![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/21/nw11.jpg?itok=ag0sCeYo)
இரு வல்லரசுகளின் இழுபறிக்குள் சிக்கிக் கிடக்கும் உக்ரைன்
ரஷ்ய -உக்ரையின் போர் உத்திகள் தொடர்கின்ற அதேசமயம் அமெரிக்கா குறிப்பிட்டது போல் 16ஆம் திகதியை கடந்தும் அமைதி நீடித்தாலும் அங்கே போர்ப்பதற்றம் ஓயவில்லை. உக்ரைனிலி ருந்து ரஷ்ய படைகளை விலக்குவதென்பது பொய்யான செய்தி எனவும் மேலதிகமாக ஏழாயிரம் துருப்புக்களை ரஷ்யா கிரிமியாவுக்குள் குவித்துள்ளது எனவும் அமெரிக்கா கூறிவருகிறது. அதற்கான ஆதாரமாக தனது புலனாய்வு தகவல்களையும் செய்மதிப் படங்களையும் வெளிப்படுத்தி வருகிறது.
அதே நேரம் இராஜதந்திர நகர்வுகள் முடிவுக்கு வரவில்லை என்பதையும் வெள்ளைமாளிகை தெரிவித்து வருகிறது. அமெரிக்காவுக்கு புறம்பாக பிரிட்டன் ஜப்பான் போன்ற நாடுகளும் ஏற்கனவே இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிகிறது. எதுவாயினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது நகர்வுகளை அதிக பதட்டமின்றி மேற்கொண்டுவருவதுடன் உக்ரையின் மீது போர் தொடுப்பதை இலக்காக கொள்ளவில்லை என்பதை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முதலில் அமெரிக்காவின் அண்மைய நகர்வுகளை அவதானிப்பது அவசியமானது. கொவிட் தொற்றுக்கு பின்னர் உருவாகியிருக்கும் புவிசார் பொருளாதார போக்கில் ரஷ்ய -ஐரோப்பிய உறவினை அமெரிக்கா அச்சுறுத்தலாக கருதுகிறது. எரிவாயு குழாய்த் திட்டத்தால் அமரிக்கா அதிகம் குழப்பமடைந்துள்ளது என்பதைக அதன் வெளிப்பாடுகளிலிருந்து காணக்கூடியதாக உள்ளது. ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்குமான எரிவாயுக் குழாய் திட்டமானது முழு ஐரோப்பாவுக்குள்ளும் ரஷ்யாவின் செல்வாக்கு வளர்ச்சியடைய உதவும் எனவும் அதனால் ரஷ்யப் பொருளாதாரம் பலமடைவதுடன் புடினைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் அமெரிக்கா கருதுகிறது. அதனால் ரஷ்ய - உக்ரையின் போரை வைத்துக் கொண்டு அத்தகைய எரிவாயுக் குழாய்த்திட்டத்தை தகர்ப்பதுடன் ஐரோப்பாவுக்கான எரிவாயு மற்றும் பெற்றோலியத்தை அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்வதன் முலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியும் எனவும் பைடன் நிர்வாகம் கருதுகிறது.
குறிப்பாக ஐரோப்பா 5 சதவீதத்திற்கு குறைவான எரிவாயுவை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. இதனை கடந்த ஒரு தசாப்பத காலத்தில் 23 சதவீதமாக அமெரிக்கா ஐரோப்பிய யூனியனுக்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்துள்ளது. ரஷ்யா 41 சதவீதமான எரிவாயுவை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அது மட்டுமன்றி அத்தகைய எரிவாயு ஏற்றுமதியால் ஐரோப்பாவின் மீதான ஆதிக்கத்தை தக்கவைக்க முடியுமெனவும் அமெரிக்கா கருதுகிறது. ஐரோப்பா அமெரிக்கா பக்கமா ரஷ்யாவின் பக்கமா என்பதே உலக ஆதிக்கத்திற்கான போட்டியாக மாறியுள்ளது.
அமெரிக்கா இரண்டாம் உலகப் போரிலிருந்து தற்போது வரை ஐரோப்பாவுடன் கூட்டமைத்துக் கொண்டு உலகத்தை ஆதிக்கம் செய்வதுடன் ஐரோப்பாவையும் ஆதிக்கம் செய்துவருகிறது. அமெரிக்கா ஐரோப்பாவை இழப்பதென்பது உலக ஆதிக்கத்தை இழப்பதாகவே அமைய வாய்ப்புள்ளது. இதுவே ரஷ்ய உக்ரைன் விவகாரம் வலுவடையக் காரணமாக உள்ளது. அத்தகைய போர் ஏற்படுமாக இருந்தால் அது ரஷ்யவை தோற்கடிப்பதற்கான போராகவே அமையும். அதாவது உக்ரைனில்ரஷ்யா வெற்றி பெற்றாலும் ஐரோப்பாவுடனான உறவில் தோல்வியை சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகவே அமையும். அதனை நோக்கியே அமெரிக்கா ரஷ்யாவை நகர்த்த முனைகிறது. உக்ரையின் மீது ரஷ்யா போரை ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்காவே முதலில் தகவலை வெளிப்படுத்தியது. அது மட்டுமன்றி போருக்கான திகதியையும் அமெரிக்காவே அறிவித்தது. ஏறக்குறைய அமெரிக்கா உலக நாடுகள் மத்தியில் ரஷ்யா தொடர்பில் அதிக முன்னெச்சரிக்கைகளை வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்த பிரிட்டனும் அத்தகைய தூண்டல்களை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது. பிரான்ஸ்ன் ஜனாதிபதி ரஷ்யாவுக்கு மேற்கொண்ட விஜயத்தை அடுத்தே நிலமை சுமூகமடைய ஆரம்பித்தது. ஆனாலும் ரஷ்யா ஒரு போரை தொடக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா கவனம் கொண்டுள்ளது என்பதை இதே பகுதியில் குறிப்பிட்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
இதே நேரம் ரஷ்ய ஜனாதிபதி புடின் பற்றிய அவதானிப்பு ஊடகங்கள் மத்தியில் வேறுவிதமானதாக உள்ளது. ரஷ்யப் பத்திரிகையாளர் அன்ட்ரூ கொலெஸ்னிகோவ் மற்றும் கொம்மர்சண்டில் ஜேர்மன் நாட்டுத் தலைவரும் கூட்டாக செய்தியாளர் கூட்டத்தில் புட்டினின் நடத்தையை மதிப்பீடு செய்யும் போது ரஷ்ய தலைவர் போர் அச்சுறுத்தல் பற்றி ஒரு வார்த்தையையேனும் இதுவரை வெளிப்படுத்தவில்லை எனவும் உக்ரைன் வழியாக ஐரோப்பிய எரிவாயு விநியோகம் பற்றி அவ்வளவு உள் அமைதியுடன் பேசுகையில், ஒருவர் ஒரு எளிதான முடிவை அடைய முடியும் என்பதைக் காட்டும் விதத்தில் ஊடகங்களுடன் உரையாடுகின்றார். அது மட்டுமன்றி புடின் உண்மையில் எந்த படையெடுப்பையும் பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை. எனக் குறிப்பிடுகின்றார். அவ்வாறே ரஷ்யா நோக்கங்கள் இன்னும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்று ரஷ்யா மற்றும் மத்திய ஆசியாவிற்கான திட்ட இயக்குனர் ஓல்கா ஒலிகர் தெரிவித்தார். ரஷ்ய ஜனாதிபதி புடினது அணுகுமுறைகள் அதிக இராஜதந்திரம்' மிக்கதாகவே அமைந்துள்ளன. அவற்றை நோக்குவது அவசியமானது.
முதலாவது, புட்டின் ஐரோப்பாவுடன் மோதுவதை தவிர்க்கவே விரும்புகின்றதை அவதானிக்க முடிகிறது. ஐரோப்பா ரஷ்யாவின் பின்தளமாகவே உள்ளது. அது தனித்து அரசியலாக மட்டுன்றி பொருளாதாரமாகவும் வர்த்தக மையமாகவும் உள்ளது. அத்தகைய ஐரோப்பாவை இழக்காத விதத்தில் செயல்படும் உத்தியைக் காணமுடிகிறது. ஆனால் அதற்காக தனது கோரிக்கையான நேட்டோவில் உக்ரைன் இணைவதை தடுப்பதற்கான கோரிக்கையை ரஷ்யா கைவிடாதுள்ளமை கவனிக்கத் தக்கது. அதனையே பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் உரையாடும் போது பகிர்ந்துள்ளார். அவ்வாறு நோக்கும் போது ரஷ்யா ஐரோப்பாவை அணைத்துக் கொள்வதன் மூலம் அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து விலக்கி வைக்க முயற்சிக்கிறது. அதற்காகவே மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் உரையாட இணக்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது, அமெரிக்காவின் அனைத்து செய்திகளையும் பலவீனப்படுத்தும் நகர்வை கச்சிதமாக ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் படை குவிப்பினை பெரும் பிரச்சாரமாக அமெரிக்கா மேற்கொண்டதுடன் போரை ரஷ்யா தொடக்கப் போவதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் பிளிங்டன் தெரிவித்திருந்த போதும் ரஷ்யா இரண்டையும் நிராகரித்ததுடன் படைகளை பின்வாங்குவதாக பாதுகாப்பு சபையில் தெரிவித்துள்ளது. தனது நாட்டின் எல்லைக்குள் படையைக் குவித்த ரஷ்யா தற்போது படையை விலக்கிக் கொள்வதென்பது அமெரிக்காவின் அனைத்துக் கணிப்பினையும் தகர்ப்பதாகவே அமைந்துள்ளது. ஆனால் புடின் தனது இலக்கு நிறைவடையாது படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனால் அமெரிக்கா அத்தகைய பிரச்சாரத்தின் மூலம் போரைத் தவிர்த்திருப்பதாகவும் ரஷ்யா படைகளை விலக்க முடியாத நிலையையும் போரைத் தொடக்க முடியாத நிலையையும் அமெரிக்க ஏற்படுத்தியிருப்பதாகவும் விளங்கிக் கொள்ள முடியும்.
மூன்றாவது, நேட்டோ படைகள் பல்கேரியா மற்றும் ஹங்கேரியை நோக்கி நகர்ந்திருப்பதுடன் உக்ரைனில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் மேலதிக படைகள் அண்மைய வாரங்களில் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளன. இதனை எதிர்கொள்வதற்கான உத்திகளை வகுத்துள்ள ரஷ்யா, அமெரிக்காவுடனான முரண்பாட்டை உக்ரைன் விவகாரத்திற்கு புறம்பானதாக கையாள திட்டமிடுகிறது. தொடர்ச்சியாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் பேச்சுக்களை கைவிடாது மேற்கொள்வதில் புடின் கவனம் செலுத்துகிறார். ரஷ்யா போரை கைவிடத்திட்டமிட்டாலும் அமெரிக்காவும் நேட்டோவும் போரை நிகழ்த்தும் விதத்திலேயே காய்களை நகர்த்துகின்றன.
எனவே உக்ரைன் ரஷ்ய விவகாரம் அமெரிக்க-ரஷ்யவிடயமாக மாறியதுடன் உலப்போர் பற்றிய பிரமையை அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளிப்படுத்தி வருகிறார்.
(16ஆம் பக்கம் பார்க்க)