சர்வதேசத்துடன் ஒத்துழைப்பாக செயற்படுவதில் என்றும் அர்ப்பணிப்புடன் இலங்கை அரசாங்கம் | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேசத்துடன் ஒத்துழைப்பாக செயற்படுவதில் என்றும் அர்ப்பணிப்புடன் இலங்கை அரசாங்கம்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலானமோதல்கள் குறித்து முழு உலகமும் கவனம்செலுத்தியிருக்கும் நிலையில், ஜெனீவாவில்உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49வதுகூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகிநடைபெற்று வருகிறது. ஐ.நா மனித உரிமைகள்பேரவையின் 49வது கூட்டத்தொடரிலும் இருநாடுகளுக்கும் இடையிலான விவகாரம்முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்த கலந்துரையாடல் ஓரிரு தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் தயாரித்துள்ள எழுத்துமூல அறிக்கையின் வரைபு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. நல்லிணக்க செயற்பாடுகளில் அரசாங்கம் காண்பித்து வரும் அக்கறை குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதை இந்த அறிக்கையின் வரைபு காண்பிப்பதாக அமைகிறது.

இந்த நிலையில், 49வது அமர்வின் உயர்மட்டக் கூட்டத்தில் இலங்கையின் நிலைமையை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று சாட்சிகளை சேகரிப்பதற்காக அலுவலகமொன்றை அமைப்பது தொடர்பான விடயத்தை அவர் திட்டவட்டமாக மறுத்திருப்பதுடன், அது குறித்த அரசாங்கத்தின் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.

'சம்பந்தப்பட்ட நாடான இலங்கையின் அனுமதியின்றி சமர்ப்பிக்கப்பட்ட 46/1தீர்மானத்தின் மீது மார்ச் 2021இல் சபை வாக்களித்திருந்தது. இந்த விடயத்தைப் பரிசீலிப்பதானது இந்த மன்றத்தை துருவப்படுத்தி அரசியல் மயமாக்கியது. ஐ.நா பொதுச் சபை முதலில் இந்த சபைக்கு வழங்கிய ஆணையில் இருந்து விலகி, பல நாடுகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட ஒரு நடவடிக்கையான ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையை இந்தத் தீர்மானத்தின் செயற்பாட்டுப் பந்தி 6குறித்து நிற்கின்றது.

இத்தகைய முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றன. இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன் மூலம் வெறுப்பை வளர்த்து, சமூகங்களை துருவப்படுத்துகின்றது.

46/1தீர்மானத்தின் ஓ.பி. 6இன் கீழ் நிறுவப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது இலங்கை மக்களுக்கு உதவாது, இலங்கை சமூகத்தை துருவமயமாக்கி, சவாலான நேரத்தில் பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மோசமாகப் பாதிக்கும் என இலங்கை மீண்டும் தனது கருத்தை வலியுறுத்துகின்றது. உயர்ஸ்தானிகர் அலுவலகம் உட்பட பலதரப்பு அமைப்பு முழுவதும் கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவுகின்ற தற்போதைய காலகட்டத்தில், உறுப்பு நாடுகளின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு பயனற்ற விடயம் ஆகும்' என பேராசிரியர் பீரிஸ் தனது உரையில் இவ்விடயத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தவிரவும், நல்லிணக்கத்தையும் மனித உரிமை நிலைமைகளையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விரிவான நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ள வெளிவிவகார அமைச்சர், சர்வதேசத்துடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

'எமது ஜனநாயக மரபுகள் மற்றும் சுயாதீன நிறுவனங்கள் உலகளாவிய வயது வந்தோருக்கான வாக்குரிமையின் மூலம் சீரான இடைவெளியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்கின்றன. மோதலுக்குப் பிந்திய மீட்பு மற்றும் குணமடைதலில் நாம் பெற்ற கணிசமான முன்னேற்றத்தை மேலும் முன்னேற்றுவோம். இதற்காக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சமூக நீதிக்கான உள்நாட்டு நிறுவனங்களை அமைத்துள்ளோம். இந்த சபையின் மூலம், பரஸ்பரம் நன்மை பயக்கும் 3உலகளாவிய காலாந்தர மீளாய்வுகளை நாங்கள் நிறைவு செய்து, ஒப்பந்த அமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, விஷேட நடைமுறைகளுக்கான ஆணைகளை வைத்திருப்பவர்களை வரவேற்று, உள்நாட்டு மற்றும் சர்வதேச உரையாசிரியர்களுடன் வெளிப்படையான மற்றும் திறந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம்.

மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நாவிடம் உள்ள கணிசமான நிபுணத்துவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நாங்கள் பயனடைந்துள்ளோம். நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது உள்நாட்டு செயன்முறைகளுக்கு நாட்டிற்கான ஐ.நா. குழுவின் மூலமாக தொடர்ந்தும் நல்கப்படுகின்ற ஆதரவை நாங்கள் மதிக்கின்றோம்.

இந்தக் கூட்டுறவு ஊடாடலினூடாக, எமது உள்நாட்டுக் கட்டமைப்பு மற்றும் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு அமைய, இன மற்றும் மத அடையாளம் மற்றும் அரசியல் சார்பு எதுவுமின்றி, எமது பிரஜைகள் அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை மேம்படுத்தி, பாதுகாப்பதை நாங்கள் தொடர்ந்தும் உறுதி செய்கின்றோம்' என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உயர்மட்ட அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

கொவிட் - 19தொற்றுநோயினால் உருவாகியுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அபிவிருத்திக்காகவும், மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் அவர் தனது உரையில் பிஸ்தாபித்திருந்தார். அத்துடன், பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்நாட்டில் வலுவடைந்துவரும் நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் விபரித்திருந்தார்.

இது பற்றி அவர் குறிப்பிடுகையில், 'உலகில் ஏனைய இடங்களைப் போலவே, பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டமானது விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுதல் மற்றும் விசாரணை ஆகியவற்றுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநாயக சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் இலங்கை உறுதியாக நம்புகின்றது. இந்த நோக்கங்களைக் கருத்திற் கொண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு 43வருடங்களின் பின்னர், அதனைத் திருத்துவதற்கான ஆரம்பக் கட்டமாக, இலங்கைப் பாராளுமன்றத்தில் நான் அண்மையில் ஒரு சட்டமூலத்தை முன்வைத்தேன்' என்றார்.

உயர்மட்டக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக இலங்கை குறித்த ஊடாடும் கலந்துரையாடலில் மேலும் விளக்கங்களை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார். அதேநேரம், சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதற்கு முழுமையான முயற்சிகளையும் எடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கொழும்பில் தெரிவித்திருந்தார். தற்பொழுது ஜெனீவா சென்றுள்ள பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து இலங்கை அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கமளித்து வருகின்றனர்.

இது இவ்விதமிருக்க, கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகத்தைச் சந்திக்கவிருப்பதாக ஊடகங்கள் சில அறிக்கையிட்டுள்ளன. இதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படாத போதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுவரும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் சென்று பாப்பரசரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதனைத் தொடர்ந்தே மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரையும் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்யுக்தன்

Comments