுத்துவதில் கவனம் செலுத்திக் கொண்டே தற்போது நேபாள பிரதேசங்களையும் அபகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது.
நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை இமயமலையை ஒட்டி சுமார் 1,400 கி.மீ உள்ளது. இந்நிலையில் நேபாளத்தின் குற்றச்சாட்டு அறிக்கையானது சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தும் நேபாள அரசின் முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
1960களின் முற்பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளுமே தொலைதூரப் பகுதிகளாக இருப்பதால் அங்கு செல்வது எளிதல்ல.
தரைப்பகுதியில் எல்லையானது தூண்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சில நேரங்களில் நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப்பகுதி வரையறைகளைப் புரிந்து கொள்வதே கடினமாக உள்ளது.
ஹூம்லா மாவட்டத்தில் சீனாவின் அத்துமீறல் குறித்த தகவலைத் தொடர்ந்து, நேபாள அரசு ஒரு பணிக்குழுவை அங்கு அனுப்ப முடிவு செய்தது. இந்தக் குழுவில் பொலிஸ்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் பிரதிநிதிகள் இருந்தனர்.
நேபாள எல்லைப் பகுதியில் உள்ள லாலுங்ஜோங் பகுதி கைலாயமலைக்கு அருகில் இருப்பதால் பாரம்பரியமாக யாத்திரிகர்களை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது. குறிப்பாக இது இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கு புனிதமான இடமாக இருந்து வருகின்றது.
ஆனால், இந்தப் பகுதியில் சமய நடவடிக்கைகளைக் கூட சீனப் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாக நேபாள அரசின் பணிக்குழு அறிக்கை கூறியுள்ளது. மேலும், நேபாள விவசாயிகளின் கால்நடை மேய்ச்சலை சீனா கட்டுப்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சீனா எல்லைத் தூண் அருகே வேலி அமைத்து, நேபாளப் பகுதியில் கால்வாயை ஒட்டி வீதி அமைக்க சீனா முயற்சிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேபாள உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் எல்லைப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கத் தயங்குகிறார்கள் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனெனில் அவர்களில் பலர் எல்லையைத் தாண்டி சீன சந்தைக்குச் செல்கிறார்கள். இதேவேளை நிபுணர்கள் இதுபற்றி தெரிவிக்கையில், "எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்கள் தாங்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இவர்களால் மட்டுமே நேபாள எல்லையை சரியாக பாதுகாக்க முடியும்" என்கிறார்கள்.
வரைபட நிபுணரும், நேபாள நில அளவைகள் துறையின் முன்னாள் தலைவருமான புத்திநாராயண் ஷ்ரேஷ்டா இக்கருத்தைக் கூறினார். இதுஒருபுறமிருக்க, நேபாளத்தில் சுமார் 20,000 திபெத்திய அகதிகள் வாழ்கின்றனர். இந்தியாவில் இருந்தும் பல திபெத்தியர்கள் நேபாளத்திற்கு வருகிறார்கள். இந்தச் சூழலில் திபெத்தியர்களுக்கான வழிகளையும் சீனா சமீபத்திய ஆண்டுகளில் மூடியுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவின் அத்துமீறல்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த அறிக்கைகள் தொடர்பாக தலைநகர் காத்மண்டுவிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக நேபாளத்தில் உள்ள சீன தூதரகம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
“நேபாளத்துடன் சீனாவுக்கு எல்லைப் பிரச்சினை எதுவும் இல்லை. போலி அறிக்கையால் நேபாள மக்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்று நம்புகிறோம்” என்று சீன தூதரகம் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
மறுபுறத்தில் இந்தியா-சீனாவுக்கு இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சினைக்கு தொடர்ந்து தீர்வு காண முடியாமல் இருக்கும் நிலையில், சீனாவுடன் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது இராணுவ நடவடிக்கைகளை சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளது.
சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள லடாக், அருணாச்சல பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் இராணுவ கட்டமைப்பு வளர்ச்சியுடன் இராணுவத்தையும் நிறுத்தி வைப்பதையும் இந்தியா அதிகப்படுத்தியுள்ளது.
இது போன்ற கட்டமைப்பை இந்தியா மேற்கொள்வது புதிதல்ல என்றாலும், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற இருக்கும் அவசரமும் வேகமும் இங்கு கவனிக்கத்தக்கவையாகும்.
கடந்த ஆண்டு, எல்லைப் பகுதியான லடாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கிடையே நடந்த மோதலில், 20 இந்தியப் படையினரும், குறைந்தபட்சம் நான்கு சீனப் படையினரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லைப் பகுதியில் இந்தியாவின் திட்டங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
லடாக் மோதலையடுத்து, எல்லைப் பகுதியில் இந்தியா வீதிகள் அமைப்பது, ரயில் பாதைகளை இணைப்பது, விமானத் தளங்களை அமைப்பது போன்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இராணுவ உபகரணங்களை நவீனமாக்கும் பணியிலும் பெரும் முதலீடு செய்துள்ளது.
"தற்செயலாக எது நடந்தாலும், அதனை சமாளிக்க இந்தியாவிடம் ஒவ்வொரு துறையிலும் போதுமான படைகள் உள்ளன" என்று இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காலாட்படை, பீரங்கிப்படை, வான் பாதுகாப்பு, பீரங்கிப் படை வண்டிகள், கப்பற்படை ஆகிய பிரிவுகளிலும் புதிய போர் உருவாக்கங்களுக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்த குழுக்கள் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைப் பகுதிகளில் அவசர கால கட்டத்தில் வேகமாக முன்னேற உதவும்.
இதில் ஒரு முக்கிய கட்டடமைப்பு திட்டமாக, ஓர் முக்கிய மலைப் பாதையில், கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர்களுக்கு மேல் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதை விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய இரு வழி சுரங்கப்பாதையாகவுள்ள இந்த சுரங்கப்பாதை, சீனாவின் தடுப்புக்காவல் இல்லாமல் இந்தியா தனது படைகளை முன்னெடுத்து செல்ல உதவும் என்ற உள்நோக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.
படைகளையும் பொருட்களையும் கொண்டு செல்ல லடாக்கின் எல்லைப் பகுதியில், இராணுவம் முக்கிய வீதி நிர்மாணிப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
கடந்த சில மாதங்களாக, சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ள மூன்று முக்கிய பகுதிகளில், இந்தியா தனது படைகளையும் ஜெட் விமானப் படைகளையும் நகர்த்தியுள்ளது. அப்பகுதி மக்களுக்கு இது தெரிந்துள்ளது என்று ‘ப்ளூம்பேர்க்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, தற்போது இந்தியா சுமார் இரண்டு இலட்சம் படைகளை எல்லைப் பகுதிகளை பாதுகாக்கும் விதமாக அமைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகம்" என்று அச்செய்தி கூறுகிறது.