![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/05/a2.jpg?itok=nMweyaG5)
லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு இறக்குமதிக்காக செய்திருந்த ஒப்பந்தம் 2022பிப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. ஆனால் எரிவாயு விநியோகம் மார்ச் மாதத்திலேயே முடிவுக்கு வந்தது. புதிய வழங்குனருக்காக டென்டர் வழங்கும் நடவடிக்கை நிறுவனத்தால் ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளையில் வழங்குனரால் நீண்ட கால கடன் பத்திரம் தேவை என நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அச்சந்தர்ப்பத்தில் நாட்டில் டொலர் பிரச்சினை தலை தூக்கியிருந்தது. டொலர் பிரச்சினை தீவிரமடைந்து மத்திய வங்கியால் கடன் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏப்ரல் 8ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிறுவனம் டொலர்தேடும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டதோடு அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் பத்திரத்தை வழங்குவதை இடைநிறுத்தின. எரிவாயுவுக்கான தட்டுப்பாடு அதன் பின்னரே ஆரம்பமாகியது. ஏப்ரல் மாத ஆரம்பத்தில் எரிவாயுவை விலைக்கு வாங்கும் திறனை லிட்ரோ நிறுவனம் இழந்தது.
அதுவரை இருந்த விநியோகஸ்தர்களான ஓமான் டிரேடிங் எரிவாயு நிறுவனத்துடன் தொடர்ந்தும் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான கலந்துரையாடலை மேற்கொள்ள முன்னாள் தலைவர் முயற்சி எடுக்கவில்லை. பெப்ரவரி 28ஆம் திகதி ஓமான் டிரேடிங் நிறுவனத்துடனான எரிவாயுவுக்கான ஒப்பந்தம் நிறைவடைந்ததுடன் டொலர் பிரச்சனையும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தற்போதைய டொலர் பிரச்சினை காரணமாகவே நீண்ட கால கடன் பத்திரத்தை நிறுவனம் கோரியுள்ளது.
புதிய விநியோகஸ்தரை தெரிவு செய்வதற்காக நிறுவனம் அச் சந்தர்ப்பத்தில் டென்டரை கோரியிருந்தது. ஒரு வருடத்திற்காக அந்த டென்டரை வெளியிட்டிருந்தது.
அப்போது நீண்டகால கடன் பத்திரத்தை திறக்கக் கூடிய திறன் லிட்ரோ நிறுவனத்திடம் காணப்பட்டது.
பொருளாதாரப் பிரச்சினையின் ஆரம்ப காலகட்டம் என்பதாலும் லிட்ரோ நிறுவனத்திடமும் மத்திய வங்கியிடமும் அதற்கான நிதி பலம் காணப்பட்டது. நிதியை திரட்டுவதற்காகவும் மற்றும் புதிய டென்டருக்கான அனுமதியை பெறுவதற்காகவும் கலந்துரையாடல்கள் அவ்வேளையில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு கலந்துரையாடலின் முன்னேற்றம் பற்றி அமைச்சரவைக்கும் வாரந்தோறும் அறிவிக்கப்பட்டது. மத்திய வங்கி உள்ளிட்ட நாட்டின் அனைத்து வங்கிகளும் நீண்ட கால கடன் பத்திரத்தை வெளியிட முடியாதென கூறியதோடு அமைச்சரவையும் அதில் தலையிட முடியாது என இறுதியாக நிறுவனத்துக்கு அறிவித்தது.
நிறுவனத்திடம் இருந்த எரிவாயு முடிவடைந்தவுடன் நாடு பூராவும் 80,000தொடக்கம் ஒரு லட்சம் வரையான பாவனையாளர்கள் கியூவரிசையில் நிற்கத் தொடங்கினார்கள். ஒருபுறம் நீண்ட கால விநியோகஸ்தர்களை இழந்ததுடன் மறுபுறம் டொலரை பெறுவதற்கு முடியாத நிலைமைக்கும் லிட்ரோ நிறுவனம் தள்ளப்பட்டது.
மாற்று வழியை தேடல்
நீண்டகால விநியோகஸ்தரை இழந்ததால் பாவனையாளர்களின் தேவையும் அதிகரித்ததன் பேரில் லிட்ரோ நிறுவனம் நாளாந்தம் சம்பாதிக்கும் பணத்தை டொலராக மாற்றி எரிவாயு கப்பலை கொண்டு வந்து எரிவாயுவை விநியோகிக்க முயற்சி செய்தது. அச்சந்தர்ப்பத்தில் உடனடியாக விலைக்கு விற்கும் முறையை பின்பற்றும் நிறுவனங்களிடமிருந்து கையில் உள்ள பணத்திற்கு ஏற்றவாறு எரிவாயுவை பெறுவதற்கு பழகிக் கொண்டோம்.
ஏப்ரல் மாத நடுப்பகுதியிலேயே, 3500மெட்ரிக் தொன் எரிவாயு அல்லது 7000மெட்ரிக் தொன் எரிவாயு கப்பலை கொண்டு வந்து சந்தையில் விநியோகிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அது எமது தேவைக்கு ஒரு போதும் போதுமானதல்ல. அதனால் கியூ வரிசை முடிவுக்கு வரவில்லை. எரிவாயு விநியோகிக்கும் அனைத்து நாட்களிலும் பாவனையாளர்கள் 80,000தொடக்கம் ஒரு லட்சம் வரை க்யூ வரிசையில் இணைந்து கொண்டார்கள்.
இவ்வாறு நாள்தோறும் இணைந்தவர்களின் எண்ணிக்கை ஒன்று ஒன்றரை மாதங்களில் 4.5மில்லியனாக அதிகரித்தது. நிறுவனம் கண்டுபிடித்த மாற்று வழிகள் மூலம் கியூவரிசை முடிவுக்கு வராததோடு அது மேலும் அதிகரித்தது.
எரிவாயு விநியோகஸ்தர்கள் நீண்டகால கடன் பத்திரங்களை கேட்டபோது நிறுவனம் அதற்கு தேவையான நிதியை வழங்கக்கூடிய திறன் இல்லை என கூறியதால் எரிவாயு பிரச்சினை மேலும் தீவிரமடைந்தது. பல நாட்கள் வரிசையில் நின்ற மக்கள் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என நாட்களை எண்ணத் தொடங்கினார்கள். அதனால் வர்த்தகங்களை மேற்கொள்ள முடியாது போனதோடு லட்சக்கணக்கான மக்களின் பசியை தீர்க்க அடுப்பைப் பற்ற வைக்கவும் முடியாமலும் போனது.
பணத்தை செலுத்தும் அளவுக்கே எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டதால் நாளுக்கு நாள் க்யூ வரிசை அதிகரித்தது. எரிவாயுவுக்காக கறுப்பு சந்தையும் உருவாகத் தொடங்கியது. ஒரு எரிவாயு சிலிண்டரின் விலை 25000ரூபாய் வரை அதிகரித்தது. நாட்டுக்கு தேவையான எரிவாயுவை வழங்க 30,000மெட்ரிக் தொன் தொடக்கம் 36,000மெட்ரிக் தொன் தேவைப்பட்டதோடு எமக்கு 3500தொன் தொடக்கம் 7000தொன் எரிவாயுவே கிடைத்தது.
எரிவாயு சிலிண்டர்களை பாதுகாக்கும் தேவையும் பாவனையாளர்களுக்கு நேரிட்டது. ஏனென்றால் அவற்றை திருடுபவர்கள் குறித்தும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவித்தன. எரிவாயு வரிசையில் எரிவாயு சிலிண்டர்களை நாள் தோறும் பாதுகாப்பதற்காக புதிய தொழில் வாய்ப்பும் உருவாகியது.
நிதிப் பிரச்சினை
நல்லாட்சி அரசாங்கம் விலகும் போது லிட்ரோ நிறுவனத்திடம் 21பில்லியன் ரூபா கையிருப்பு காணப்பட்டது. திறைச்சேரிக்கு 11பில்லியன் ரூபா லாபத்தை செலுத்தும் நிறுவனமாக அது காணப்பட்டது. 2022ஜூன் மாதம் தற்போதைய தலைவர் முதித்த பீரிஸ் நிறுவனத்தை பொறுப்பேற்கும் போது நிறுவனத்தின் கடன் சுமை 11பில்லியன் ரூபாவாக அதிகரித்திருந்தது. இரண்டு வருட காலத்துக்குள் அவ்வாறு கடன் அதிகரித்து காணப்பட்டது. உலக வர்த்தக சந்தையில் விலை அதிகரிப்புக்கு இணைந்ததாக எரிவாயு விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாதது நிதி பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அதன் நிதிப் பணிப்பாளர் லக்மாலி சி.ஹபுஆராச்சி கூறினார். 2019அக்டோபர் தொடக்கம் 2021ஆகஸ்ட் வரை உலக வர்த்தக சந்தையில் விலை அதிகரித்தாலும் உள்ளூர் வர்த்தக சந்தையில் எரிவாயு விலையை அதிகரிக்க அன்றைய அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை. அவ்வேளையில் எரிவாயுக்காக விலைச் சூத்திரம் ஒன்று காணப்பட்டாலும் அது செயல்படுத்தப்படவில்லை.
பெரும் நஷ்டத்துக்கு மத்தியிலேயே எரிவாயு நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டதால் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. அச்சந்தர்ப்பத்தில் வங்கி கூட கடனை வழங்க பின்வாங்குவது மீண்டும் கடனை செலுத்த முடியாத நிறுவனம் என்பதாலாகும். ஏனென்றால் எரிவாயு விற்பனையால் நிறுவனம் பெறும் பணம் ஒன்றோ இரண்டோ எரிவாயு கப்பல்களை இறக்குமதி செய்வதற்கே போதுமானதாகும்.
நிறுவனத்திடம் கையிருப்பிலிருந்த10.4பில்லியன் ரூபா 2021ஆம் ஆண்டளவில் மறை 100மில்லியன் ரூபாவரை வீழ்ச்சி அடைந்தது. அதனால் நிறுவனத்துக்கு ரூபா பற்றாக்குறையும் ஏற்பட்டது. அந்த நிறுவனம் 2019ஆம் ஆண்டு ஆறு பில்லியன் வருடாந்த வருமானம் பெற்ற நிறுவனமாகும். விலையில் திருத்தங்கள் செய்யாமை பலவீனமான முகாமைத்துவம் என்பன இந்த நிறுவனத்தை நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாற்றியது. இது வரியுடன் 11பில்லியன் லாபத்தை திறைச்சேரிக்கு செலுத்திய நிறுவனமாகும்.
எவ்வாறாயினும் நிதியைத் தேடி எரிவாயுவை கொள்வனவு செய்த போதும். சமையல் எரிவாயு பாவனையாளர்களுக்கு கிடைக்கவில்லை. அத்தியாவசிய சேவைகள் என அறிந்து கொள்ளப்பட்ட இடங்களுக்கும் மற்றும் கைத்தொழிற்சாலைகளுக்கும் பகிரப்பட்டதால் வீட்டு உபயோக பாவனையாளர்களுக்கு குறைந்தளவு எரிவாயுவே கிடைத்தது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50லட்சத்தையும் கடந்ததாகும்.
12.5கிலோ, 5கிலோ, 2.3கிலோ மற்றும் 37.5கிலோ என களஞ்சியப்படுத்தக்கூடிய ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான சிலிண்டர்களை லிற்றோ நிறுவனம் விநியோகிக்கின்றது. எரிவாயு பிரச்சினை காணப்பட்ட வேளையில் இந்த தொகையில் 40லட்சம் தொடக்கம் 45லட்சம் வரை காலியாகவே இருந்தது. 45லட்சம் தேவையாக இருந்த போதும் ஐந்து லட்சத்திற்கும் குறைவாகவே விநியோகிக்கப்பட்டது. அதனால் பிரச்சினை அதிகரித்ததோடு மக்கள் சிலிண்டர்களை வீதியை மறித்து வைத்து எரிவாயு பெற்றுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.
அதனால் பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஓமான் டிரேடிங் நிறுவனத்துடன் குறுகிய கால விநியோகத்தை பெற்றுக் கொள்வதற்காக நடவடிக்கையை முன்னெடுத்தார். அதுவே அவர் முதன் முதலில் எடுத்த முடிவாகும். முதல் 4மாத காலங்களுக்காக குறுகிய கால விநியோகத்தை பெற்றுக் கொடுத்து எரிவாயு பிரச்சினையை தீர்ப்பதற்கும் வழிவகுத்தார். அதே வேளை 12மாதங்களுக்கு நீண்டகால விநியோகஸ்தர் ஒருவரை கண்டுபிடிப்பதற்காக மீண்டும் டென்டர் கோரும்படி அமைச்சரவை லிற்ரோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
நீண்டகால கடன் பத்திரத்தை விநியோகிக்க முடியாததால் மாற்று முறையினூடாக எரிவாயுவை விலைக்கு வாங்க முயற்சி செய்யும்படி அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளது. அந்த ஆலோசனையின் பேரில் முன்னாள் தலைவர் நடவடிக்கை எடுத்திருந்தார். ஓமான் டிரேடிங் நிறுவனத்திடமிருந்து குறுகிய காலத்துக்கு எரிவாயுவை பெற்றுக் கொண்டாலும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறுப்பு அவர்களுக்கு இல்லாமல் போனது நீண்டகால ஒப்பந்தத்தில் அவர்கள் கைச்சாத்திடாமையாலாகும்
நிதிப் பிரச்சினை காரணமாக விநியோகஸ்தரின் நம்பிக்கை அற்றுப் போனதால் அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டே விநியோகத்தை மேற்கொண்டார்கள். கடனுக்கு எரிவாயுவை வழங்குவதை நிறுத்தினார்கள்.
விநியோகத்தர்கள் மீது குற்றம் சாட்டல்
ஓமான் டிரேடிங் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்களில் முன்னாள் தலைவர் தேசர ஜயசிங்க அந்த நிறுவனம் மோசடியான கொடுக்கல் வாங்கலுக்கு முயற்சி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். முன்னைய விநியோகஸ்தர் மோசடியான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டார் என்றால் அதனை சட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளாமல் ஊடகங்களின் ஊடாக குற்றச்சாட்டியதன் மூலம் எரிவாயு விநியோகஸ்தர்கள் லிற்ரோவுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட தயக்கம் காட்டினார்கள்.
எரிவாயு விநியோகம் பாதிப்படைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். முன்னாள் தலைவர் அச் சந்தர்ப்பத்தில் பணத்தைத் தேடி உடனடியாக எரிவாயுவை தருவித்திருந்தாலும் அது பிரச்சினைக்கு தீர்வாகவில்லை. விநியோகத்தர்கள் அரசமட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டார்களே தவிர நட்புறவுடன் பிரச்சினையை தீர்க்க தயாராக இருக்கவில்லை. அவர் குற்றச்சாட்டை சுமத்தியதால் வேறு விநியோகத்தர்கள் கூட கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகிக்க மறுப்பு தெரிவித்தார்கள்.
உலகில் உள்ள நாடுகள் தங்களுடைய விநியோகஸ்தர்களை தக்க வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பார்களே தவிர அவர்களே அதிலிருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதற்கு காரணம் எரிசக்தி பிரச்சினை உலகம் பூராவும் காணப்படுவதனாலாகும். ஆனால் முன்னாள் தலைவரின் நடவடிக்கையால் நல்ல விநியோகஸ்தர் ஒருவர் பகைத்துக் கொள்ளப்பட்டார். அதன் இறுதி பலனாக அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நேரிட்டது. உள்நோக்கத்துடன் நடவடிக்கையில் ஈடுபட்டதன் பலனை நிறுவனத் தலைவர் அல்ல பொதுமக்களே அனுபவிக்கின்றார்கள்.
உலக வங்கியின் ஒத்துழைப்பு
அப்போதைய பிரதமர் ரணில் விக்ரம சிங்க எரிவாயு பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பை சாகல ரத்னாயக்காவிடம் ஒப்படைத்தார். அவரின் முதலாவது நடவடிக்கை பதில் தலைவர் நீக்கப்பட்டு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். சாகல ரத்நாயக்க புதிய தலைவராக முதித்த பீரிஸை நியமிக்குமாறு பரிந்துரைத்தார். ஏனென்றால் அவர் 2019ஆம் ஆண்டு வரை லிற்றோே நிறுவனத்தின் முகாமைத்து பணிப்பாளர் மற்றும் தலைமை நிறைவேற்றுனர் போன்ற பதவிகளை வகித்தவராவார்.
