![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/06/a28.jpg?itok=JyqXHAAA)
கிரிக்கெட்டின் ஆல் டைம் ஜாம்பவான்களில் ஒருவரான ஷேன் வோர்ன் தனது 52ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது பிறந்ததினம் 1969செப்டெம்பர் 13.
இங்கிலாந்து ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளதாக ஷேன் வோர்ன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1992மற்றும் 2007க்கு இடையில் விஸ்டனின் ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்ட வோர்ன், ஆஸ்திரேலியாவுக்காக 15வருடங்கள் விளையாடி 708டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றினார், மேலும் 1999இல் உலகக் கோப்பையை வென்றவர்.
வோர்னின் நிர்வாகத்தால் பொக்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கப்பட்ட சுருக்கமான அறிக்கையின்படி, அவர் தாய்லாந்தில் மாரடைப்பால் காலமானதாக சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஷேன் வோர்ன் அவரது வில்லாவில் பேச்சுமூச்சின்றி காணப்பட்டார், மருத்துவ ஊழியர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியவில்லை" என்று பதிலளிக்கப்பட்டது.
"இவ்வேளையில் குடும்பம் தனிமையை விரும்புகிறது, மேலதிக விபரங்களை உரிய நேரத்தில் வழங்குவோம்." என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் மற்றொரு அடையாளமான முன்னாள் விக்கெட் கீப்பர் Rod Marsh இந்த வார ஆரம்பத்தில் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது 74ஆவது வயதில் இறந்த நிலையில், ஒரு சில மணித்தியாலங்ளுக்குப் பின்ன இந்த அதிர்ச்சியான செய்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1990களின் முற்பகுதியில் லெக்ஸ்பின் கலையை தனிமனிதனாக தனித்துவத்துடன் பெற்ற ஒரு மனிதர், "வோர்னி" (Warney), கிரிக்கெட் உலகம் முழுவதும் அறியப்பட்டவர், உலக கிரிக்கெட்டின் உண்மையான இலட்சினைகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
பாகிஸ்தானின் அப்துல் காதர் போன்ற பிரபலங்கள் இந்த கலையை உயிர்ப்புடன் வைத்திருந்தாலும், வோர்ன் ஒரு புதிய கவர்ச்சியையும் புது வித தந்திரோபாயத்தை லெக்ஸ்பினுக்கு கொண்டு வந்தார்.
1991/-92ல் இந்தியாவுக்கு எதிரான ஒரு மோசமான அறிமுகமாக ஒரு விக்கெட்டுக்கு 150ஓட்டங்கள் பெற்ற பின்னர், வோர்ன் தனது ஐந்தாவது தோற்றத்தில், இலங்கைக்கு எதிராக போட்டியில் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தினார். 1992-/93பாக்சிங் டே டெஸ்டில் தனது சொந்த மைதானமான மெல்பேர்னில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஏழு மெட்ச்-வின்னிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2003ஆம் ஆண்டில், அந்த ஆண்டின் 50ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக, வழக்கமான போதைப்பொருள் சோதனையின் போது தடைசெய்யப்பட்ட டையூரிடிக் (diuretic) கண்டுபிடிக்கப்பட்டதால், வோர்ன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். எடை இழக்க அவருக்கு உதவுவதற்காக அவரது தாயார் அதை கொடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அந்த பின்னடைவு அவரை விளையாட்டிலிருந்து ஓய்வடையச் செய்திருக்கலாம் என்றாலும், விளையாட்டிலிருந்து விலகிய ஆண்டுக்கு பின்னர் 30களின் நடுப்பகுதியில் இருந்த அவர், மார்ச் 2004இல் இலங்கையில் மறக்கமுடியாத தொடரை வெல்வதற்கு அவர் தொடர்ச்சியாக நான்கு தடவை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2006-07ஆஷஸ் தொடரில் வழக்கமான ஆட்டத்திறனுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
37வயதில் கூட, வோர்ன் தளரவில்லை. 2008ஆம் ஆண்டில், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) தொடக்க தொடரில் அவர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.
அத்தொடரில் அவர் 21.26எனும் சராசரியுடன் 19விக்கெட்டுகளுடன் பட்டத்தை வெல்ல வழிவகுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் விக்கெட் எதனையும் பெறாத போதிலும், அவர் மற்றும் சோஹைல் தன்வீர் ஆகியோர் போட்டியின் இறுதி வரை களத்தில் நின்று இறுதி ஓவர் முடிவில் வெற்றியை தனதாக்கினர்.
ஓய்வு பெறுகையில், வோர்ன் ஒரு வர்ணனையாளரானார், பிரதானமாக ஆஸ்திரேலியாவில் உள்ள Fox Sports (ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்) அலைவரிசையில் அவர் அப்பணியை செவ்வனே செய்து வந்தார். 145டெஸ்ட் போட்டிகளில், 273இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 40,705பந்துகளை வீசி, 708விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார்.
194ஒரு நாள் போட்டிகளில் 191இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 10,642பந்துகளை வீசி, 293விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார். அவரது மரணம் தொடர்பில், பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது சமூக வலைத்தள கணக்குளில் அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா