"என் கண்களுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கிறேன். என் கண்களுக்கு எந்த எதிரியும் தென்படவில்லை" என்று பெருங் கரகோஷத்தின் மத்தியில் பெருமிதத்துடன் அகங்காரத்தையும் கூட்டியே சொன்னார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகள் அவரை இப்படிப் பேச வைத்திருக்க வேண்டும். தன்னிகரற்ற தலைவராக அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்பதும் உண்மையே. இத்தனைக்கும் நீதிமன்றம், வழக்கும், தண்டனைகள் என்றிருந்தவருக்கு, அவர் புரிந்த ஊழல் மோசடிகளை கணக்கில் எடுக்காது மக்கள் தமது ஆதரவை அள்ளி வழங்கினார்கள் என்பது தமிழக அரசியல் இதற்கு முன்னர் காணாதது. இக் கண்மூடித்தனமான பக்தி எப்படி உருவானது என்பது ஆய்வுக்குரியது. தமிழர் உளவியலுடன் தொடர்புபட்டது. ஏனெனில் எழுபதுகளில் ஊழல் செய்தார் என்பதற்காக பதவி நீக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி மீண்டும் ஆட்சிபீடமேற 13வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஜெயலலிதாவின் ஊழல், மோசடி, அதிகார துன்பிரயோகம் என்பனவற்றுடன் கலைஞர் புரிந்ததாக சொல்லப்பட்ட ஊழல்களை ஒப்பிட்டால் அது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாகவே இருக்கும்.
அ.தி.மு.க.மீதான எம்.ஜி.ஆர் காலத்தில் காணப்பட்ட மக்கள் செல்வாக்கை ஜெயலலிதா தன் காலத்தில் பன்மடங்கு உயர்த்தி உச்சத்தில் வைத்து விட்டே சென்றார். அவர் மறைந்த பின்னர் அக்கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகி விட்டிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க 77இடங்களைக் கைப்பற்றி ஓரளவுக்கேனும் மானத்தை காத்துக் கொண்டது. எனினும் ஸ்டாலின் ஆட்சி பீடமேறி ஒரு வருடத்துக்கும் குறைவான காலப்பகுதியில் அ.தி.மு.க. மேலும் செல்வாக்கு இழந்து மிகுந்த பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்பதை நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
'என் கண்களுக்கு எட்டிய தூரம்வரை அங்குமிங்குமாகப் பார்க்கிறேன், எந்தவொரு எதிரியும் கண்களுக்கு தென்படுவதாக இல்லை' என ஸ்டாலின் இறுமாந்து பேசுவதற்கான சூழல் இன்று தி.மு.கவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் வெற்றி பெற்ற பின்னர் இறுமாப்பு கொண்ட எந்த வார்த்தையையும் ஸ்டாலின் விடவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். அன்றைக்கு ஜெயலலிதா இறுமாப்புடன் குரல் கொடுத்தார். இன்று எடப்பாடியார் வடிவேலு பாணியில், வெற்றி தோல்வியெல்லாம் சகஜமப்பா என்பது போல சமாதனம் கூற வேண்டிய நிலைக்கு அ.தி.மு.க வந்திருக்கிறது.
