![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/10/15/w0-1.jpg?itok=eJV1DQc9)
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்
யாழ் பல்கலைக்கழகம்
வடகொரிய விவகாரம் மீண்டும் போர்ச் சூழலுக்குள் வேகமாக நகர்கின்றது. அமெரிக்கா போர் ஒத்திகைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. பெருமளவுக்குப் போர் தவிர்க்க முடியாததென்பதை நிகழும் சம்பவங்கள் உணர்த்த ஆரம்பித்துள்ளன. ஓர் ஊடகப் போரை நிறைவு செய்த கடந்த மாதங்கள் தற்போது மோதுவதற்கான களத்தைத் திறந்துள்ளன. இத்தகைய போர் ஒன்றுக்கான வாய்ப்பினையும் அதன் இன்றைய நிலையையும் புரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அண்மையில் அமெரிக்க விமானங்கள் வடகொரியாவின் வான் பரப்பில் தாழ்வாகப்பறந்தமை சர்ச்சையை தந்த செய்தியாகும். அமெரிக்கா தனது இறைமையை மீறியுள்ளதாகவும் பதிலுக்கு வடகொரியா எச்சரித்திருந்தது.
ஆனால் இவ்வாறு அமெரிக்கா நடந்து கொள்வதற்குக் காரணம் எதுவாக அமைந்தது என்பது கவனிக்கத்தக்கது. இன்றைய உலகம் கணனிப்போர் என்பதற்குள் நகர்கின்றது. இதில் தான் அமெரிக்காவின் ஆத்திரம் அதிகரிக்க முதல் காரணமாக அமைந்தது. அதாவது வடகொரிய தொழில் நுட்பத்தின் திறனால் தென்கொரியாவில் அமெரிக்காவும் இணைந்து தயாரித்த போர் பயிற்சித் திட்டங்கள் மற்றும் வடகொரியாவையும் அதன் தலைமையையும் பணியவைக்கும் உத்திகள் அடங்கிய திட்டங்களை வடகொரியாவின் ஹக்கர்கள் கைப்பற்றிவிட்டதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினரான ரீ.சியொல் தெரிவித்தார்.
இது பற்றிய தகவலை உறுதிப்படுத்த அமெரிக்க பாதுகாப்பு மையமான பெண்டகனை நாடியபோது எந்தத் தகவலும் தர மறுத்ததாக செய்தி ஊடகங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. இதன் மூலம் அமெரிக்காவின் நடவடிக்கை தெளிவாக தெரிகிறது. வடகொரியர்களின் நடவடிக்கை வாயிலாக அதிக அதிர்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப் உள்ளார். வடகொரியா இந்தளவுக்கு வளர்ந்துள்ளதா அல்லது சீனாவின் நடவடிக்கையா என்பதே தற்போது அமெரிக்காவின் தேடலாக உள்ளது. எதுவாயினும் அமெரிக்காவின் எல்லைக்குள் புகுந்து தகவலை கைப்பற்றியதென்பது மிக திறமையான நடவடிக்கை என்பதை நிராகரிக்க முடியாது.
இரண்டாவது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்றின் உறுதிப்படுத்தலை ஜோன் கொப்ன்கின் பல்கலைக்கழகம் மற்றும் செய்தியாளர் பிற்றர் லைடன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இவர்களுடன் ஆசிய கிரிபித் பல்கலைக்கழகமும் அத்தகவலை உறுதி செய்தது. அத் தகவல் வடகொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பல் (SSBM) ) ஒன்று தயாராக உள்ளதெனவும் அது ஏற்கனவே கட்டப்பட்டு முடிந்ததென்றும் அந்த செய்தி அமையங்களும் பல்கலைக்கழகமும் தெரிவித்துள்ளன. அதில் அணுவாயுதங்களைக் கொண்டு செல்லும் ஏவுகணைகள் உண்டு எனவும் அதற்கான பரிசோதனையை நிறைவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.செப்டெம்பர் 21 இல் Sinpo South Shipyard பல்வேறுபட்ட காட்சிப்படங்களை தெரியப்படுத்தியதாக வொஷிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியில் உண்மையில்லை என சில தென்கொரிய செய்தி நிறுவனங்கள் குறிப்பிட முயலுகின்றன.
இதுவே அமெரிக்காவின் நடவடிக்கைக்கு உடனடிக் காரணங்களாகக் கொள்ளமுடியும். அது மட்டுமன்றி உலகத்தில் ஒரு போரை ஏற்படுத்தி மீளவும் தனது பலத்தை நிறுவ விரும்புகிறது அமெரிக்கா. அதுமட்டுமன்றி இதுவரையான காலப்பகுதியில் ஐ.நா.வையும் நேட்டோவையும் துணைக்கழைத்துவரும் அமெரிக்கா, தற்போது தென்கொரியாவையும் ஜப்பானையும் இணைத்துக் கொண்டு செயல்பட முனைகிறது. அண்மைய நிகழ்வில் கூட ஜப்பான் தென்கொரிய போர் விமானங்கள் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. குவாம் தீவிலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் புறப்பட்டு ஜப்பான் வான்பரப்புக்குள் பிரவேசிக்கும் போது இரண்டு ஜப்பான் போர் விமானங்களும் இணைந்தன.
இது வடகொரியாவுடனான யுத்தத்திற்குரிய கூட்டணி தயாராகிவிட்டதென்பதை உணர்த்துகின்றது.
அதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியாவை அடக்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இத்தகைய அவசர ஆலோசனையில் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் முப்படைத் தளபதிகளின் தலைவர் ஜோசப் டன்போர்ட் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எப்படிப் பாதுகாப்பதென ஆலோசிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
இவற்றை அடுத்து வடகொரியாவின் நான்கு கப்பல்கள் நடமாடவோ துறைமுகங்களில் தரிக்கவோ முடியாதென ஐ.நா. தெரிவித்துள்ளது. குறிப்பாக வடகொரியாவின் பெல்ரெல் -8 ஹவேபான்- 6, டோங்சான்- 2 மற்றும் ஜிசுன் ஆகிய கப்பல்கள் எந்தத் துறைமுகத்திற்கும் செல்லக்கூடாது எனத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளன.
எனவே, வடகொரியாவுடன் யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா உள்ளது என்பது புலனாகின்றது. அதே நேரம் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் சற்று எதிர்ப்பு காட்டுவது போன்றே தெரிகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தினை பாதிப்பதுடன் இதன் மூலம் அமெரிக்காவின் நிதி நெருக்கடி தீவிரமடையுமென பொருளாதாரவாதிகள் வெளிப்படுத்துகின்றனர். இதேவேளை அமெரிக்காவின் நடவடிக்கையால் தனது இறைமைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீனா முறையிட்டுள்ளது. குறிப்பாக தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா போர்க் கப்பலை அனுப்பியதன் மூலம் தங்கள் நாட்டு இறைமையை அமெரிக்கா மீறியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இது வடகொரியா பொருத்த விடயமாகவும் சீனா கருதுகிறது. காரணம் இப்பிராந்தியத்தில் தனித்துவமாக ஆதிக்கம் செலுத்திய சீனாவுக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் நடவடிக்கை. எனவே தான் தனது இறையாண்மையை முதன்மைப்படுத்தியுள்ளது. மேலும் தென்சீனக் கடலை யுத்தம் காரணமாக அமெரிக்கா பயன்படுத்திவிடுமென சீனா கருதுகின்றது. அவற்றை விட இந்த யுத்தத்தைத் தனது விருப்புக்கு அமைவாக நடத்தவேண்டுமென சீனா திட்டமிடுகிறது. இந்த யுத்தத்தில் அமெரிக்காவை முழுமையாக ஈடுபடுத்துவதன் மூலம் அதன் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென கணக்குப் போட்டு சீனாவும் ரஷ்யாவும் செயல்படுகின்றன. இதில் ரஷ்யாவை விட சீனாவே அதிக அக்கறை கொண்டு செயல்படுகிறது.
அமெரிக்க வடகொரிய யுத்தம் நீண்ட காலத்தைக் கொண்ட யுத்தம் எனலாம். கடந்த நூற்றாண்டிலும் இப்படியான ஒரு யுத்தத்தை எதிர் கொண்ட நாடுகள் என்ற வரிசையில் மிக நிதானமானதாக எதிர்கொள்ள இரு தரப்பும் திட்டமிடுகின்றன. கடந்த யுத்தத்திலும் சீனாவே யுத்தத்தை நிர்ணயிக்கும் சக்தியாகக் காணப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த யுத்தத்திலும் சீனாவே தீர்மானமெடுக்கும் சக்தியாக மாறவுள்ளது. ஆனால் அன்ைறய சீனாவும் அமெரிக்காவும் இன்றய நிலையில் வளர்ந்த நிலையில் உள்ள நாடுகள். அனேக யுத்தங்களை எதிர் கொண்டு வெற்றி பெற்ற நாடுஎன்ற வகையில் அமெரிக்காவின் பலமும் சாதரணமானதல்ல. ஆனால் இது சீனாவின் பிராந்தியம் என்ற வகையில் அதன் புவிசார் அரசியல் பலம் தனித்துவமானது.
வடகொரியாவின் அணுவாயுத பலம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை பலம் தற்போது உறுதிப்படுத்தாத போதும் நீர்மூழ்கியின் கடல்பலம் என்பனவற்றுடன் செயல்பட போர் புரிய முனையும் அமெரிக்காவுக்கு இன்னொரு சவால் சீனாவின் நிலைப்பாடாகும்.
அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாடு யுத்தத்திற்கானதாக மாறிவிட்டது என்பது போரை தவிர்க்கமுடியாததாக ஆக்கிவிடும். அதன் விளைவுகள் தனித்து இத்தகைய நாடுகளுக்கு மட்டுமுரியதல்ல. முழு உலகத்திற்குமானது.