துருக்கியும் சிரிய யுத்தமும் | தினகரன் வாரமஞ்சரி

துருக்கியும் சிரிய யுத்தமும்

எஸ். பிர்தெளஸ்

சிரியாவில் எதையென்று பார்ப்பது ஒரு பக்கம் யுத்த நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் வகிக்க வேண்டும். சமாதான பேச்சுவார்த்தையை பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களை ஊட்டிவளர்க்க வேண்டி இருக்கிறது. போதாக்குறைக்கு இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்), குர்திஷ்கள் தலைதூக்காமல் இருக்க குட்டி வைக்க வேண்டும். உள்நாட்டில் வேறு அடிக்கடி பயங்கர தாக்குதல்கள். துருக்கி அலுத்துக்கொள்ளாத குறை.
சிரியாவில் துருக்கி ஓரங்க நாடகமே நடித்து வருகிறது. நண்பன், எதிரி, வில்லன் என்று எத்தனையோ வேசம் போட்டு நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். 822 கிலோமீற்றர் எல்லை கொண்ட நெருக்கமான அண்டை நாடு என்பதால் துருக்கிக்கு வேறு வழி தெரியவில்லை.
பிரச்சினை என்னவென்றால் துருக்கியின் அரசியல் கணக்கு சிரியாவில் பலிக்கவில்லை என்பதாகும். 2011இல் சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கியபோது, அஸாதே வெளியே போ என்று வீர வசனம் பேசிய நாடு தான் இந்த துருக்கி.
அன்றை பிராந்திய அரசியல் சூழலில் எகிப்து, தூனிஷியா, லிபியா என்று எங்கும் இஸ்லாமியவாதிகள் எழுச்சி பெற்றிருந்தார்கள். எனவே சிரியாவிலும் தமக்கு நெருக்கமான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தலைதூக்கும் என்று அது உறுதியாக நம்பி இருந்தது.
எனவே சிரிய இராணுவத்தில் இருந்து வெளியேறிவர்களை நாட்டுக்கு அழைத்து அரசுக்கு எதிராக தனியே சுயாதீன சிரிய இராணுவம் ஒன்றை உருவாக்க துருக்கி போதுமான உதவிகளை செய்தது. கிளர்ச்சியாளர்களுக்கான ஆயுதம் விநியோகிப்பது முதல் நுளம்புச் சுருள் அனுப்புவது வரை அனைத்துமே துருக்கியின் தயவு.
எனவே ஐ.எஸ் என்ற புதிய குழு உருவாகி சிரியாவில் மல்லுக்கு நின்றபோது துருக்கி பெரிதாக ஏறெடுத்து பார்க்கவில்லை. ஐ.எஸ் அஸாத்துக்கு எதிராக சண்டை போடுகிறது, அத்தோடு தனது எதிரியான குர்திஷ் போராளிகளையும் விட்டு வைப்பதில்லை என்பதால் துருக்கியும் ஐ.எஸ்ஸை ஊட்டி வளர்க்காவிட்டாலும் உபத்திரவும் செய்யவில்லை.
ஆனால் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்றால் பொறுத்துப் பார்க்கலாம். சிரிய உள்நாட்டு யுத்தம் மூன்று, நான்கு ஆண்டுகள் என்று நீண்டதால் துருக்கிக்கே மூச்சுமுட்ட ஆரம்பித்தது. ஏனென்றால் மில்லியன் கணக்கான சிரிய அகதிகள் துருக்கியில் தான் வந்து குவிந்தார்கள். சிரியாவின் அரசியல் சூழல் தலைகீழாக மாறியதால் துருக்கிக்கு புதிய அரசியல் வேசம் போட வேண்டிய நிலைமை.
குறிப்பாக அஸாத் அரசுக்கு ஆதரவாக ரஷ்யா நேரடியாக தலையிட்டு வான் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது மிகப்பெரிய திருப்பம். மறுபக்கம் அமெரிக்கா மற்றும் மேற்குல நாடுகள் அரச எதிர்ப்பு கிளர்ச்சிகளுக்கு உதவி செய்வதை குறைத்துக் கொண்டு ஐ.எஸ் மீது கவனம் செலுத்தியது கதையை இன்னும் குழப்பியது.
அதாவது அஸாத் அரசு யுத்தத்தில் வெற்றிமேல் வெற்றி பெற, துருக்கிக்கு தனது இராஜதந்திர அரசியலில் பச்சோந்தியாக மாறவேண்டியதாயிற்று.
அஸாத் அரசை எப்படியாவது துரத்த வேண்டும் என்றிருந்த துருக்கி இன்று சிரிய யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த ரஷ்யாவுடன் இணைந்து மத்தியஸ்தம் வகிக்கிறது. அத்தோடு அரசியல் தீர்வொன்றை பெற அமைதி பேச்சுவார்த்தை ஒன்றுக்கும் தயாராகும் நிலைமைக்கு இறங்கிவந்துவிட்டது.
என்ன சொன்னாலும் சிரியாவில் துருக்கிக்கு இருக்கும் முதலாவது பயம் அங்கு சுதந்திர குர்திஷ் தேசம் ஒன்று உருவாவது. சிரிய குர்திஷ் போராளிகளும் அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்யாமலில்லை. குர்திஷ்கள் தீவிர தேசியவாதிகள், மத அடிப்படையில் ஒத்துப்போக மாட்டார்கள். எனவே சிரியாவில் குர்திஷ்கள் தலைதூக்கினால் உள்நாட்டிலும் பிரிவினைவாத குர்திஷ்களின் கை ஓங்கிவிடும். எனவே தான், ஐ.எஸ்ஸை விடவும் குர்திஷ்கள் மீது துருக்கி அதிகம் பயப்பட்டது.
ஆனால் ஐ.எஸ் தன்னிஷ்டத்திற்கு துருக்கியில் குண்டுகளை போட ஆரம்பித்தபோதே நிலைமை கையை மீறி போய்விட்டது தெரிந்தது. கடந்த ஆண்டு ஸ்தான்பூல் விமான நிலையத்தில் நடத்திய தாக்குதல் பயங்கரமானது. 48 பேர் பலியானார்கள். நாட்டின் சுற்றுலாத்துறையும் படுத்துவிட்டது.
இந்த வரிசையிலேயே கடந்த ஜனவரி முதலாம் திகதி இஸ்தான்பூல் இரவு விடுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்தி தாக்குதலில் 39 பேர் பலியானார்கள். இங்கே முக்கிய அம்சம் என்னவென்றால் ஐ.எஸ் குழு தானாக முன்வந்து நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என்று அறிவித்தது நான்.
இத்தனை காலமும் துருக்கியில் ஐ.எஸ் எத்தனையோ தாக்குதலை நடத்தியுள்ளது. ஆனால் ஒன்றுக்கும் வெளிப்படையாக பொறுப்பேற்கவில்லை. அதாவது துருக்கியுடன் ஏதோ ஒரு வகையில் உறவை தக்கவைத்துக்கொள்ள ஐ.எஸ் எதிர்பார்த்திருக்கலாம். அதனாலேயே அது கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திவிட்டு கமுக்கமாக இருந்துவிட்டது.
ஆனால் இன்று தாக்குதலுக்கு பொறுப்பேற்றதன் மூலம் துருக்கியுடன் ஐ.எஸ் நேரடியாக மோத தயாராகிவிட்டதாகவே எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.
பொறுத்துப் பொறுத்து பார்த்த துருக்கி கடந்த 2016 ஓகஸ்டில் சிரியாவுக்கு தனது படைகளை அனுப்பி ஐ.எஸ் மற்றும் குர்திஷ்களுக்கு எதிராக பிரத்தியேகமாக யுத்தம் ஒன்றை ஆரம்பித்தது.
ஒட்டு மொத்தத்தில் சிரிய பிரச்சினை துருக்கிக்கு இராஜதந்திர எதிர்பார்ப்புகளைத் தாண்டி பெரும் தலையிடியாக மாறிவிட்டது. இன்றைய தேதியில் சிரியாவில் தனக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் ஏற்படாமல் இருந்தால் போதும் என்ற நிலைமைக்கு துருக்கி இறங்கிவந்துவிட்டது. 

Comments