உள்ளூாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அவமானகரமானத் தோல்வியை சந்தித்திருக்கிறது. தமிழகத்தின் எந்தவொரு மாநகராட்சியையும் அதனால் கைப்பற்ற முடியவில்லை. 138நகராட்சிகளில் அ.தி.மு.க கைப்பற்றியவை மூன்று மாத்திரமே. ஊழல்ல மோசடி குற்றவாளியானாலும் ஜெயலிலதாவே எங்கள் தலைவி என்பதை ஆணித்தரமாகச் சொன்ன தமிழ் வாக்காளர்கள், இன்று, எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர் செல்வமும் எமக்குத் தலைவர்களே அல்ல என்பதைத்தான் தமது வாக்குகள் மூலம் அ.தி.மு.க தலைமைக்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வின் இப் பரிதாப நிலையைப் பார்த்து கவலை வெளியிட்டுள்ள தோழி சசிகலா, நாம் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை தேர்தல் முடிவுகள் அறிவித்துள்ளன என்று எடப்பாடி - பன்னீர் இணைத் தலைமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். டி.டி.வி. தினகரன் நடத்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு புறம்; சசிகலா ஆதரவாளர்கள் மறுபுறம்; அ.தி.மு.க இன்னொரு புறம் என எம்.ஜி.ஆரின் கட்சி மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது. மற்றொரு அ.தி.மு.க அரசை தமிழகத்தில் அமைக்க வேண்டுமானால் இம் மூன்று பிரிவுகளையும் ஒன்றிணைந்து ஒரே அ.தி.மு.க வாக தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்பது சசிகலாவின் தரப்பு முன்வைக்கும் வாதம் அல்லது திட்டம். இதுசரியானதாகவும் படுகிறது. ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது தான் கேள்வி. மூன்று பிரிவுகளும் ஒன்றிணைந்த பின்னர் கட்சிக்குத் தலைவர் யார் என்பதே முக்கிய சிக்கல். முதல்வர் கதிரைக்கு ஆசைப்படும் சசிகலா, கட்சித் தலைவர், முதல்வர் என இரு பதவிகளையும் வகிக்கத் தொடங்கிய பின்னர் தமது கதி என்னாகும் என்பது எடப்பாடி மற்றும் பன்னீரின் கவலை.
எனவே அ.தி.மு.க தற்போது ஒரு முச்சந்தியில் நின்று கொண்டிருக்கிறது.பயணிக்க இரு பாதைகள் உள்ளன. ஒன்று தனி வழி. இவ்வளவு காலமாக இப்பாதையில் பயணித்தும் அதற்கு மக்கள் அங்கீகாரம் அளிக்கத் தவறிவிட்டார்கள். இனி இருப்பது சசிகலாவையும் இணைத்துக் கொண்டு தனியொரு அ.தி.மு.கவாக மக்களிடம் சென்று ஆக்கபூர்வமான அரசியல் செல்வது. இல்லையேல் அ.தி.மு.கவுக்கு மீட்சி இருப்பதாகத் தெரியவில்லை. பா.ஜ.க உடன் கூட்டு வைத்துக் கொள்வதால்தான் மக்கள் கட்சியை நிராகரிக்கிறார்கள் என்று அ.தி.மு.க தலைமை கருதிவந்தது. எனவே இம்முறை அ.தி.மு.க பா.ஜ.கவுடன் இணையாமல் தனியாகத்தான் போட்டியிட்டது. எனினும் இம்முறையும் மக்கள் அ.தி.மு.கவைக் கண்டுகொள்ளவில்லை. எனவே பிரச்சினை, தலைமையில் தான் இருக்கிறது என்பது தெளிவாகியுள்ளதால், சசிகலாவுக்கு வாய்ப்பான காலம் வந்திருப்பதாகவே யூகிக்க முடிகிறது. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் இனிமேலும் தமது பலவீனமான, மக்களிடம் செல்லுபடியாகாதத் தலைமைத்துவத்தை மூடி மறைத்துக் கொண்டிருக்க முடியாது. பைக்குள் பூனைக்குட்டி இருந்தால் அது வெளிவந்துதானே ஆக வேண்டும்!
அ.தி.மு.க வின் பலவீனமான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டிய இத்தேர்தலை கொஞ்சம் பார்ப்போம்.
தி.மு.க. ஏற்கனவே நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் பெரு வெற்றி பெற்றிருந்த நிலையில் இத் தேர்தலிலும் வெற்றி பெறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். எப்போதுமே சட்ட சபைத் தேர்தலோடு பாராளுமன்றத் தேர்தலை ஒப்பிட முடியாது. மக்களின் தெரிவுகள் தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடும்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. குறைவான இடங்களையே பெற்றது. டில்லி சென்ற கலைஞர் கருணாநிதி இந்திராகாந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நமது கூட்டணி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் அதற்கான ஒரே வழி, எம்.ஜி.ஆர். பின்னடைவை சந்தித்திருக்கும் இத் தருணத்தை பயன்படுத்திக் கொள்வதிலேயே தங்கியுள்ளது. எனவே தமிழக சட்ட சபையைக் கலைத்துவிடுங்கள் என்று பரிந்துரை செய்தார். அதை பிரதமர் இந்திரா ஏற்றுக் கொண்டு சட்டசபையைக் கலைத்தார்.
