![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/27/a23.jpg?itok=fCrq9dfs)
“இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர்” சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்துள்ள அபிலாசைஆவணம் இது, இலங்கை ஜனாதிபதி, இந்திய பிரதமர், பிரித்தானிய அரசு ஆகிய மூன்று தரப்புகளுக்கும் பிரதானமாக கையளிக்கப்பட்டது. அதை தவிர ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா. அமெரிக்கா தூதரகங்களுக்கும்அந்த நாட்டு அரசுகளுக்கும்அனுப்பப்படவுள்ளது.
இது, மலையக தமிழர் என்று அறியப்பட்டுள்ள சமீபத்தையை இந்திய வம்சாவளி தமிழ் இலங்கையர்களின் விண்ணப்பமாகும். இலங்கை சமூகத்தில் தனித்துவமும், சமத்துவமும், கொண்ட மக்கள் என்ற அங்கீகாரத்தை கோரி, தொடர்ந்துவந்த இலங்கை அரசாங்கங்களிடம், நாம் தொடர்ச்சியாக முன்வைத்த கோரிக்கைகளுடன் இதுவும் தொடர்கிறது. இலங்கையில் சிங்கள, வடகிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடன் சமத்துவமான அடையாளம் கொண்ட சமூகமாக வாழ விரும்பும் எமது பேரவாவை இது வெளிப்படுத்துகிறது. 1980இலிருந்து பல்வேறு அரசாங்கங்கள் முன்னெடுத்த அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறைகளுடன் எமது அபிலாஷைகள் தொடர்புற்றுள்ளன.
சமத்துவமுள்ள குடிமக்கள் என்ற
அங்கீகார கோரிக்கைக்கான பின்னணி
ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளை பெறுகின்ற முழுமையான குடிமக்கள் என்ற அங்கீகாரத்தையே சுதந்திரத்தின் பின் மலையக தமிழரது அரசியல் தலைமைகள் கோரி வந்துள்ளன. பாரபட்சமின்மை, சமூகத்தின் நலன்களையும், அடையாளத்தையும் பாதுகாக்கும் அரசியல் நிர்வாக ஏற்பாடுகள் ஆகியவையே எமது கோரிக்கைகள். நுவரெலியாவில் செறிவாகவும், ஏனைய பிரதேசங்களில் சிதறியும் வாழும் எமது மக்களின் விவகாரங்களை நிர்வகிக்க அவசியமான பாதுகாப்பு மற்றும் அரசியல் அதிகார குரல், சுயகெளரவம், கண்ணியம், சமாதானம் ஆகியவற்றை நோக்கியே இந்த கோரிக்கைகள் எழுகின்றன.
மலையக தமிழ் சமூகம், அன்று சிலோன் என்று அறியப்பெற்ற இலங்கைக்கு, 1800களிலிருந்து, பிரித்தானிய முடியரசின் கீழிருந்த நிறுவனங்களால் கொண்டு வரப்பட்டனர். சுதந்திரம் பெற்ற போது மலையக தமிழ் சமூகமே இலங்கையில் இரண்டாம் பெரும்பான்மை இனமாக திகழ்ந்தது. ஆனால், அன்றைய அரசியலமைப்பின் 29(2) என்ற விதியையும் மீறி சர்ச்சைக்குரிய முறையில் அவர்கள் தம் குடியுரிமையை இழந்தார்கள். அதன் பின்னர் அநேகமானோர் பலவந்தமாக இந்தியாவுக்கு குடிபெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது இச்சமூகத்தின் அரசியல் அந்தஸ்தையும் மற்றும் சமூக பொருளாதார நல்வாழ்வையும் பலவீனப்படுத்தியது.
நீண்டகாலமாக நாடற்று மற்றும் வாக்குரிமையற்று இருந்த நிலைமை, ஜனத்தொகை சரிவு, ஆகியவை, இன்றுவரையான நீண்ட பின்னணிகளாக அமைந்து, எமது இந்த கோரிக்கைகளை உருவாகியுள்ளன. இந்த சமூகம் எதிர்கொண்ட எம்மீதான திட்டமிட்ட வன்முறைகள், அதன் காரணமான உள்நாட்டு, வெளிநாட்டு இடம்பெயர்வுகள், பாரபட்ச, நேர்மையற்ற விளைவுகள், தொடர்ந்த ஒதுக்கல்கள் ஆகியவை எமது கோரிக்கைகளுக்கு ஏற்புடைமையை ஏற்படுத்துகின்றன.
