இன்றைய நெருக்கடி - 50 ஆண்டுகாலத் தவறின் விளைவு | தினகரன் வாரமஞ்சரி

இன்றைய நெருக்கடி - 50 ஆண்டுகாலத் தவறின் விளைவு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சமையல் எரிவாயுவில் தொடங்கி மின்வெட்டு வரை வந்திருக்கிறது. எரிபொருட்களை நிரப்புவதற்கு நீண்ட நேரம், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுப்பாடற்று விற்கப்படுகின்றன. பொதுவாகவே கட்டுப்பாடற்ற சந்தை அல்லது கட்டுப்பாடற்ற நிலை உருவாகி விட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

இதைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது -

“ஐம்பது ஆண்டுகாலத் தவறுக்குத்தான் இப்பொழுது கூட்டுத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் இதை விளங்கிக் கொள்ள யாருமே தயாரில்லை. இது ஏதோ இப்போதுதான் ஏற்பட்ட பிரச்சினை என்றும் புதியதொரு நெருக்கடி என்றும் எண்ணுகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லோரும் விட்ட தவறுகளின் வெளிப்பாடுதான் இது” என்று சொல்லிக் கவலைப்பட்டார் தோழர் ஒருவர்.

அது என்ன “ஐம்பது ஆண்டுத் தவறு?” என்று நீங்கள் கேட்கலாம்.

நானும் அப்படித்தான் கேட்டேன்.

1970களுக்குப் பிந்திய காலப்பகுதியையே தோழர் குறிப்பிட்டார்.

“1970இன் முற்பகுதியில் ஜே.வி.பியின் கிளர்ச்சி தொடங்கியது. அதிலே இளைய தலைமுறையினர் ஆயிரக்கணக்கில் போராட்டக்களத்திலே குதித்தனர். அவர்களை அடக்குவதற்கென்று அரச படை எந்திரம் பெருப்பிக்கப்பட்டது. முப்படைகளுக்குமான ஆட்சேர்ப்புத் தொடக்கம் நிதி ஒதுக்கீடு வரை தேச வளம் பெருவாரியாக செலவழிக்கப்பட்டது.

அதில் தொடங்கிய சீரழிவு இது” என்றார் தோழர்.

உண்மைதான்.

1970களின் தொடக்கத்திலிருந்து கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல், நாடு அரசியல் கொந்தளிப்புகளால் அலைக்கழிக்கப்பட்டது. அழிந்தது. அரசியல் பொருளில் விளக்குவதானால் உள்நாட்டு நெருக்கடியால் சீரழிந்தது.

அதற்கு முன், நானூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்நியரால் சுரண்டப்பட்ட நாடு இது.

சுதந்திரம் பெற்ற 20ஆண்டுகளுக்குள்ளேயே தொடங்கிய அரசியற் கொந்தளிப்பும் நெருக்கடியும் 50ஆண்டுகளுக்கும் மேலும் நீடித்தது என்றால்

விளைவு எப்பிடியிருக்கும்?

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மூன்று வளங்கள் அடிப்படையானவை.

ஒன்று அதனுடைய இயற்கை வளங்கள்.

இரண்டாவது மனித வளம். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையின் ஆற்றல்.

அவர்களே சிந்தனைத் திறனிலும் ஆற்றச் சிறப்பிலும் உழைக்கும் சக்தியாக முன்னிற்போர்.

மூன்றாவது நிதி மற்றும் அதன் சொத்து.

ஆனால் நாட்டில் தொடர்ச்சியாக நடந்த அரசியல் நெருக்கடிகளாலும் போராட்டங்களாலும் போராலும் பெருமளவு இளைய தலைமுறையின் ஆற்றல் 50ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்குக் கிடைக்கவே இல்லை. அவ்வளவும் சிதைக்கப்பட்டன. அல்லது வீணாயின.

பாருங்கள், 1970களில் லட்சம் வரையான சிங்கள இளைஞர்கள் ஜே.வி.பியில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை அடக்குவதற்காக அரசும் படைகளுக்கு ஆட்களைத் திரட்டியது. நிதியையும் செலவழித்தது. இறுதியில் பல்லாயிரக்கணக்கானோரின் (அவ்வளவும் இளைய தலைமுறையினர்) உயிர்ப்பலியோடு அந்தப் போராட்டம் நசுக்கப்பட்டது.

ஜே.வி.வியை ஒடுக்கியதாக அரசு கருதினாலும் நாட்டிற்கு அது பல வகையான இழப்பையே கொடுத்தது.

அது அன்றைய இலங்கைக்குப் பெரிய சுமையே. பெரிய நெருக்கடியே. பெரிய இழப்பே.

பிறகு தமிழ் இளைஞர்களின் போராட்டம் எழுச்சியடைந்தபோது அதிலும் பல லட்சக் கணக்கானோரின் ஆற்றலும் திறனும் நாட்டின் தேசிய உற்பத்திக்கோ வளர்ச்சிக்கோ கிட்டாமற் போனது.

