மனித உரிமைப் பிரகடனமும் | தினகரன் வாரமஞ்சரி

மனித உரிமைப் பிரகடனமும்

கலாநிதி.கே.ரீ.கணேசலிங்கம் யாழ். பல்கலைக்கழகம்

மனித உரிமை பிரகடனமானது உலக நாடுகளையும் ஆட்சியாளர்களையும் நெருக்கடிக்கு உள்வாங்கி வருகிறது. தனிமனிதனது கௌரவத்தையும் அவனது சமூகம் சார்ந்த கூட்டுரிமையையும் மதிக்க வேண்டிய கட்டுப்பாட்டுக்குள்ளே அரசுகளதும் ஆளும் அரசாங்களதும் கடப்பாடாக உள்ளது. அரசு மக்களுக்கானது என்பது நியாயமான நடைமுறைசார்ந்ததாக அமைய வேண்டுமாயின் மனிதன் ஒவ்வொருவனதும் உரிமை மதிக்கப்படவேண்டும். இதனை உலகில் நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் அமையம் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை 1948 முதல் அமுல்படுத்தி வருகிறது. சீனாவின் மனித உரிமை போராளியும் நோபல் பரிசு பெற்றவருன லியு சியாபோ (Liu Xiaobo) வினது மரணமும் சீனாவின் மனித உரிமையும் பற்றிய தேடலாக இக்கட்டுரை அமைகிறது.

உலகிலுள்ள அனேக நாடுகள் மனிதஉரிமையை மீறுகின்ற நாடுகாளாகவே உள்ளன. இறைமை உடைய நாட்டில் வாழும் சிறுபான்மையினர் அரசுக்கும் அதன் இறைமைக்கும் எதிரானவர்கள். தீவிரமானதும் விரோதமானதும் கருத்து நிலைகளைக் கொண்டவர்க்கள் என்போரின் நடவடிக்கைகள் அரசின் உறுதிப்பாட்டை குலைக்கின்றது எனக்கருதி அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆட்சியாளரை விமர்சித்தல் தவறுகளை சுட்டிக்காட்டுதல் நியாயம்கோருதல் இவை எல்லாமே அரசுகளின் செயலுக்கு விரோதமானவை எனக்கருதி அவர்களை சிறையில் வைத்தல், கொலை செய்தல் சித்திரவதை செய்தல் எனப் பட்டியல் நீட்சி பெறுகின்றது. இதில் போர்க்கைதிகள் தீவிரவாதத்தின் போராளிகள் எனப் பலர் உள்ளாக்கப்படுகின்றனர்.

இந்த வகையில் சியோபோ உள்ளடக்கப்பட்டமை சீனாவின் ஆட்சிக்கு அதிகாரத்திற்கும் எதிராக போராடினார் என்ற குற்றச்சாட்டிலே சிறைவைக்கப்பட்டார். குறிப்பாக மோசடிகளையும் வன்முறையையும் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் 2009 இல் சிறையில் அடைக்கப்பட்டார.1989 ஆம் ஆண்டு தினமென் சதுக்கத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின்போதும் சியாவோ கடுமையாக போராடியிருந்தமை கவனத்திற்குரியது. அதிகாரத்திலுள்ளவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் பேச்சாளராகவும் மாணவர் சார்பானவராகவும் செயல்பட்டவர். இவரது முயற்சியால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயிர்கள் அச்சந்தர்ப்பத்தில் பாதுகாக்கப்பட்டன.

தினமென் சதுக்கத்தின் துயரத்தின்போது எழுந்த ஜனநாயக இயக்கத்தின் பங்காளராக செயல்பட்டமை அவர் மீதான சீன அரசின் கவனம் அதிகரிக்க வழிவகுத்தது. அதன் பின்பு தனித்து சுதந்திரம் மற்றும் வன்முறை எதிர்ப்பு பற்றிய கருத்துக்களை வெளியிட்டார். மிகப் பிரபலமான எழுத்தாளனாக மதிக்கப்பட்டார். உலகம் முழுவதும் அன்றைய நிகழ்வுகளைத் தெரியப்படுத்தினார்.

சியாபோ எனும் மனித உரிமைப் போராளி 2009 இல் 300க்கு மேற்பட்டவர்களுடன் தொடர் உரையாடல் போராட்டத்தை ஆரம்பித்தார். இது பாரியளவு வெற்றியை ஏற்படுத்த தொடங்கியது. இவ்வகை சுதந்திரப்பேச்சு என்பது சீனாவுக்கும் அதன் எதிர்காலத்திற்கும் அவசியமானது என அவர் குறிப்பிட்டார். சீன சமூகத்தை மாற்றியமைக்குமென அவர் கனவுகண்டார். நம்பிக்கையுடன் உழைக்க முயன்றார். இடைவிடாது மனித உரிமைகளைப்பற்றி விழிப்பினை மக்கள் மத்தியில் விதைப்பதற்கு பாடுபட்டார். அதன் அவசியப்பாடு சீன தேசத்தை கட்டியெழுப்புவதற்கு வேண்டியது என்ற எண்ணத்துடன் பணியாற்றினார்.

சீனாவின் ஆட்சியில் நிலவிய குறைபாடுகளைக் களைவதற்கு “சட்டத்தின் முன் சமன்” ‘பலகட்சி முறைமைகளின்’ அவசியம் ‘குடியரசுவாதம்' என்ற கோரிக்கைகளுடன் தனது எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் வெளிப்படுத்தினார். அவரது பார்வையில் தெளிவான ஜனநாயக நீரோட்டம் ஒன்றுக்கான அணுகுமுறையை சீனாவில் ஏற்படுத்த பாடுபட்டார். அத்தகைய ஜனநாயகம் சீனாவில் ஏற்பட்டால் மனித உரிமை பேணப்படுமென வாதிட்டார்.

