பூநகரி வாசிகளின் விடுதலை எப்போது? | தினகரன் வாரமஞ்சரி

பூநகரி வாசிகளின் விடுதலை எப்போது?

வாழ்வாதார  உதவிகளை  வழங்குகிறேன்  என அறிமுகமான நபருடன் தொடர்பினை  பேணிய பூநகரி வாசிகள்  12க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது  செய்யப்பட்டு கடந்த 2ஆண்டு காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி  பகுதி மற்றும் பூநகரி முட்கொம்பன் பகுதிகளைச் சேர்ந்த வறுமையில் வாடும்  குடும்பங்களை  இலக்கு வைத்து அறிமுகமான நபர் ஒருவர் "விடுதலைப்புலிகள் மீள்  உருவாக்கம்" செய்ய முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு  மார்ச் மாதம் முதல் வார கால பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது  செய்யப்பட்டார்.

அவரது கைதினை  தொடர்ந்து அவருடன்  தொடர்புகளை  பேணியவர்கள், தொலைபேசியில் உரையாடியவர்கள் என சுமார் 12க்கும்  மேற்பட்டவர்கள் அடுத்தடுத்த  நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் பூநகரி முட்கொம்பன் பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழாமான  6இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில்  ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு,  நீதிமன்றினால் 50இலட்ச ரூபாய் இரண்டு சரீர பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளதுடன் , கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவில்  ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் எனும்  நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞன் ஒருவரின் தாயாரான  உதயசொரூபன்  அம்பிகா கூறுகையில்,

எனது மூத்த  மகனான உதயசொரூபன் உமாசுதன் (வயது 21)  கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்  07ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கடந்த  2009ஆம்  ஆண்டு யுத்தத்தில் எனது கணவனை இழந்து விட்டேன். அதன் பின்னர் வறுமையிலும்  எனது உழைப்பினால் மூன்று பிள்ளைகளை  வளர்த்து வந்தேன்.

எனது  கஷ்டத்தை உணர்ந்து மூத்த மகன் தனது படிப்பை இடைநிறுத்தி கூலி வேலைகளுக்கு  சென்று எமது குடும்பத்தை பார்த்ததுடன் , தனது சகோதரர்களையும் படிப்பித்து  வந்தான்.

யுத்தம் நடக்கு போது அவனுக்கு  8வயது. அந்த வயதில் அவனுக்கு எதுவும் தெரியாது.

கடந்த  2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி எனது மூன்றாவது பிள்ளையை  போட்டி  பரீட்சை ஒன்றுக்கு அழைத்து சென்று விட்டு , வீடு திரும்பிய போது , வீட்டின்  முன்னால் ஒரு வெள்ளை வாகனத்தில் சிலர் நின்று இருந்தார்கள்.

அவர்கள்  யார் என யோசித்துக்கொண்டு  வாகனத்திற்கு அருகில் சென்ற போது எனது மூத்த  மகன் அழுதவாறு , வாகனத்தினுள் இருந்தார். என்ன ? ஏது ? என விசாரிக்க முதலே  அவர்கள் உங்கள் மகனை கைது செய்துள்ளோம். என ஒரு துண்டினை வழங்கி விட்டு  மகனை கொண்டு சென்று விட்டனர்.

மகனை யாழ்ப்பாணம் - கொழும்பு - தங்காலை என இடங்களை மாற்றி இறுதியாக கொழும்பு மகசீன்  சிறையில் தற்போது அடைத்து வைத்துள்ளனர்.

மகனை  பார்ப்பதற்காக அவர் தடுத்து வைத்திருக்கும் இடங்களுக்கு சென்று பொருளாதார  ரீதியாகவும் உடல் உள ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.

தற்போது  எம்மால் எதுவும் முடியவில்லை. எனது இரண்டு பிள்ளைகளின் பாதுகாப்பு,  பொருளாதார நிலை , உடல் உள நிலைமை காரணமாக கடந்த 08மாத கால பகுதியாக மகனை  பார்க்க செல்லவில்லை. எனது இரண்டாவது மகனே  தனது  கல்வியை இடைநிறுத்தி  கூலி வேலைகளுக்கு சென்று குடும்பத்தை பார்க்கின்றார்.  எமக்கான பொருளாதார உதவிகளோ  சட்ட உதவிகளோ  இன்றியே காணப்படுகிறோம்.

