![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/27/a27.jpg?itok=FKnTIOKU)
இலங்கை - இந்திய மக்களின் உறவுக்கு சிறந்த பாலமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் திகழ்ந்து வந்திருக்கிறது.
வருடாந்தம் மார்ச் மாதத்தில் வருகின்ற இந்த கச்சத்தீவு திருவிழாவுக்காக இரண்டு நாடுகளினதும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பர்.
அவர்கள் தம் உறவையும் அன்பையும் புதுப்பித்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வருடமும் இந்த வாய்ப்பை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா அவர்களுக்கு வழங்குகிறது.
இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான இந்திய மக்களும் ஆயிரக்கணக்கான இலங்கை மக்களும் கலந்து கொள்வர்.
உறவுகள் ஒன்றிணைந்து உண்டு, களித்து சந்தோசம் கொண்டாடி தம்மிடமுள்ள பொருட்களையும் பகிர்ந்துகொண்டு அந்தோனியார் திருத்தலத்தில் திருவிழாவை மட்டுமன்றி தமது உறவுகளையும் கொண்டாடி மகிழ்வர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திருத்தலம் முன்பு இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்தது. தற்போது இலங்கை அரசாங்கத்தின் சொத்தாகி விட்டது. யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் நெடுந்தீவு பங்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தை நிர்வகிக்கின்றது.
அந்தவகையில் வருடாந்தம் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளை யாழ்ப்பாண மறைமாவட்டமும் யாழ்.மாவட்ட செயலகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டு மக்கள் திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களிலும் எந்த வித குறையுமின்றி அந்த இரண்டு நாட்களையும் கழிப்பது வழக்கமாகி வருகிறது. கடல் போக்குவரத்துக்கான வசதிகளை இரண்டு நாட்டினதும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதற்கான ஒழுங்குகள் மிக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையையும் குறிப்பிட வேண்டும்.
இந்த வருடமும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் பக்திபூர்வமாக கடந்த மார்ச் 12ஆம் திகதி கொண்டாடப்பட்டது.
இரு நாடுகளிலும் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இம்முறை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் இலங்கையிலிருந்து 100பக்தர்களும் இந்தியாவிலிருந்து 80பக்தர்களுமே திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர். பக்தர்கள் மிக குறைவாக காணப்பட்டதால் திருவிழாவின் போது அங்கு காணப்படும் கலகலப்புக்கு இம்முறை பஞ்சமாகிவிட்டது.
எனினும் இரு நாட்டு பக்தர்களும் பக்திபூர்வமாக திருவிழாவில் பங்கேற்றதைக் காணமுடிந்தது. மார்ச் பதினோராம் திகதி மாலை கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாயின.
தவக்காலத்தில் இந்த திருவிழா வருவதனால் திருவிழாவிற்கு முதல்நாள் சிலுவைப்பாதை பவனி நடத்தப்பட்டது. 14நிலைகளைக் கொண்ட இந்த சிலுவைப்பாதை பவனி ஆலய சுற்றாடலை சுற்றி கடற்கரையின் ஊடாக நடைபெற்றமை ஒரு வித்தியாசமான அனுபவமாக காணப்பட்டது.
சிலுவைப்பாதை தியானம் நிறைவுற்றதும் அதனைத் தொடர்ந்து வெஸ்பர்ஸ் ஆராதனை நடைபெற்று அதன் இறுதியில் கச்சத்தீவு புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனி நடைபெற்றது. இந்த திருச்சுரூப பவனியின் போது கடற்படையினரும் புனித அந்தோனியாரின் திருச்சுரூபத்தை சுமந்து பவனியாக வந்ததைக் காண முடிந்தது. இலங்கை- இந்தியாவிலிருந்து வருகை தந்த பக்தர்கள் மட்டுமன்றி அதிகாரிகளும் இந்த சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். முதல் நாள் கொண்டாட்டங்கள் நிறைவுபெற்று மறுநாள் 12ஆம் திகதி காலை 6.30மணிக்கு செபமாலை தியானம் இடம்பெற்று 7.00மணிக்கு யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் இலங்கை-இந்திய அருட்தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகளின் பங்கேற்புடன் கூட்டுத் திருப்பலியாக திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது..
