“யுத்தம் முடிந்து விட்டது. இனிப் பிரச்சினையில்லை. வருவது நல்ல காலம்தான்” என்று நம்பியவர்களின் கனவில் மண் விழுந்துள்ளது.
யுத்தம் முடிந்த பிறகு “கனவுச் சுற்றுலா”வில் யுத்தம் நடந்த பிரதேசம் உள்பட நாடு முழுவதற்கும் சுற்றுலாச் சென்றவர்களின் மகிழ்ச்சிக்கும் முடிவு வந்து விட்டது.
இப்பொழுது அடுப்பை மூட்ட முடியாத அளவுக்கு நாட்டிலும் வீட்டிலும் நிலைமை வந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் கெட்ட சேதிகளே கிடைக்கும் காலமாகி விட்டதா? என்று எண்ணும் அளவுக்கு தினமும் பொருட்களின் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. விலையேற்ற அறிவிப்பு வருவதற்கு முன்பு பொருட்கள் தலைமறைவாகி விடுகின்றன. எல்லாமே பதுக்கப்படுகிறது. பதுக்கலைக் கட்டுப்படுத்துவதற்கு வழியில்லை. பதுக்குவதன் நோக்கமே செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, டிமாண்டை அதிகரிப்பது. இதன் மூலம் ஒரு சிறிய தரப்பு பெரும் லாபம் சம்பாதிக்கிறது. இந்தப் பதுக்கல் மாஃபியாக்களின் கைகளிலேயே இன்று அனைவருடைய வாழ்க்கையும் தீர்மானிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த மாதிரியான சூழலில் அரசாங்கமே மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில், பொறுப்பில், கடமையில், வழிமுறையைக் காண்பதில் இருக்க வேண்டும்.
ஆனால், அரசாங்கமோ என்ன செய்வதென்று தெரியாத நிலையிலேயே உள்ளது.
இதைச் சரியாகச் சொன்னால், ஏறக்குறைய அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்து வருகிறது எனலாம். இதை நிரூபிக்கின்ற விதமாகவே நிதி அமைச்சர் உள்பட அரசாங்கத் தரப்பில் உள்ள அத்தனை பிரதானிகளின் பேச்சும் உள்ளது.
உதாரணமாக, “நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை எப்போது தீரும்? என்பதற்கு இப்பொழுது பதிலளிக்க முடியாது. ஆனால், அரசாங்கம் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ.
ஆனால், இந்தப் பொருளாதார நெருக்கடி எப்படி ஏற்பட்டது? இதைத் தீர்ப்பதற்கான உண்மையான, சரியான வழிமுறைகள் என்ன? இப்பொழுதுள்ள உண்மையான நிலைமை என்ன என்பதைக் குறித்தெல்லாம் அரசாங்க மட்டத்திலும் சரி, அரசுக்கு வெளியே எதிர்கட்சிகள், அரசியல் தலைவர்கள் தொடக்கம் நாட்டிலும் நாட்டிற்கு வெளியிலும் உள்ள பொருளியல் நிபுணர்கள் வரையில் யாருமே தயாரில்லை என்றே தெரிகிறது.
பதிலாக எல்லாத் தரப்பினரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். கவிஞர் முருகையனுடைய கவிதை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளதைப்போல “வாயடைத்துப் போச்சுது நண்பா, வராதாம் ஒரு சொல்லும்.” என்ற நிலையில்தான் எல்லோரும் உள்ளனர்.
விலக்காக, அண்மையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இந்த நிலைமையைக் குறித்து ஓரளவுக்குப் பேசியிருக்கிறார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சிப் போக்கை மையப்படுத்திப் பேசியுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஆசியப் பொருளதாரத்தின் இன்றைய – எதிர்கால நிலைமையைக் குறித்து தெளிவூட்டுகிறார். இதில் இலங்கை மேற்கொள்ளக் கூடிய அவதானங்களைச் சுட்டுகிறார்.
ரணிலின் பார்வைக்கு மறுபார்வையை வேறு யாரும் முன்வைக்கக் கூடும். ஆனால், அடிப்படையில் ஒன்று மட்டும் உண்மை, ரணில் இன்றைய நிலைமையைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கிறார். தற்போதைய நிலைமையக் குறித்த புரிதல் அவருக்குண்டு.
இதேவேளை இன்றைய பொருளாதார நெருக்கடி உள்பட இனப்பிரச்சினை அதன் விளைவாக நீண்டு கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடி போன்றவற்றில் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பொறுப்புண்டு. தவறுகளில் அவருடைய பாத்திரமும் முக்கியமானது.
ஆனால் இன்று இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் சிந்திக்கிறார். இதைப்போல கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடி தீவிரமாகியிருந்த போதும் “இது ஒரு தேசிய நெருக்கடி. இதற்கு அரசியல் வேறுபாடு, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஏறக்குறைய இப்பொழுதும் அப்படியான ஒரு மனநிலையிலும் கருத்திலும்தான் ரணில் உள்ளார்.
ஏற்பட்டிருக்கும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு விரைவாகத் தீர்வைக் காணவில்லை என்றால் அது நாட்டை மிகக் கீழே கொண்டு போய் விட்டு விடும். இதையே அவர் கோடி காட்டுகிறார். ஆனால், இந்தச் சமிக்ஞை எவ்வாறு புரிந்து கொள்ளப்படப் போகிறது என்பது கேள்வியே.
ஆனால், ஒரு உண்மையை அரசாங்கமும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாகச் சிங்கள மக்கள் புரிந்து கொள்வது அவசியம்.
உள்நாட்டுப் போரில் புலிகளையும் தமிழர்களையும் வெற்றி கொண்ட அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் அந்நியச் சக்திகளிடம் தோற்றுச் சரணடைந்து பலியாகி விடும்.
இப்பொழுது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகிறது.
ஆனாலும் இந்த ஆபத்தான நிலையைக் குறித்து எவரிடத்திலும் சரியான பார்வைகள், யோசனைகள், விமர்சனங்கள் வெளிப்படுவதைக் காண முடியாதுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், தேசிய பந்தோபஸ்தில் பலரும் கவனம் செலுத்துகின்ற அளவுக்கு தேசியப் பொருளாதாரத்தில், தேசியப் பொருளாதாரக் கொள்கையில் கவனம் செலுத்துவதில்லை.
இதன் விளைவே இன்றை நிலை. இதற்கு ஒரு எளிய உண்மையை – உதாரணத்தை இங்கே கூறலாம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது ஒரு நண்பர் சொன்னார், “கிளிநொச்சியில் இரண்டே இரண்டு தொழிற்சாலைகள் (ஆடை உற்பத்தி நிலையங்கள்) மட்டுமே உண்டு. ஆனால், 25படைமுகாம்கள் உள்ளன.
உண்மையில் இரண்டு படை முகாம்களும் (அது கூடத் தேவையா என்று பார்க்க வேண்டும்) 25க்கு மேற்பட்ட தொழிற்சாலைகளுமல்லவா இருக்க வேண்டும். அப்பொழுதுதானே, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இப்பிடி எல்லா இடங்களிலும் மாற்றத்தைக் குறித்துச் சிந்திக்க வேணும்” என.
“யாருக்கெல்லாமோ விளங்குகிற விசயங்கள், விளங்க வேண்டியவர்களுக்கு விளங்குதில்லையே!” என்று சொல்லிக் கவலைப்படுகிறார் இன்னொரு நண்பர்.
உண்மை இதுதான். நம்முடைய நாட்டின் தேசிய உற்பத்தில் கடந்த 50ஆண்டுகளாக ஒரு தொகுதி இளைய தலைமுறையினர் பங்களிக்கவில்லை.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் காரணமாக படைகளிலும் அரசுக்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டதன் விளைவாக இந்தப் பங்களிக்கா நிலை ஏற்பட்டது.
யுத்தம் முடிந்த கடந்த பத்து ஆண்டுகளில் ஓரளவுக்கு தேசிய உற்பத்தியின் வளர்ச்சியைக் குறித்தும் தேசியப் பொருளாதா விருத்தியைக் குறித்தும் சிந்தித்திருக்க வேண்டும்.
ஆனால், அப்படிச் சிந்திக்கவில்லை.
பதிலாக பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகளவில் செய்வதிலும் இனமுரண்பாட்டைக் கூர்மைப்படுத்துவதிலுமே அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டனர். நாட்டைக் கடன் பட்டு நிர்வாக பரிபாலனம் செய்தனர்.
இன்னமும் அப்படியான ஒரு நிலையே – சூழலே காணப்படுகிறது.
இடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதிலேயே பெரிய கவனம் எடுக்கப்பட்டது.
நாட்டில் போர் ஓய்வுக்கு வந்த பின் கிடைத்த அமைதிச் சூழலில் சுற்றுலாத்துறைக்கான சாத்தியங்கள் அதிகமாக உண்டென சில பொருளாதார நிபுணர்கள் வழிகாட்டினர்.
ஆனால், சுற்றுலாத்துறை என்பது ஏறக்குறைய ஒரு சூதைப் போன்றதே.
எந்த நேரத்தில் திசை மாறும் என்று சொல்ல முடியாதது.
அது ஒரு அலையைப் போன்றது.
எந்தப் பக்கமாகக் காற்று வீசுகிறதோ அந்தப் பக்கமாக அலைகள் உயரும். அதைப்போல இன்னொரு நாட்டில் புதிய அம்சங்கள், கவர்ச்சித் தன்மைகள், புதிய நன்மைகள் உண்டென சுற்றுலாப் பயணிகளால் உணரப்படுமானால் அவர்கள் அந்தத் திசைநோக்கியே பயணிப்பர். அலை மாறி அந்தப் பக்கமாகவே வீசும்.
இதனால்தான் சுற்றுலாவுடன் தேசிய உற்பத்தித் துறையிலும் 60வீதமான கவனத்தைச் செலுத்துங்கள் என்று கோரப்பட்டது.
தேசிய உற்பத்திக்கான முதலீடுகளை – முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நியாயங்களும் முன்வைக்கப்பட்டன.
இவை பற்றிய உரையாடல் நடந்ததுண்டு. மறுப்பதற்கில்லை. அரசாங்கமும் பொது அழைப்பை விடுத்துக் கொண்டிருந்ததுண்டு. ஆனால், அதற்கப்பால் இதைக் கரிசனைப்படுத்தி உரிய செயல் வடிவம் கொடுத்திருக்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால் இன்று தேசிய உற்பத்திகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். வளப்பயன்பாடுகளும் நடந்திருக்கும். அதில் ஒன்றான மனித வளமும் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் வேலை வாய்ப்பின்மை குறித்த நெருக்கடியும் தீர்ந்திருக்கும்.
இதைச் செய்யத் தவறியது தப்பு.
இது ஒரு புறமிருக்க சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட மோசமான அடியை வாங்கியது கொரோனாவினால்.
கொவிட் 19உண்டாக்கிய உலகளாவிய முடக்கமும் இலங்கையில் நிகழ்ந்த அசாதாரணச் சூழலும் இந்தத்துறையை படுக்கையில் தள்ளியது.
ஆகவே எதிர்பார்க்காத அளவுக்குப் பொருளாதார முடக்கம் ஏற்பட்டது.
கூடவே, இலங்கையில் அரசியல் தீர்வு காணப்பட்டு அமைதி எட்டப்பட வேண்டும் என்ற சர்வதேச விருப்பத்தை இலங்கை நிறைவேற்றத் தவறியது இன்னொரு காரணம்.
இதனால் பல நாடுகள் இலங்கை ஒரு சொற்கேளாத நாடு என்ற எண்ணத்துக்கு வந்தன. சாதாரணமாகவே சொல்வழி கேட்டு நடக்கின்ற பிள்ளைக்கோ நண்பர்களுக்கோ, அமைப்புகளுக்கோதான் உதவியும் ஆதரவும் கிடைக்கும். அதாவது ஒரு நற்பேர், நன் மதிப்பின் அடிப்படையில்தான் ஆதரவோ உதவியோ வழங்கப்படுவதுண்டு.
அதை இழந்தால் ஆதரவும் உதவியும் கிடைக்காது என்பது உலக நடைமுறை.
போரின் முடிவுக்குப் பின்னர் சர்வதேசம் எதிர்பார்த்ததும் பரிந்துரைத்ததும் நல்லிணக்கம், பகை மறப்பு, அமைதித்தீர்வு, மக்களுடைய சுபீட்சமான எதிர்காலம் போன்றவையே.
இதைச் செய்யவே இல்லை. பதிலாக இதைச் செய்வதைப் போல பாவனை செய்யப்பட்டது. பதிலாக இனமுரண்பாடு முன்னரை விடக் கூர்மைப்படுத்தப்பட்டது.
இதில் அனைவருக்கும் பொறுப்புண்டு.
இது ஒரு மூடத்தனம் என்பது கூடப் பலருக்கு விளங்கவில்லை. கடந்த காலத்திலிருந்து எதையும் படித்துக் கொள்ளாத – வாழ்விலிருந்தும் வரலாற்றிலிருந்தும் கற்றுக்கொள்ளாத மந்தைக் கூட்டமாக இலங்கையர்களாகிய நாம் இருந்திருக்கிறோம்.
மீண்டும் இரத்தித்திலும் கடனிலும் கண்ணீரிலும் வாழ்க்கையை நடத்துவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டிருந்தோம்.
இந்தக் கூட்டுத் தவறுக்குக் கிடைத்த கூட்டுத் தண்டனையே இதுவாகும்.
இதற்கு இன்று உண்மையில் அவசியமாகத் தேவைப்படுவது மாற்று சிந்தனை ஒன்றே. அதுதான் சரியான வழியைத் திறக்கக் கூடியது.
அது மாற்று வழியாகும். அதைச் செய்யக் கூடியவர்கள் மாற்றாளர்களே!
கருணாகரன்