![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2017/10/29/w0_0.jpg?itok=Ug4Sc9vn)
யாழ்.பல்கலைக்கழகம்
சீனாவின் ஜனாபதியாக ஜின்பிங் பதவி ஏற்றது போல் ஜப்பானிய பிரதமர் ஷன்சோ அபேவும் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆனால், சீன ஜனாதிபதி மீளவும் அமைதிக்கான பயணத்தை வெளிப்படுத்த, பிரதமர் அபே யுத்தத்துக்கான பயணம் ஆரம்பமாகுமென தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 465 நாடாளுமன்ற ஆசனங்களில் அபேவின் ஆட்சியான தாராள ஜனநாயகக் கட்சி 311 ஆசனங்களை (2017) கைப்பற்றியுள்ளது. இது அறுதிப் பெரும்பான்மையாகும். ஷின்சோ அபேவின் வெற்றிக்குப் பின்னால் உள்ள இராணுவ அரசியலை நோக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
உலக வரலாற்றில் ஜப்பானுக்கு எப்போதும் தனித்துவமான இடம் உண்டு. ஆசியா தேசிய வாதங்களில் சிறப்பானதும் தனித்துவமானதாகவும் மதிக்கப்படும் தேசிய வாத உணர்வு அவர்களிடம் காணப்பட்டதே காரணமாகும். இரண்டாம் உலக யுத்தம் வரை அத்தகைய அந்நியருக்கு அடிபணியாத மற்றும் விட்டுக் கொடுக்காத உணர்வு உள்ளவர்களாக ஜப்பானியர் காணப்பட்டனர். சாம்பல் மேட்டிலிருந்து உலகப் பொருளாதார வல்லரசாக எழுச்சி பெற அத்தகைய தேசிய உணர்வே காரணமாகியது. அந்நியரின் பாதங்கள் தமது மண்ணில் பட்டுவிடக்கூடாதெனக் கருதியதால் கடலில் வைத்து திறை செலுத்தியவர்கள் ஜப்பானியர்கள். அதனால் தான் அணு குண்டடிபட்டும் எழுந்து நின்றவர்கள்.
இரண்டு உலக யுத்தங்களிலும் அவர்களது அதிதீவிரமான நடவடிக்கையை கட்டுப்படுத்த அமெரிக்கா பல ஆக்கிரமிப்புக்களை அவர்கள் மீது திணித்தது.
குறிப்பாக அணுகுண்டை வீசியது, பொருளாதார தடைகளை பிரகடனப்படுத்தியது. அடிமைப்படுத்தியது, ஜப்பானுக்கான அரசியல் அமைப்பில் இராணுவ ரீதியான தடைகளை முதன்மைப்படுத்தியது என்பவற்றுடன் போரை முற்றாக தவிர்க்க யாப்பிலுள்ள சரத்துக்களை பலமானதாக்கியது. அதுமட்டுமன்றி ஒக்கினாவைக் கைப்பற்றி அமெரிக்கா இராணுவ கடற்படைத் தளங்களை அமைத்து இன்றுவரை ஆக்கிரமித்து வருகின்றது.
ஆனால், இத்தகைய அமெரிக்காவின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்து விட்டது. தென்சீனக்கடல் விவகாரத்திலும் சீனாவின் ஆகாய பரப்பில் பிற விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்ததன் பின்பு அமெரிக்காவின் ஜப்பான் பொறுத்த கொள்கையில் மாற்றம் நிகழ ஆரம்பித்தது. அதிலும் தனது படை முகாம்களை நீக்காது, கண்காணிப்பினை நீக்காது, ஜப்பானை இராணுவ ரீதியாக பலப்படுத்த திட்டமிடுகிறது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு ஜப்பான் ஆயுத தளபாடங்களைப் பிற நாடுகளிடமிருந்து கொள்வனவு செய்த அமெரிக்கா தற்போது அத்தகைய தடையை நீக்கியுள்ளது. ஜப்பானை இராணுவ ரீதியில் பலப்படுத்துவதன் மூலம் சீனாவை கையாள முடியுமென அமெரிக்கா கணக்குப்போடுகிறது.
ஜப்பான் மட்டும் அல்ல தென்கிழக்காசிய, கிழக்காசிய வட்டாரத்தில் சீனாவிற்கான எதிரிகளை வளர்ப்பதன் மூலம் சீனாவினை மட்டுப்படுத்த முடியுமென அமெரிக்கா திட்டமிடுகிறது. இதில் ஜப்பான் முதல்தரமான நாடாக அமெரிக்காவிற்கு உள்ளது. ஜப்பானியரிடம் ஏற்பட்ட மாறுதல்கள் அமெரிக்க மக்கள் போன்ற செயற்பாடுகளால் அமெரிக்கா ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து பணிபுரிய விரும்புகின்றது. இதில் ஒர் அங்கமே அபேவின் பிரதமருக்கான முன் கூட்டிய தேர்தல் ஆகும். ஏறக்குறைய ஒரு வருடம் இருக்கும் போதே ஜப்பானில் தேர்தல் நடத்துவது என்பது அதிசயமானது தான். அனேகமான பிரதமர்கள் முழுமையான காலத்தினைப் பூர்த்தி செய்ய முடியாது இடைத் தேர்தல் நடைபெறுவதே வழமையான விடயம். இது சற்று வேறுபட்டது. அதற்கான காரணம் ஜப்பானை இராணுவ ரீதியிலும் போருக்கும் கொண்டு செல்ல வேண்டுமாயின் அமெரிக்கா வரைந்த சட்டத்தை மாற்ற வேண்டும். 1947 ஆம் ஆண்டு வரையப்பட்ட சட்டத்தின் 9வது சரத்தின் கீழ் போரை தவிர்க்க வேண்டும் என்ற சரத்தினை மாற்ற வேண்டுமாயின் பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை ஆதரவு அவசியமானது. அதனை அடைவதற்காகவே அபே தேர்தலை முன் கூட்டியே நடத்தினார். அமெரிக்கா கொண்டுவந்த விதியை அமெரிக்காவே மாற்ற வேண்டிய உலகச் சூழல் ஏற்பட்டுவிட்டது.