மனிதவுரிமை  ஆணைக்குழுவினால்  சட்டத்தரணி  ஒழுங்கு செய்து தரப்பட்டுள்ளது. அவர்கள் ஊடாகவே சட்ட நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது. எனது மகனை இந்த மாத கால பகுதிக்குள்  விடுவிப்பார்கள்  என பெரிதும் நம்பி இருந்தேன். ஆனாலும்  அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

எனது  மகனையும் மகனுடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட ஏனைய மகனின்  நண்பர்களையும்  விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என  கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.  

இவருடன் கைது செய்யப்பட்ட ரமேஸ் சுஜந்தன் (வயது 22) என்பவரின்  சகோதரியான பிரணவன் சுதர்சினி தெரிவிக்கையில்.

எனது தம்பியை கைது செய்யும் போது , தம்பிக்கு 20வயது. கடந்த  2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதி வாழ்வாதார உதவிகளை வழங்குவதாக  கூறிய நபருடன் ஆலயம் ஒன்றில் நேர்த்தி கடனை நிறைவேற்றுவதற்காக செல்வதாக  கூறி தம்பியை அழைத்து சென்றுள்ளார். அவ்வேளையிலே ஆழ்வார் கோவிலுக்கு  அண்மையில் வைத்து தம்பியை கைது செய்துள்ளனர்.

எனது  தம்பி உயர்தரம் வரை கற்று தற்போது VTA ( Vocational Training Authority of  Sri Lanka) யில் தொழிநுட்ப உத்தியோகஸ்தருக்கான  கல்வியை கற்றுக்கொண்டு  இருந்தவர்.

அவர் தனது மூத்த  சகோதரர்களின்  பணத்திலையே  கல்வி கற்று  வந்தமையால் , தனது உழைப்பில் தனது  கல்வியை தொடர விரும்பினார். அவ்வேளையிலேயே  பூநகரியை சேர்ந்த நபர் ஒருவர்  ஊடாக பார்த்தீபன்  எனும் நபர் அறிமுகமாகி தான் வாழ்வாதார உதவியினை வழங்கி  வைக்கிறேன் என தம்பிக்கு உறுதி வழங்கியுள்ளார். அதனை நம்பிய தம்பி அவரின்  வாழ்வாதார உதவிக்கு  காத்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பிக்கு  வாழ்வாதார உதவி வழங்குவதாக கூறிய நபர் புலிகள் மீள் உருவாக்க  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையால்  அவருடன்   தொடர்பை பேணிய  குற்றத்திலையே  தம்பி கைது செய்யப்பட்டார். இந்த  தகவல் தம்பியின் கைதின் பின்னரே  எமக்கு தெரியவந்துள்ளது. தம்பியை பார்க்க  பல தடவைகள் அம்மா யாழ்ப்பாணம் - கொழும்பு - வவுனியா - தங்காலை என அலைந்து  திரிந்து, தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார்.

எமது  தம்பியை விடுவித்து தம்பி தனது கல்வியை தொடர அனுமதித்தலே எமது குடும்பம்  பொருளாதார நிலையில் உயர முடியும். எமது தம்பியின் விடுதலை வரும் வாரம்  சாத்தியம் ஆகும் என எதிர்பார்த்து, எதிர்பார்த்து 2வருடங்கள் ஆகின்றன.  இன்னமும் தம்பி விடுவிக்கப்படவில்லை. தம்பியின் விடுதலையை எதிர்பார்த்து  காத்திருக்கிறோம்.

தம்பியின் கைதுடன் கைதான 6  பேரில்  ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதே போன்று ஏனைய 5பேரையும்  விரைந்து விடுவிக்க வேண்டும் என்பதே  எமது கோரிக்கை என தெரிவித்தார்.

