இலங்கையில் தற்போது மோசமான பொருளாதார நெருக்கடிநிலவுகின்றது. பெற்றோலிய எரிபொருட்களுக்கு பெரும்தட்டுப்பாடு நிலவுகின்றது. அவற்றின் விலைகளும்அதிகரித்துள்ளன. எரிபொருள் விலையேற்றம் காரணமாக போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்து விட்டன. மருந்துப் பொருட்கள், உணவுகள் உட்பட அனைத்துக்கும் விலைகள் அதிகரித்து விட்டன.
இலங்கை தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதென்பது இலகுவான காரியமல்ல. ஏனெனில் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்ற பொருளாதாரத்தை முன்னைய நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு சிறப்பான திட்டங்கள் அவசியம். அதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வருவதானால் அதற்கு சில காலம் செல்லுமென்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வினைத்திறன் மிகுந்த திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றார். இலங்கையின் எதிர்காலம் விரைவில் சீராகி விடுமென்பதே நம்பிக்கையாக இருக்கின்றது.
இலங்கை எத்தனைதான் சிறப்பான திட்டங்களை வகுத்தாலும் வெளியுலகின் உதவிகளின்றி மீண்டெழுவதென்பது இலகுவாக இருக்கப் போவதில்லை. இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைமையில் உலகில் உதவிகள் வழங்குகின்ற பிரதான நாடாக இந்தியா உள்ளது. இலங்கையின் நெருக்கடி தீர்க்க உடனடி உதவிகளை வழங்கிய முதலாவது நாடாக இந்தியா திகழ்கின்றது. அத்துடன் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் பலவிதத்திலும் தனது உதவிகளை வழங்கி வருகின்றது.
உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு உட்பட எரிபொருட்கள், மருந்துகள் என்றெல்லாம் இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடர்கின்றன. இலங்கையில் விவசாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக இரசாயன உரத்தை வழங்குவதற்கும் இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவின் இரசாயனப் பசளை இலங்கையில் விவசாயிகளை சென்றடையத் தொடங்கியதும் நாட்டில் விவசாயம் மீண்டும் முன்னைய நிலைமைக்கு வந்து விடுமென்பதே நம்பிக்கையாக உள்ளது.
இந்தியா வெறுமனே உணவு நிவாரணங்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்குவதுடன் மாத்திரம் நின்று விடவில்லை. இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் விடயத்திலும் அக்கறையாக உள்ளது. விவசாயம் தற்போது வீழ்ச்சி நிலைமைக்குச் சென்றுள்ளதால், அதனை மீளக்கட்டியெழுப்புவது பிரதானமென இந்தியா கருதுகின்றது. எனவேதான் இரசாயனப் பசளையை இலங்கைக்கு கொடுத்துதவுவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான உறுதியை வழங்கியுள்ளதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்.
வெறுமனே உணவு நிவாரணத்தை மாத்திரம் வழங்குவதால் இலங்கையின் இன்றைய நெருக்கடியானது தற்காலிகமாகத் தீருவதற்கே வழியேற்படும். விவசாயத்தையும் ஏனைய தொழில்துறைகளையும் ஊக்குவிப்பதன் மூலமே இலங்கை மீண்டெழுவதற்கான வழியேற்படுமென்பதுதான் உண்மை.
இந்திய மத்திய அரசு மாத்திரமன்றி தமிழக அரசும் இலங்கை மக்களுக்ெகன அதிக உதவிகளை சமீபத்தில் வழங்கியுள்ளது. தமிழக மக்களினதும், அம்மாநில அரசினதும் அன்பையும் அக்கறையையும் எக்காலத்திலும் மறந்து விட முடியாது. தமிழகம் வழங்கிய உதவிப் பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வறிய நிலைமையிலுள்ள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு சமீப காலமாக மனிதாபிமான உதவிகளை பெருமளவில் அனுப்பி வைத்திருந்தது. 25தொன் மருந்துகள், 9,000தொன் அரிசி, 50தொன் பால்மா ஆகியவை உதவிப் பொருட்களில் அடங்குகின்றன.
“இந்திய அரசாங்கம் எந்த நாட்டுக்கும் இந்த அளவுக்கு உதவிகளை வழங்கியதில்லை. இதற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் அந்த உதவிகளைப் பொறுப்பேற்ற சமயத்தில் தெரிவித்திருந்தார்.
"உள்நாட்டுப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு ஒரு பொறுப்பான அயல்நாடு என்ற முறையில் இந்தியா பலவித உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. எரிபொருள் வாங்குவதற்கு இலங்கைக்கு இந்தியா 200மில்லியன் டொலர் கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியா ஏற்கனவே 200மில்லியன் டொலர் கூடுதல் கடன் வழங்கியுள்ளது" என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர தெரிவித்திருந்தார்.
இதேவேளை சென்னையில் பத்து தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விடயம் தொடர்பாகவும் பிரஸ்தாபித்திருந்தார்.
"இலங்கை இப்போது கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. அங்கே உள்ள நடப்பு நிலை கவலை அளிக்கின்றது. நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறோம். குறிப்பாக, நிதியுதவி, எரிபொருள், உணவு, மருத்துவம் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை மத்திய அரசு அளித்து வருகிறது" என்று நரேந்திர மோடி கூறியிருந்தார்.
"நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து துணை நிற்கும்" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு மேலும் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி, கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இதேசமயம் இந்திய உதவிகளுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது நன்றிகளைத் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வழங்கிய உதவியையும் பாராட்டுகிறேன்" என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவியாக அனுப்பிய அரிசி, பால்மா உள்ளிட்ட பொருட்களை நாட்டு மக்களுக்கு விநியோகிக்கும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளது.
குடும்பம் ஒன்றுக்கு தலா 10 கிலோ அரிசி அடங்கிய பொதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அக்கறை குறித்து இலங்கையின் பெரும்பான்மை மக்களும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவே இலங்கையின் உண்மையான நண்பன் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதையே இந்நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
சாரங்கன்