பேட்டைச் சண்டியனாக உருவெடுத்திருக்கும் புட்டின் யுத்தம் நிகழாதா என எதிர்பார்த்திருக்கும் சீனா! | தினகரன் வாரமஞ்சரி

பேட்டைச் சண்டியனாக உருவெடுத்திருக்கும் புட்டின் யுத்தம் நிகழாதா என எதிர்பார்த்திருக்கும் சீனா!

அடுத்த உலகயுத்தம் மத்திய கிழக்கில் இருந்தே ஆரம்பிக்கும். முதலிரண்டு போர்களைக் போலல்லாது மூன்றாம் உலகப்போர் மாதக் கணக்கிலோ வருடக் கணக்கிலோ நீடிக்காது. உக்கிரமான ஒரு முழு அளவிலான போர் இறுதியில் எய்யப்பட்டவனை மாத்திரமின்றி எய்தவனையும் அழித்தே விடும். எனவே போர் ஒன்று மூளாமல் பார்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதை எல்லா பலம்பொருந்திய நாடுகளும் அறியும் என்று நாம் இவ்வளவு காலமாக நம்பி வந்திருந்தாலும் உலகின் யுத்த முனைப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மத்திய கிழக்கில்தான் யுத்தம் ஆரம்பமாகும் என்ற பிரபலமான நம்பிக்ைக தற்சமயம் மங்கிப் போயுள்ளது.

சில வருடங்களுக்கு முன் பெரும் யுத்தமொன்று ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டபோது அதுவிரிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. குவைத் யுத்தம், ஈராக் யுத்தம் பின்னர் அரபு வசந்தத்தின் தொடர்ச்சியாக சிரியாவில் நடைபெற் மனித அவலங்களுடன் கூடிய யுத்தம் என்பனவும் மட்டுப்படுத்தப்பட்ட யுத்தங்களாகவே காணப்பட்டன.

யுத்தங்கள் விரிவடைந்து செல்லாமைக்கான பிரதான காரணம் மக்கள் யுத்தங்களை விரும்பவில்லை என்பதேயாகும். மேலும் யுத்தம் மிகுந்த செலவை ஏற்படுத்துவதோடு சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கக் கூடியவை. வலுச்சண்டைக்காரன் அமெரிக்காவைத்தவிர எல்லா நாடுகளுமே பெரிய, நீண்டகால யுத்தங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவே விரும்புகின்றன. துப்பாக்கி யுத்தங்களை விட பொருளாதார ரீதியான 'யுத்தங்களே' அதிக பலன் தருபவை என்பதை முக்கியமான பெரிய நாடுகள் உணர்ந்துள்ளன.

எனினும் பெரிய, சிக்கலான யுத்தமொன்று ஆரம்பமாகி விடுமோ என்ற அச்சம் அவ்வப்போது ஏற்படத்தான் செய்கிறது. பல நாடுகள் சம்பந்தப்படக்கூடிய யுத்தமொன்று நடைபெறக் கூடிய இடமாக தாய்வானைக் குறிப்பிட முடியும். சீன டிரகன் எப்போது வேண்டுமானாலும் தாய்வானை கபளீகரம் செய்யலாம் என்ற அச்சம் இப் பிராந்தியத்தில் தொடர்ந்து கொண்ட இருக்கிறது. சீன அரசு தன் ஒரே சீனா என்ற கோட்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறது. தாய்வான் தனது நாட்டின் தவிர்க்கவே முடியாத ஒரு பகுதி என்பதே சீன அரசின் கொள்கை. போர்தொடுத்தால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தாய்வானுக்கு ஆதரவாகக் களத்தில் குதிக்கும் என்றும் உலகளாவிய பொருளாதாரத் தடைக்கு சீனாமுகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் சீனாவின் பிரதான கவலை. சீனா இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் தனியொரு வல்லரசாக, பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே சீனாவின் பிரதான இலக்கே தவிர, போரில் இறங்கி பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு இலக்குகளைத் தவற விடுவதல்ல என்பதில் சீனா கறாராக இருக்கிறது.

பெரும்போரை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இடம் ரஷ்ய பிராந்தியம்.

