கையைச்சுட்டுக்ெகாண்ட தெரேசா மே! | தினகரன் வாரமஞ்சரி

கையைச்சுட்டுக்ெகாண்ட தெரேசா மே!

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக தெரசா மே மீண்டும் பதவியேற்க உள்ளார். ஆனால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும் என்ற அவருடைய நம்பிக்கை பொய்த்து போனது. பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதென முடிவு செய்தது. இதற்காக பொது மக்களிடம் கருத்தறியும் வாக்குப்பதிவு, 2016, ஜூன் மாதம் நடந்தது. அதில், 52 சதவீதமானோர், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இதை எதிர்த்து வந்த, டேவிட் கேமரூன், பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கடந்த, 2016, ஜூலையில், பிரிட்டன் பிரதமராக, தெரசா மே (60), பொறுப்பேற்றார்.

ஐரோப்பாவைச் சேர்ந்த, 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பணிகளில் அவர் ஈடுபட்டார். ஆனால், பாராளுமன்றத்தில், போதிய பலம் இல்லாததால், இப் பணிகளை மேற்கொள்வதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. அடுத்த தேர்தலுக்கு மேலும் மூன்றாண்டுகள் இருக்கும் நிலையில், பாராளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு தெரசா மே முன்வந்தார். அதன்படி ஜூன் எட்டாம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. 'மொத்தமுள்ள 650 இடங்களுக்கான இந்தத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்' என தெரசா மே கூறி வந்தார். இந்தத் தேர்தல் முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

தனிப்பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை என்ற நிலையில் தெரசா மேயின் கன்சர் வேடிவ் கட்சி 318 இடங்களில் மட்டுமே வென்றது. முன்னைய தேர்தலை விட இது, 12 இடங்கள் குறைவாகும். முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னைய தேர்தலை விட கூடுதலாக 31 இடங்களைப் பெற்று 261 தொகுதிகளில் வென்றது. மிகப்பெரிய தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே தேர்தல் நடத்திய நிலையில் தனிப் பெரும்பான்மையைக்கூட பெறாததால் தெரசா மே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதமர் தெரசா மே மற்றும் கன்சர்வேடிவ் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பேச்சுகளிலும் இதற்கான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'தனிப்பெரும்பான்மை கிடைக்காததாலும், மொத்த ஓட்டுகளில், 48 சதவீதம் பேரே கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளதாலும், தார்மீக பொறுப்பேற்று அவர்கள் விலக வேண்டும். நாங்கள் அரசு அமைத்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என, தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பின் கூறினார்.

இந்நிலையில் டி.யு.பி., எனப்படும் டெமாகிரடிக் யூனியனிஸ்ட் கட்சி யின், 10 எம்.பி.க்கள் ஆதரவுடன் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. தெரசா மே மீண்டும் பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. ஆட்சியமைப்பது உள்ளிட்டவை குறித்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துடன், பிரதமர் மே ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கு முன், 2010ல் நடந்த தேர்தலில், கன்சர் வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரூன், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், லிபரல் டெமாகிரடிக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார்.

பிரிட்டன் பார்லிமென்ட் சட்டத்தின்படி, 3-ல் இரண்டு பங்கு எம்.பி.க்களின் போதிய பலம் இல்லாததால், அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும். தற்போது, டி.யு.பி., கட்சியின் ஆதரவு இருந்தாலும், தெரசா மே அரசுக்கு எப்போதும் கத்தி மீது நடப்பது போன்ற நிலையே இருக்கும். ஐரோப்பிய யூனியனிலிருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சுகள் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு சாதகமாக இல்லாத நிலையில் இப்பேச்சு ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதேவேளை பிரிட்டன் பாராளுமன்றத்தேர்தலில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட 12 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில், 10 பேர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 14 பேர் தொழிலாளர் கட்சியின் சார்பிலும் 13 பேர் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பிலும் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் ஐவர் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ஏழு பேர் வெற்றி பெற்றுள்ளனர். முதல்முறையாக ஒரு சீக்கிய பெண்ணும், தலைப்பாகை அணிந்த பஞ்சாபியும் இத்தேர்தலில் வென்றுள்ளனர். தொழிலாளர் கட்சியின் பிரீத் கவுல் கில், பிர்மிங்ஹாம் எட்க்பாஸ்டன் தொகுதியில் வென்றார். தொழிற் கட்சியின் தன்மஞ்சித் சிங் தேஷி, ஸ்லோக் தொகுதியில் வென்றார். பிரிட்டன் பாராளுமன்றத்தில் தலைப்பாகையுடன் நுழையும் முதல் எம்.பி. இவரே.

தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சீக்கியர் குல்திப் சகோடா 720 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் பிரீதி படேல், அலோக் சர்மா, சைலேஷ் வாரா ஆகியோர் வென்றனர்.

தொழிலாளர் கட்சியின் நீண்டகால, எம்.பி.யான கேத் வாஸ், லேசெஸ்டர் கிழக்கு தொகுதியில் சுலபமாக வென்றார். அவருடைய சகோதரி வாலேரி வாஸ், வால்சால் தெற்கு தொகுதியில் வெற்றியடைந்துள்ளார். 

Comments