இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது. அதன் சுதந்திர வரலாறு மட்டுமல்லாது காலனித்துவ வரலாறும் அதற்கு எதிரான சுதந்திர விடுதலை போராட்ட வரலாறும் தனித்துவமானது. மதச்சார்பின்மையும் ஜனநாயகமும் இந்திய தேசவிடுதலைக்கு பின்னரும் முதன்மைப்படுத்தப்படும் ஒரு கருத்தியலாக உள்ளது. நடைமுறையைவிட கருத்தியலாகவே இந்திய ஜனநாயமும்மதச்சார்பின்மையும் காணப்படுகிறது. காங்கிரஸின் ஆட்சிக்குள் மிக நீண்ட காலம் அகப்பட்டிருந்த இந்திய ஜனநாயகம் மீளவும் பாரதீய ஜனதாக் கட்சியிடம் நீண்ட காலத்திற்குள் அகப்படும் துயரத்தைகொண்டதாக உள்ளது. இவ்வாறு மாறிமாறிகட்சிகளின் நீண்ட ஆட்சிக்குள் அகப்படும்துயரம் இந்திய ஜனநாயகத்தின் போலித்தனமாகவே உள்ளது. ஆட்சி மாற்றமே ஜனநாயகம் எனக்கருதும் நிலையையே இந்திய ஜனநாயகம் கொண்டுள்ளது. அடிமைத்தனமும் சாதியமும் மத அடிப்படைவாதமும் மாற்றத்தைத் காணாது 75ஆண்டுகளைக் கடந்துள்ளது. உள்நாட்டு அரசியல் மட்டுமன்றி பிராந்திய அரசியலும் சர்வதேச அரசியலும் அவ்வாறே இந்திய தேசத்தின் இருப்பையும் பலத்தையும் குலைத்துள்ளது. இக்கட்டுரையும் இந்திய வெளியுறவு அமைச்சர் அண்மையில் இந்து சமுத்திரம் பற்றி வெளியிட்டகருத்துச் சார்ந்த தேடலாக உள்ளது.
முதலில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் கருத்தினை அவதானிப்பது பொருத்தமானது. அதாவது இலங்கையில் நடப்பவை இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த வளர்ச்சியாக அமைந்தாலும் இந்தியா மிகக் கவனமாக அவதானிக்க வேண்டிய நிலையிலுள்ளது. எனினும் இந்தியா சீனாவுடனான மற்றெரு மோதல் களமாக இந்து சமுத்திரம் மாறாது. இந்து சமுத்திரம் முக்கியத்துவம் பெறுவதால் பல நாடுகள் தங்கள் செல்வாக்கை விஸ்தரிப்பதற்காக இந்து சமுத்திரப் பகுதியில் தங்கள் செயல்பாடுகளை தீவிரப்படுத்துகின்றன. இந்தியா தனது தேசியநலனை பாதுகாக்க வேண்டும். ஆனால் இந்து சமுத்திரத்திற்கான உரிமை தனக்கு மட்டும் தான் என இந்தியா தெரிவிக்க முடியாது என வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தது அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்து சமுத்திரம் இந்தியாவுக்குரியது என்பதும் இந்து சமுத்திரத்தின் அலைகளிலேயே இந்தியாவின் இறைமையும் இருப்பும் தங்கியுள்ளது என்பதும் வரலாற்று ஆசிரியரும் ஆரம்பகால இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளருமான பணிக்கரின் கருத்தாக அமைந்திருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவினது பிராந்தியக் கொள்கையை மையப்படுத்திய பணிக்கர், இந்துசமுத்திரத்தின் அரணே இந்தியாவின் இருப்பு எனக் கருதினார். அதனை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு மற்றும் முதல் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன் வரை அனைவரும் அங்கீகரித்தனர். பணிக்கரின் அத்தகைய வெளியுறவுக் கொள்கைக்கு வலுக்கொடுத்தவராக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காணப்பட்டார். அவரது தீவிர அணுகுமுறை இந்தியாவை பிராந்திய வல்லரசு நிலைக்கு உயர்த்தியது. அவரது படுகொலை படிப்படியாக இந்தியா பலவீனமடையவும் இந்து சமுத்திரத்தை இழக்கவும் வழிவகுத்தது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையான அணிசேராமை, ஆசியமயவாதம், (ஆசியஜோதி) பெரிய சகோதரர் (Big Brother) மற்றும் சகார் (Sagar)போன்றவை பாரிய வெற்றிவாய்ப்பை இந்தியாவுக்கு கொடுக்கத் தவறின. அது மட்டுமன்றி இந்தியாவின் இந்துசமுத்திரம் பொறுத்த பாதுகாப்புக் கொள்கையும் பிராந்திய நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையும் சீனாவின் நகர்வினால் செயலிழக்கத் தொடங்கியது.
குறிப்பாக சீனாவின் முத்துமாலைத் தொடர் தென்னாசியப் பிராந்தியத்திலுள்ள துறைமுகங்களை இலக்கு வைத்ததுடன் பட்டி மற்றும் பாதை முன்முயற்சி இந்தோ -பசுபிக் சமுத்திரத்தை இலக்கு வைத்துள்ளதைக் காணமுடிகிறது. இந்து சமுத்திரத்தின் ஏடன் துறைமுகம் முதல் மலாக்கா நீரிணை வரையான கடல் பாதையும் முக்கிய துறைமுகங்களும் சீனாவின் செல்வாக்குப் பிரதேசமாக விளங்குகிறது. சீனாவின் சக்தி வளத்தேவையை நிறைவு செய்யும் விதத்தில் மேற்காசியா முதல் தென் கிழக்காசியா வரையான கடல்பாதையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன் மூலம் வர்த்தக ரீதியில் ஏற்றுமதியையும் இறக்குமதியையும் சீனா இந்து சமுத்திரத்திரத்தினூடாக இந்து சமுத்திர நாடுகளுடன் மேற்கொண்டுவருகிறது. அதே நேரம் சீனா பசுபிக் சமுத்திரத்தையும் அதன் விளிம்பு நாடுகளையும் பொருளாதார கட்டமைப்புகளுக்குள்ளால் இணைத்துள்ளது. சீனா உலகத்தை ஈர்ப்பதில் காட்டும் கரிசனைக்கு சமமாக இந்து சமுத்திரத்தின் மீதும் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு போட்டியாக பலமடங்கு வளர்ச்சியடைந்துள்ள சீனா பொருளாதார ரீதியில் பலமடைந்துள்ள நிலையில் இராணுவ பலத்தை கொண்டிருப்பதுடன் அதனை பிரயோக நிலைக்குள் நகர்த்த ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமே யவாங் வாங்க் கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகையாகும். இதன் இரட்டை வலு அதிகமான போருக்கான அல்லது இராணுவத்திற்கான வழித்தட கப்பலாகவே காணப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை காவிச் செல்வதுடன் தாக்குதல் திறனையும் கொண்டுள்ளது. அத்துடன் விண்வெளியில் நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்களை கண்காணிப்பதுடன் சீனா தனது செயற்கைக்கோள்களை வழிகாட்டும் திறனுடையதாகவும் உள்ளது. நீண்ட பார்வை அல்லது தூர நம்பிக்கை என சீன மொழியில் அழைக்கப்படும் யுவான் வாங் கப்பலானது கடல்சார் வான்பரப்பை கண்காணித்தலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய திறனில் நான்கு கப்பல்களை சீனா கொண்டிருந்தாலும் அமெரிக்கா இது போன்ற 25கப்பல்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவிடம் யுவான் வாங் போல் இல்லாது விட்டாலும் ஐ.என்.எஸ். துருவ் கப்பலானது செயற்கைக் கோள்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்ட திறனுடையதாக விளங்ககிறது. இது ஒன்று மட்டுமே இந்தியாவிடம் உண்டு. அதனையும் 2021இலிருந்தே பயன்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டுள்ள இக்கப்பலானது இந்திய கடற்படைச் சேவைக்காக இயங்குகிறது. இது இந்தியாவை கண்காணிக்கும் உளவுச் செயற்கைக் கோள்களை கண்காணிக்கவும் ஏவுகணைச் சோதனைகளை கண்காணிக்கவும் திறனுடையதாக விளங்குகிறது. அணுவாயுத ஏவுகணைகளையும் நீண்ட தூரத்தில் கண்காணிக்கும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் நீர் மூழ்கிகளையும் கண்காணிக்கும் திறன் துருவ் கப்பலுக்குரியதாகும் என பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஆனாலும் யுவான் வாங்க்குக்கு நிகரானதோ திறனுடையதாகவோ துருவ் இல்லை என்பதே இராணுவ வல்லுனர்களது கணிப்பீடாகும்.
எனவே இந்தியா இந்து சமுத்திரத்தில் சீனாவுடன் மோதும் வலுவற்ற நிலையிலே உள்ளது. அது மட்டுமன்றி இந்து சமுத்திரத்தை உரிமம் கொண்டாடும் வலுவையும் இழந்துள்ளது. சீனாவின் வலுவுக்கு நிகரான வளச்சியை எட்ட முடியாத நிலையிலேயே கடந்த காலங்கள் போன்று இந்து சமுத்திரத்தை பிற வல்லரசுகளிடம் பங்கு போடும் நிலையை எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் சோவியத் யூனியனுடனும் அமெரிக்காவுடனும் இந்து சமுத்திரத்தை பங்கிட்டுக் கொண்ட இந்தியா தற்போது அமெரிக்கா சீனாவுடன் பங்கிட்டுக் கொள்ள தயாராகிவிட்டது. இந்து சமுத்திரத்துக்கு இந்தியா மட்டும் உரிமம் கொள்ள முடியாது என்பதை இந்திய வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே இந்திய வெளியுறவு அமைச்சரது கருத்து அதிக முக்கியத்துவம் உடையது. சீனாவை இந்தியா எதிர்கொள்வதில் அதிக சவால்களை சந்தித்து வருகிறது. சீனா இந்து சமுத்திரத்தில் மேலாதிக்க வலுவுடைய நாடாக மாறியுள்ளது. அதனை இந்திய ஏற்றுக் கொண்டும் உள்ளது என்பதே இந்திய வெளியுறவு அமைச்சரது உரையாடலின் சாரமாகும். இந்து சமுத்திரம் இந்தியாவுக்கு மட்டுமுரியதென்ற அரசியல் உரையாடலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் முற்றுப் புள்ளி வைத்துள்ளார். அதற்கான காரணம் இந்தியாவின் பலவீனமா அல்லது சீனாவின் பலமா என்பதே பிரதான கேள்வியாகும். ஒப்பீட்டடிப்படையில் சீனாவின் பலமாகவே தெரிகிறது. இது சீனாவை, இந்தியா-, ரஷ்யா அணியை கையாளும் சக்தியாக மாற்ற வாய்ப்புள்ளது.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்