1980ஜனவரி 6ம் திகதி நடைபெற்ற 542தொகுதிகளுக்கான பாராளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி 351இடங்களைக் கைப்பற்றினார். கலைக்கப்பட்ட தமிழக சட்ட மன்றத் தேர்தல் பெப்ரவரி 18ம் திகதி நடைபெற்றது. காங்கிரஸ் 110ஆசனங்கள் தி.மு.க 110ஆசனங்கள் என தொகுதிகளைப் பிரித்துக் கொண்டு தேர்தலில் நின்றன. எம்.ஜி.ஆரின் கதை முடிந்தது என கருணாநிதி நினைத்தார். வாக்களிப்பு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 1ஆம் திகதி முடிவுகள் வெளியாகின. இறுதி முடிவு கருணாநிதிக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஏனெனில் 234சட்டசபைத் தொகுதிகளில் எம்.ஜி.ஆர். 128இடங்களைக் கைப்பற்றியிருந்தார். தி.மு.க கைப்பற்றிய தொகுதிகள் வெறும் 38மட்டுமே. காங்கிரஸ் 30தொகுதிகளைக் கைப்பற்றியது. பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் சட்ட சபைத் தேர்தலில் இன்னொரு மாதிரியும் வாக்காளர்கள் முடிவெடுக்கிறார்கள் என்பதற்கு இத் தேர்தல் முடிவு உதாணமாக அமைந்தது.
ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பதவியேற்று பத்து மாதங்கள கடந்த நிலையில் நடைபெற்றிருக்கும் இத்தேர்தல், பத்து மாதங்களுக்கு முன் தமிழகத்தில் தி.மு.க.வுக்குக் காணப்பட்ட செல்வாக்கு பல மடங்காக இப்போது வளர்ந்திருப்பதை புலப்படுத்துகிறது. அவர் பதவியேற்றது முதல் கொரோனா பெருந்தொற்றுடன் போராட வேண்டியதாயிற்று. அத்தொற்று சமூகத்தில் ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகளுக்கான பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டியிருக்கும் என்பதும் அது அரசின் மீதான மக்கள் அபிமானத்தில் வீழ்ச்சியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் என்பதும் இயல்பானதே. இவ் வகையான இடர்களையும் தாண்டி கிராமப்புற உள்ளுராட்சித் தேர்தல்களிலும் தற்போது பெருநகர, நகர சபைத் தேர்தல்களிலும் தி.மு.க. அபார வெற்றி பெற்றிருப்பது, ஸ்டாலின் தி.மு.க.வின் பொற்காலத்தை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
கலைஞர் கருணாநிதிக்கென பல்லாயிரம் அபிமானிகளும், லட்சக் கணக்கில் தொண்டர்களும் இருந்த போதும், அம்மா விசிறிகள் இலட்சக் கணக்கில் ஆர்ப்பரித்து வந்துள்ள போதிலும் அனைத்து வாக்காளர்களின் அடி மனதிலும் எமக்கு வித்தியாசமான, ஊழல் மோசடியற்ற, செயல்திறன் கொண்ட ஒரு அரசும், மக்களின் தேவைகளை அறிந்து விரைவில் நிறைவேற்றும் தலைவரும் எப்போது வந்து வாய்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது என்பதையே ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து கிடைத்து வரும் வெற்றிகள் புலப்படுத்துவதாகக் கொள்ள முடியும்.
தேர்தல் நடைபெற்ற மொத்தத் தமிழக மாநகராட்சி (முனிசிபல்) களின் எண்ணிக்கை 21. வார்டுகள் தொகை 1373. இவற்றில் 1090வார்டுகளைக் கைப்பற்றி 21மாநகராட்சிகளையும் தன் வசப்படுத்தியுள்ளது தி.மு.க.
நகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 138. இவற்றில் 132நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க மூன்றையும் ஏனையவை மூன்றையும் கைப்பற்றியுள்ளன. 3842வார்டுகளில் தி.மு.க. கைப்பற்றியவை 2658.
பேரூராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 489. அவற்றில் 402சபைகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. வசம் சென்றவை 18. ஏனையவை 34.