தமிழக இராமநாதபுரம் மறைமாவட்டத்தின் வேர்க்காடு பங்குத்தந்தை தேவசகாயம் அடிகளார் தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 80பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டதுடன் இலங்கையில் யாழ் மறைமாவட்டத்தின் நெடுந்தீவுப் பங்குத் தந்தை வசந்தன் அடிகளாரின் தலைமையில் இலங்கை பக்தர்கள் 100பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இரு நாடுகளிலிருந்தும் இம்முறை மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களே அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கடற்படையினரின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து குறிக்கட்டுவான் ஊடாக ஊடகவியாளர்கள் குழுவொன்றும் படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இம்முறை கச்சத்தீவு திருவிழா இரண்டு முக்கிய எதிர்பார்ப்புகளைத் தந்திருந்தது.
அது கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக இரண்டு வருடங்களாக கச்சத்தீவு திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இரு நாட்டு உறவுகளும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள முடியாத நிலையை இம்முறை திருவிழா தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
அதேவேளை,இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் உக்கிரமடைந்து வரும் நிலையில் இருநாட்டு மீனவர் சமூகமும் கச்சத்தீவில் சந்தித்து அதற்கான இணக்கப்பாடு ஒன்றை எட்டும் தருணமாகவும் இம்முறை திருவிழா எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இரண்டு நாடுகளில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கே அனுமதி வழங்கப் பட்டிருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றே கூறலாம். திருவிழாவிற்கு முதல்நாள் இரவு சமய நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த சந்தர்ப்பத்தில் அவசரம் அவசரமாக இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்து இரண்டு தரப்பு மீனவர்களினதும் கலந்துரையாடலுக்கு நடுநிலை வகித்தார்.
இரண்டு தரப்பினரினதும் பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் செயற்பாடுகளுக்கு தான்பக்கச்சார்பின்றி நடுநிலை வகிப்பதாக அமைச்சரே அதன்போது குறிப்பிட்டார்.
வழமைபோன்று இரு தரப்பு மீனவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடைபெற்றதுடன் இராஜதந்திர மட்டத்தில் பிரச்சினையை முன்னெடுக்கப் போவதாகவும் அந்தவகையில் தாம் கொழும்பு திரும்பி ஜனாதிபதியுடன் அது தொடர்பில் கலந்துரையாடி எதிர்வரும் மே மாதத்தில் இரண்டு தரப்பு மீனவர்களையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை ஒன்றை ஒழுங்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அதன்போது உறுதியளித்தார்.
இலங்கை மீனவர்களைப் பொறுத்தவரையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. அதற்கு காரணம் உண்டு. இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகள் மூலம் தொழில் செய்து தமது வளங்களை அழிப்பதால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் இங்கு சுட்டிக் காட்டினர்.
அதேபோன்று இந்திய மீனவர்கள் தாம் காலங்காலமாக இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்து வருவதாகவும் அதேபோன்று இலங்கை மீனவர்களும் இராமேஸ்வரம் பகுதிக்கு வந்து மீன் பிடித்து வருவதாகவும் இரு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுடன் இதனை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு தமக்கும் உரிமையுண்டு என்ற போர்வையிலே அவர்களது கருத்துகள் அமைந்திருந்தன.
இலங்கை மீனவர்கள் தெரிவிப்பது போல தமது இழுவைப்படகு மூலம் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு கால அவகாசம் ஒன்று தேவைப்படுகிறது என்ற கருத்தினையும் அவர்கள் முன்வைத்தனர். எவ்வாறாயினும் அதனை எந்தவிதத்திலும் ஏற்க முடியாது என்பதே இலங்கை மீனவர்களின் கருத்தாக இருந்து. முதலில் அவர்கள் இழுவைப்படகு மூலம் மீன் பிடிப்பதை முற்றாக நிறுத்த வேண்டும். அதன் பின்னர் நாட்டுப் படகு மூலம் அவர்கள் மீன் பிடிப்பது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றும் இலங்கை மீனவர்கள் இதன்போது தெரிவித்தார்.
நீண்ட காலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தாம் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இவ்வாறு வழமைபோலவே எந்தவித முடிவுகளும் இன்றி அதே இழுபறியுடன் இந்த பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வந்தது.