ஜூன் 15ஆம் திகதி அவருக்கு தலைமை பதவி கிடைத்ததோடு அதன் பின்னர் ஓமான் டிரேடிங் நிறுவனத்துடன் மெட்ரோ நிறுவனம் மீண்டும் கலந்துரையாடல்களை ஆரம்பித்தது. பின்னர் அவர்களை இந்நாட்டு நிபந்தனைகளுக்கு இணங்கச் செய்து பணத்தை தேடும் முயற்சியில் இறங்கியதாக நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
அதன் பின்னர் 20நாட்களுக்குள் 33000தொன்னை கொண்டு வருவதற்கு தேவையான கலந்துரையாடல்கள் கியூ வரிசையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் நடத்தப்பட்டன. உலக வங்கியுடனான கலந்துரையாடல்கள் சாகல ரத்நாயக்கவின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரின் உதவியுடன் இறக்குமதியாளர்கள் சங்கமும் தலையிட்டு டொலரை பெற்றுக் கொடுக்கும் பங்களிப்பை செய்ததாக நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.
தான் வருவதற்கு முன்னரே உலக வங்கியுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் அது வெற்றிகரமாகக் காணப்படவில்லை என முதித்த பீரிஸ் கூறினார். காலையில் கலந்துரையாடி மாலையில் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
உலக வங்கி அதிகாரிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அது மிகவும் வெளிப்படையான தன்மையுடன் செயலாற்றும் நிறுவனமாகும். ஊழல் மோசடிகளுக்கு அந்நிறுவனத்தில் இடமில்லை. லிற்றோ நிறுவனம் சரியான முறையில் வேலை செய்துள்ளதா என அவர்கள் எல்லா பிரிவிலும் ஆராய்ந்திருந்தார்கள். உலக வங்கி இலங்கைக்காக வெவ்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கியிருந்த நிதியை வேறு நடவடிக்கைகளுக்காக பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்கள் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளன.
அதன் பிரகாரம் உலக வங்கியிடமிருந்து 70மில்லியன் டொலரை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் லிற்றோ நிறுவனத்துக்கு கிடைத்தது. முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதோடு அங்கு உலக வங்கி 70மில்லியன் டொலரை பெற்றுக் கொடுப்பதற்கும், லிற்றோ நிறுவனம் 20மில்லியன் டாலரை பெற்றுக் கொடுப்பதற்கும் இணங்கியதன் பின்னர் ஒரு லட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை அக்டோபர் மாத முடிவு வரை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இதுவரை 30,000தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு அதன் மூலம் எரிவாயு வரிசையை இல்லாமற்செய்யும் சந்தர்ப்பமும் கிட்டியுள்ளது.
உலக வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இன்னும் ஒரு நன்மையும் உண்டு.
அதாவது லிற்றோ நிறுவனம் திறைச்சேரிக்கு உலக வங்கியின் கடனை 5மாதங்களுக்குள் மாதந்தோறும் செலுத்தினாலும் திறைச்சேரி அதனை 15வருடத்திலேயே உலக வங்கிக்கு செலுத்த வேண்டும். அதன்படி 22மில்லியன் டொலர் மேலதிகமாக திறைச்சேரிக்கு சொந்தமாகும்.
லிற்றோ நிறுவனம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசணையின் பேரில் விலைச் சூத்திரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது. தொடர்ந்து 22நாட்கள் இவ்வாறு மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலமே எரிவாயுவுக்கான வரிசை முடிவுக்கு வந்தது.
ஜனாதிபதி செயலணி தலைவர் சாகல ரத்நாயக்க
துணிச்சலாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். எரிவாயு நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடனும் கலந்துரையாடினேன். அதிகாரிகளை அழைத்து என்ன தடைகள் காணப்படுகின்றன என அறிந்து அவற்றை நீக்கவே நான் முயற்சி செய்தேன். மத்திய வங்கி அதிகாரிகள்,லிற்றோ நிறுவன அதிகாரிகளுடன் இரவு பகல் பாராது கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே இன்று வெற்றியடைந்துள்ளன. அதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நாட்டில் எரிபொருளுக்கான கியூ வரிசை குறைய சில வாரங்கள் செல்லும். ஆனால் இன்று எரிவாயு போதுமான அளவு உள்ளது. உலகவங்கி அதிகாரிகள் எமக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். எமக்கு இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். எவ்வளவு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. நான் அதிகாரிகளுடன் தேவையான ஆலோசனைகள் வழங்கி ஒருங்கிணைத்தேன். மேற்கொண்டேன். இன்று அது வெற்றி அடைந்துள்ளது.
தமிழில்
வீ.ஆர்.வயலட்