இவர்களுடன் கைதான இரத்தினபால சிங்கம் ஈழவேந்தன் என்பவரின் தாயாரான  இரத்தினபாலசிங்கம்  மனோரஞ்சிதம் தெரிவிக்கையில்,

எமக்கு  வாழ்வாதார  உதவிகளை  வழங்குவதாக கூறிய நபருடன் தொடர்பினை  பேணிய குற்றச்சாட்டிலையே  எனது மகனை கைது செய்துள்ளனர்.  மகனின்  நண்பர்களை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதி கைது செய்யப்பட்ட  நிலையில் எனது  மகனை ஐந்து நாட்கள் கழித்து 7ஆம் திகதி கைது செய்தனர்.

மகனை  கைது செய்த போது பயங்கரவாதத்தை மீள் உருவாக்கிய குற்றச்சாட்டில்  கைது  செய்வதாக எழுதிய துண்டில் என்னை  கையெழுத்து வைக்க சொன்னார்கள். நான் அதற்கு  மறுப்பு தெரிவித்து எனது  மகன் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவில்லை என  கூறினேன்.

உங்களுக்கு தெரியாது நீங்கள் இதில்  கையெழுத்து வையுங்கள் என கூறினார்கள். மகன் கைது செய்யப்பட்டு வெள்ளை  வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில் இருந்தார். அதனால் நானும் பயத்தில் அதில்  கையெழுத்து வைத்தேன்.

நான் கணவனை இழந்தவள்.  எங்கள் குடும்பம் பெண் தலைமைத்துவ குடும்பம். எனது மகனின் உழைப்பிலையே எமது  குடும்ப  பொருளாதாரம் தங்கி இருந்தது. அவ்வேளையிலேயே  எமது  வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் எமக்கு  வாழ்வாதார உதவிகளை வழங்குவதாக  கூறினார். எமக்கு கோழி வளர்ப்புக்கு உதவுவதாக சொன்னார். அதனை நம்பி  இருந்தோம்.

அவ்வாறு வாழ்வாதார உதவி வழங்க முன்  வந்தார். மீள் உருவாக்க முயன்றவர்  எனும்  குற்றச்சாட்டில் கைது  செய்யப்பட்டார். என்றும் அவருடன் தொடர்பை பேணிய குற்றத்திலையே  மகனை கைது  செய்துள்ளனர்.

மகனின்  கைதின்  பின்னரே  எமக்கு  வாழ்வாதார உதவி வழங்க முன் வந்தவர்  மீள் உருவாக்க  முயன்றார் என்ற  குற்றத்தில் கைது செய்யப்பட்டமை  எமக்கு  தெரியும்.

எனது மகன் மீள் உருவாக்கம் தொடர்பில் தகவல்களை அறிந்திருந்தும் அதனை கூறாமல் மறைத்தமை  குற்றம் என்று தற்போது கூறுகின்றார்கள்.

மகனின்  உழைப்பிலையே எமது குடும்ப பொருளாதாரமும்  அவரின் இரு சகோதரர்களும் கல்வி  கற்று வந்தனர். மகனின் கைதினால் , நாம் பொருளாதார ரீதியாக பெரிதும்  பாதிக்கப்பட்டு உள்ளத்துடன், அவரின் சகோதரர்களின் கல்வியும்  பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எமது நிலைமையை உணர்ந்து மகனையும் மகனுடன்  இணைந்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க ஜனாதிபதி , அரசாங்கம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரினார்.

இவர்களின் கைது நடவடிக்கை தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவிக்கையில்,

‘வாழ்வாதார உதவி’ என்ற முறையில் வறுமையின் பிடியில் சிக்கி

உழலும்  குடும்பங்களை இலக்கு வைத்து, ஆசை வார்த்தைகளை அவிழ்த்து விடும்  சதிமுகவர்கள், இறுதியில் அப்பாவிச்சனங்களை சிறை வரை கொண்டு சென்றுவிட்டு  மாயமாகி விடுகின்றனர்.

இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளின்  ஊடாக எதை சாதிக்க முனைகின்றார்கள்? வடக்கு கிழக்கு பகுதிகளில் பதற்ற நிலையை  தோற்றுவித்தது அதனை தக்கவைத்துக் கொண்டு கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை  செழிப்புறச் செய்கிறார்களா?  எனும் சந்தேகம் எழுகிறது.