பேச்சுவார்த்தை ஊடகவியலாளர்கள் மீனவர்களை தனித்தனியே சந்தித்தபோதும் இருதரப்பும் தத்தமது நியாயங்களை எடுத்துக் கூறினர்.
மீனவர் பிரச்சினைகள் எவ்வாறு இருந்தாலும் தாம் தமது உறவுகளுடன் ஒன்றாக கச்சத்தீவு திருத்தலத்தில் அந்தோனியார் திருவிழா கொண்டாடுவது தமக்கு பெரும் மகிழ்ச்சிளிக்கிறது என இந்திய மீனவர்கள் தெரிவித்தனர். எந்தக் காரணங்களுக்காகவும் இத்தகைய சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடக்கூடாது என்றும் பிரச்சினைகளை விட எங்கள் உறவுகளின் தொடர்புகள் எமக்கு மிகவும் அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பக்தர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்தோம், 'கச்சத்தீவு திருவிழா எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருப்போம். எது எப்படிப் போனாலும் எங்கள் தொப்புள்கொடி உறவுகளை பார்த்தாக வேண்டும். அவர்களோடு பேச வேண்டும். சேமநலன்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஏக்கத்தோடு காத்திருப்போம்.
அந்த நாள் வந்துவிட்டால் அது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு வேறு எதுவும் கிடையாது. ஒவ்வொரு வருடமும் எப்படியாவது வந்து விடுவோம். கடந்த இரண்டு வருடங்களாக வரமுடியாமல் போய்விட்டது. இந்த முறையும் அதிகம் மக்கள் வர முடியவில்லை. அடுத்தமுறையாவது நாங்கள் ஒரே குடும்பமாக மணலில் அமர்ந்து உண்டு உறவு கொண்டாடி மகிழ வேண்டும் அதற்கு அந்தோனியார் தான் அருள் புரிய வேண்டும் என்றார் தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஒரு தாய். அவர்களில் பலரும் இத்தகைய கருத்துக்களையே தெரிவித்தனர்.
இந்த திருவிழாவின் ஏற்பாடுகள் தொடர்பிலும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் வடக்கு கடற்படைக்கு பொறுப்பான கட்டளைத் தளபதியிடம் நாம் பேசினோம்.
திருவிழா ஏற்பாடுகள் மட்டுமன்றி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டும் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும் கடற்படையினர் பல்வேறு உதவிகளையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதிலும் முடிந்தளவு மக்களை அதில் பங்கேற்க செய்ய வேண்டும் என்பதிலும் கடற்படையினரின் பங்கு அலாதியானது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தெரிவித்த அவர், தாம் அவர்களோடு கலந்துரையாடிய போது அவர்கள் முற்றாக இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
தமது மீனவர்களை கைது செய்வதும் தமது படகுகளை கைப்பற்றி ஏலத்தில் விற்பதும் மீனவர்களை தாக்குவதும் அச்சுறுத்துவதும் எந்த விதத்திலும் நியாயமில்லை என இந்திய மீனவர்கள் தெரிவித்தமை தொடர்பில் அவரிடம் நாம் கேள்வி எழுப்பினோம்.
'கடற்படையினர் தமது கடமையை செய்வார்கள். அவர்கள் தமது பொறுப்பில் இருந்து ஒருபோதும் விலக முடியாது. கடற் பாதுகாப்பு, கடல் மார்க்கமாக நடைபெறுகின்ற குற்றச் செயல்கள், நாட்டு எல்லைக்குள் அத்துமீறிய பிரவேசம் போன்றவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மீனவர்கள் தொடர்பில் கடற்படையினர் தீர்க்கமான எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாது என்றும் அது இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டியது' என்பது அவர் பதிலாக இருந்தது.
'கச்சத்தீவு அந்தோனியார் திருத்தலம் மிகவும் சக்தி வாய்ந்தது. மக்கள் விசுவாசத்தோடு அந்த திருவிழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது தொடர்ந்து இன்று திருவிழா நிகழ்வுகள் விமரிசையாக நடைபெற வேண்டும் அதற்கான சகல பங்களிப்புகளையும் கடற்படையினர் வழங்குவார்கள்' என்றும் அவர் எம்முடன் மேலும் பேசும்போது கூறினார்.