ரஷ்ய பெரும் பிராந்தியத்தில் ஒரு அகோர யுத்தம் கிளர்ந்தெழுந்து நீடிக்கலாம்; அது அப் பிராந்தியத்தையும் தாண்டிச் சென்று பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றொரு பதற்ற நிலை கடந்த நான்கு வாரங்களாக நிலவி வந்தது. கடந்த 16ம் திகதி கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் உக்ரேன் எல்லையோரமாக ரஷ்யா குவித்து வைத்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படையினரின் ஒரு பகுதியை வாபஸ் பெறத் தொடங்கியிருப்பதாக அறிய முடிகிறது. ஏற்கனவே உக்ரேனில் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை 2014ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யா படையெடுப்பின் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டது. உலகமும் அதை நாளடைவில் மறந்து போனது. தற்போது ரஷ்யா உக்ரேனையும் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொள்ளலாம் என ரஷ்யா கருதுகிறது என்பதை விட எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்ற அச்சம் உக்ரேனுக்கு 2014 முதலே ஏற்பட்டு விட்டது.

கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதும் தான் பாதுகாப்பற்ற நிலையில், ரஷ்ய கரடிக்கு முன்பாக சுண்டெலியைப் போல உணரத் தலைப்பட்டதால் உக்ரேன் தன் பாதுகாப்புக்காக அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் நோக்கி சாயத் தொடங்கியது. இது சர்வதேச அரசியலில் இயல்பானதுதான்.

உண்மையில் உக்ரேனை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விளாடிமிர் புட்டின் காய்களை நகர்த்தினாரா அல்லது தன் வாசலோரம் அமெரிக்க தலைமையிலான நேட்டோ அமைப்பு வந்து விடுவதை எவ்வாறேனும் தடுத்துவிட வேண்டும் என்பதற்காக இந்த போர்ப் பூச்சாண்டியை அவர் அவிழ்த்து விட்டாரா, தெரியவில்லை.

ஏற்கனவே இது போன்ற ஒரு சம்பவம் 1962ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அண்மித்ததாக நடைபெற்றது. அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து சற்று தொலைவில் அமைந்திருக்கும் தீவே கியூபா. அங்கே ரஷ்யா ஏவுகணைத் தளங்களை நிறுவ ஆரம்பித்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய விமானங்களை அனுப்பி வைத்ததோடு அவை இறங்கக் கூடியதாக விமான நிலையத்தையும் புனரமைத்தது.

இதன்பின்னர் ஏவுகணைகளும் ரஷ்யாவில் இருந்து கப்பல்கள் மூலம் கியூபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உளவுத்துறை மூலம் கியூபாவில் என்ன நடக்கியது என்பதை அறிந்து கொண்ட அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடி, கியூபாவை ஆயுதமயப்படுத்துவதை உடனடியாக நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் குருஷேவிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் குருஷேவ் காது கொடுத்தமாதிரித் தெரியவில்லை என்பதால் கியூபாவை பிடல் காஸ்ட்ரோ கைப்பற்றும் சமயத்தில் அமெரிக்கா அசமந்தமாக நடந்து கொண்டது போல இவ்விடயத்திலும் கோட்டை விட்டால் அமெரிக்காவின் வாசலிலேயே ரஷ்யாவின் ஏவுகணைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த ஜோன் கென்னடி, மிகக் கடுமையாக நடந்து கொள்ளத் தீர்மானித்தார். ஏனெனில் கியூபாவில் அணுவாயுத ஏவுகணைகள் நிறுத்தப்படுமானால் மெக்சிகோ, வொஷிங்டன், புளோரிடா, விண்வெளி ஏவுதளமான கேப் கெனவரல், பனாமா, தென்கிழக்கு அமெரிக்க பிரதேசங்களை நோக்கி ரஷ்யாவினால் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முடியும் என்பது அமெரிக்காவின் அச்சம். நடுத்தர வீச்சு ஆற்றல் கொண்ட அணுவாயுத ஏவுகணைகளே கியூபாவில் நிறுத்தி வைக்கப்படப் போவதாக அமெரிக்கா கருதியது.

எனவே 1962 அக்டோபர் 22ம் திகதி வெள்ளை மாளிகையில் இருந்து ஜனாதிபதி கென்னடி ஒரு உத்தரவை விடுத்தார். கியூபாவில் தளங்களை அமைப்பதையும் ஏவுகணைகளை நிறுத்துவதையும் ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும். அதை நாம் எதிர்த்து நிற்போம். இந்நெருக்கடி ஒரு உலகளாவிய அணுவாயுத யுத்தமாக மாறி எமது வாயில் வெற்றியானது சாம்பலாக விழலாம். ஆனாலும் நாம் இவ்விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