அல்லது  ‘புலிகள் மீளுருவாக்கம்’ என்றதான் ஒரு போலிப் பிரசாரத்தை பரவச் செய்து,  தொடர்ந்தும் தமிழர் தாயகப் பிரதேசங்களை முப்படைகளின் முகாம்களாகவே  பரிபாலிக்க நினைக்கிறார்களா? எனவும் சந்தேகிக்கிறோம்.

ஐ.நா.மனித  உரிமைகள் பேரவை கூட இருக்கின்ற இந்தச்சந்தர்ப்பத்தில் இவ்வாறு அடிப்படையற்ற  குற்றங்களை காரணம் காட்டி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

வைக்கப்பட்டிருக்கும் சுமார்  117பேரில்  வெறுமனே 27தமிழ் தைதிகள் மாத்திரம் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

நடக்கின்ற  விடயங்களை அவதானிக்கும் போது ஏதோ சில காரண காரியங்களுக்காக தமிழர்கள்  பகடையாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது புலனாகின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டுமென்று, இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் இடித்துரைத்துள்ளார்.  உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இக்கொடிய சட்டத்திற்கு நிரந்தர  முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென பலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த  வாரம் ஜனாதிபதி உட்பட வெளிவிவகார அமைச்சர் மற்றும் சட்டம் ஒழுங்குக்கு  பொறுப்பான அமைச்சர் ஆகியோர் “பயங்கர வாதத்தடைச்சட்டத்தை பொலிஸார் அவதானமாக  கையாள வேண்டும்”  என்பதாக  கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

இதனை,  வெறுமனே பொலிஸாரின் மீது மாத்திரம் பழியை சுமத்தி விட்டு தப்பிக்க முயலும் விடயமாக மக்கள் நோக்கக் கூடாது. என்றால், ஏதேனும் ஒரு பொறிமுறையின் கீழ்  மீதமிருக்கின்ற அத்தனை தமிழ் கைதிகளையும் அரசு விடுதலை செய்வதற்கு தயங்க  கூடாது.மீளுருவாக்கக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அனேகமானவர்கள் 22, 23வயதுடைய இளைஞர்களாக இருக்கின்றார்கள்.

நாட்டில்  யுத்தம் முடியும் போது இவர்கள் 10வயதிற்குட்பட்டவர்களாகவே இருந்திருக்க  முடியும். இவ்வாறு இருக்கையில், இவர்கள் தான் “புலிகள் அமைப்பை மீளுருவாக்க  முயன்றார்கள்” எனக்கூறி கைது செய்யப்பட்டிருப்பது எந்தளவுக்கு முரண்நகையான  விடயம் என்பதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்வாதார  உதவிகளை  வழங்குவதாக கூறியவரின்  பின்புலங்கள் எதனையும்  அறியாது அவரை  நம்பி  அவருடன்  பழகிய குற்றத்திற்காக பூநகரியை சேர்ந்த 12க்கும் மேற்பட்டவர்கள்  சிறைகளில் வாடுகிறார்கள்.

வாழ்வாதார உதவி  வழங்குவதாக கூறிய நபர் , பூநகரியில் எவருக்கும் எந்த விதமான வாழ்வாதார  உதவிகளையும் வழங்கவில்லை. வெறும் வாய்ப் பேச்சில் மட்டுமே  உதவி வழங்குவதாக  உறுதி வழங்கியுள்ளார். அவரை  நம்பியவர்கள் தற்போது சிறையில்  வாடுகின்றார்கள்.

அவர்களின் விடுதலையை  எதிர்பார்த்து பூநகரி மக்கள் காத்திருக்கின்றார்கள். சுதந்திர தினத்தினை  முன்னிட்டு விடுவிக்கப்படுவார்கள் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே  மிஞ்சியது.

இனிவரும் காலங்களிலாவது அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் என்பதே தற்போதைய பிரார்த்தனை ஆகும்.

மயூரப்பிரியன்

Comments