ட்ரம்ப்பின் சீன விஜயம் உலக ஒழுங்கை மாற்றுமா? | தினகரன் வாரமஞ்சரி

ட்ரம்ப்பின் சீன விஜயம் உலக ஒழுங்கை மாற்றுமா?

அமெரிக்க ஜனாதிபதியின் டொனாட் ட்ரம்பின் ஆசிய விஜயம் அதிக அரசியல் சர்ச்சையினை ஏற்படுத்தி வருகிறது. ஐந்து நாடுகளுக்கான உத்தியோக பூர்வ பயணமானது ஆசியாவின் முக்கியத்துவத்தினையும் அமெரிக்காவின் கொள்கையினையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் ஆசிய பயணத்தினால் சீனாவுக்கான பயணம் அதிக எச்சரிக்கையைத் தந்துள்ளது. அதனை மையப்படுத்தியதாக இக்கட்டுரை அமந்துள்ளது.

உலகிலேயே முதன்மை தேசமாக எழுச்சியடையும் சீனாவை பலவீனப்படுத்த ஜப்பானைத் திட்டமிட்டு வளர்க்கும் அமெரிக்கா ஜப்பானுடனான தனது நட்பினை சீனாவுக்கும் உலகத்திற்கும் தெரியப்படுத்துவது போன்று அவரது விஜயம் அமைந்திருந்தது.

ஆசியப் பிராந்தியத்திலேயே போர் பதற்றமும் பொருளாதார வர்த்தக வளர்ச்சியும் அதிகமுள்ள பிராந்தியம் இதன் கிழக்கு மற்றும் கிழக்காசியாவாகும். அதிலும் கொரியக்குடா, தென்சீனக்கடல், கிழக்கு சீனக்கடல் பகுதிகள் அதிக நெருக்கடி மிக்க பகுதியாகும். இப்பிராந்தியத்தில் சீன – எதிர் அமெரிக்கா எனும் போக்கே வளர்ந்துள்ளது. இங்கு சீனாவின் நடவடிக்கைக்கு எதிரான அணியொன்றினைப் பலப்படுத்துவதே அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும். அதற்கான நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வரும் அமெரிக்கா ஜப்பானுடனான நட்பினை அதிகம் கடைப்பிடித்து வருகிறது.

ஜனாதிபதி ட்ரம்பின் ஆசிய நாடுகளுடனான உரையாடல் முழுவதும் வடகொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை போன்றே அமைந்திருந்தது. அது சீனாவுக்கும் எதிரானதே. போருக்கு அமெரிக்கா தயாராகி விட்டது என்பதை ட்ரம்பின் ஜப்பான் உரை வெளிப்படுத்துகின்றது. அவரது ஆசிய விஜயத்தில் தேர்ந்தெடுத்த நாடுகளும் சீனாவுக்கு விரோதமான அல்லது பகையுடைய நாடுகளாகவே அனேகம் காணப்படுகின்றன.

அடுத்து உலக அரசியலில் முதலாவது அதிகாரம் படைத்த நாடாக எழுச்சி பெற திட்டமிடும் சீனாவுக்கான ட்ரம்பின் விஜயம் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. அதிக முரண்பாடுகள் நிலவிய போதும் வர்த்தக ரீதியிலும் பொருளாதார ஒத்துழைப்பினையும் ஏற்படுத்துவதுடன் கணனி யுத்தத்தினை கட்டுப்படுத்துவதற்கான அம்சங்களிலும் சீனாவுடன் பேசுவதனை வெள்ளை மாளிகை திட்டமிட்டிருந்தது.

இதனை சீனா தலைவர்கள் மிகச் சாதுரியமாக கையாண்டனர் என்பது அவதானிக்க வேண்டிய விடயமாகும். சீனத் தலைவர்கள் ஜனாதிபதி ட்ரம்ப்பை அவரது பாணியில் வெற்றிகொண்டனர் என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது. காரணம் ட்ரம்ப் தமக்கு விசேடமான மனிதன் என சீன ஜனாதிபதி குறிப்பிட்டமை அதிக குழப்பத்தை அமெரிக்க தரப்புக்கு ஏற்படுத்தியிருந்தது.

அதே நேரம் ட்ரம்ப் ஒவ்வொரு நிமிடமும் சீனாவில் மகிழ்ச்சியை அனுபவித்ததாக தெரிவித்தமை கவனிக்கத்தக்கது. ஆரம்பத்திலிருந்தே அதிக முரண் கொண்டிருந்த ட்ரம்ப் தவிர்க்க முடியாது சீனாவுடன் கைகோக்க வேண்டியவராக மாறியுள்ளார். சீனாவுடன் வர்த்தக உறவை அதிகம் கடைப்பிடிக்கும் உடன்பாடுகளில் கவனம் செலுத்திய ட்ரம்ப் இரு நாட்டுக்குமான வர்த்தகத்தினை 253 பில்லியனாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளார். சீனாவின் win win தந்திரோபாயத்தை அங்கீகரித்தவராக ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

The Guardian குறிப்பிடுவது போல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் விஜயம் பிரதான அமெரிக்காவின் கிழக்கு தென் கிழக்கு ஆசியாவில் தனது இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வது. இதன்மூலம் சீனாவுக்கும் அதன் தலைவர்களுக்கும் அச்சுறுத்தும் வகையில் துணிச்சலான நடவடிக்கையாக வெளிப்படுத்துவது எனக் குறிப்பிட்டது.

