![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/06/a18.jpg?itok=KbaOHb-4)
சர்வதேச நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுடன் நடத்தும் வருடாந்த கலந்துரையாடல்களின் (Article IV Consultation) ஓர் அங்கமாக இலங்கை அரசாங்கத்துடன் 25.02.2022அன்று நடத்திய கலந்துரையாடல்களின் பின்னரான நிறைவேற்றுக்குழுவின் (IMF Executive Board) அறிக்கையை கடந்த இரண்டாம் திகதி வெளியிட்டிருந்தது.
இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நிதிநிறுவனங்கள் வெளியிட்ட மிகப்பிந்திய அறிக்கையாக இதனைக் கொள்ள முடியும். கோவிட் பெருந்தொற்றின் மத்தியில் இலங்கைப் பொருளாதாரம் வெளிநாட்டு அதிர்ச்சிகளுக்கு ஆளாகவல்ல அதி கூடிய அபாய நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையின் அறிமுகம் கூறுகிறது.
2019இல் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் 2019இல் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட வரிவெட்டுகள் உள்ளிட்ட முக்கிய பொருளாதாரக் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் வெளிநாட்டு சொத்து ஒதுக்குகளின் போதாத தன்மையும் அரசாங்கத்தின் பொதுப்படுகடனைப் பேணிச்செல்ல முடியாத தன்மையும் அதிகரித்துச் சென்றதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
2020மற்றும் 2021களில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத் துண்டுவிழும் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10சதவீதத்தை விட அதிகமாகக் காணப்பட்டது. 2019இல் புதிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தபட்ட வரிக்குறைப்புகளும் கொள்ளை நோய் காரணமாக வரிவருமானச் சேகரிப்பில் ஏற்பட்ட தொய்வுநிலையும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் துண்டுவிழும் தொகை அதிகரித்துச் செல்லக் காரணமானதாக அது கூறுகிறது.
அரசாங்கத்தின் செலவுகளை ஈடுசெய்ய வெளிநாட்டுக் கடன்களைப் பெற முடியாத நிலையில் மத்தியவங்கி பணத்தை அச்சிட்டு வழங்குவதன் மூலம் நேரடியாக அரசாங்கத்தின் செலவுகளை ஈடுசெய்ய முயற்சித்தது. 2019இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 94சதவீதமாகக் காணப்பட்ட பொதுப்படுகடன்கள் 2021இல் 119சதவீதமாக அதிகரித்தன. அரசாங்கத்தின் பெரியளவிலான வெளிநாட்டு நாணய வடிவிலான கடன் சேவைக் கொடுப்பனவுகளும் சென்மதி நிலுவையின் நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை நிலைமைகளும் ஒன்றிணைந்து நாட்டில் அந்நியச் செலாவணிப் (டொலர்) பற்றாக்குறையை மோசமடையச் செய்தன.
இதன் காரணமாக இலங்கையில் டொலரின் விலை இலங்கை ரூபாவில் சடுதியாக அதிகரித்துச் சென்றது. இதனையடுத்து கடந்த 2021ஏப்ரல் மாதம் முதல் இலங்கையின் உத்தியோகபூர்வ நாணயமாற்று வீதம் அமெரிக்க டொலருடன் (pegged) இணைக்கப்பட்டது. இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்கால முன்னோக்கிய போக்கு நாடு எதிர்நோக்கும் பாரிய கடன் சுமையினாலும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை மற்றும் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையை நிதியீட்டம் செய்ய வேண்டிய தேவை என்பவற்றாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை பேரினப் பொருளாதாரச் சமநிலையின்மை, வியாபார நம்பகத்தன்மை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை ஆகிய காரணங்களால் பொருளாதார வளரச்சிச் சாத்தியங்கள் குறைவடைந்துள்ளன.
