விண்வெளி ஆய்வுத் துறையில் உலகுக்கு சவால் விடும் இந்தியா! | தினகரன் வாரமஞ்சரி

விண்வெளி ஆய்வுத் துறையில் உலகுக்கு சவால் விடும் இந்தியா!

பொருளாதார வளர்ச்சியில் மாத்திரமன்றி,விண்வெளி ஆய்வுத்துறையிலும் உலகின்முன்னணி நாடுகளுக்கு சவால் விடும் வகையில்துரிதமாக முன்னேறி வருகின்றது இந்தியா.

இந்தியாவின் தேசிய வளர்ச்சிக் கொள்கைகளில் பிரதமர் நரேந்திரமோடி கடைப்பிடித்து வருகின்ற நவீனத்துவம் வாய்ந்த திட்டங்களே இதற்கான பிரதான காரணமாகும். இந்தியாவின் கடந்த கால அரசாங்கங்களை எடுத்து நோக்குகின்ற போது, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சிக்காலத்திலேயே விண்வெளித்துறையில் பெரும் சாதனைகள் ஈட்டப்பட்டுள்ளன எனலாம்.

விண்வெளித்துறை ஆராய்வு திட்டங்கள் மாத்திரமன்றி நவீன தொழில்நுட்பத் திட்டங்களை அபிவிருத்தி செய்வதில் பிரதமர் நரேந்திரமோடி தனியான கரிசனையுடன் செயல்பட்டு வருகின்றார். அதன் காரணமாகவே உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் விண்வெளி ஆய்வுத்துறையில் இந்தியா புதிய சாதனைகளில் காலடி பதித்து வருகின்றது.

இந்த முன்னேற்றகரமான திட்டங்களின் அடுத்த கட்டமாக இந்த வருடத்தில் சந்திரயான்-3, ஆதித்யா எல்-1உட்பட 12விண்வெளி ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டங்களைப் பொறுத்தவரை இந்த 12திட்டங்களும் முக்கிய மைல்கல் எனலாம்.

இந்திய நாட்டுக்குத் தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ரொக்கெட்டுகள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன் அறிவியல் ஆராய்ச்சியில் சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட பல்வேறு தொடர்சாதனைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே கொரோனா பரவலால் கடந்த 2ஆண்டுகளாக ‘இஸ்ரோ’ செயற்பாடுகள் பெரிதும் தாமதமடைந்தன. கடந்த 2ஆண்டுகளில் 5செயற்கைக் கோள்களை மட்டுமே இஸ்ரோ விண்ணில் செலுத்தியிருந்தது. இவ்வாறான நிலையில், இந்த ஆண்டில் சந்திரயான்-3, ஆதித்யா எல்-1உட்பட 12ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இன்றுவரை பெருமளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை அடைந்து வருகின்றது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் போன்ற முன்னுரிமை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பகுதிகளைக் கண்டறிந்து வளர்ந்து வருகின்றது.

இந்தியாவில் பல அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. இந்திய நாடு அணு ஆற்றல் வளர்ச்சிக்கு முதன்மை அளிப்பது போல விண்வெளி ஆய்வுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. இத்திட்டங்களுக்காக பிரதமர் நரேந்திரமோடி  அதிக முக்கியத்துவம் அளித்து ஊக்குவித்து வருகின்றார்.

தொலைத் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானிலை, இயற்கை வளங்களைக் கண்டறிதல் போன்றவற்றின் வினைத்திறனை வளர்ப்பதற்கு செயற்கைக்கோள்களை உருவாக்கி அவற்றை விண்ணில் ஏவும் முயற்சி வரை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் ‘மங்கள்யான்’திட்டத்தை நிறைவேற்றியது. சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான்-1, சந்திரயான்-2திட்டங்களையும் மேற்கொண்டது.

அதைத் தொடர்ந்து தற்போது வெள்ளி கிரகத்தின் மீது இஸ்ரோவின் பார்வை பதிந்துள்ளது. வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படவிருக்கிறது. இத்திட்டத்தில் பிரான்ஸ் நாடும் பங்கேற்கிறது. இந்தத் தகவலை பிரான்ஸ் நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சி.என்.இ.எஸ். தெரிவித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தில் முதல்முறையாக பிரான்ஸ் இடம்பெறுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் விண்வெளிக்கு 3இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்கும் ‘ககன்யான்’ திட்டத்திலும் பிரான்ஸ் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டுக்கான தொலைதூர திட்டங்களை இஸ்ரோ வகுத்துள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்திய விண்வெளித்துறையில் அரிய சாதனைகளை உலகம் எதிர்பார்க்க முடியுமென்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

எதிர்வரும் காலங்களில் சந்திராயன் 3, எக்ஸ்ரே போலாரிமீட்டர் செய்மதி, ஆதித்யா எல்1, சுகன்யான், வீனஸ் ஓர்பிட்டர், டிஷா ஏரோனாமி மிஷன்ஸ் மற்றும் லூனார் போலார் எக்ஸ்ப்ரோரேஷன் போன்ற திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமில்லாமல் சந்திராயன்-1இன் டேட்டா யுட்டிலைசேசன் கீழ் 17திட்டங்களையும், மார்ஸ் ஓபிர்ட்டர் மிஷன் திட்டத்தின் கீழ் 28புதிய திட்டங்களையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர். ஓஸ்ட்ரோசாட் டேட்டாவின் கீழ் 12திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

செலவு, நேரம் மற்றும் அபாயத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் 55நாடுகளுடனும் ஐந்து பலதரப்பு அமைப்புகளுடனும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளில் RNDயை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், ஆராய்ச்சி அனுசரணை செய்யப்பட்ட திட்டங்கள், விண்வெளி தொழில்நுட்பம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி மற்றும் எஸ்.பி.பி.யு, புனே, பிரீமியர் நிறுவனங்களின் செல், விண்வெளிக்கான பிராந்திய கல்வி நிலையங்கள் ஆகியவற்றை (ஆர்.ஏ.சி) கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மத்திய மற்றும் வட கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் நிறுவ பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

வேற்றுமையிலும் ஒற்றுமை கொண்ட மக்கள் வாழ்கின்ற நாடாக இந்திய தேசம் விளங்வதாலேயே இவ்வாறான வெற்றிகரமான திட்டங்கள் சாத்தியமாகின்றன. விண்வெளி ஆய்வுத்துறையில் இந்தியா எதிர்காலத்தில் உலக நாடுகளையே பின்தள்ளியபடி முன்னேறுவது உறுதி என்கிறார்கள் அந்நாட்டின் விண்வெளித்துறை சார்ந்த அறிவியலாளர்கள்.

எஸ்.சாரங்கன்

Comments