ஈரோசியன் இணையம் சீனா ட்ரம்ப்பின் வரவினால் உலகமுக்கியத்துவத்தினை அடைந்துள்ளதாக குறிப்பிடுவதுடன், இது சீனாவுக்கு வெற்றியான தருணம் எனக் குறிப்பிடுகிறது.

நிச்சயமாக சீனாவுக்கு சவால் விடுவதே ட்ரம்பின் விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது. ஆனால், சீனத் தலைவர்களது தந்திரம் அவரது நோக்கத்தினை தகர்த்தது. அது மட்டுமன்றி சீனாவின் வர்த்தக அணுகுமுறையைக் குறைகூற முடியாது என ட்ரம்ப் குறிப்பிட்டது அவரது கொள்கையிலுள்ள குறைபாட்டைக் காட்டியது. அது மட்டுமன்றி அமெரிக்க தரப்பின் ஆத்திரமூட்டும் வார்த்தைகள் சீனாவில் தகர்ந்தமை கவனிக்கத் தக்கது. இவற்றை எல்லாம் கடந்த நிலையில் மதிப்பிட்டால், ஒரு நாட்டுத் தலைவரின் அணுகுமுறையும் வெற்றியும் அதன் கொள்கையில் விட்டுக் கொடுக்காத தன்மையின் மூலமே உணர்ந்து கொள்ள முடியும்.

வடகொரியாவை முன்னிறுத்தி அமெரிக்கா இப்பிராந்தியத்தில் அதீத செல்வாக்கினையும் புதிய அரசியல் களத்தினையும் போர் அரங்கையும் திறக்க திட்டமிட்டது. ஆனால் வடகொரியாவைப் பற்றிய ஜின்பிங்கின் மௌனம் அதிக கேள்விகளைத் தந்தது. ஐ.நா.வை முன்னிறுத்த சீனா அதிகம் முனைந்தது. அதனை ஈரொசியன் இணையம் சீனா உலகத்திற்கு தலைமை தாங்க திட்மிட்டது வெற்றி பெற்றுள்ளதாக கூறுகிறது.

டரம்ப்ன் விஜயம் சீனா சார்பு நாடுகளானான பிலிப்பைன்ஸ் வியட்நாம் போன்ற நாடுகளும் நெருக்கமான உறவை மேற்கொள்வதாக அமைந்துள்ளது. சீனாவை அதன் பிராந்தியத்திற்குள் தோற்கடிக்க ஓர் அணியையும் அதற்கு ஜப்பானை தலைமை நாடாக மாற்றுவதில் முனைந்தது. இதற்கு இணையாக ட்ரம்ப் ஆசியாவுக்கான புதிய கொள்கை ஒன்றினை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளார். கட்டற்ற மற்றும் திறந்த இந்தோ – பசுபிக் பிராந்தியம் (Free and Open Indo – Pacific Region) என்னும் கொள்கையை அமுல்படுத்துவதில் முனைப்புக்காட்டினார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் மட்டுமே அதில் ஆசியாவுடன் அரசியல் சார்ந்து அவர் எடுத்த நடவடிக்கைகள் மிக அதிகமானவை. குறிப்பாக 40க்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களை ஆசியா நாட்டு தலைவர்களுடன் மேற்கொண்டுள்ளார்.

10 மேற்பட்ட மேலதிக உரையாடல்களை வெள்ளை மாளிகையில் நடாத்தியுள்ளார். இதனை தனிப்பட்ட இராஜதந்திரம் என அழைப்பதுண்டு ((Personal Diplomacy). ஆசியாவுக்கான அரசமட்ட இரகசியமான தந்திரோபாயமான விடயங்களில் சிரேஷ்ட அதிகாரிகள் பதில் ஜனாதிபதி, வெளிவிவகார செயலாளர், பாதுகாப்பு, செயலாளர், வர்த்தகதுறையில் செயலாளர், ஆகியோர் நூற்றுக்கு மேற்பட்ட தடவை விஜயம் செய்துள்ளனர். அவற்றுடன் ஜனாதிபதி ட்ரம்பின் மேற்காசிய விஜயம், தற்போது கிழக்காசியா தென்கிழக்காசியப் பயணம் அமைந்துள்ளது. இவை அனைத்தும் சீன பயணத்தில் தோற்றதா என்ற கேள்வியைத் தந்துள்ளது.

எனவே, அமெரிக்காவின் பிரதான இலக்காக ஆசிய மிக நீண்டகாலமாக உள்ளது. ஏற்கனவே மேற்காசிய வகித்த இடத்தை தற்போது கிழக்காசியா தென் கிழக்கு ஆசியா பிடித்துள்ளது. சீன விஜயம் அமெரிக்காவுடனான வர்த்தக உறவை பலப்படுத்தியுள்ளது. சீனாவுக்கான உலக வல்லமையை அதிகரித்துள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ்.பல்கலைக்கழகம்

Comments