![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/04/10/a36.jpg?itok=Stw9ElRu)
ஈழத்தின் முதலாவது இலக்கியச் சுஞ்சிகை பாரதி 1946ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகியது. இந்த இதழை முதுபெரும் எழுத்தாளர் கே. கணேஷ் தமது நண்பரான கே. ராமநாதனுடன் இணைந்து வெளிக்கொணர்ந்தார். இச்சஞ்சிகையே ஈழத்தின் முதலாவது சிறுசஞ்சிகையாகும். இதற்கு மூலதனம் வேண்டியபோது தந்தை இவருக்குக் கொடுத்த தலாத்துஓயா இடத்தை விற்று அதனை மூலதனமாகக் கொண்டே இச்சஞ்சிகையை ஆரம்பித்தார். பீற்றர் கெனமன் அவர்களது வீட்டையே செயலகமாகக் கொண்டு இச்சஞ்சிகை வெளிவந்தது. 1946ஜனவரி முதல் 1946ஆகஸ்ட் வரையான எட்டு மாதங்களில் ஐந்து இதழ்கள் மடடுமே வெளிவந்தன. கே. ராமநாதன் இந்தியா சென்றபின் இரண்டு ஆண்டுகள் கழித்து 1948ஜனவரியில் அ.ந. கந்தசாமியுடன் இணைந்து ஆறாவது இதழை வெளிக்கொணர்ந்தார் கணேஸ் முற்போக்கு எழுத்தாளர்கள் ஓரணியில் திரண்டு பணிபுரிய வைத்தது பாரதி இதழ். பாரதியில் வெளிவந்த கட்டுரைகள் ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. முதலாவது இதழின் ஆசிரியத் தலையங்கம் பின்வருமாறு அமைந்துள்ளது:
'விஞ்ஞான முடிவுகளில் புரட்சி ஏற்படுத்திய அணுசக்திபோல தமிழ்மொழிக்குப் புதுமைப் போக்களித்த மகாகவி பாரதியின் பெயர்தாங்கி வருகிறது இந்த இதழ். மகாகவி பாரதி தமிழுக்கப் புதுவழி காட்டியது போலவே எமது பாரதி இதழும் கண்டதும் காதல் கதைகள் மலிந்துவிட்ட இன்றைய தமிழிலக்கியப் போக்கிற்கும் புதுவழி காட்டும்.
ஏகாதிபத்தியத்தை அழிக்க கவிபாடிய பாரதியார் முப்பதுகோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடமையான ஒப்பில்லாச் சமதாயத்தை ஆக்கவும் கவி பாடினார். அவர் காட்டிய அந்தப் பாதையில் பாரதி யாத்திரை தொடங்குகிறது. இந்தப் பணிக்கு வேண்டியது தமிழர் ஆதரவே.'
கணேஷ் கண்டியை அடுத்துள்ள அம்பிட்டிய என்னும் இடத்தில் உள்ள 'தலைப்பின்னாவ' என்னும் தோட்டத்தில் கருப்பண்ணபிள்ளைக்கும் வேளூரம்மாளுக்கும் ஏக புத்திரனாக 02-.03-.1920இல் பிறந்தார். இவரது பெற்றோரும் மூதாதையரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தத்தமங்கலம் என்னும் சிற்றூரில் இருந்து இலங்கைக்கு வந்து தலாத்துஓயாவில் குடியேறியவர்கள். கணேஷு க்குத் தாய் தந்தையர் இட்டபெயர் சித்தி விநாயகம். ஆனாலும் வீட்டுப் பெயராகிய கணேசன் என்பதே எழுத்துலகில் கணேஷ் ஆகி நிலைகொண்டுவிட்டது.
கே.கணேஷ் தனது ஆரம்பக் கல்வியை தலாத்துஓயா பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கண்டி புனித அந்தனீஸ் கல்லூரியிலும் கற்றவர். பின்னர் தமிழகம் சென்று மதுரைத் தமிழ்ச்சங்கத்திலும் திருவையாறு ராஜாக்கல்லூரியிலும் பயின்றவர். தமிழகத்தில் கல்விகற்றபோது இவருக்கு இடதுசாரிகளின் தொடர்புகள் ஏற்பட்டன.
1939இல் அவர் தமிழ்நாட்டில் இருக்கும்போது மணிக்கொடி சஞ்சிகையில் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய ஆசாபாசம், அதிர்ஷ்டசாலி ஆகிய சிறுகதைகளும் மொழிபெயர்ப்புகளும், மணிக்கொடியில் வெளியாகியுள்ளன. கணேஷின் சுய ஆக்கங்களாக ஏழு சிறுகதைகளும், பல கவிதைகளும், கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.
1934இல் கல்விகற்க இந்தியா சென்ற கே.கணேஷ் அங்கு கம்யூனிச சித்தாந்த அறிவையும் இந்திய சுதந்திர வீரர்களின் தொடர்பையும் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நட்பையும் பெற்று 1938இல் இலங்கை திரும்பினார்.
1940இல் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த் இலங்கை வந்தபோது அவர் முன்னிலையில் அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை கே.கணேஷ் உருவாக்கினார். அந்தச் சங்கத்திற்கு சுவாமி விபுலானந்தர் தலைவராகவும், மார்ட்டின் விக்கிரமசிங்க உபதலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். டாக்டர் சரத்சந்திரவும் கே.கணேஷும் இணைச் செயலாளர்களாகவும் பி.கந்தையா பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள். 1946இல் தனது நண்பர் கே.இராமநாதனுடன் இணைந்து இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார்.
பெரியார் ஈவேராவுடன் சேர்ந்து கம்யூனிஸ இயக்கத்தைக் கட்டியெழுப்பிய ப.ஜீவானந்தத்துடன் மிகநெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் கே.கணேஷ் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் தடைப்பட்ட காலத்தில் 1950இல் ப.ஜீவானந்தம் இலங்கையில் தலைமறைவாக இருந்தார். அப்போது இலங்கையின் பலபாகங்களுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சென்று கம்யூனிச கொள்கைப் பிரசாரங்களில் ஈடுபட்டார். ஜீவானந்தத்துடன் கணேஷ் பல இடங்களுக்கும் சென்றார்.
யாழ்ப்பாணத்தில் ப.ஜீவானந்தமும் கே.கணேஷும் தங்கியிருந்த காலத்திலேதான், டொமினிக்ஜீவா, எஸ்.பொ. தி.ராஜகோபால் போன்றவர்கள் ப.ஜீவானந்தத்துடன் கலந்துரையாட வாய்ப்புக் கிடைத்தது. ஜீவானந்தத்தின்மீது கொண்ட அபிமானத்தால் டொமினிக் தனது பெயரை ஜீவா என்ற பெயருடன் இணைத்துக்கொண்டார். பின்னர் ப.ஜீவானந்தம் இந்தியா திரும்பிச் செல்வதற்கு பாதுகாப்புக்கருதி கணேஷ் அவருடன் கூடவேசென்றார். வல்வெட்டித்துறையில் இருந்து ஒரு இரவில் மீனவர்களின் விசைப்படகொன்றில் சென்று நாகப்பட்டினம் கரையில் கொண்டுசேர்த்ததும் கே.கணேஷே..
கணேஷின் எழுத்து முயற்சிகளில் மிக முக்கியமானது சிறந்த பிறநாட்டு இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தமையாகும். உலக இலக்கியங்கள் பலவற்றை மொழிபெயர்த்து 22நூல்களை அவர் வெளியிட்டுள்ளார். பாரதத்தில் வெளிவந்த தலித் இலக்கியத்தின் முதல் நாவலாகக் கருதப்படும் முல்க்ராஜ் ஆனந் எழுதிய தீண்டத் தகாதவர்கள் என்ற நாவலை முதன்முதலாக மொழிபெயர்த்து தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் கே. கணேஷ்.
1958இல் ஜப்பான் சக்கரவர்த்தியின் பிறந்த தினத்தையொட்டி உலகரீதியில் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மேகங்கள்| என்ற கவிதையை எழுதி ஜப்பானிய சக்கரவர்த்தியின் ஹீராஹிட்டோவின் அரசவைக் கவிஞர்களின் பாரட்டு விருதைப் பெற்றார்.
உக்ரேனிலும் பல்கேரியாவிலும் நடைபெற்ற உலக மொழிபெயர்ப்பாளர் மாநாடுகளில் 1984இலும் பின்னரும் இருதடவைகள் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.
இங்கு குறிப்பிட்ட தகவல்களில் அனேகமானவை கே.கணேஷோடு உரையாடிப் பெற்றவை. ஞானம் 31ஆவது இதழ் எழுத்தாளர் கே.கணேஷ் சிறப்புமலராக வெளிவந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கே. கணேஷுக்கு கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது 2003ஆம் ஆண்டில் வழங்கப்பெற்றது.
அவர் தனது 86ஆவது வயதில் 5.-04.-2004 அன்று அமரரானார்.