மறுவளத்தில் அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசும் படைகளைப் பெருக்கியது. இதனாலும் பெரியதொரு இளைய தரப்பின் ஆற்றல் தேசிய உற்பத்திக்குக் கிடைக்காமல் போனது.

இந்தப் போராட்டம் 40ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. இந்த நாற்பது ஆண்டுகளிலும் 30லட்சத்துக்கும் அதிகமானோரின் ஆற்றல் வீணடிக்கப்பட்டது. சொத்துகள், உடமைகள், இயற்கை வளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. லட்சக்கணக்கானோர் பலியாகினர். பெருமளவு நிதி பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்திலும் பாதுகாப்புத்துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதியை கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டே பெயர்ந்தனர்.

இதெல்லாம் நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பன்றி வேறென்ன?

“அரசைக் காப்பாற்றுவதற்காக அதாவது நாட்டைக் காப்பாற்றுவதற்காக தேசிய பாதுகாப்புக்கென இப்படித்தானே எந்த அரசும் செயற்படும். இது தவிர்க்க முடியாததல்லவா?” எனச் சிலர் கேள்வி எழுப்பலாம்.

தேசிய பாதுகாப்பு அவசியம்தான். அந்தத் தேசிய பாதுகாப்பு எந்த அடிப்படையிலானது என்ற புரிதல் அவசியம். அதுவும் இலங்கை போன்ற வறிய – சிறிய நாட்டுக்கு?

உலகில் வளம் கொழிக்கும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் சுவிற்சர்லாந்து தேசிய பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது, எவ்வளவு நிதியை ஒதுக்குகிறது? இதைப்போல பெரும் நிலப்பரப்பைக் கொண்ட அவுஸ்திரேலியா தன்னுடைய தேசிய பாதுகாப்புக்கு என எவ்வளவு நிதியையும் வளத்தையும் ஒதுக்குகிறது என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டுக்கு தேசிய பாதுகாப்பு இரண்டு வகையில் ஏற்படுவதுண்டு. ஒன்று வெளித் தரப்பினால். மற்றது உள்நாட்டில் உண்டாகும் முரண்களால்.

வெற்றிகரமான ராஜதந்திர அணுகுமுறைகளால் வெளித்தரப்பின் மூலம் உண்டாகும் அபாயங்களைத் தவிர்ப்பதே சிறந்த வழி. அதையே இன்றைய உலகு செய்து வருகிறது.

உள்நாட்டு நெருக்கடி என்பது மொழி, மத, நிற, இன, பிரதேச ரீதியாக உண்டாகும் முரண்களால் உருவாகுவது.

அதாவது உள்நாட்டு நெருக்கடியென்பது உள்ளிருந்து கொல்லும் நோயாகும்.

அதற்கு உரிய மருந்தைக் கண்டு நோயைக் குணப்படுத்தவில்லை என்றால் அது நாட்டையே அழித்து விடும்.

உரிய மருந்தென்பது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்குவதல்ல. பதிலாக ஜனநாயகம், பன்மைத்துவம், பல்லினத்தன்மை, சமத்துவம் போன்றவற்று இடமளிப்பதன் மூலம் சீர்செய்வது.

இதைச் செய்யத் தவறியதன் விளைவே இன்றைய நெருக்கடி நிலை. இப்பொழுது கூட யாரும் உள்நாட்டு நெருக்கடிக்கு உரிய மருந்தென்பது ஜனநாயகம், பன்மைத்துவம், பல்லினத்தன்மை, சமத்துவம் போன்றவற்று இடமளிப்பதன் மூலம் சீர்செய்வதேயாகும் என்று ஏற்கத் தயாரில்லை.

பதிலாக படைகளையும் அதிகாரத்தையுமே நம்புகிறார்கள். இது ஒருவகையான உளநோயாகும். இத்தகைய உளநோய்க்கு அறிவியலில் மருத்துவம் கிடையாது. ஏனென்றால் மரபுத் தொடர்ச்சி போல இலங்கையில் கடந்த ஐம்பது ஆண்டாக ஆட்சியிலிருந்த அத்தனை அரசுகளும் இந்த வழிமுறையைத்தான் பின்பற்றின.

இந்த வழிமுறையின் மூலமே உள்நாட்டு நெருக்கடி கட்டுப்படுத்தப்பட்டு வந்தது.

கவனிக்கவும், கட்டுப்படுத்தப்பட்டு வந்ததே தவிர, தீர்க்கப்படவில்லை.

அப்படித் தீர்க்கப்பட்டிருந்தால் இன்று இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கவும் மாட்டாது. தவிர, இன்னும் தொடர்கின்ற இனப்பிரச்சினை, அது தொடர்பான அரசியல் நெருக்கடிகள், மனித உரிமை விவகாரங்கள், வெளியுலக அழுத்தங்கள் போன்றவை எவையும் இருந்திராது.

இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இன்று நாடு முழுவதிலும் வளர்ந்து பெருகியிருப்பவை கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், விகாரைகள் என்ற மதவழிபாட்டிடங்கள்.

