எல்ல ஒடிசி-சுற்றுலாவுக்கு ஒரு மகிழ்ச்சி ரயில் | தினகரன் வாரமஞ்சரி

எல்ல ஒடிசி-சுற்றுலாவுக்கு ஒரு மகிழ்ச்சி ரயில்

இலங்கையில் சுற்றுலா துறையை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையில் குறிப்பாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை இலக்காக கொண்டு இலங்கை புகையிரத திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத்திய மலைநாட்டின் வரலாற்று புகழ் பெற்ற கண்டி மாநகரில் இருந்து அந்நியர் ஆட்சிக்கு எதிராக பல புரட்சிகளை மேற்கொண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊவா (வெல்லஸ்ஸ) மாகாணத்தில் அமைந்துள்ள தெமோதரை வரையிலான "எல்ல ஒடிசி" (The Ella Odyssey, நீண்ட வரலாறு சாகச பயணம்) என்ற கருப்பொருளில் குளிரூட்டப்பட்ட நாளாந்த அதி சொகுசு சுற்றுலா புகையிரத சேவை கடந்த பெப்ரவரி மாதம் ஐந்தாம் திகதி காலை 7மணியளவில் கண்டி புகையிரத நிலையத்தில் இருந்து போக்குவரத்து அமைச்சர் திலும் அமுணுகம தலைமையில் தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்தது ஆங்காங்கே பெரும் வரவேற்பு ஆரவாரங்களுக்கு மத்தியில் தெமோதரை புகையிரத நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.

கண்டி புகையிரத நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் இற்றைக்கு 155வருடங்களுக்கு முன் அதாவது 1867ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முறையாக பெருந்தோட்ட உற்பத்தி பொருட்களை கொழும்புக்கு கொண்டு செல்லவும் அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதலாவது பயணிகள் போக்குவரத்து சேவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

தெமோதரை புகையிரத நிலையம் 1923ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதியில் இருந்து தனது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த பெப்ரவரி மாதத்துடன் 99ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. தற்போது நூறாவது ஆண்டில் கால் பதிந்து இலங்கை போக்குவரத்து துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கண்டி புகையிரத நிலையம் நவீன விக்டோரியன் கலை வடிவில்

நிர்மாணிக்கப் பட்டுள்ளதுடன் தெமோதரை புகையிரத நிலையமும் சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளது எனலாம். உதாரணமாக எல்ல (Ella) பகுதியில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் புகையிரதமானது குறித்த புகையிரத நிலையத்தில் தரித்து மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் போது ஒரு சிறிய மலைக் குன்றை சுற்றி வந்து மீண்டும் புகையிரத நிலையத்திற்கு கீழ் தளத்தில் அமைந்துள்ள சுரங்கப் பாதையின் ஊடாக வெளியேறும்போது சுரங்கத்திற்கு வெகு அருகாமையில் வானவில் வடிவிலான வளைவு பாலம் ஒன்றும் அமைந்துள்ளது. இதனூடாக புகையிரதம் செல்லும் போது தலைப்பாகை கட்டுவது போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளதை காணலாம்.

 காலை ஏழு மணிக்கு கண்டி புகையிரத நிலையத்தில் இருந்து இரு "பவர் செட்" S14எஞ்சின்களுடன் கூடிய இலக்கம் 1041புகையிரதம் நான்கு முதலாம் வகுப்பு பெட்டிகளையும் மூன்று இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் ஒரு உணவு வண்டியையும் இணைத்துக் கொண்டு தனது பயணத்தை ஆரம்பிக்கும் "எல்ல ஒடிசி" சுற்றுலா புகையிரதம் பேராதெனிய சந்தி 7.15, கெலிஓயா 7.28, நாவலப்பிட்டி 8.05, ஹட்டன் 9.12, கிரேட் வெஸ்டர்ன் 10.18, நானுஓயா 10.40, பட்டிபொல, ஒஹிய, இதல்கஸ்ஹின்ன 12.40, ஹப்புதளை 12.45மற்றும் எல்ல 2.10போன்ற பிரதான புகையிரத நிலையங்களில் தரித்து நின்ற பின்னர் இறுதியில் பிற்பகல் 2.45மணியளவில் தெமோதரை புகையிரத நிலையத்தைச் சென்றடையும். இதனிடையே இப் புகையிரத நிலையங்களை தவிர புகையிரத நிலையங்கள் அல்லாத ஹொஸ்டேல் நீர்வீழ்ச்சி, சிவனொளிபாதமலை, சென் கிளேயர் நீர்வீழ்ச்சி, எல்ஜின் நீர்வீழ்ச்சி, இலங்கையின் புகையிரத வீதியில் 6228அடி உயரத்தில் அமைந்துள்ள சமிட் சமவெளி, 18ஆம் இலக்க சுரங்கம், இதல்கஸ்ஹின்ன மற்றும்

ஹப்புத்தளைக்கு இடையிலான கவாய், கிதல் நீர்வீழ்ச்சி மற்றும் மரபுரிமை தெமோதரை ஒன்பது வளைவு பாலம், தெமொதரை கருப்பு பாலம் மற்றும் சுரங்கம் போன்ற சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க கூடிய வகையிலும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய வகையிலும் 2தொடக்கம் 15நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தெமோதரையைச் சென்றடைந்த 1041புகையிரதமானது பிற்பகல் 3.40மணியளவில் 1042இலக்க புகையிரதமாக மீண்டும் கண்டியை நோக்கி பயணிக்கும் இதன் போது எல்ல 3.56, பண்டாரவளை 4.30, இதல்கஸ்ஹின்ன 5.20, நானுஓயா 6.30, ஹட்டன் 7.20, நாவலப்பிட்டி 8.45, பேராதனைச் சந்தி 9.25போன்ற பிரதான புகையிரத நிலையங்களில் மட்டும் நிறுத்தப்படுவதுடன் அதே தினம் இரவு 9.35மணிக்கு கண்டியை வந்தடையும் வகையில் நேரசுசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான சகல ஆசனங்களும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதுடன் அதற்கான முதலாம் வகுப்பு பதிவு கட்டணமாக கண்டியில் இருந்து எல்ல மற்றும் தெமோதரை வரையிலான பயணத்திற்கு 5000ரூபாயும், நானுஓயாவில் இருந்து எல்ல தெமோதரை வரையிலான பயணத்திற்கு 4000ரூபாயும், கண்டியில் இருந்து நானுஓயா வரையிலான பயணத்திற்கு 2000ரூபாயும் அறவிடப்படுகின்றது.

மேலும் இரண்டாம் வகுப்பு பதிவு கட்டணமாக கண்டியில் இருந்து எல்ல தெமோதரை வரையிலான பயணத்திற்கு 4000ரூபாயும், நானுஓயா எல்ல மற்றும் தெமோதரை வரையிலான பயணத்திற்கு 3000ரூபாயும், கண்டிக்கும் நானுஓயாவுக்கும் இடையிலான பயணத்திற்கு 1000ரூபாயும் அறவிடப்படும் எனினும் இக் கட்டணங்கள் தொடர்பில் பயணிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவிவரும் காரணத்தினால் எதிர்வரும் காலப்பகுதியில் புகையிரத திணைக்களம் இக் கட்டணங்கள் மற்றும் நேரங்களில் தொடர்பில் சில மாற்றங்களை மேற்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாராயணசாமி ஜெயரட்னம்
களுத்துறை சுழற்சி நிருபர்

Comments