விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பிலவின் வீராவேச நாடகத்துக்கு முற்றுப்புள்ளி | தினகரன் வாரமஞ்சரி

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பிலவின் வீராவேச நாடகத்துக்கு முற்றுப்புள்ளி

இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணி இருப்பினை அதிகரித்துக் கொள்வதற்கு வெளிநாட்டு நிதிச் சந்தையில் கடனைப் பெற்றுக் கொள்ளாமல் வேறு நாடுகளிலிருந்து கடனைப் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளைக் கொண்ட “முழு நாடும் சரியான பாதையில்” என்ற கோரிக்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் 11சிறுபான்மைக் கட்சிகளின் பங்குபற்றலுடன்  கடந்த 2ம் திகதி மாலை கோட்டை ஜயவர்தனபுர மொஹான் இம்பிரியல் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, பிவித்துரு ஹெல உருமய, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா மஹஜன பக்ஷய, விஜய தரணி தேசிய சபை, ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் யுத்துகம தேசிய அமைப்பு போன்ற 11சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து நடாத்திய இந்தக் கூட்டத்தின் பின்னர் முன்னாள் அமைச்சர்கள் இருவரான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் தாம் வகித்த அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது கடந்த வியாழக்கிழமை மாலையிலாகும். அது “முழு நாடும் சரியான பாதையில்” என்ற கூட்டத்தின் போது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களைக் கடுமையான முறையில் விமர்சித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களின் காரணத்தினாலாகும்.

இந்த பதவி விலக்கல் மேற்கொள்ளப்பட்டது இலங்கை அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் 47ம் பிரிவின் 2வது உப பிரிவினது “அ”  வின் பிரகாரம்  ஜனாதிபதிக்கு இருக்கும் சட்ட ரீதியான அதிகாரங்களுக்கு அமைவாகவாகும். இந்த அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அன்றைய தினமே  மீண்டும் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டு சில அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டது.

வலுச் சக்தி அமைச்சுப் பதவி வகித்த அமைச்சர் உதய கம்மன்பிலவின் அமைச்சுப் பொறுப்பு மின்சக்தி அமைச்சராக இருந்த காமினி லொக்குகேவுக்காகும், போக்குவரத்து அமைச்சராக இருந்த பவித்திரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி பதவி வகித்த போக்குவரத்து அமைச்சுப் பொறுப்பு கிடைத்திருப்பது இராஜாங்க அமைச்சராக இருந்த திலும் அமுனுகமவிற்காகும். முன்னாள் அமைச்சர் விமல் விரவங்சவின் கைத்தொழில் அமைச்சுப் பதவிக்காக பதவிப் பிரமாணம் செய்திருப்பவர் எஸ். பி. திசாநாயக்கா.

இந்த 11சிறுபான்மைக் கட்சிகளைச் சேர்ந்த 31பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதோடு, அவர்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தது பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழாகும்.

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராமன்ற உறுப்பினருமான ஏ. எல். அதாவுல்லா, ஸ்ரீலங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டாக்டர் ஜீ. வீரசிங்க, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ், யுத்துகம தேசிய அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெவிந்து குமாரதுங்க போன்றோர் அவர்களுள் சிலராகும்.

விஜயதரண தேசிய சபையின் சார்பாக அப்பே ஜனபல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தனியான கட்சியில் போட்டியிட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அமைய அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட இவ்வாறான சந்தர்ப்பங்கள் இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் புதுமையான ஒன்றல்ல.  அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டை உலுக்கும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டமை தொடர்பில் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்மைய சம்பவம் இடம்பெற்றது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தின் பதவி நீக்கமாகும். 1977ம் ஆண்டின் பின்னராக காலப்பகுதியில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் முதலில் இடம்பெற்றது முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்திலாகும். இந்தியா அமைதி காக்கும் படையினர் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்டதற்காக அன்று திம்புவில் இடம்பெற்ற ஒப்பந்தத்திற்கு அமைய தீவிர சிந்தனைகளைக் கொண்டிருந்த சிரில் மெத்யூ போன்ற அரசியல்வாதிகளால் அரசாங்கத்திலிருந்து ஒதுங்குமளவுக்கு நிலைமை ஏற்பட்டது.

1977ம் ஆண்டில் ஜே.ஆர். அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எம்.டி.எச். ஜயவர்தனவினால் வரவு செலவுத் திட்டத்தின் குறைபாடுகள் விமர்சிக்கப்பட்டது. அதன் காரணமாக ஜயவர்தனவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு அன்றைய ஜே.ஆர். அரசாங்கம்  தீர்மானித்தது.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்தில் அமைச்சராக இருந்த காமினி ஜயசூரியவை நீக்குவதை விட இடம்பெற்றது இராஜினாமாவாகும். 1987ஜூலை 27ம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்து - லங்கா சட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்ததால் அவரை நீக்குவதற்கு முன்னர் அவர் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்திருந்தார். நீண்ட காலமாக நிதி அமைச்சராக இருந்த ரொனி டி. மெல் தனது கடைசி வரவு செலவுத் திட்டத்தின் போது அதனை விமர்சனம் செய்தததைத் தொடர்ந்து அவர் அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டது தனது பொறுப்பினைப் புறக்கணித்ததன் காரணத்தினாலாகும்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் காலத்தில் அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்கா மற்றும் ஜீ. எம். பிரேமச்சந்திர ஆகியோர் 1992 - 93ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகையினைக் கொண்டு வந்ததால் அவர்களை நீக்குவதற்கு கட்சி செயற்குழு தீர்மானித்தது. அதன் பின்னர் அந்த தீர்மானத்திற்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தின் தயவை நாடினார்கள். எவ்வாறாயினும் நீதிமன்றமும் அவர்களை வெளியேற்றுமாறே தீர்மானித்தது.

அதன் பின்னர் வந்தது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலமாகும். அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீமை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது அவர் அரசாங்கத்தை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதன் காரணத்தினாலாகும். 2007பெப்ரவரி மாதம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக முன்னெடுத்துச் செல்லப்பட்ட செயற்பாட்டின் காரணமாக அப்போதைய துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, தேசிய மரபுகள் தொடர்பான அமைச்சராக இருந்த அநுர பண்டாரநாயக்கா, துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகிய மூவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

2015நல்லாட்சி அரசாங்க காலத்தில் இவ்வாறான பதவி நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கொள்கைகளைப் பகிரங்கமாகவே விமர்சித்ததன் மூலம் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99வருடத்திற்கு சீனாவிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை அவர் பாராளுமன்றத்திலும், ஊடகச் சந்திப்பு மூலமாகவும் கடுமையாக விமர்சித்ததன் காரணமாகவே அவர் அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் காலத்தில் முன்னாள் அமைச்சராக இருந்த அருந்திக பெர்னாண்டோவும் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் விமல், கம்மன்பில உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுவினர் நடாத்தும் அரசியல் நாடகத்தின் காரணமாக அவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுமாறு அனேகமானோர் அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் போதும் பேசப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் நாசகாரச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை உடனே வெளிப்படுத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று விரைவில் மேலும் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.

சுபாஷிணி ஜயரத்ன
தமிழில்: எம்.எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments