![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/09/25/a21.jpg?itok=leqgTJ-n)
செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்களை சூழ்நிலைக் கைதியாக்கும் அரசியல் காய்நகர்த்தல்கள், காலச்சுழற்சியில் ஒவ்வொருவரையும் சிக்க வைப்பதுண்டு. ஆசிய நாடுகளில், பாகிஸ்தானில்தான் இந்தச்சிக்கல்கள் அதிகம். இதுபோன்ற சிக்கலுக்குள் மாட்டிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் அதிலிருந்து மீண்டுள்ளார். இந்த மீட்சி அவரை மீண்டும் அரியணை ஏற்றலாம்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது அரச தரப்பு சுமத்திய குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எந்தவொரு பயங்கரவாத நோக்குகளிலும் இம்ரான்கானின் உரை உள்ளடங்கவில்லை என கடந்த திங்கட்கிழமை (19) நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ஓகஸ்ட் 20இல் நடந்த கூட்டத்தில் பொலிஸார், அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்துறை சார்ந்தோரை கடுமையாக விமர்சித்து உரையாற்றினார்.
அவர், பதவி கவிழ்க்கப்படுவதற்கு மறைமுக உதவியாகச் செயற்பட்ட அதிகாரிகளை குறிவைத்தே அந்த உரையிருந்தது. இந்த உரை, வன்முறையைத் தூண்டி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அரசாங்க தரப்பு குற்றம் சுமத்தி இம்ரானுக்கு எதிராக வழக்குத்தொடுத்தது.
நாடு முழுவதும் தனக்கு ஆதரவுகள் அதிகரித்து வரும் நிலையில், நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடாத்தி வரும் இம்ரான்கான் பொதுத்தேர்தலை நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார். இவரது முயற்சிகளை தடுக்கும் நோக்குடனே, பிரதமர் ஷெபாப் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாக இம்ரான்கான் கூறுகிறார். இந்நிலையில்,
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு இம்ரானின் அரசியல் செயற்பாடுகளுக்கு உற்சாகமளிக்குமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இந்து சமுத்திர அரசியலில் சீனா, இந்தியாவுக்கு அடுத்து பாகிஸ்தானின் வகிபாகமும் தவிர்க்க முடியாதது. பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக மேற்சொன்ன நாடுகளுடன் மோதுவதிலும் பார்க்க, மறைமுக நெருக்குதல் யுக்திகளை கையாண்டுதான் பாகிஸ்தான் முன்னேற முயல்கிறது. இதுதான், பலரது பார்வையும். வெ ளி நாடுகளின் இந்தப்பார்வை களுக்கு பலமூட்டும் வகையில்தான், இம்ரானுக்கு எதிரான வழக்கும் சோடிக்கப்பட்டிருந்தது.
அல்கைதா, தலிபான் மற்றும் லக்ஷர் இதொய்பா போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு தூபமிடும் கருத்துக்களை வெளியிட்டார் என்பதுதான் குற்றம். எனினும் வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாத அரசாங்கமே பாகிஸ்தானில் அமைய வேண்டும் என்ற பொருள்தான் இம்ரானின் உரையிருந்தது. எவ்வாறாயினும் அந்நிய சக்திகளுக்கு அடிபணியும் அரசை இப்பிராந்தியத்திலுள்ள தலிபான்கள், அல்கைதா உள்ளிட்ட எந்த அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ளாது.
அவ்வாறு அமைந்தாலும், அந்த அரசாங்கத்தை அச்சுறுத்தும் வகையிலான வன்முறைகளில் இந்த அமைப்புக்கள் ஈடுபடும். இதனால்தான், இந்த அமைப்புக்கள் அடிப்படைவாத இயக்கங்களாக முத்திரை குத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு நிகழ்வது பாகிஸ்தானில் உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்துமென பாகிஸ்தான் மக்கள் அஞ்சுவதுண்டு. எனவே, பாகிஸ்தானியரை உளரீதியாக அச்சுறுத்தி ஆதரவு தேடும் அரசியல் யுக்தியை இம்ரான்கான் கையாண் டிருக்கலாம். அதற்காக, இது பயங்கரவாதத்தை தூண்டியதாக பொருள்கொள்ள முடியாது. நீதிமன்றமும் இவ்வாறுதான் கருதியிருக்கும்.
இருப்பினும், தேவையேற்படும்போது இந்த அமைப்புக்களை பாகிஸ்தான் பயன்படுத்துவதாகவே
மேற்குலகம் கருதுகிறது. அயல்நாடுகளின் நிலைப்பாடுகளும் இதுதான்.
இவற்றை நிரூபிக்கும் வகையில் சில செயற்பாடுகள் அங்கு நடந்துமிருக்கின்றன.
இதனால், சர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்படும் ஆபத்துக்களை பல தடவைகள் எதிர்கொண்டது பாகிஸ்தான். முன்னாள் ஜனாதிபதி முஷர்ஃப்தான் இந்த ஆபத்திலிருந்து பாகிஸ்தானை காப்பாற்றிய முக்கிய அரசியல்வாதி. அல்கைதா தலைவர் ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்டதும் பாகிஸ்தானில்தானே! பத்து வருடங்கள் அங்குள்ள அப்போட்டாபாத் என்ற ஊரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் ஒஸாமா. இக்காலத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்தவர் முஷர்ரஃப். ஆனாலும் அப்போதைய பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பக்கயா னி அல்கைதா தலைவருடன் இரகசிய உறவில் இருந்ததாக பேசப்பட்டதும் உண்டு. இருந்தாலும், இவரையும் மீறித்தான் அமெரிக்க யுத்த விமானங்கள் பின்லேடனை குறிவைத்தன. இதற்கு முஷர்ரஃப் மறைமுக உதவியாகச் செயற்பட்டிருந்தார். தனது இராணுவத் தளபதியை நேரடியாகப் பகைப்பதிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்த முஷர்ரஃப் இதைக் கச்சிதமாக செய்துள்ளார். இராணுவ தளபதிகளை பகைப்பதிலுள்ள ஆபத்துக்களை பல தடவைகள் நிரூபித்துள்ள நாடும் பாகிஸ்தான்தான். பல பிரதமர்கள் பதவியிறக்கப்பட்டதும் இராணுவ தளபதிகளால்தான்.இம்ரானின் பதவி கவிழ்ப்பிலும் ஏதாவதொரு இராணுவ தலையீடு இருந்திருக்கலாம். இதைச்சாடியே இம்ரான் உரையாற்றினார். இந்த உரைகளுக்கு வரவேற்பு இருந்ததால்தான், பஞ்சாப் மாநில தேர்தலில் இம்ரானின் கட்சி அதிக ஆசனங்களை கைப்பற்ற முடிந்தது. இந்த வெற்றிக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் நீதிமன்றத் தீர்ப்பு உள்ளமை கவனிக்கத்தக்கது. இம்ரானின் இம்மீட்சி அரியணை ஏற்றுமா?
ஏ,ஜீ,எம்,தௌபீக்