ஆனால், அந்தளவுக்கு மக்களிடம் ஆன்மீகமும் அது உண்டாக்கும் மானுட நேயமும் மனிதப் பண்பும் பெருகியிருக்கிறதா? குறைந்த பட்சம் அயலவருடன், அடுத்த சமூகத்தினருடன் நேசமாக இருக்கக் கூடிய அளவுக்கு உளப்பண்பாடு உருவாகியுள்ளதா?

அது நிகழவில்லை என்றால் அதனால் பயனென்ன? வடக்குக் கிழக்கில் போருக்குப் பின்னர் பெருகிக் கிடப்பவை கோயில்களும் படைமுகாம்களும்தான்.

இவை இரண்டும் தேசிய உற்பத்திக்கு எந்தப் பயனையும் விளைவிப்பனவல்ல.

வேண்டுமானால் நீங்கள் எந்தத் தேசிய நெடுஞ்சாலையிலாவது செல்லும்போது ஒரு தடவை கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். எத்தனை மதச் சின்னங்கள் பெருகிக் கிடக்கின்றன.

எத்தனை படைமுகாம்கள் பெருகியுள்ளன என்று. அந்தளவுக்கு உற்பத்தி ஆலைகளும் தொழில் மையங்களும் உள்ளனவா எனவும் கணக்கிட்டுப் பாருங்கள்.

அப்பொழுதுதான் யதார்த்தம் என்ன என்று விளங்கும்.

தேசிய உற்பத்தியைக் கவனம் கொள்வதற்குப் பதிலாக தேசிய வளத்தைச் சிதைக்கும் நிலையில் நாட்டை வைத்திருந்தால் நெருக்கடிகள் வரவரக் கூடுமே தவிரக் குறையாது.

இதைப் புரிந்து கொள்ள மறுக்கும் அரசியற் தரப்பினரை நாமே தொடர்ந்தும் ஆட்சியில் அமர்த்தி வந்திருக்கிறோம்.

ஆகவே நாமே நம்முடைய நெருக்கடிகளுக்குக் காரணமாக இருக்கிறோம்.

இன்றும் இனரீதியாக பிளவு பட்டுத்தான் கிடக்கிறோம். ஒருவருவடைய முகத்தை ஒருவர் சிநேகமாகப் பார்க்க முடியாமலும் ஒருவருடைய உளத்தை ஒருவர் உளமார நேசிக்க முடியாமலும்தான் இருக்கிறோம்.

பதிலாக ஒவ்வொருவரும் மறுதரப்பை குற்றம் சுமத்திக் கொண்டேயிருக்கிறோம்.

ஆனால், எல்லோருக்கும் மின்வெட்டு ஒரே விதமாகவே நிகழ்கிறது. ஒரே விதமாகவே பொருட்களின் விலை ஏறுகிறது. ஒரே விதமாகவே பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.

முன்பு போர்க்காலத்தில் உயிர்ப்பலி நிகழ்ந்ததும் அப்படித்தான். மரணம் அத்தனை சமூகத்தினரிடத்திலும் நாட்டியமாடியது.

நாடோ வீடோ முதலில் அமைதியைக் காண வேண்டும். அடுத்துப் பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்க வேண்டும். அதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

இதற்குத் தீர்க்க தரிசனமும் திராணியும் திடசித்தமும் மனவிரிவும் உள்ள தலைவர்கள் வேண்டும்.

அவர்களால்தான் நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

மற்றயவர்கள் காய்ச்சலுக்குப் பனடோல் பாவிப்பதைப்போலத் தற்காலிகத் தீர்வையே தருவார்கள்.

அது நோயை – பிரச்சினையை – முற்றாகக் குணமாக்காது.

நமக்குத் தேவை அனைத்துச் சமூகத்தினரையும் தன் ஆளுமையாலும் அன்பினாலும் ஆகர்ஸிக்கக் கூடிய ஒரு தலைமையே. அந்தத் தலைமையின் மூலமே அத்தனை நெருக்கடிகளுக்குமான தீர்வு கிட்டும். அத்தகைய தலைமையை உருவாக்குவது வேறு யாருமல்ல. நாமேதான்.

அதற்கு நாம் முதலில் தயாராக வேண்டும். இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற எல்லைகளைக் கடந்த சிந்தனையும் மனமும் நமக்கு வேண்டும். அது ஒன்றே நம்முடைய நெருக்கடிகளிலிருந்து நம்மை விடுவிக்கும். அது நிகழவில்லை என்றால் இன்னும் இன்னும் இந்த நெருக்கடி கூடுமே தவிரக் குறையாது.

இது வரலாற்று உண்மையாகும்.

சிலர் சொல்லக் கூடும் ஆட்சி மாறினால் எல்லாமே சரியாகி விடும் என்று. எதிர்க்கட்சிகள் அப்படித்தான் சொல்லிக் கொள்கின்றன. அவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னர் ஆட்சி நடத்தியவர்கள் தாங்கள் என்பதை.

ஏனென்றால் இது 50ஆண்டுகாலத் தவறு.

கருணாகரன்

Comments