இன்று முதல் கியூபாவைச் சுற்றி கடற்படை முற்றுகையை அமெரிக்கா ஆரம்பிக்கிறது. எமது அனுமதியின்றி எந்தக் கப்பலும் கியூபா துறைமுகத்தை அடைய முடியாது என்பதாக அமெரிக்க அதிபரின் பேச்சு மிகக் கடுமையான தொனியில் அமைந்திருந்தது. கியூபாவை ஏவுகணைகள் ஏந்திய ரஷ்ய கப்பல்கள் அண்மித்த நிலையிலேயே அமெரிக்கா இக்கடல் முற்றுகையை ஆரம்பித்ததால், அடுத்ததாக என்ன நடக்கும்; ரஷ்ய போர்க் கப்பலை அமெரிக்கக் கடற்படை மறிக்கும்போது மோதல் நிலை ஏற்படுமா என்றெல்லாம் உலக நாடுகள் புருவங்களை உயர்த்தின. உண்மையாகவே மற்றொரு பெரு யுத்தத்தை நோக்கியே உலகம் நகர்ந்து கொண்டிருந்தது என்பது உண்மைதான்.

இக்கடல் முற்றுகை ஒரு மாதமும் 4 நாட்களும் நீடித்தது. ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என ரஷ்ய அதிபர் உறுதியளித்தார். அமெரிக்க அதிபரோ, ஏற்கனவே நிறுத்தப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் அகற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பின்னர் ரஷ்யா அதற்கு இணக்கம் தெரிவித்ததோடு, இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகம் முகம் கொடுத்த பெரும் போர் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது.

உக்ரேன் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடானால் தன் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஏஜண்டாக உக்ரேன் மாறிவிடும், அது தமக்கு ஆபத்து என விளாடிமீர் புட்டின் கருதுவதை 1962 கியூபா நெருக்கடியோடு ஒப்பிடலாம். ஒரு சண்டியன் தன் ஏரியாவில் இன்னொரு சண்டியனுக்கு இடமளிக்க மாட்டான் அல்லவா!

இந்த 'பேட்டைச் சண்டியன்' கோட்பாடு உலக அரசியல் வரலாற்றில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. பேட்டைச் சண்டியனான இராவணன் சீதையைக் கவர்ந்து செல்ல, பெரு யுத்தம் வெடித்ததாக இராமாயணம் சொல்கிறது. முதலாம் உலகப் போருக்கான பல காரணங்கள் இருந்த போதிலும் பிரதானமான - வௌிப்படையான காரணம் பேட்டைச் சண்டியனை நினைவு படுத்துவதாகவே இருக்கிறது. ஒஸ்ட்ரியா - ஹங்கேரி பேரரசின் ஆர்ச்டியூச் இளவரசனான ஃபிரான்ஸ் பேர்டினன்ட் தன் மனைவியுடன் சேர்பியாவின் தலைநகரான சரஜீவோவுக்கு விஜயம் செய்தார். இவர் முடிக்குரிய இளவரசர். பொஸ்னியாவை ஹங்கேரி அடக்கி ஆள்வது பிடிக்காத சேர்பிய தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த அறுவர் இளவரசரைத் தாக்கத் திட்டம் வகுத்தனர். 1914ஜூன் 28ம் திகதி இளவரசர் பேர்டினன்டும் மனைவி சோஃபியும் திறந்த காரில் சரஜீவோ தெருக்களில் பவனி வந்தபோது இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பேட்டைச் சண்டியன் விடுவாரா? ஒரே மாதத்தில், 1914 ஜூலை 28ம் திகதி ஹங்கேரிய பேரரசு பொஸ்னியா மீது யுத்தப் பிரகடனம் செய்தது. அக் காலத்தில் பிணக்குகளில் தலையிட்டு, மத்தியஸ்தம் செய்வதற்கு ஐ.நா போன்ற உலக அமைப்புகள் இல்லை. அன்றைய உலகம் சில பேரரசர்களால் அவர்களின் விருப்பங்களுக்கு அமைய ஆளப்பட்டு வந்தது. இந்த யுத்தம் 1918 நவம்பர் 11ம் திகதிவரை நீடித்தது. யுத்தம் முடிந்த போது இரண்டுகோடி பேர் இறந்திருந்தனர். மேலும் இரண்டுகோடி பேர் காய முற்றிருந்தனர். காரணம் அன்றைய பேட்டைச் சண்டியர்களின் தலைக்கனம்!

