![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/03/a16.jpg?itok=h8wajDkd)
இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்குப் பொருளாதார உதவிகள் மாத்திரமன்ற, அரசியல் ஸ்திரத்தன்மையும் அவசியமானது என்ற கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாகவே அரசியலமைப்பைத் திருத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் நாட்டுக்குத் தற்பொழுது அவசியம் பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வு மாத்திரமே, அரசியல் ரீதியான தீர்வு எதுவும் அவசியம் இல்லையெனக் கூறும் ஒரு சாராரும் அரசாங்கத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
இருந்தபோதும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதே அமைப்புக்களின் உதவியை நாடுவதாயின், நிச்சயமாக அரசியல் ஸ்திரத்தன்மை நாட்டில் காணப்பட வேண்டும். இது குறித்துக் கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தி அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைப் பலப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட 20ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து, பாராளுமன்றத்துக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அதிகாரத்தை வழங்கக் கூடிய வகையில் 19ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்கள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்தாடல்கள் வலுவடைந்துள்ளன.
இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியிலேயே அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் தனிநபர் சட்டமூலங்களாக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தனிநபர் சட்டமூலமாக 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கையளித்திருந்தார். அத்துடன், தற்போதைய நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அரசியலமைப்புத் திருத்தத்துக்கான தனது தனிநபர் சட்டமூலத்தைக் கையளித்திருந்தார்.
இந்தத் தனிநபர் சட்டமூலங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்டன. இருந்தபோதும் நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டு அரசாங்கத்தின் சார்பில் 21ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனையை சமர்ப்பித்தமையால் தனது தனிநபர் சட்டமூலத்தை மீளப்பெற்றுக் கொண்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் கட்சி சமர்ப்பித்த 21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான தனிநபர் சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அண்மையில் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் உள்ள சில விடயங்கள் அரசியலமைப்புடன் உடன்படும் வகையில் அமையவில்லையென்பதால் அவ்வாறான விடயங்களை முன்வைப்பதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருந்தது.
ரஞ்சித் மத்துமபண்டாரவின் தனிநபர் சட்டமூலம் 21ஆவது திருத்தச்சட்டமூலம் எனப் பெயரிடப்பட்டிருப்பதால் அரசாங்கம் தயாரித்துள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 22ஆவது திருத்தச்சட்டமூலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு கடந்த அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதுடன், இது வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதனைப் பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை மாத்திரம் வகிப்பது, அமைச்சர்கள் நியமனத்தின் போது பிரதமரின் மதியுரையின் கீழ் நியமனங்களை மேற்கொள்வது, சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களைப் பலப்படுத்துவது இதன் நோக்கமாக அமைந்துள்ளது என அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.
இதுஇவ்விதமிருக்க, பாராளுமன்றத்தின் செயற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றித் தொடர்ச்சியான கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக பாராளுமன்றத்தில் காணப்படும் குழுக்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் தற்பொழுது கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு), அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்க நிதி பற்றிய குழு, பொதுமனுக்கள் பற்றிய குழு ஆகியவற்றின் அதிகாரத்தைப் பலப்படுத்துவது குறித்த யோசனையை சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த யோசனை நிலையியற் கட்டளைகள் குறித்த குழுவில் கலந்துரையாடப்படவுள்ளது. இதில் கலந்துரையாடப்பட்டு அதற்கு ஏற்ற வகையில் நிலையியற் கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாகப் பதவி வகிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகரித்த பங்களிப்பைக் பெற்றுக் கொள்ளும் நோக்கில் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
இவ்வாறு அமைக்கப்படும் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களே தலைவர்களாக இருப்பார்கள்.
இதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதுடன், சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கலந்துரையாடுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக கொள்கைத் தயாரிப்புப் பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் உறுதுணையாகவிருக்கும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் கணிசமான பங்களிப்பை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக பாடசாலைக் கல்வியில் பாலியல் குறித்த பாடத்தை உள்ளடக்குவது குறித்த விடயம் கல்விசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டு சமூகத்தில் கருத்தாடல்களை உருவாக்கியிருந்தது. அதேபோல, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு முன்வைத்திருந்த அறிக்கை பெரிதும் பேசப்பட்டது.
இவ்வாறான நிலையில் நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உரிய கொள்கைகளைத் தயாரிப்பதற்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கதாக அமையும். இது மாத்திரமன்றி, நிதி குறித்த விடயங்களைக் கையாள்வதற்கும் விசேட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இது பற்றிய விடயங்களும் தற்பொழுது ஆராயப்பட்டு வருகின்றன. குறிப்பாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றக் குழுக்கள் பற்றிய பரிந்துரைகளைப் பிரதமருக்கு விரைவில் சமர்ப்பிக்கவுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைத் தீர்வுக்கும் உறுதுணையாகவிருக்கும்.
பி.ஹர்ஷன்