கஜிமாவத்தையை தீயிட்டது யார்? | தினகரன் வாரமஞ்சரி

கஜிமாவத்தையை தீயிட்டது யார்?

அனேகமானோரின் பெயர்களுக்கு முன்னால் ஊரின் பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கம் எமது சமூகத்தில் காணக் கூடிய ஒன்றாகும். விஷேடமாக தேரர்களின் பெயருக்கு முன்னால் பிறந்த ஊரைக் காணக்கூடியதாக இருக்கும். மடிகே பஞ்சாசிக, மாதுலுவாவே சோபித மற்றும் வல்பொல ராஹூல போன்றன அவ்வாறான பெயர்கள்தான். வல்பொல ராஹூல தேரர் பிரேமதாச பிரதமராக இருந்த காலத்தில் ஊர் ஒன்றுக்கு சூட்டப்பட்ட பெயருக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார். அந்த ஊரின் பெயர் “ஸ்டேடியம் கம” வாகும். அந்த கிராமம் சுகததாச விளையாட்டு மைதானத்தை விரிவாக்கும் போது அப்புறப்படுத்தப்பட்ட குடிசைவாசிகளுக்காக அமைக்கப்பட்டது.  

“பிரதமரே, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துறவறம் பூண்டு தேரரானால் “ஸ்டேடியம் கமவுக்கு ராஹுல கம” என்றல்லவா பெயர் சூட்ட வேண்டும். இப்படி ஒரு பெயரைச் சூட்ட முடியுமா?” என ராஹல தேரர் ஒருநாள் பிரதமர் ஆர். பிரேமதாச கலந்து கொண்டிருந்த கூட்டம் ஒன்றில் மண்டபத்திலிருந்தோரை நோக்கிக் கேட்டார்.  

கஜிமாவத்தையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் தொடர்பில் தகவல் சேகரிக்கச் சென்றபோது எமக்கு அத்தோட்டத்திற்கு கஜிமாவத்தை என்ற பெயர் எப்படி வந்தது என்பதை அறிந்து கொள்வதே முதல் நோக்கமாகவிருந்தது. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் அதனை அறிந்திருக்கவில்லை. எனினும் கடைசியில் முதியவர் ஒருவர் அத்தோட்டத்திற்கு கஜிமாவத்தை என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதை விபரித்தார்.  

“கஜிமா என்பது ஜப்பான் பெயராகும். களனி பாலத்தின் வேலைகளை மேற்கொள்வதற்காக ஜப்பானைச் சேர்ந்த கம்பனி ஒன்று இங்கு வந்ததது. இந்த தோட்டத்தில்தான் இரும்பு, கருங்கல் போன்றன களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. இங்கு ஜப்பானியர்கள் தங்குவதற்காக சீமெந்தினால் சில வீடுகள் அமைக்கப்பட்டன. அந்த வேலைகளைச் செய்த பெக்கோ - ஸ்கவேட்டர் - டிப்பர் போன்ற வாகனங்களில் அந்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் பெயர் கஜிமா. கஜிமா லொறிகள் நிறுத்தப்பட்ட இடம் கடைசியில் கஜிமாவத்தையாகிப் போனது.  

கஜிமாவத்தையில் தீ அனர்த்தம் ஏற்பட்ட போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருந்தது கஜிமா நிறுவனம் அமைந்துள்ள ஜப்பானில். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானில் இருந்து கொண்டு கஜிமாவத்தையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு விஷேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 

அதனடிப்படையில் கொழும்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவின் கஜிமாவத்தை வீட்டுத் தொகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் மற்றும் அவர்களுக்கான அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் விஷேட மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் கடந்த புதன்கிழமை காலை கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.  

இதன் போது, இந்த தீ அனர்த்தத்தினால் 71வீடுகளைச் சேர்ந்த 306பேர் இடம்பெயர்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. இடம்பெயர்ந்த 306பேர்களுள் 200பேர் வயது வந்தவர்கள் என்பதோடு, மீதி 106பேரும் சிறுவர்களாகும். தற்போது இடம்பெயர்ந்தவர்கள் மோதரை உயன சனசமூக நிலையத்திலும், களனிநதி விகாரையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கொழும்பு மாநகர சபை, மாதம்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸார், முப்படைகளின் பங்குபற்றல் மற்றும் ஒத்துழைப்புடன் இடம்பெயர்ந்தவர்களுக்காக உணவு பானங்கள் உள்ளிட்ட வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவது இந்தக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.   

கஜிமாவத்தைக்கு நாம் சென்ற போது அங்கு முற்றாக தீக்கிரையான குடியேற்றத்தையே கண்டோம். இந்த அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் முதலில் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது அப்பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் பிரதீப் பெரேராவுக்கு.

“உடனடியாக வீடுகளின் மின்சார விளக்குகளை அணைக்குமாறு கிராம அதிகாரி கூறினார். உடனடியாகவே வீடுகளிலிருந்த சிறுவர்களை வெளியேற்ற உதவியது அவர்தான்” 

2007ம் ஆண்டு முதல் தொட்டலங்க கஜிமாவத்தையில் இடைநிலை முகாம் ஒன்று நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதோடு, 2014ம் ஆண்டு இறுதியாகும் போது அங்கு வசித்த அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டு முடிக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர இந்தக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டினார். எனினும் 2015ம் ஆண்டிலிருந்து அவ்வப்போது சட்டவிரோத குடியிருப்பாளர்களால் இந்தக் காணிகள் கைப்பற்றப்பட்டதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை இங்கு சுட்டிக் காட்டியது. கடந்த இரண்டு வருடங்களுக்குள் இங்கு மூன்று சந்தர்ப்பங்களில் தீ அனர்த்தம் ஏற்பட்டதாகவும், இச்சம்பவங்கள் தொடர்பில் முறையானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.  

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வுபெற்ற மேஜர் பிரதீப் உந்துடே மற்றும் கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன ஆகியோரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, கொழும்பு பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர், அரச இரசாயன பகுப்பாய்வாளர், பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர், அப்பிரதேச பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் மாதம்பிட்டி பிரிவின் கிராம உத்தியோகத்தர் ஆகியோரை உள்ளடக்கியவாறு இந்தக் குழுவினால் ஏழு கிழமை நாட்களுக்குள் குறித்த சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள், அங்கு வசிப்போருக்கான முன்மொழியப்பட்ட நிவாரணங்கள் தொடர்பில் துரித அறிக்கையினை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  

இடம்பெயர்ந்துள்ள அனைத்து பாடசாலை மாணவர்களை வரும் திங்கட்கிழமை தொடக்கம் வழமை போன்று பாடசாலைக்கு அனுப்புவதற்குத் தேவையான புத்தகங்கள், பயிற்சிக் கொப்பிகள், பாடசாலைச் சீருடை மற்றும் காலணிகளை பெற்றுக் கொடுப்பதற்கும், கர்ப்பிணித் தாய்மார்கள், தாய்மார்கள் மற்றும் பெண்களின் அனைத்து சுகாதார வசதிகளையும் பூரத்தி செய்து கொடுப்பதற்கும், சமைத்த உணவுகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கும் தற்காலிக தங்குமிடங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.  

இந்த தீ அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத்தை அவதானித்த போது அங்கு சீமெந்தினால் நிர்மாணிக்கப்பட்ட எந்த வீடும் அங்கிருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. அவ்வீடுகள் அனைத்துமே பலகைகளால் அமைக்கப்பட்ட வீடுகளாகும்.  தகரம் அல்லது தகரங்களினால் மறைக்கப்பட்ட சில வீடுகளையும் அங்கு காண முடிந்தது. அனேகமான வீடுகளின் கூரை தகரங்களால் அமைக்கப்பட்டிருந்தது. தீயினால் ஏற்பட்ட சேதங்களுள் தொலைக்காட்சிகள், பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள், துணி துவைக்கும் இயந்திரங்கள் என்பவற்றோடு பாதி எரிந்த திருமண புகைப்படங்களும் அடங்கியிருந்தன.  

“இங்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு வந்தவர்களுள் சில மோசடிக்காரர்கள் முதலில் தூக்கியது எரிந்த வீடுகளிலிருந்த கேஷ் சிலிண்டர்களைத்தான். சிலர் அலுமாரிகளினுள் இருந்த பணத்தை அலுமாரிகளை உடைத்து எடுத்திருந்தார்கள். உயிர்ப் பயத்தினால் வீட்டிலிருந்தவர்கள் சிறுவர்களைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடியிருந்தனர்” 

இத் தீ அனர்த்தம் தொடர்பில் கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்னவிடம் வினவினோம். 

மோதரை கஜிமாவத்தை வீட்டுத் தொகுதியில் இடம்பெற்ற தீ அனர்த்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது அங்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இடைத்தங்கல்  முகாம் ஒன்று அமைக்கப்படுகின்றது. இந்த தோட்டத்தில் தற்போது 220வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 1000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றார்கள். இங்கு வசிக்கும் பெரும்பாலோனோர் சட்டவிரோத குடியிருப்பாளர்கள்.  

நாம் கஜிமாவத்தையை சென்றடைந்த போது அங்கு கைவிடப்பட்டிருந்த பாரிய மண்டபம் ஒன்றை துப்புறவு செய்து அங்கு மக்களைத் தற்காலிகமாகத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்தோட்டத்தில் வசிப்பவர்கள் அங்குள்ள வீடுகளின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடான தொகைகளைக் கூறியதால் நாம் கஜிமாவத்தை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் பிரதீப் பெரேராவிடம் வினவினோம். 

கடந்த ஒன்றரை வருடத்தினுள் இந்த வீட்டுத் தொகுதியானது தீ அனர்த்ததிற்கு உள்ளாகியிருப்பது இத்தோடு மூன்றாவது தடவையாகும். 2001ம் ஆண்டில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் 27வீடுகள் சேதங்களுக்குள்ளாகின. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் சட்டவிரோத குடியிருப்பாளர்களாகும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் இங்கு இடைத்தங்கல் முகாம் ஒன்று நடாத்திச் செல்லப்படுகின்றது. இங்கு வசிக்கும் சிலர் அரசாங்கத்தின் மூலம் இரண்டு மூன்று வீடுகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நிரந்தமான வீடுகளைப் பெற்றுக் கொண்டிருந்தாலும் அவர்கள் இத்தோட்டத்திலேயே வசிக்கின்றார்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கு 160வீடுகளே இருந்தது. நகர அபிவிருத்தி அதிகார சபை தலையிட்டு அவற்றில் 60வீடுகள் அப்புறப்பட்டன. எனினும் கடந்த கொரோனா காலப்பகுதியில் இத்தோட்டத்தில் சட்டவிரோத நிர்மாணங்கள் அதிகரித்தன.  

இந்த கஜிமாவத்தையில் தமக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளைத் தமக்கு வழங்காமல் காலம் கடத்துவதாக அதிகமானோர் நகர அபிவிருத்தி அதிகார சபை மீது குற்றம் சுமத்துகின்றனர். 

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீரவிடம் நாம் இவ்விடயம் தொடர்பில் வினவினோம். 

2007, 2008ம் ஆண்டுகளில் தெமடகொடை வீடமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய காலப்பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தற்காலிகமாக கஜிமாவத்தை தோட்டத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். அன்று தொடக்கம் இன்று வரையிலும் இந்த நிலத்தை இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்துகின்றோம். இங்கு வசிக்கும் அனைவருக்கும் 2014ம் ஆண்டில் வீடுகளை வழங்கி இந்த தோட்டத்தை முற்றாகவே விடுவித்தோம். தற்போது தற்காலிக முகாம் தேவையில்லை. தேவையான சந்தர்ப்பங்களில் மக்களை தங்க வைப்பதற்காக போதியளவுக்கு இங்கு வீடுகள் உள்ளன. முன்னர் வீடுகளை வழங்கியவர்களின் பெயர்ப்பட்டியலும் உள்ளது.  

நகர அபிவிருத்திய அதிகார சபையினால் 20குடும்பங்ளே இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளன. ஏனைய 200குடும்பங்களும் சட்டவிரோத குடியிருப்பாளர்களாகும். 2015ம் ஆண்டின் பின்னர் இத்தோட்டத்தில் சட்டவிரோத குடும்பங்கள் குடியேறின. நகர சபையினால் இந்த அனைத்து வீடுகளுக்கும் இலக்கங்கள் வழங்கப்பட்டு மின்சாரம் நீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். என்றாலும் இவ்வாறு வீடுகளை வழங்குவதானால் 2இலட்சம் வீடுகளாவது வழங்க வேண்டும். கொழும்பில் இவ்வாறான தோட்ட வீடுகள் உள்ளன. எனினும் அடிக்கடி தீ அனர்த்தம் ஏற்படுவது கஜிமாவத்தையில் மாத்திரமேயாகும்.

வஜிர லியனகே
தமிழில்: எம்.எஸ். முஸப்பிர் 
(புத்தளம் விசேட நிருபர்)

Comments