ஆனால் இன்றைக்கு இவ்வாறு தலை கொழுத்த தீர்மானங்களை எடுப்பது சிரமமானது. ஜோர்ஜ் புஷ் ஈராக்மீது ஒரு தலை கொழுத்தத் தீர்மானத்தை எடுத்திருந்தார். ஆனால் அதன்பின்னால் ஐரோப்பிய நாடுகளும் இணக்கம் தெரிவிக்கக் கூடிய ஒரு நாசகார திட்டத்தை அமெரிக்கா வைத்திருந்தது. ஈராக்மீது தாக்குதல் என்பது அவசர கதியில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல விளாடிமிர் புட்டின் படைகளை வாபஸ் பெறுவது போல பாவனை செய்து உக்ரேனின் நேச நாடுகள் அசந்திருக்கும் ஒரு சமயத்தில் உக்ரேனைத் தாக்கிக் கைப்பற்ற நினைத்திருப்பதாக அமெரிக்கா கருதுவதால்தான், உக்ரேன் மீது படையெடுக்கும் சாத்தியங்கள் அப்படியே இருப்பதாக ஜோபைடன் கூறியிருக்கலாம். உக்ரேன் எல்லையோரமாக ஒரு லட்சத்துக்கும் மேல் படைகளைக் குவித்துவிட்டு போர்ப்பயிற்சிதான் செய்தோம் என்று இப்போது ரஷ்ய அதிபர் சமாதானம் கூறியிருப்பது நம்பும்படியாக இல்லை.

புட்டினுக்கு மறுபடியும் சோவியத் ரஷ்ய ஒன்றியத்தை மீளவும் கட்டமைக்க வேண்டும் என்ற இலக்கு உள்ளது. அதன் ஒரு கட்டமாக உக்ரேனை ரஷ்யாவுடன் இணைந்துக்கொள்ள அவர் விரும்புகிறார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலமாக அல்லது வேறுவழிகளில் பக்கத்து நாடுகளையும் இணைத்து ஒரு ஒன்றியமாக, ஐக்கிய அரபுகுடியரசு/ ஐரோப்பிய யூனியன் போன்ற ஒரு அமைப்பாக சோவியத் ஒன்றியத்தைக் கட்டி எழுப்ப அவர் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

இது இப்படி இருக்க, உக்ரேன் - ரஷ்ய மோதல் நிகழ்ந்திருந்தால் தமக்கு அது சாதகமாக இருந்திருக்கும் என்று ஒரு நாடு நினைக்குமானால் அது சீனாவாகவே இருக்க முடியும்.

ரஷ்ய – உக்ரேன் மோதல் நிலை எவ்வாறு உருவெடுக்கும் என்பதை மிக உன்னிப்பாகக் கவனித்து வந்த சீனாவுக்கு படை குறைக்கும் ரஷ்யாவின் புதிய அறிவிப்பு ஏமாற்றம் அளித்திருக்கலாம். யுத்தம் நடைபெற்றால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அந்த யுத்தத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளும்? பதிலடி தாக்குதல்களை நடத்துமா? உக்ரேனைக் காப்பாற்ற இராணுவ ரீதியாகத் தலையிடுமா? பொருளாதார முட்டுக் கட்டைகள் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்படுமா? என்றெல்லாம் சீனா உன்னிப்பாக கவனித்து வந்துள்ளது.

ஏனெனில் ரஷ்யாவுக்கு உக்ரேன் மீது கண் என்றால் சீனாவுக்கு தாய்வான் மீது கண். ரஷ்ய ஆக்கிரமிப்பை உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, வாய் வீச்சோடு நிறுத்திக் கொள்ளுமானால், உலகளாவிய சலசலப்புகளின் பின் எல்லாம் அமைதியாகி விடுமானால் தாய்வான் மீதான சீன ஆக்கிரமிப்புக்கு அதை உதாரணமாகக் கொள்ளலாம் என சீனா திட்டமிட்டுவதாக அமெரிக்க அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். அதே சமயம் உக்ரேன் ஆக்கிரமிப்போடு சீன ஆக்கிரமிப்பை ஒப்பிட இயலாதென்றும் தாய்வானை சீனா விழுங்கினால் ஏற்படக் கூடிய பின் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீனாவின் கடல் பட்டுப்பாதைத் திட்டமான one belt and Road Initiative திட்டத்துடன் உத்தேச தாய்வான் ஆக்கிரமிப்பு ஒப்பிடப்படுவதால் அப் பிராந்தியத்தில் அந்த அளவுக்கு சீனாவுக்கு ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் இடம் கொடுக்காது என்ற ஒரு பார்வையும் உள்ளது.

அருள் சத்தியநாதன்

Comments