![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/16/a22.jpg?itok=yqX4eH-3)
கடந்த வாரம் இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் கொந்தளிப்புமிக்க ஒரு காலப்பகுதியாகப் பதிவாகியதுடன் இன்னும் அக்கொதி நிலை தொடர்ந்து செல்கிறது
நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியின் பதவி விலகலை வலியுறுத்தி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்றுடன் நூறு நாட்கள் ஆகின்றன. தனக்கு அறுபத்தொன்பது இலட்சம் பேரின் ஆணை உள்ளதாகவும் எனவே பதவி விலகுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்த ஜனாதிபதி பின்னர் ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதியாக தாம் பதவி விலக விரும்பவில்லை என அறிவித்தார்.
அத்துடன் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றி தமது குடும்பத்திற்கு மிக நெருக்கமான விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துக்கொண்டார். போராட்டக்காரர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறாத அதேவேளை அதற்கு மாறாக அதிகாரத்தைப் பலப்படுத்தும் வகையில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக கொதிப்படைந்த மக்கள் பெருமளவில் கொழும்பை வந்தடைந்து ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம் அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை ஆக்கிரமித்து நிலை கொண்டனர்.
இதனால் ஜனாதிபதி தப்பியோட நேர்ந்ததுடன் பிரதமரும் வெளியே வரமுடியாத நிலைமை தோன்றியது. அரச தொலைக்காட்சி ஒரு குழுவினால் ஆக்கிரமிக்கப்பட்டது. மேலும் ஒரு குழு பாராளுமன்றத்தை கைப்பற்றும் நோக்கில் விரைந்தது. நாடு ஆரப்பாட்டக்காரர்களின் ஒரு குழுவினரால் பிழையான திசையில் நகர்த்திச் செல்லப்படுவதைக் கண்ட சட்டத்தரணிகள் சங்கம் போராட்டக் காரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.
மிரிஹானவில் உருவாகிய இந்த அறவழிப் போராட்டம் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆதரவு கிடைத்திராவிட்டால் இந்தளவு தூரம் வலுப்பெற்றிருக்க முடியாது. அது போராட்டக்காரர்களுக்கும் தெரியும். மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலைபெறுவது அவசியம் என்று வலியுறுத்தின.
போராட்டக்காரர்கள் உடனடியாக தாம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரச கட்டடங்களை மீள ஒப்படைத்து விட்டனர். தப்பி ஓடிய ஜனாதிபதி எங்கிருக்கிறார் என்பது பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவராத போதும் பின்னர் கட்டு நாயக்க ஊடாக அவர் வெளிநாடு செல்ல முனைந்தபோது குடிவரவு அதிகாரிகள் அதனை அனுமதிக்காத காரணத்தினால் அருகில் உள்ள படைமுகாமில் பாதுகாப்புத்தேட நேர்ந்தது. பின்னர் விமானப்படையின் உதவியோடு மாலைதீவுக்கு சென்றவருக்கு அங்கு வாழ்கின்ற இலங்கையர்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேர்ந்தது.
மாலைதீவின் எதிர்க்கட்சி இப்போது கோட்டாபயவுக்கு மாலைதீவுக்கு வர எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளது. பயணிகள் விமானமொன்றில் பயணிக்கப் பயப்பட்டு தனி விமானம் கோரிய கோட்டாபய பின்னர் சவுதி விமானமொன்றில் ஏறி சிங்கப்பூர் ஊடாக சவுதி அரேபியாவுக்கு சென்றதாக ஊடகக் குறிப்புகள் கூறுகின்றன.
ஜனாதிபதி பதவியிலிருந்த கோட்டாபய விலகுவார் என்று பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் பதவி விலகல் கடிதம் பதினான்காம் திகதி மாலை வேளையிலேயே கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் அக்கடிதத்தின் அதிகாரபூர்வத் தன்மை குறித்த 15ஆம் திகதியே உறுதிப்படுத்த முடியும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை பிரதமராக இருந்த விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாகவே நாடு தழுவிய அவசரகாலச் சட்டமும் மேல்மாகாணத்தில் ஊரடங்கும் அறிவிக்கப்பட்டது. ஆயினும் போராட்டங்கள் வலுப்பெற்றுச் செல்கின்றன. ஆங்காங்கே பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் ஏற்பட்ட போதிலும் பாதுகாப்புப் படையினர் தமது உண்மையான பலத்தை பிரயோகிக்கவில்லை.
அப்படி நடந்திருக்குமாயின் மிகப்பெரிய இரத்தக்களரி ஒன்றை நாடு சந்தித்திருக்கும். ஆனால் இப்படி ஒரு போராட்டம் சிறுபான்மையினர் அதிகம் வாழும் வடக்கு கிழக்கில் இடம்பெற்றிருக்குமாயின் இதே பொறுமை காட்டப்பட்டிருக்குமா என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஆனால் இப்போது அமைதியான வழியில் ஆட்சிமாற்றத்திற்கு வழிவிட்டு நாட்டை வழிநடத்த உதவுமாறு முப்படைகளும் மக்களைக் கேட்டிருக்கின்றன. தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை சாதாரணமான ஒன்றாகக் கருத முடியாது. அத்துடன் சர்வதேச ராஜதந்திர வட்டாரங்கள் ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்று அரசாங்கத்தை எச்சரித்திருந்த போதிலும் கோட்டாபயவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து போராட்டக் காரர்கள் அரச நிருவாகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பேணும் வகையில் கலைந்து செல்ல வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.
இப்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை குறித்தோ அல்லது ஊரடங்குகள் குறித்தோ இவ்வட்டாரங்களிடமிருந்து எவ்வித கருத்துக்களும் வெளிவரவில்லை. தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தில் நுழைந்த விக்கிரமசிங்ஹ பிரதமராகி இப்போது பதில் ஜனாதிபதியாகவும் பதவியேற்றுள்ளார்.
புதிய பிரதமரைத் தெரிவு செய்யும் அதிகாரப்போட்டி இப்போது தோன்றியுள்ளது. அத்துடன் நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டு அடுத்த தேர்தல் நடக்கும் வரையிலான காலப்பகுதிக்கு ஜனாதிபதி ஒருவரையும் பிரதமர் ஒருவரையும் தெரிவுசெய்ய வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்திற்கு இருக்கிறது. ஆனால் இவ்விரு தெரிவுகளையும் மேற்கொள்வது அவ்வளவு இலகுவான தாக அமையப் போவதில்லை.
எனவே கோட்டாவின் வெளியேற்றம் நிம்மதியைத் தந்தாலும் அதிகாரப் போட்டாபோட்டி மற்றும் இவ்விரு பதவிகளுக்குமான திரைமறைவுக்காய் நகர்த்தல்கள் என்பன இலங்கை அரசியலில் உறுதிப்பாடற்ற ஒரு நிலையினை அடுத்துவரும் சிலவாரங்களுக்கு தொடரச் செய்யும் என்றே எதிர்பார்க்கலாம்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகண்டு நாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவல்ல தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தலைமைத்துவத்தை (visionary leadership) வழங்கக்கூடிய எவரையும் தற்போதுள்ள எந்த அரசியல் கட்சியிலும் காண முடியாதுள்ளது. கிணற்றுத் தவளைகள் போல குறுகிய உலக அறிவும் இனவாதத்தால் ஊறிப்போன சிந்தனையையும் பின்னணியையும் கொண்டவர்களையே காண முடிகிறது.
அத்துடன் ஜனாதிபதி பதவியை வெறுப்பவர்களாக காட்டிக் கொள்பவர்கள் எப்படியாவது அந்த நாற்காலியில் அமர்ந்து விடவேண்டும் என்று ஓநாய்களாக அலைவதையும் காண முடிகிறது. இந்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் முக்கியமான ஒரு அறிவித்தலை விடுத்துள்ளார்.
நாட்டில் அரசியல் உறுதிப்பாடு இப்போது முக்கிய தேவையாக உள்ளதாகவும். நாட்டில் ஏற்கெனவே தொய்ந்து போயுள்ள பொருளாதாரம் மேலும் அழிந்து இயங்காமல் நின்று விடுமென்றும் உரிய தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். பதவி ஆசைக்காக அலைபவர்களின் காதில் அது எட்டியதா என்று தெரியவில்லை.
நாட்டில் எரிவாயுக் கப்பல்கள் வந்துள்ளன. எரிபொருள் கப்பல்களும் வந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி ஓரளவு தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதன் பின்னர் அவற்றைப் பெற்றுக்கொள்ள டொலர் கையிருப்புகள் இல்லை என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். அத்துடன் எரிபொருளைக் கொள்வனவு செய்ய போதியளவு ரூபாய்கள் இல்லையெனவும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் எரிபொருள் விலைகள் பலமடங்கு பல தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு பொதுமகனும் விலையைச் செலுத்தாமல் ஒரு துளி எரிபொருளையும் பெற்றுக்கொண்டதில்லை. அவ்வாறாயின் எரிபொருள் விற்ற பணம் எங்கே என்ற கேள்வி எழுகிறது. பாராளுமன்ற கோப் குழுவின் முன்னால் குறித்த துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் வெளியிட்ட கருத்துகள் அத்துறையில் நிலவும் கட்டமைப்பு சார் பலவீனங்களையும் முறை கேடுகளையும் நேரடியாக வெளிப்படுத்துகின்றன.
எரிபொருள் மற்றும் சக்திவளம் தொடர்பான துறை முழுமையாக கட்டமைப்புசார் மாற்றங்களை சந்திக்காமல் இந்த சக்திவள நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வுகாண முடியாது. அதற்குத் தீர்வு காணாமல் நாட்டின் உற்பத்தித் துறையையும் வணிகத்துறையையும் மீட்டெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தில் வழமை நிலையை ஏற்படுத்த முடியாது.
எனவே பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே பிரச்சினை. மிகப்பலம் வாய்ந்த தொழிற்சங்கங்களும் ஊழல்மிக்க அரசியல்வாதிகளும் உள்ளவரை அது நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. பிரச்சினைகள் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.
கலாநிதி எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்