இப்படியான மனித உரிமை போராளியை சீன அரசாங்கம் 11 வருடங்களாக சிறையிலடைத்து மருத்துவவசதியில்லாத சூழலில் புற்றுநோயினால் 56 வயதில் இறந்துள்ளார். இவரது நோயினை கருத்தில்கொண்ட நோபல் பரிசு வென்ற 153பேர் சியாபோவை மருத்துவத்திற்காக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புமாறு ஒப்பமிட்டு சீன அரசிடம் கோரியிருந்தனர். அதற்கு ஆதரவாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் என்பன குரல்கொடுத்தன. ஆனால், சீன அரசாங்கம் அதனை நிராகரித்ததுடன் தமது வைத்தியர்களைக் கொண்டு மருத்துவம் வழங்குவதாக தெரிவித்தது. அத்துடன் அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்தது. இறுதியில் சிகிச்சை பயனின்றி சியாயோ இறந்துபோனார்.

சீனா மனித உரிமை மீறுகின்றது என எந்தநாடும் விரல் நீட்டிக் கூறமுடியாது. காரணம் உலகில் அனேக நாடுகள் மனித உரிமையை மீறி வருகின்றன. தனித்து மனித உரிமை அமுலாக்கலுக்கான அமைப்புகளும் மனித உரிமை கண்காணிப்பகமும் அவை சார்ந்த நிறுவனங்களும் தங்கள் சார்பில் சீனாவிடம் கோரிக்கைவிடமுடியும். அத்தகைய அமைப்புகளும் ஈழத்தமிழரை முள்ளிவாய்க்காலில் கைவிட்ட பின்பு அதற்கான வலிமையை இழந்துவிட்டன.

சீனாவின் மனித உரிமை மீறலானது அதன் போராளிகளாலும்,மேற்குலகநாடுகளாலும் ஏற்படுத்தப்படும் சதி செயல் என சீனா கருதுகின்றது. இது தவறானது என்று கூறமுடியாது. காரணம் மேற்கு நாடுகளின் தயவில் இருந்தே சீன மனித உரிமையாளர்கள் போராட தலைப்படுகிறார்கள்.அல்லது மேற்கு நாடுகளில் போராட வைக்கப்படகிறார்கள். இதுவே இங்குள்ள பாரிய குறைபாடாகும். உலகில் மனித உரிமைச் சுட்டிலக்கம் (1991) அபிவிருத்திக்கும் பிணைப்பு ஏற்படுத்திய மேற்குலகம் தனது மனித உரிமை மீறலை பொருட்டாக கொள்வதில்லை.

உலக வல்லரசுப்போட்டிக்காவும் ஆதிக்கத்திற்காகவும் பொருளாதார சுரண்டலுக்காவும் கோடிக்கணக்கான மனிதர்களது உரிமையை வல்லரசுகள் மீறுகின்றன. இதில் சீனாவும் ஒன்று. அமெரிக்கா மேற்காசியாவிலும் ஆபிரிக்காவிலும் நிகழ்த்திய ஆக்கிரமிப்பு செயலுக்கு அப்பால் அந்த நாடு மனித உரிமையில் ஒரு சிறு துரும்பையும் பற்றி பேசமுடியாது. இதில் சீனர்கள் இந்தியர்கள் ஏன் சிறிய நாடுகளைக் கூட உள்நாட்டிலும் பிறநாடுகளிலும் மனித உரிமை களை மீறுகின்றன. ஆகவே இஃது ஒரு தெளிவான பிரிநிலையாகும்.

மனித உரிமையின் பெயரால் அரசியல் நிகழ்த்தப்படுகிறது. எவ்வாறு அமெரிக்கர்கள் வரைந்த மனித உரிமைகளையும் சோவியத் யூனியன் வரைந்;த சமூக-பொருளாதார அரசியல் மற்றும் சிவில் உரிமைகளையும் கொண்டு உலகம் ஆளப்படுகிறதோ அவ்வாறே உலக அரசியல் அரணமைக்கப்படுகிறது.வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு மனித உரிமை ஒரு படிநிலையாக உள்ளது. சிறிய நாடுகளையும் தமது நலனுக்கு எதிராக போராடும் சக்திகளையும் அழிப்பதற்கு ஆட்சிமாற்றம் செய்வதற்கு நாடுகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு மனித உரிமை ஒரு படிநிலையாகும். இதனாலேயே, மனித உரிமை சாசனம் அமுல்படுத்தலின்றிய நிலை ஏற்பட்டது.

மனித உரிமை என்பது புனிதமான சட்டவரைபு. அதனை வல்லரசுகம் கடைப்பிடிப்பதுடன் அதனை பாதுகாக்க முயலுகின்றபோது மட்டுமே சியாவோ போன்றவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். மனித உரிமையின்பேரால் அமெரிக்காவும் மேற்குலகமும் சீனாவில் கடைப்பபிடிப்பதற்கும் கொள்கையே சீனாவின் இருப்புக்கு ஆதாரமாகின்றது. மனித உரிமை ஓர் அரசியல் சுலோகமாகக் கருதப்படும் வரை, உலகப்பரப்பில் மனித உரிமை சாசனம் வெற்றுத் தாள்களினால் பதியப்படும் சுலோங்கள் மட்டுமே. 

Comments