இந்திய வம்சாவளி மலையக தமிழர் நலன்கள் தொடர்பில் இந்தியாவின் நீடித்த அக்கறை
குடியுரிமை, அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு, வீடமைப்பு, கல்வி ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இந்தியா காத்திரமான பாத்திரங்களை வகித்துள்ளது. வரலாற்று உறவு, சர்வதேச நியமங்கள், புவியியல் மற்றும் மனிதாபிமான காரணங்கள் இவற்றுக்கான தேவைகளாக அமைந்துள்ளன. குடியுரிமை தொடர்பில் பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரஸ்பர கலந்துரையாடல்கள், ஒப்பந்தங்கள் ஆகியவை கையெழுத்திட்ட தரப்புகளின் கடப்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. பரஸ்பர ஒப்பந்தங்களினால் மலையக மக்களின் அரசியல் அந்தஸ்தும், சமூக-பொருளாதார நலன்களும் பலவீனமடைந்துள்ளன என்ற காரணம் இந்தியாவின் தார்மீக கடப்பாட்டை அதிகரித்துள்ளன.
இலங்கை, இந்திய நாட்டு தலைவர்களுக்கு இடையிலான இறுதியான ஒப்பந்தம் 1987ல் கையெழுத்தானது. ஆனால், அதற்கு முன், நேரு - -கொத்தலாவல ஒப்பந்தம் (1954), சிறிமா- - சாஸ்திரி ஒப்பந்தம் (1964), சிறிமா-இந்திரா (1974) ஒப்பந்தம் ஆகியவையும் நமது மக்களின் குடியுரிமை மற்றும் நலவுரிமைகள் தொடர்பிலான பரஸ்பர கடப்பாடுகளுடன் செய்யப்பட்டன. மேலும், ஜே. ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகிய தலைவர்களது நிர்வாகங்களுடன், இந்திய அரசாங்கத்தின் நல்லெண்ண முன்னெடுப்புகள் மூலமும் நீண்டகால குடியுரிமை பிரச்சினைகள் சட்டரீதியாக தீர்த்து வைக்கப்பட்டன.
மாகாணசபைகளை உருவாக்கிய 13ம் திருத்தத்தையும், மொழி உரிமைகளை உறுதிப்படுத்திய 16ம் திருத்தையும் கொண்டு வர 1987ன் இந்திய--இலங்கை ஒப்பந்தம் காரணமாகியது.
மாகாணசபைகள், இலங்கையின் அனைத்து ஒன்பது மாகாணங்களும் ஒருமட்ட அதிகார பரவலாக்கலை தந்ததுடன் மலையக மக்களுக்கும் தமது அரசியல் பிரதிநிதித்துவ குரலை ஒலிக்கும் வாய்ப்பை தந்தது. அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மும்மொழி கொள்கை, சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும் இந்நாட்டின் ஒரு ஆட்சி மொழியாகவும், ஒரு தேசிய மொழியாகவும் அங்கீகரித்ததுடன். ஆங்கில மொழியை இணைப்பு மொழியாக ஏற்றுக்கொண்டது.
இன்றைய அந்தஸ்தும், எமது
கோரிக்கைகளும்
1.5மில்லியன் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் இன்றைய அந்தஸ்து, நாம் கடந்து வந்த சரித்திரம் எம்மீது திணித்த நாடற்ற நிலைமை, குடியுரிமை தொடர்பிலான நிச்சயமற்ற தன்மை, வாக்குரிமை இழந்தமை ஆகியவற்றின் பிரதிபலனாகும். இது எமது சமூதாயத்தின் சமூக-பொருளாதார நலன்களை பாதித்துள்ளது. பெருந்தோட்டங்களில் தொழில் புரியும், வாழும் பிரிவினரே, இந்திய வம்சாவளி மலையக தமிழருக்குள்ளே வாழும் மிகவும் பின்தங்கிய தரப்பினராகும். மிகவும் குறைந்த மனித வளர்ச்சி குறியீடுகளை கொண்டுள்ள இப்பிரிவினர், நாட்டின் ஏனைய பிரிவினருடன் ஒப்பிடுகையில் ஒதுக்கப்பட்ட பிரிவினராக உள்ளனர். தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, ஏனையவர்களை போன்று சமவுரிமையுள்ள முழுமையான குடிமக்களாவதை, இந்நிலைமை பாதிக்கின்றது.
