![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/04/09/02_0.jpg?itok=IcD5zToa)
நமது நிருபர்
சிரியா மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அடுத்த கட்டமாக வட கொரியா மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரியாவின் தொடர் அணுவாயுத உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான யோசனையை அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை சமர்ப்பித்திருப்பதாக சர்வதேச செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதிக்கு இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று, தென் கொரியாவில் மீண்டும் அமெரிக்க அணுவாயுதங்களை நிலைநிறுத்துவது. மற்றையது, வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் கொன்றொழிப்பது என்று தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இரண்டு தெரிவுகளை முன்வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அமெரிக்க விஜயத்திற்கு முன்னதாகவே வட கொரியா தொடர்பான கொள்கைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் வட கொரிய விடயத்தை சீனா இராஜதந்திர ரீதியாக அணுகும் என்று வெ ள்ளை மாளிகை நம்புவதாகவும் உயர் மட்ட புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த முயற்சி தோல்வியுறும் பட்சத்திலும் வட கொரியா தொடர்ந்தும் அணுவாயுத உற்பத்தியில் ஈடுபட்டாலும் அமெரிக்காவின் கொள்கை மாறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்க அணுவாயுதங்களைத் தென்கொரியாவில் நிலை நிறுத்துவது பற்றி ஆலோசிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தென் கொரியாவிலிருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் அணுவாயுதங்களை மீளப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதலை உலக நாடுகள் பல வரவேற்று அறிக்ைக விடுத்துள்ளன.
ரஷ்யா பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியுமடைந்துள்ள நிலையில், மத்திய தரைக் கடலில் எந்நேரமும் போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை (04) கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரியாவின் கான் ஷிக்கொன் நகர் மீது சிரிய அரச படைகள் இரசாயனத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் கவலையைத் தோற்றுவித்திருந்தது.