பொதுவாகவே சென்னை மாநகராட்சி தி.மு.க. வசம் செல்வதே வழக்கம். இம்முறை 183வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க கைப்பற்றிய வார்டுகள் வெறும் 15மட்டுமே. மதுரையை எடுத்துக் கொண்டால் தி.மு.க. 57இடங்களையும் அ.தி.மு.க. 12இடங்களையும் கைப்பற்றியுள்ளன. திருச்சியின் 65ஆசனங்களில் 49வார்டுகள் தி.மு.க வசம் சென்றுள்ளன. அசைக்கமுடியாத கோயம்புத்தூர் மாநகரசபையும் தி.மு.க.வசம் சென்று விட்டது இத் தேர்தலில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் பாஜ.கவின் வளர்ச்சி. தனியாகப் போட்டியிட்டு இத் தேர்தலில் 308வார்டுகளை அது கைப்பற்றியுள்ளது.
தி.மு.க. இத்தகைய பிரமாண்ட வெற்றியை மிக நீண்ட நாட்களின் பின்னர் பெற்றுள்ளது. காரணம் தலைமை. புதுத் தலைமை. சொன்னதைச் செய்வோம்; செய்ததையே சொல்வோம், சொல்லாததையும் செய்வோம் என்ற ஸ்டாலினின் மந்திரம் மக்களிடம் வேலை செய்துள்ளது. இத் தேர்தலில் கலைஞரினால் சாதிக்க முடியாததையும் ஸ்டாலின் சாதித்திருக்கிறார். அதுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றி. இங்கு கொங்கு வேளாளர் வகுப்பினர் வசிப்பதால் கொங்கு மண்டலம் என அழைக்கப்படுகிறது. எழுபதுகளில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை. ஆரம்பித்த காலம் முதல் கொங்கு மண்டலம் அ.தி.மு.க. வசமே இருந்து வந்தது. அது ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்தது.
2010ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி செம்மொழி மாநாட்டை மிகப் பிரமாண்டமாக கோவையில் நடத்தியதோடு பல வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்தார். எனினும் கொங்கு மண்டலத்தில் இருந்து அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. கோயம்புத்தூர், கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம் என்பன கொங்கு மண்டலத்தின் கீழ் வருகின்றன.
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வென்ற 77தொகுதிகளில் 44தொகுதிகள் கொங்கு மண்டலம் தந்தவை. ஒரு வருடத்துக்கு முன்னர் காணப்பட்ட இந்நிலைமை இப்போது தலைகீழாகியுள்ளது. இத் தேர்தலில் அ.தி.மு.க. வின் கொங்கு கோட்டையை தி.மு.க. தகர்த்திருக்கிறது. முதல் தடவையாக கொங்கு மண்டல உள்ளூராட்சி தி.மு.க.விடம வந்திருப்பது அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் அதிர்ச்சியைத் தந்திருக்கும்.
மேலும் இம் மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடியிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் போடி சட்ட மன்றத் தொகுதிக்கு உரிய உள்ளாட்சி அதிகாரங்களும் தி.மு.க. வசமே சென்றுள்ளன. இதனால் இவ்விரு தலைவர்களும் கலக்கம் அடைந்திருக்கின்றனர். மேலும் இத் தேர்தல் பரபரப்பு ஓய்ந்த பின்னர் எடப்பாடியார் மற்றும் பன்னீர் செல்வத்தின் இரட்டைத் தலைமைக்கு எதிரான குரல்கள் அ.தி.மு.க.வுக்குள் வலுக்கலாம்.
இது இப்படி இருக்க, அடுக்கடுக்கான இவ்வெற்றிகள் ஸ்டாலினுக்கு மலர்ப்படுக்கை என்பதைவிட சுமை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வெற்றி மமதையில் கட்சிக்காரர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் ஆட்டம் போடத் தொடங்குவார்கள் என்றால் கிடைத்த வெற்றிகள் வந்த வழியே போய் விடவும் செய்யும். வெற்றிகளை தக்க வைப்பது மிகக் கடுமையான பணி. ஆட்சியை இதே கட்டுக் கோப்புடன் நடத்தினால் மட்டுமே ஸ்டாலின் பக்கம் மக்கள் நிற்பர்கள்.
அருள் சத்தியநாதன்