மத்திய வங்கியின் தொடர்ச்சியான பண அச்சடிப்பு காரணமாக 2022ஜனவரியில் நாட்டின் பணவீக்க வீதம் 14சதவீதமாக அதிகரித்துச் சென்றுள்ளது. இதே இரட்டைச் சதவீதத்தில் அது தொடருமென எதிர்வு கூறப்படுகிறது. இது அரசாங்கம் எதிர்பார்த்த பணவீக்க வீச்சாகிய 4-6சதவீதத்தை விட மிகவும் அதிகமாகும். நிரம்பல்பக்க மற்றும் கேள்விப்பக்கக் காரணிகள் பணவீக்க அழுத்தங்களை எற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
வரிவெட்டுகள் மற்றும் இப்போதைய கொள்கைகள் தொடரும் பட்சத்தில் வரவுசெலவுத்திட்டத் துண்டுவிழும் தொகை 2022 - 2026காலப்பகுதி வரை தொடர்ந்து செல்லும் என எதிர்வு கூறப்படுகிறது.
இதனால் இலங்கையின் பொதுப்படுகடன் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும். வெளிநாட்டுக் கடன் சேவை வீதங்கள் தொடந்து உயர்வாக இருப்பதனால் நாட்டின் வெளிநாட்டுச் சொத்து ஒதுக்குகள் தொடர்ச்சியாகப் பற்றாக்குறையாகவே காணப்படும். வெளிநாட்டு மூலாதாரங்கள் ஊடாக நிதிதிரட்டும் அதிகாரிகளின் முயற்சிகள் மத்தியிலும் இந்த நிலையே தொடரும் எனவும் IMF கூறுகிறது.
வரவு செலவுத்திட்ட குறை நிலையும் சென்மதி நிலுவைக் குறைநிலையும் போதியளவில் நிதியீட்டம் செய்யப்படாத பட்சத்தில் நாடு இறக்குமதிகளில் கணிசமானளவு வீழ்ச்சியினையும் தனியார் கடன்களில் வீழ்ச்சியினையும் சந்திக்கும் அத்துடன் மத்தியவங்கியின் அச்சிடல் ஊடாக பற்றாக்குறையை தொடர்ந்து நிதியீட்டம் செய்யும் பட்சத்தில் நாட்டின் நிதியியல் உறுதிப்பாடு கேள்விக்குறியாகும்.
அது மட்டுமன்றி கோவிட் பெருங்கொள்ளை நோயின் புதிய திரிபுகள் நாட்டைப்பாதிக்கும் ஆபத்து, பொருள்விலைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்லல் எதிர்பார்த்ததை விடக்குறைவான விவசாய அறுவடைகள் வங்கிகளின் சொத்தகளின் தரம் குறைவடைந்து செல்கின்றமை எதிர்பாராத வானிலை நிகழ்வகள் போன்றவற்றால் பொருளாதாரம் பாதிக்கப்படும் ஏது நிலையும் நிலவுகிறது.
எனவே மேற்படி சவால்களுக்கு மத்தியில் பேரினப் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்தவல்ல பரந்துபட்ட நம்பகரமான பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்தப்பட வேண்டிய தெவையை IMF அழுத்தியுரைத்துள்ளது.
உயர்தரமிக்க வருமானக் கருவிகள் ஊடாக அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் அரச நிதிநிலைமையை வலுப்படுத்த எத்தனிக்கலாம். வரி விலக்களிப்புகளை மிகக்குறைந்த மட்டத்தில் பேணவேண்டும். நிருவாகக் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இதற்குச் சமதையாக மேற்கொள்ளப்படவேண்டும். அரசாங்க செலவீடுகளை பகுத்தறிவான முறையில் மீள கட்டமைப்புச் செய்து முன்னுரிமைப்படுத்தல் அரசதுறை நிறுவனங்களின் மீள்சட்டமைப்பு போன்றனவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் IMF இன் நிதியுதவியை நாடினாலென்ன நாடாவிட்டாலென்ன இப்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கான வழிகள் பற்றி ஒரு வழிகாட்டலை உறுப்பு நாடொன்றுடனான கலந்துரையாடல் என்ற வகையில் IMF தெளிவாக முன்வைத்திருக்கிறது. இதே கொள்கைகள் பலவற்றை உள்நாட்டுப் பொருளியல் நிபுணர்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதையும் நாம் தொடர்ச்சியாக அவதானிக்கலாம். ஆனால் இவற்றில் ஏதாவது உரிய தரப்பினரின் காதுகளில் கேட்கிறதா என்பதுதான் தெரியவில்லை.
கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்