இலங்கை பொருளாதாரம்: நீண்டகால பாதிப்புகளை குறுகிய காலத்தில் தீர்க்க முடியாது | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை பொருளாதாரம்: நீண்டகால பாதிப்புகளை குறுகிய காலத்தில் தீர்க்க முடியாது

இறக்குமதிக் கட்டுப்பாட்டின் மூலம் இலங்கையின் வர்த்தக நிலுவைக் குறைநிலையினை குறைக்கலாம் அத்துடன் டொலர் கையிருப்புகளை சேமிக்கலாம் என ஒரு நாடு நம்பலாம். ஆனால் குறித்த நாட்டின் ஏற்றுமதிகளை வாங்கும் ஏனைய நாடுகள் கண்ணுக்குக் கண் என்று பதில் செயல்பாட்டில் இறங்கினால் அடி மிகப்பலமானதாக இருக்கும்

இந்தியன் ஒயில் கம்பனி (IOC) வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்து இரண்டாவது தடவையாகவும் பெற்றோலியப் பொருள்களின் விலையை அதிகரித்திருக்கிறது. இதன்படி 92ஒக்டேன் பெற்றோல் விலை 204ரூபாவாகவும் டீசலின் விலை 139ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த இரு விலையதிகரிப்புகளையும் செய்யவில்லை. ஆனால் இது எவ்வளவு காலத்திற்குத் தொடரும் சாத்தியம் உள்ளது என்பதும் தெரியவில்லை.

எவ்வாறாயினும் வெள்ளிக்கிழமை உள்ள நிலவரத்தின்படி கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் கையிருப்புகள் இன்மையால் மூடப்பட்டுக் கிடந்தன. எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டமைக்கு இறக்குமதி நிரம்பல் உரிய காலத்தில் சந்தைக்கு வராமை ஒரு காரணம். வாகன உரிமையாளர்களின் பீதிக் கொள்வனவு ((panic buying) ) மற்றொரு காரணமாகும்.

இப்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமைக்கு மூலாதாரக் காரணியாக அமைவது தொடர்ச்சியாக இலங்கை அனுபவித்துவரும் டொலர் பற்றாக்குறையாகும். இந்தப் பற்றாக்குறை நிலைமையினை தீவிரமான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலமும் சமாளித்து விடலாம் என உரிய தரப்பினர் இன்னமும் நம்புவதாகத் தெரிகிறது. அவ்வாறான ஒரு சுய சீராக்கலுக்கான ஏற்பு நிலையில் இலங்கைப் பொருளாதாரம் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ஏற்கெனவே சர்வதேச இறைமைக் கடன் தரப்படுத்தல் மட்டங்கள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இலங்கையின் கடன் முறிகள் மீதான கேள்வி வீழ்ச்சியடைந்திருக்கிறது. உயர்ந்த வட்டி வீதங்களை வழங்கிய போதிலும் அவற்றின் விலைகள் இரண்டாந்தரச் சந்தைகளிலே  வீழ்ச்சியடைந்துள்ளன. எனவே கடன் முறிகளைப்பயன்படுத்தி நிதி திரட்டுவதில் முடக்கம் நிலவுகிறது. சர்வதேச நிதிச் சந்தைகளிலே வணிகக் கடன்களைப் பெறுவதற்கும் தரவிறக்கம் செய்யப்பட்ட இறைமைக் கடன் தரமிடல் தடையாக உள்ளது.

அவ்வாறு வெளிநாட்டு வடிவிலான கடன்களை இப்போது பெற்று நிலைமையைச் சமாளிக்க எத்தனித்தாலும் நீண்ட கால ரீதியில் இக்கடன்சுமை எதிர்காலத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் இப்பிரச்சினைக்கு இந்நடவடிக்கை ஒரு போதும் ஒரு தீர்வாக அமைய முடியாது. மறுபுறம் நட்பு நாடுகளிடம் இருபக்க கடன் உடன்படிக்கைகளை செய்து நிலைமையை சமாளிக்க முனைந்தாலும் எவ்வளவு காலத்திற்கு அக்கடன்களை தொடர்ச்சியாகப் பெறமுடியும் என்பதுடன் அவற்றையும் மீளச் செலுத்த வேண்டிய எதிர்காலக் கடப்பாடும் அதிகரிக்கும்.

இது இலங்கையின் நிதி நிலைமையை மேலும் தீர்க்கமான விதத்தில் மோசமடையச் செய்யுமேயன்றி நிவாரணங்களை வழங்காது. சிறுவயதில் நாம் படித்த வருமுன் காப்பான் வரும்போது காப்பான் மற்றும் வந்தபின் காப்பான் என்ற மூன்று கதாபாத்திரங்களின் கதையை நாம் மறந்திருக்க முடியாது. ஒரு பிரச்சினை வருமுன்னர் அதற்கான அறிகுறிகளை அறிந்து உரிய புத்திசாதுரியத்துடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனைத் தவிர்ப்பது உத்தமம். அப்பிரச்சினை வருகிறபோது சுதாகரித்துக்கொண்டு விவேகபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு  அப்பிரச்சினையின்  பாதிப்பிலி ருந்து பாதுகாப்புத் தேட முனைவது மத்திமம்.

இதன்மூலம் குறைந்த பட்சப் பாதிப்புகளோடு தப்பிப் பிழைக்க முடியும். ஆனால் பிரச்சினை வந்த பிறகும் அதனை இனங்காண மறுத்து அதற்கு களிம்பு பூசி சமாளித்த விடலாம் என நம்பவது குருட்டுத்தனம். இவ்வாறான குருட்டுத்தனமான நம்பிக்கைகளால் அழிந்துபோன நாடுகள் பலவுண்டு. எரிகின்ற அடுப்பில் நீர்நிரப்பிய ஒரு பாத்திரத்தில் விடப்பட்ட ஒரு நண்டு ஆரம்பத்தில் வெது வெதுப்பான நீரில் ஆனந்த நீச்சல் போடுவதைப் போல இப்பிரச்சினை மூலம் இலாபம் சம்பாதிக்க முற்பட்ட பலர் இப்போது சூடேறிய நீரில் வெந்து சாகும் நண்டின் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உரிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காலம் தாழ்த்துவதன் காரணமாக  இலங்கைப் பொருளாதாரத்தில் இப்பிரச்சனைகள் ஏற்படுத்தியுள்ள நீண்டகாலப் பாதிப்புகளை குறுகிய காலத்தில் தீர்த்துவிட முடியாது              

இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கலந்துரையாடலின்போது இலங்கை விதித்துள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாகத் தளர்த்த வேண்டுமென கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைக் கரிசனைகள் ஒரு புறமிருக்க, சர்வதேச நியமங்களை மதித்து இலங்கை விதித்துள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.

மேற்குலக இராஜதந்திரிகளின் வார்த்தைப் பிரயோகங்கள் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ராஜதந்திரகளைப்போல கடுமையானதாக இல்லாவிட்டாலும் அவற்றை இலகுவானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது அவற்றில் சொல்லப்படும் விடயங்களின் உட்பொருளை சரியாக இனங்கண்டு கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியுள்ள GSP+ வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின் அந்த இராஜதந்திர வார்த்தைப்பிரயோகங்களை மிகத் தெளிவாகப் புரிந்த செயற்படுவது அவசியமாகும்.

இன்றைய சூழலில் அச்சலுகையை இழப்பது இலங்கைக்கு மரண அடியாக அமையும். இறக்குமதிக் கட்டுப்பாட்டின் மூலம் இலங்கையின் வர்த்தக நிலுவைக் குறைநிலையினை குறைக்கலாம் அத்துடன் டொலர் கையிருப்புகளை சேமிக்கலாம் என ஒரு நாடு நம்பலாம். ஆனால் குறித்த நாட்டின் ஏற்றுமதிகளை வாங்கும் ஏனைய நாடுகள் கண்ணுக்குக் கண் என்று பதில் செயல்பாட்டில் இறங்கினால் அடி மிகப்பலமானதாக இருக்கும். இப்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப்பெற்று பொருளாதாரத்தை காப்பாற்றுவதே மதிநுட்பமிக்க ஒரேயொரு தெரிவாக இருக்க முடியும்.

ஏனெனில் இப்போது இன்னுமொரு இடியாக யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு வந்து விழுந்திருக்கிறது. நாகரிக உலகில் ஒரு ஜனநாயக நாட்டை இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் கைப்பற்ற முனைவதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. உடனடியாக நேட்டோ இதில் தலையிட்டு உதவவேண்டும் என யுக்ரேன் கேட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறான ஒரு தலையீட்டை இராணுவ ரீதியில் நேட்டோ செய்யாது என்று தெரிகிறது. மாறாக கடுமையான பொருளாதாரத் தடைகள் ஊடாக விடயத்தைக் கையாள முனைகிறது.

எவ்வாறாயினும் இதன் பொருளாதாரப் பாதிப்புகள் உடனடியாகவே உலக சந்தையில் தென்படத் தொடங்கியுள்ளன. தங்கம் பெற்றோலியம் உலோகங்கள் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்பு எற்பட்டிருக்கிறது. அதன் உடனடிப்பாதிப்புகள் ஏற்கெனவே பொருளாதார ரீதியில் அடிவாங்கிக் கொண்டிருக்கிற இலங்கை போன்ற நாடுகளுக்கு கடுமையானதாக இருக்கும். யுக்ரேன் இலங்கையின் ஒரு நட்பு நாடு. கோவிட் நிலைமையின் மத்தியிலும் அங்கிருந்து தான் ஒரு தொகுதி சுற்றுலாப்பயணிகள் இங்கு அழைத்துவரப்பட்டார்கள்.

ஆனால் இப்போது அந்த நாடு ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள போது ரஷ்யாவுக்கு ஆதரவாக இலங்கையின் சமூக ஊடகங்களில் அதிகரித்த பதிவுகள் வருகின்றன. அத்துடன்  தென்னிலங்கை காட்சி ஊடகங்கள் மகிழ்ச்சியோடு செய்திப்படுத்தலை இந்த இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாக செய்து வருவதைக் காணமுடிகிறது. இந்தளவுக்குத் தான் இலங்கை மக்கள் சர்வதேச உறவகளுக்கு மதிப்பளிக்கிறார்களா? நாம் மேலே சொன்ன நண்டுகளின் நிலையே நினைவுக்கு வருகிறது.

கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments