கடந்த 24ஆம் திகதி சிவராத்திரி தினம் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் பிறந்த தினமுமாகும். இத்தோடு இன்னொரு முக்கிய தினத்தையும் சுட்டிக்காட்டியாக வேண்டும். 1967ஆம் ஆண்டு பெப்ரவரி 24இல் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலின் போதே, காந்திஜி, நேருஜி, இந்திரா ஆகிய பேராளுமைகளால் நிலை நிறுத்தப்பட்டிருந்த காங்கிரஸ் ஆட்சி முதல் தடவையாக தமிழகத்தில் வீழ்ந்தது. மாற்றாக 1949ஆம் ஆண்டு சென்னை ரொபின்சன் பூங்காவில் ஒரு மழைநாளில் ஆரம்பிக்கப்பட்ட தி.மு.கவின் திராவிட ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தது. அறிஞர் அண்ணாவின் தலைமையில் 1967மார்ச் ஆறாம் திகதி புதிய அமைச்சரவை பதவியேற்றது. அண்ணா முதல் வேலையாக சுயமரியாதைத் திருமணத்தை சட்ட ரீதியாக்கினார். மட்ராஸ் மாநிலமாக அறியப்பட்டதை தமிழ்நாடு என மாற்றியவரும் அண்ணாவே. அன்று ஆரம்பித்த திராவிட கழக ங்கள் ஆட்சிகள் இன்றும் காங்கிரவுக்கு வழிவிடாமல் மாறிமாறி ஆட்சியமைத்து வருகின்றன.
தமிழக அரசியல் வரலாற்றில் முற்போக்கு சிந்தனையுடன் பெரியாரியம் சார்ந்த ஒரு தமிழர் ஆட்சி மலர்ந்தது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. கழக ஆட்சியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், வளர்ச்சியும், சிந்தனை மாற்றங்களும் சிறப்பானவை. அவற்றை ஊழல், கொள்ளை, லஞ்சம் என்பனவற்றால் மூடி மறைத்துவிட முடியாது. இரண்டும் வெவ்வேறான விஷயங்கள்.
இவற்றை எல்லாம் இங்கே குறிப்பிட்டு மார்தட்ட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றால், இன்று இந்தத் திராவிட அரசியல் மிகக் கேவலமான நிலைக்குச் சென்றிருப்பதால்தான். நடிகர் தொடங்கிய கட்சி கூத்தாடத்தானே செய்யும்? என்று எம்.ஜி. ஆரையும் வம்புக்கிழுத்து திராவிட அரசியல் கேலிக்கூத்தாக்கப்படுவதற்கு ஜெயலலிதா காரணமாகி விட்டார்.
திராவிட அரசியலை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே காங்கிரசினதும் பா.ஜ.கவினதும் ஒரே நோக்கம், இன்று ஜெயலலிதாவின் மறைவினால் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு இக் கட்சிகள் திரைமறைவில் போட்டியிடுவதோடு வாய்ப்புகளை எப்படி எல்லாம் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த நகர்வுகளை தெரிந்து வைத்துக்கொண்டே, அ.தி.மு.க முக்கியஸ்தர்கள் குடுமிப்பிடிச் சண்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. முதலாவது, சசிகலா அணி. முதல்வர் பதவி கைக்கெட்டிய தூரமிருக்கையில் உச்ச நீதிமன்ற குறுக்கீட்டால் அவர் பெங்களூரு பரப்பன ஹக்ரஹாரா சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. அவருக்கு இனிநேரடி அரசியல் சாத்தியமாகப் போவதில்லை. ஆனால் ரிமோட் கண்ட்ரோலில் தமிழக அரசையும் அ.தி.மு.கவையும் அவரால் இயக்க முடியும். இயக்கவும் செய்கிறார்.
இரண்டாவது அணி பன்னீர் செல்வத்தினுடையது. சசிகலாவுடன் ஒப்பிடும்போது அரசியல் காய் நகர்த்தலில் திறமை குறைந்தவர். ஜெயலலிதா மரணத்தோடு அவரது நகர்வுகளை எடுத்துக் கொண்டால் அடுத்தடுத்து அவர் தவறுகள் செய்துள்ளதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. அரசியல் என்பது வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதாகும். இதைத்தான் ராஜதந்திரம் என்பார்கள். பன்னீர் செல்வம் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா? ஜெயலலிதா மரணத்தின் பின்னர் சசிகலா தன் சுயரூபத்தை படிப்படியாக வெளிப்படுத்த தொடங்கிய சமயத்தில் பன்னீர் செல்வம் அவரை சேவித்துக் கொண்டிருந்தாரே தவிர தனக்கான வாய்ப்புகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முயலவில்லை. சசிகலா வற்புறுத்தினர் என்றால் ராஜநாமா கடிதத்தை ஒரு முதலமைச்சர் எழுதிக் கொடுத்துவிட்டு ‘கம்’மென்றிருந்து விடுவாரா? திடீரென ஜெ.சமாதியில் நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டு, ஜெயலலிதாவின் ஆன்மா தன்னை இயக்குவதாக சொல்லவதெல்லாம் தொண்டர்கள் மத்தியில் எடுபடுமா? எங்கே தன் உடைவாளை அவர் உருவியிருக்க வேண்டுமோ! அங்கே அதை அவர் செய்யவில்லை.
மூன்றாவது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. அவர் தமிழக அரசியலுக்கு பொருந்திவரக் கூடியவரா? என்ற கேள்வியையே அவரது நகர்வுகள் ஏற்படுத்துகின்றன. ஜெயலலிதாவின் இரத்த உறவு மற்றும் ஜெயலலிதாவை ஒத்த முகம் மற்றும் உடல் தோற்றம் என்பனவற்றை மட்டும் நம்பி அவர் அரசியலுக்கு வந்திருக்கிறாரே தவிர, அரசியல் அனுபவங்களுடன் அல்ல. அவர் அரசியலை பாடமாகப் படித்திருக்கலாம். இதழியலில் பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் தமிழக அரசியலுக்கு அவை மிகக் கொஞ்சமாகவே உதவ முடியும். ஜெ.யின் மரணத்தின் பின்னர் தொண்டர்கள் ஒரு விசாலமான வெற்றிடத்தை உணர்ந்தார்கள். அதை இவர் அச் சமயத்திலேயே பயன்படுத்தியிருக்க வேண்டும். முடிவெடுப்பதில் கடும் தாமதத்தைப் பார்க்கிறோம். தமிழக அரசியலில் எவ்வளவோ நடந்து முடிந்த பின்னரேயே கடந்த 24ஆம் திகதி ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை அறிவித்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருக்கிறார். பன்னீருடன் சேர்வார் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி தனிவழி செல்ல முற்பட்டுள்ளார். அரசியல் அரிச்சுவடி தெரியாத இவர் சசிகலா அணியினரையும் பன்னீர் அணியினரையும் எதிர்கொள்ளவேண்டிய அதேசமயம் உரம்பெற்றிருக்கும் தி.மு.கவுடனும் மோதவேண்டும். ஆர்.கே.நகரில் இவர் ஏனைய கட்சிகளுடன் உடன்பாடு செய்து கொள்வாரா அல்லது தனியாக நின்று எதிர்ப்புகளை முறியடிப்பாரா? பொறுத்திருந்துதான் தீபா அவிழ்க்க இருக்கும் மூட்டையில் என்னென்ன மந்திர தந்திரங்கள் வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்க முடியும்.
அ.தி.மு.க இப்படி மூன்றாகப் பிரிந்து கிடக்க, வாய்ப்புகளைக் கௌவிக்கொள்ள தி.மு.க வெளியே அலைந்து திரிகிறது.
தி.மு.கவுக்கு இது மடியில் வந்து விழுந்த அரசியல் கனி! ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்னரேயே, சட்டசபைத் தேர்தலின் போதே, காங்கிரசுடன் இணைந்து 93 ஆசனங்களை பெற்றிருக்கும் தி.மு.க, அ.தி.மு.க உள்மோதல்களில் கிடைக்கும் சகல வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தந்திர மௌனம் காத்த தி.மு.க, அவர் மரணத்தின் பின்னர் மிகக் கவனமாக அடிகளை எடுத்துவைக்கத் தொடங்கியது. சசிகலா அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தி.மு.க நேரடியாக சசிகலாவையும், ஜெயலலிதாவையும் விமர்சிக்க ஆரம்பித்தது.
அதேசமயம், மாவட்ட ரீதியாக கழக அமைப்பாளர்களை தேர்தலுக்கு தயார் நிலையில் மாவட்டங்களை வைத்திருக்கும் படி அறிவுறுத்தியது. அடுத்தாக, தமிழக பொறுப்பு ஆளுநர் எப்படி புதிய முதல்வரைத் தெரிவு செய்வதில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை தாமதம் காட்டி வந்தாரோ, அப்படியே தீர்ப்பு வரும்வரை தி.மு.க.வும் அடுத்த நகர்வுக்காகக் காத்திருந்தது.
தீர்ப்பு, ஜெயலலிதா குற்றவாளி என்றும் நூறுகோடி அபராதம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததோடு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரையும் நான்காண்டு சிறைத்தண்டனையில் உள்ளே தள்ளும் வகையில் வெளியானது. தி.மு.க. இப்போது முழுவீச்சு பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டது.
ஜெயலலிதாவையும், சசிகலாவையும் அ.தி.மு.க தெய்வ நிலையில் நிலை நிறுத்தி வழிபடும் அதேசமயம் தி.மு.க அவர்களை குற்றவாளிகள், தண்டனைக் கைதிகள், கிரிமினல்கள் கொள்ளைக்காரிகள் என்று விளித்து வருகிறது. அரச பணத்தை சூறையாடி தமது சொந்தப் பையை நிறைத்து கொண்ட குற்றவாளிக்கு எப்படி மெரினா கடற்கரையில் கல்லறை அமைக்க முடியம்? நாளைக்கு ஒரு தண்டனைக் கைதி தான் மரித்ததும் தன் உடலை மெரினாவில் மரியாதைகளுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம் அல்லவா? ஒரு குற்றவாளிக்கு நினைவு மண்டபமும் கோவிலும் அமைப்பது நல் முன்னுதாரணமாக அமையுமா? முதல் வேலையாக ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்! என்ற ஒரு கடுமையான கோரிக்கையை முன் வைத்து வருகிறது தி.மு.க.
எடப்பாடி பழனிச்சாமி சட்ட சபை விதிகளை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருப்பதால் அவரது அரசு சட்டபடி செல்லாது என்பது தி.மு.கவின் நிலைபாடு. அடுத்த குற்றச் சாட்டு, எடப்பாடியின் ஆட்சி ‘கொள்ளைக் காரி சசிகலாவின் பினாமி ஆட்சி’ என்பதாகும். தண்டனைக் குற்றவாளியால் பெங்களூருவில் இருந்து ரிமோட் கொன்ட்ரோலில் இயக்கப்படும் ஒரு ஆட்சி எப்படி சட்டப்படி செல்லும்? என்கிறது தி.மு.க. தமிழகத்தைக் கொள்ளையடித்ததுடன் மேலும் கொள்ளையடிப்பதற்காக போயஸ் தோட்ட வீட்டில் குழுமியிருக்கும் ஒரு கொள்ளைக் கும்பலே இந்த அரசாங்கத்துக்கு உத்தரவுகளை பிறப்பிக்கிறது. இப்படி ஒரு மக்கள் விரோத, தமிழக விரோத ஆட்சி மேலும் தொடர வேண்டுமா? என்பதுதான் தி.மு.க மக்களிடம் முன்வைத்திருக்கும் சிந்தனையைத் தூண்டும் கேள்வி.
பிரசாரத்தை இந்தப் போக்கில் போக விட்டுவிட்டு ஸ்டாலின், சட்டசபை வாக்கெடுப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்கிறார். சொத்துக் குவிப்பு தீர்ப்பு வந்ததும், குற்றவாளியாகக் காணப்பட்ட சசிகலா பொதுச்செயலாளாராக உள்ள ஒரு கட்சியின் ஆட்சி செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சியை உண்மையாக பின்நின்று இயக்குபவர்கள் சசிகலாவின் குடும்பத்தவர்களே என்றும் தெரிவிக்கும் மனுவை ஆளுநரிடம் ஸ்டாலின் கையளித்துள்ளதோடு டில்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இதே மனுவை கையளித்துள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்களை எடுத்துரைத்திருக்கிறார்.
அ.தி.மு.கவுக்கு இது கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற வெகு இக்கட்டான நிலை. கட்சியின் பெருந்தலைவி ஜெயலலிதா இப்போது இல்லை. அவர் மரணித்த பின்னர் இப்போது தண்டனை குற்றவாளி என்றப் பெயர் கிட்டியிருக்கிறது. இன்றைக்கும் அவர் பெயரையும் படத்தையுமே கட்சி முன் நிறுத்தினாலும் மறுபுரத்தில் அவரை தண்டனை குற்றவாளி என்றும் கொள்கைக்காரி என்றும் ஒரு கூட்டம் அர்ச்சிக்கிறது. அவர் பெயரை நம்பி அரசியல் செய்ய புறப்பட்டிருக்கும் தீபா, பன்னீர், எடப்பாடி ஆகிய மூவருக்குமே இதில் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர், அரசியலில் ஈடுபடவே தடைவிதிக்கப்பட்டவர்.
இவ் விருவரையும் தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், தீபா அணி, பன்னீர் அணி, எடப்பாடி அணி என கட்சி மூன்றாகப் பிளந்து கிடக்கிறது. தீபாவின் தம்பி தீபக், என்னால் துணைப் பொதுச் செயலாளர் தினகரனை தலைவராக ஏற்க முடியாது என்று சொல்லி வெளியில் வந்துவிட்டார். தினகரன் தான் விரும்பியவாறு கட்சியை நடத்துவதாகவும். எடப்பாடிக்கு உத்தரவுகள் பிறப்பிப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தினகரனின் நடவடிக்கைகள், அடுத்த தமிழக முதல்வராவதற்கான தயார்ப்படுத்தல்களாகவே பார்க்கப்படுகின்றன. தீபக் போர்க் கொடி தூங்கி வெளியே வந்திருப்பதும் இதையேதான் வெளிப்படுத்தியிருக்கிறது.
தினகரனின் போக்கு, சசி குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தி இருப்பதாகவும் சசிகலாவின் கணவர் நடராஜன், மருத்துவர் வெங்கடேஷ், தீபக் ஆகியோர் ஒரு அணியாகவும் தினகரன் இன்னொரு அணியாகவும் பிரிந்திருப்பதாகத் தெரிகிறது.
அனைத்து காட்சிகளும் தி.மு.க.வுக்கு சாதகமானதாகவே தெரிகிறது. மேலும் அ.தி.மு.க தொண்டர்களை ஈர்க்கும் வகையில் தனது கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னால் உள்ள மர்மங்கள் விசாரணை செய்யப்படும் என்றும் அபல்லோ மர்மங்களும் விசாரணை செய்யப்படும் என்றும், முடிவில் சிறைக்கூட்டில் இருந்து வெளியே வரமுடியாதபடி சசிகலா அனைத்துக்கும் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் காட்டமாகவே பேசியிருக்கிறார் ஸ்டாலின்!
அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தமிழக வாக்காளர்கள் பழையதை மறந்து அடுத்தாக தி.மு.கவை தெரிவு செய்யும் வாய்ப்பே காணப்படுகிறது.