காரணம் வடகொரியாவின் நடவடிக்கையை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசியல் அமைப்பு 9வது சரத்து தடையாக உள்ளது. அதனைப் பகிரங்கமாக அறிவித்த அபே, மக்கள் ஆதரவை அதன் மூலம் ஈட்டிக்கொண்டார். தேர்தலுக்கு முன்பே அபேக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என கருத்துக்கணிப்புக்கள் தெளிவுபடுத்தியிருந்தன. அதனை ஆதரமாக கொண்டே அபே தேர்தலில் நின்றதுடன் வெற்றி பெற்றதற்கான தேர்தலாகவே இது அமைந்தது. அபேவின் வெற்றி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன் பின்பு தான் தேர்தலே நடைபெற்றது.
இது யப்பான் தனித்து நிகழ்த்திய தேர்தல் கிடையாது அல்லது அபே தனது வெற்றி வாய்ப்பினை கணித்து நிகழ்த்திய தேர்தல் கிடையாது அல்லது அமெரிக்காவின் போர் அவாவைப் பூர்த்தி செய்வதற்கான தேர்தல் கிடையாது. வட கொரியாவின் மீது போர் புரிவதற்கான தேர்தல் மட்டும் கிடையாது. எல்லோரது தேவைகளையும் நிறைவு செய்யும் தேர்தலாக அமைந்துள்ளது. எல்லாவற்றையும் கடந்து அமெரிக்காவின் நலன்களுக்கான தேர்தலாகவே அதிகம் கணிக்கப்படுகிறது. காரணம் அமெரிக்காவின் நலனுக்காக ஜப்பானை வடகொரியா மீதும் அதனூடாக சீனா மீதும் ஏவிவிட அமெரிக்கா முனைகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அதற்கான நியாயப்பாடே அதிகமாக உள்ளது.
சீனாவின் பொருளாதார பாய்ச்சலும் அதன் ஒரே சுற்று, ஒரே பாதை என்பதும் அமெரிக்காவின் உலகளாவிய நடவடிக்கைக்கு அதிக நெருக்கடியாக அமைந்துள்ளது. இதில் வடகொரியாவை வைத்து அமெரிக்காவை கையாள முனையும் சீனாவை அமெரிக்கா எதிர் கொள்ளத் திட்டமிட்டது. அதாவது யப்பானை வைத்து சீனாவை கையாள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கான வாய்ப்பாகவே அபே பார்க்கப்படுகின்றார்.ஜப்பானும் வடகொரியாவும் ஒரே பலியிடலுக்கான நாடுகள் தான் என இரு பெருவல்லரசுகளும் திட்டமிடுகின்றன.
அபேவின் நோக்கம் இந்தச் சூழலில் ஜப்பான் மீதான இராணுவ ரீதியான தடைகளை முற்றாக தகர்க்க முடியுமென கருதுகின்றார். அமெரிக்காவின் பொம்மையாக செயல்பட்டேனும் அத்தடையை தகர்க்க வேண்டுமெனக் கருதுகின்றார். இதனால், யப்பானிய இராணுவ கட்டமைப்பு மாறுவதுடன் நவீனமயப்படுத்துவதும் வேகமாக தொழில்பட வைப்பதும் இலகுவானது. யப்பானை இலகுவில் தூண்டி விட முடியும்.
யப்பானுடைய வளர்ச்சியானது எதிர்காலத்தில் ஆபத்தானதாகவே அமையும். காரணம் யப்பானியர் இன்றும் தீவிர செயல்பாட்டுடனே காணப்படுகின்றனர். இதில் யப்பான் நிமிர்வடையுமாயின் உலகளாவிய போட்டி அரசாக மாற்றமுறும். அப்போது நெருக்கடிக்கான சூழலைச் சந்திக்கும். சாதாரணமாக வடகொரியாவுடன் மோதுவது பற்றிய உரையாடலை அபேவே ஆரம்பித்து வைத்துள்ளார். வடகொரிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க தயார் என்ற அறிவிப்புடனேயே அபே தேர்தலில் ஈடுபட்டார். ஜப்பானை யுத்தத்திற்காகத் திறந்து விடுவதன் மூலம் தான் உலகம் அதனை கண்டு கொள்ள வேண்டுமென்றில்லை. அதன் இராணுவ பலத்தினை முதல் இரண்டு யுத்தத்திலும் பார்க்க முடிந்தமை மறுக்க முடியாது.
எனவே, பிரதமர் அபேவின் தேர்தல் வெற்றியானது இராணுவ ரீதியில் பிராந்திய ஆதிக்கத்தையும் சர்வதேச பலத்தையும் அதிகரிப்பதற்கானதே. ஜப்பான் மீதான தடை தளர்த்தப்படுமாயின் அனைத்து நாடுகள் மீதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திறனுடையது என்பதை உணர வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது.