![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/06/a14.jpg?itok=NS11NRjz)
கொவிட்-19தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் ஏதாவதொருதேர்தலொன்றுக்கு நாடுசெல்வதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சிக்குள்முரண்பாடுகள் வலுத்திருப்பதாகத் தெரியவருகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான தரப்பினர் 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற கட்சியின் கீழ் போட்டியிட்டிருந்தனர். கடந்த தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு வழங்கிய ஏனைய கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். இதில் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும் உள்ளடங்குகின்றன. இது தவிரவும், சம்பிக்க ரணவக்க, சரத் போன்சேகா போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களும் சஜித் தலைமையிலான அணியில் இணைந்து செயற்படத் தொடங்கியிருந்தனர்.
இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஏனைய சில தலைவர்களுக்கும் இடையில் குறிப்பாக சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்றோர் மத்தியில் கருத்து முரண்பாடுகள் வலுத்திருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அடுத்து நடைபெறக் கூடிய பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தமது சொந்த அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கான காய்நகர்த்தல்களில் ஈடுபட்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக சம்பிக்க ரணவக்க '43வது படையணி' என்ற பெயரில் நிபுணர்கள் குழுவொன்றை உருவாக்கி யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்கள் குறைநிறைகளை அறிந்து வருகின்றார். இது தவிரவும் கொழும்பில் அதன் மாநாடொன்றும் நடைபெற்றிருந்தது. இதில் சஜித் அணியில் இருந்து பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ளவில்லையென அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டியிருந்தனர். இது பிரதான எதிர்க்கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன என்பதற்கு உதாரணமாக அமைகிறது.
மறுபக்கத்தில், எதிர்க்கட்சித் தலைவருக்கும் அவருடைய கட்சியைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலும் கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் பிரதான எதிர்க்கட்சி மக்களின் மாற்றுத் தெரிவாக அமையுமா என்ற கேள்வியும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.
ஆரம்பம் முதல் பிரதான எதிர்க்கட்சி தனது கடமையைச் சரியாகச் செய்யத் தவறியுள்ளது என்றே கூற முடியும். குறிப்பாக கொவிட் தொற்று ஆரம்பமானதிலிருந்து பொறுப்புடன் நடந்து கொண்டார்களா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. அரசாங்கத்தின் தரப்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அவற்றுக்கான மாற்றுத் தெரிவுகளை முன்வைப்பதற்குப் பதிலாக அரசின் செயற்பாடுகள் முழுவதையும் விமர்சிப்பதையே தனது பிரதான நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருந்தது.
அது மாத்திரமன்றி, மக்களைக் குழப்பி விடுவதே அவர்களின் உத்தியாக இருந்து வருகிறது. எதிர்க்கட்சி என்பதற்காக அரசாங்கத்தின் அதனைத்து செயற்பாடுகளையும் விமர்சிக்க வேண்டிய தேவைப்பாடு கிடையாது. அரசாங்கம் முன்னெடுக்கும் விடயங்களில் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டி, மேற்கொள்ளப்படக் கூடிய மாற்றங்களை முன்மொழிவதே ஆரோக்கியமானதாக அமையும். இதை விடுத்து எப்பொழுதும் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதும், வீணாக மக்களைக் குழப்பி விடுவதும் எப்பொழுதும் ஏற்புடையதாக அமையாது.
அது மாத்திரமன்றி, பிரதான எதிர்க்கட்சி பொதுமக்களின் நலன் குறித்து அக்கறை காண்பிப்பதைக் காட்டிலும் தமது அரசியல் இலாபங்களை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. நாட்டில் தற்பொழுது காணப்படும் விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்ட மக்களின் அசௌகரியங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றை முன்வைத்திருந்தனர். இந்த விவாதத்தில் எதிர்க்கட்சியினரின் உரைகளைச் செவிமடுக்கும் போது, மக்களின் நலன் குறித்த அக்கறையைக் காட்டிலும் தமது சொந்த அரசியலுக்கே முன்னுரிமை அளித்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்து உரையாற்றியதை விட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பற்றியும், தனிப்பட்ட ரீதியிலான சேறுபூசும் கருத்துக்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. விலைவாசி அதிகரிப்பினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு அவர்கள் தெளிவாக எடுத்துக் கூறத் தவறியிருந்தனர். இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் இதனைத் தனது உரையின் போது சுட்டிக் காட்டியிருந்தார். எதிர்க்கட்சியினர் சபை ஒத்திவைப்புப் பிரேரணை குறித்த விடயத்தைப் பேசுவதை விடுத்து வேறு விடயங்களைப் பேசுகின்றனர் எனச் சுட்டிக் காட்டியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் தேர்தலொன்றுக்குத் தயாராகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும், தற்பொழுது உள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சி தேர்தலொன்றுக்குச் செல்ல விரும்பவில்லையென அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். பிரதான எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் காணப்படும் கருத்து மோதல்களே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று அடுத்து நடைபெறக் கூடிய ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலுக்கு தனிப்பட்ட நபர்களாகத் தயாராகத் தொடங்கியுள்ளனர் என்று கூறுவது மிகையாகாது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு சிரேஷ்ட தலைவர்களும் தமது தனிப்பட்ட பிம்பத்தை மக்கள் மத்தியில் பதியச் செய்வதற்கான முயற்சிகளிலும், அதற்கு ஏற்றவாறான காய்நகர்த்தல்களிலும் ஈடுபடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
சில சிரேஷ்ட தலைவர்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் தமக்கான பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சி தமது சொந்த அரசியல் இலாபம் குறித்து அக்கறை காட்டுவதை விடுத்து மக்கள் பற்றிச் சிந்திப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பி.ஹர்ஷன்