![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/01/15/v50.jpg?itok=kxfBM6jy)
உலகில் எத்தனையோ பிரச்சினை இருக்கும்போது சைப்ரஸ் என்ற குட்டித் தீவை யாரும் கவனிப்பதில்லை. ஆனால் உலக வரைபடத்தில் கண்ணுக்குத் தெரியாத அந்த தீவில் உலக அரசியலே இருக்கிறது. ஏதோ கெட்ட காலம், பூகோளத்தில் அது இருக்கும் இடம் அப்படி.
பிரிந்திருக்கும் சைப்ரஸை எப்படியாவது ஒற்றுமைப் படுத்த வேண்டும் என்று பிரிட்டன், துருக்கி, கிரேக்கம் ஜெனீவாவில் கூடி பொறுப்போடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கடந்த ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பமான அமைதிப் பேச்சில் நல்ல செய்தி கிடைக்கும் என்று தலைக்கு மேல் எதிர்பார்ப்புகள்.
சுவாரஸ்யம் என்னவென்றால் சைப்ரஸை ஒற்றுமைப் படுத்த கூடிப் பேசுகின்ற நாடுகளே அது பிரிந்திருப்பதற்கும் காரணம் என்பது வரலாற்றுக் கொடுமை.
1960 ஆம் ஆண்டு சைப்ரஸுக்கு சுதந்திரம் வழங்கிய பிரிட்டன் அதனை சும்மா கொடுத்து விட்டு போகவில்லை. அந்த தீவில் வாழும் துருக்கிய மற்றும் கிரேக்க இனங்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் நிபந்தனை ஒன்றையும் விதித்தது. அத்தோடு விட்டு விட்டிருக்கலாம் அந்த குட்டித் தீவின் விடயங்களில் துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளுக்கு தலையிடவும் உரிமை வழங்கிவிட்டுப் போனது.
இப்படி குழப்பத்தை ஏற்படுத்திய பிரிட்டன் முழுசாக அந்த தீவை விட்டு போகவும் இல்லை. நாட்டின் மூன்றுவீதமான நிலத்தை தனது ஆதிக்கத்திற்குள் வைத்துக் கொண்ட பிரிட்டன் இரண்டு இராணுவ முகாம்களை கட்டியது. இது பிரிட்டன் சுயாட்சி பெற்ற பிரதேசம். அது பற்றி யாரும் மூச்சுவிட முடியாது.
ஆனால் சைப்ரஸுக்கு கொடுத்த சுதந்திரம் நன்றாக வேலைசெய்ய ஆரம்பித்தது. 1974 இல் கிரேக்கம் பின்னால் நின்று இராணுவ சதிப்புரட்சி ஒன்றை செய்ய முயன்றதால் பிரச்சினை முற்றியது. மறுபக்கம் துருக்கியும் கை கெட்டி பார்த்திருக்கவில்லை. அது தனது இராணுவத்தை இறக்கி நாட்டின் வட பகுதியை ஆக்கிரமித்தது.
கடைசியில் சைப்ரஸ் இரண்டாக பிரிந்துவிட்டது. நாட்டின் வடக்கில் மூன்றில் ஒரு பகுதியை துருக்கி ஆக்கிரமித்தது. அது துருக்கி இனத்தினரின் நாடாக மாறியது. ஆனால் என்ன துருக்கியை தவிர துருக்கிய சைப்ரஸை உலகில் எந்த நாடும் ஏற்பதில்லை.
மறுபக்கம் நாட்டின் தெற்கில் மூன்றில் ஒரு பகுதியில் கிரேக்க இனத்தினரின் சைப்ரஸ் உருவானது. ஆனால் என்ன கிரேக்க சைப்ரஸை ஐ.நா ஒரு நாடாக அங்கீகரித்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் அங்கத்துவம் பெற்றது.
உலக வரைபடத்தை பார்த்தால் புரியும் சுற்றிவர பெரிய பெரிய நாடுகள் இருக்க மத்தியதரைக் கடலில் நடுவில் மாட்டிக் கொண்ட பூமியாகவே சைப்ரஸ் தென்படும். தெற்கில் கடல் கடந்து மிக நெருங்கிய தூரத்தில் துருக்கியும், மேற்கில் சிரியாவும் இருப்பது சைப்ரஸின் மகத்துவத்தை உயர்த்திவிட்டது. ஆனால் தென்கிழக்கு பக்கமாக இருக்கும் கிரேக்கம் தான் சைப்ரஸ் நாட்டுக்கு மிக நெருக்கம். ஏனென்றால், ஒரு மில்லியனுக்கு சற்று அதிகமான சைப்ரஸ் சனத்தொகையில் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் கிரேக்க இனத்தினர். துருக்கிய இனத்தினர் 20 வீதத்திற்கும் குறைவு.
இப்படி யாருடையதோ அரசியல் தேவைக்கு பிரிந்துபோன சைப்ரஸை எப்படி ஒன்று படுத்துவது என்பது கடந்த 40 ஆண்டுகால பிரச்சினை. முன்னர் அமைதிப் பேச்சுவார்த்தை என்று ஒரு சில மாதங்களுக்கு சுற்றித் திரிந்துவிட்டு பழையபடி அடங்கி விடுவார்கள். ஆனால் பிரச்சினைக்கு என்றால் தீர்வு கிடைக்கவில்லை.
இப்போது ஜெனீவாவில் ஆரம்பமாகி இருக்கும் பேச்சுவார்த்தை கடந்த கால முயற்சிகளை விடவும் முன்னேற்றம் கொண்டதாக தெரிகிறது. இரு சைப்ரஸ்களும் ஒன்று சேர வேண்டும் என்பதை இரு தலைவர்களுமே உறுதியாக நம்புகின்றனர். கிரேக்க சைப்ரஸின் தலைவரான நிகோஸ் அனஸ்டாசியாதஸ் மற்றும் துருக்கிய சைப்ரஸின் தலைவர் முஸ்தபா அகின்ஸி இருவருமே இந்த தலையிடிக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அதாவது அதிகாரப் பகிர்வு கொண்ட இரு நாட்டு கூட்டமைப்பு ஒன்றை அமைப்பதுதான் இலக்கு. ஆனால் முக்கிய பிரச்சினைகளில் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
நிலத்தை எப்படி பிரிப்பது என்பதிலேயே இன்னும் பிரச்சினை முடியவில்லை. துருக்கி இராணுவம் சைப்ரஸுக்கு படையெடுத்தபோது அளவுக்கு அதிகமான நிலத்தை கைப்பற்றியது. ஆனால் சனத்தொகை அடிப்படையில் துருக்கிய சைப்ரஸின் நிலப்பிரதேசம் இன்னும் குறைக்கப்பட வேண்டும். அது பற்றி இரு தலைவர்களும் பரிந்துரைக்கும் எல்லை கோடுகள் கொண்ட வரைபடங்களை பறிமாறிக்கொண்டிருக்கிறார்கள். அதில் உடன்பாடு வந்தால் அந்த பிரச்சினை முடிந்தது.
துருக்கியின் படையெடுப்பை அடுத்து நாட்டின் வடக்கில் இருந்து கிட்டத்தட்ட 165,000 கிரேக்க சைப்ரஸ் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். மறுபக்கம் தெற்கில் இருந்து 45,000 துருக்கிய சைப்ரஸ் மக்கள் துரத்தப்பட்டார்கள். இவர்களுக்கு திருப்பி தனது பழைய சொத்துகளை கொடுப்பது அல்லது இழப்பீடு வழங்குவது பற்றி முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட மிகப்பெரிய பிரச்சினை துருக்கி இராணுவம். துருக்கிய சைப்ரஸில் இன்றும் கூட 30,000 துருக்கி படை நிலைகொண்டிருக்கிறது. கிரேக்க சைப்ரஸை பொறுத்தவரை இது ஆக்கிரமிப்பு படை. துருக்கிய சைப்ரஸின் பாதுகாப்பிற்கு இந்த படை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது கட்டாயம் என்று துருக்கி நம்புகிறது. இந்த பிரச்சினைக்கு என்ன செய்வது என்பது பெரிய பிரச்சினை.
ஜெனீவா பேச்சுவார்த்தையில் உடன்பாடொன்று வந்தாலும் அது சைப்ரஸ் மக்களிடம் அங்கீகாரத்தை பெற வேண்டும். அதாவது இரு சைப்ரஸ்களிலும் இந்த தீர்வு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2004 ஆம் ஆண்டில் கூட சைப்ரஸை ஒன்றிணைக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அதனை கிரெக்க சைப்ரஸ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள். எனவே பிரச்சினைக்கு தீர்வொன்று எட்டப்பட்டாலும் மக்கள் ஓட்டுப்போடுவதை பொருத்தே ஒன்றுபட்ட சைப்ரஸ் உருவாவது சாத்தியம்.
சைப்ரஸின் இன்றை கயிறிழுப்பில் லாபம் காண்பது ரஷ்யா போன்ற நாடுகள் என்பதே சண்டை பிடிக்கும் இரு தரப்புக்கும் எரிச்சலை ஊட்டும் விடயம். சைப்ரஸ் அரசியல், பொருளாதார விடயங்களில் ரஷ்யாவின் தலையீடு அதிகரித்திருக்கிறது. சிரியாவில் ரஷ்யா தலையிடவும் சைப்ரஸை பயன்படுத்தி வருகிறது. இது துருக்கி, கிரேக்கம் மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று தரப்புக்கும் கோபத்தையே அதிகரித்திருக்கிறது.
இப்போது அவசரமாக சைபரஸ் அமைதி முயற்சி ஆரம்பிக்கப்பட இதுவும் ஒரு முக்கிய காரணம். அதாவது சைப்ரஸில் அமைதி ஏற்படுத்துவது கூட ஒரு பிராந்திய அரசியல் மாத்திரமே.
− எஸ். பிர்தெளஸ்