இலங்கை - இந்திய கடற்படை அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர். வழமைபோன்று இம்முறை கச்சத்தீவு களைகட்டவில்லை என்றே கூறவேண்டும்.
திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த போதும் இரண்டு நாட்டு மக்களும் வருகை தந்து கச்சத்தீவே கலகலத்துப் போகும் வகையில் நடமாடி செயற்படும் அந்த கண்கொள்ளா காட்சிகளை இம்முறை காண முடியவில்லை.
இருநாட்டு மக்களும் சொந்தம் கொண்டாடி,உணவு பகிர்ந்து, அவர்களிடம் உள்ளதை இவர்களுக்கும் இவர்களிடம் உள்ளதை அவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ச்சி கொண்டாடுவதை இம்முறை காணமுடியவில்லை. திருவிழா முடிந்ததும் கச்சத்தீவு கடலில் பிள்ளை குட்டிகளோடு நீந்திக் குளித்து இரண்டு தரப்பு மக்களும் மகிழ்ச்சி கொண்டாடுவதை இம்முறை காண முடியவில்லை .
போத்தல்களைக் கொண்டுவந்து கச்சதீவு கடல் நீரை பக்தியோடு நிரப்பிக்கொண்டு திருத்தலத்தின் மண்ணை பொட்டலமாகக் கட்டிக் கொண்டு செல்லும் பக்தர்களை இம்முறை காண முடியவில்லை. அதேபோன்று பாதுகாப்பு கடமையில் இருப்போர் துரத்தித் துரத்தி விரட்ட பற்றைக்காடுகளுக்குள் மறைந்து சிறு சிறுவியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரையும் அதற்கான சந்தர்ப்பத்தையும் கூட இந்த முறை காணவே முடியவில்லை.
மொத்தத்தில் கச்சத் தீவை நிரப்பும் வகையில் யாத்திரிகர்கள் வருகை தந்து கச்சத்தீவை கலகலக்கச் செய்து களிப் பூட்டி நடத்தப்படும் திருவிழாக்கள் மீண்டும் எப்போது வரும் என்ற ஏக்கம், எதிர்பார்ப்புடனேயே இரண்டு நாட்டு மக்களும் விடை பெற்றுச் சென்றதையே காண முடிந்தது.
தமிழ்நாடு - இலங்கை இரண்டுக்கும் இடையிலான மையத்தில் இத்தீவு அமைந்துள்ளது.
கச்சத் தீவின் தீவின் பரப்பளவு 285ஏக்கர். இத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து 70கி.மீ. நெடுந்தீவிலிருந்து 28கி.மீ. இராமேஸ்வரத்திலிருந்து 18கிலோ மீற்றர். தலைமன்னாரிலிருந்து 25கிலோ மீற்றர் கச்சத்தீவின் புவியியல் அமைப்பு முட்டை வடிவில் இருக்கும் அதேவேளை அது கடலில் தக்கையென மிதப்பது போல் காணப்படும்.
தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள், உட்பகுதியில் வெண்மணல் திட்டுகள் ஆங்காங்கே குழிகளும் உண்டு. புல் தரைகளும் உண்டு. நடுப்பகுதி கல்மலை என அழைக்கப்படும். கடல் மட்டத்திலிருந்து கல்மலை 20அடி உயரம். அதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது. அதன் நீர், குடிப்பதற்கு நன்று தொடர்ந்து கனமழை பொழியும்போது செடி, கொடி அரும்பும். இங்கு 'டார்குயின்' எனும் பச்சை ஆமைகள் இருந்துள்ளன.
அதனால் கச்சத்தீவைப் பச்சைத்தீவு என முன்னர் அழைத்துள்ளனர். கச்சம் என்றால் ஆமை என்பர். அதனாலும் இத்தீவை கச்சத்தீவு என்பர். இத்தீவின் பச்சை மேனியில் இச்சை கொண்டோர் 'பச்சைத் தீவு! என்ற சொல்லால் அழைத்தனராம். பச்சைத் தீவு மருவி 'கச்சத்தீவு' என வழங்கப்படுகிறது என்றும் மற்றொரு வரலாறு கூறுகிறது.
நேரடி ரிப்போர்ட்
லோரன்ஸ் செல்வநாயகம்