இலங்கையின் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்ட அனைவரும், வாக்குரிமை, நிலவுரிமை, அரச தொழில் உரிமை, அரச சேவைகளை பெரும் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான சம உரிமை மற்றும் உரிமைகளின் சமத்துவம் கொண்டவர்களாவர் என்பதுவே, பொதுவாக, 1954-1974காலவரைக்கு இடைப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் அடிப்படை சாராம்சமாகும். இத்தகைய சிந்தனையிலேயே, இரண்டு நாட்டின் தலைவர்களும் இந்த விடயங்களை அணுகினர். ஏனைய குடி மக்களுக்கு சமனான முறையில், வாக்குரிமை விவகாரம் முன்னேற்றம் கண்டிருந்தாலும் கூட, ஏனைய விவகாரங்களில் முன்னேற்றம் மிக மெதுவாகவோ, வரையறுக்கப்பட்டோ அல்லது முழுமையாக நிறுத்தப்பட்டோ இருக்கின்றன. தேசிய சராசரிகளை ஒப்பிடும் போது, சுகாதார தரவுகளில் தலைமுறை பின்னடைவு தெரிகிறது. தோட்ட புறங்களில் சுகாதார சேவைகள் இன்னமும் முழுமையாக தேசிய நீரோட்டத்துக்கு உள்ளே கொண்டுவரப்படவில்லை. வருந்தத்தக்க அளவில் நாம் அரச தொழில்களிலும், உயர் கல்விதுறையிலும், சமத்துவமாக நிர்வாக பணிகளிலும் இடம்பெறவில்லை.
இலங்கை அரசுகளுடனான, எமது சமூகத்தின் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் இவ்விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட கொள்கை பாரபட்சங்கள் மற்றும் நிறுவன தடைகள் ஆகியவற்றை கடந்து இன்றுவரை நாம் பெற்றுள்ள உத்தரவாதங்களையும், ஏற்பாடுகளையும் கூட, தற்போதைய தேர்தல்முறை மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள், பின்னடைவுக்கு உள்ளளாக்கி விடுமோ என அச்சம் கொண்டுள்ளோம்.
இலங்கை அரசின் அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் நடைபெறும் இப்பின்னணியில், பின்வரும் கோரிக்கைகளை இலங்கை அரசை கவனத்தில் எடுக்க செய்வதில் உங்கள் நல்லெண்ண உறவை பயன்படுத்துமாறு கோருகிறோம்;
i. பதின்மூன்றாம் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கத்துடன் மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி உடன் நடத்தல்
ii. தமிழுக்கு சம அந்தஸ்து மற்றும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் அடங்கிய மும்மொழி கொள்கை ஆகியவற்றை அறிமுகப்படுத்திய பதினாறாம் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கம்
iii. தேசிய நீரோட்டத்தில் அமைப்புரீதியான ஒருங்கிணைவுடன் இலங்கை சமூக பரப்பில் தனித்துவ அடையாளம் கொண்ட அங்கமாக, மலையக சமுதாயம் முழு சமத்துவமான குடியுரிமையை பெற்று வாழ,
a) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடத்திய முந்தைய சர்வ கட்சி மாநாட்டில் முன்மொழியப்பட்ட, நிலவரம்பற்ற சமூக சபை ஒன்றை, நுவர எலிய மாவட்டத்தில் செறிவாகவும், ஏனைய பகுதிகளில் சிதறியும் வாழும் இச்சமூகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் பணியாற்ற அரசியலமைப்பு ரீதியாக உருவாக்குதல்
b) மத்திய, மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில் அதிகார பகிர்வு மற்றும் பரவலாக்கல் ஏற்பாடுகள்
c) அனைவரையும் உள்வாங்கும், சமச்சீர் பிரதிநிதித்துவ நோக்கில் நியாயமான தேர்தல் மற்றும் நிர்வாக எல்லை மீள் நிர்ணயத்துடன் கூடிய அனைத்து மட்டங்களிலும் அர்த்தமுள்ள விகிதாசார தேர்தல் முறைமை
d) நிலம், வீடு, தொழில், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இதுவரை காலமும் இழந்த வளர்ச்சிகளை எட்டிப்பிடிக்கும் நோக்கில், அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, மீளுறுதி (affirmative action) நடவடிக்கைகள்
e) தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அரச பொது நிருவாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்குவதன் மூலம், நாட்டின் ஏனைய கிராமிய பிரதேசங்களில் நடைபெறுவதற்கு சமானமாக, தோட்ட பிரதேசங்களிலும் கிராம சேவகர் வலயங்கள், பிரதேச செயலக வலயங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கிராமிய, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட அரச நிறுவனங்களின், நிருவாக மற்றும் நலவுரிமை சேவைகளை பெருகின்ற முழுமையான குடிமக்களாதல்
** நிலவரம்பற்ற சமூக சபை தொடர்பான விபரமான நகல் யோசனைகள், உங்களது அவதானம் மற்றும் இந்த யோசனைகளை இந்திய நிர்வாக அதிகார துறையின் மூலம் விருத்தி செய்து முன்னெடுத்தல், என்பவற்றுக்காக இத்துடன் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளோம்.