![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/03/25/w0.jpg?itok=LA6uh9Kx)
கலாநிதி கே.ரி. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்
ரஷ்ய ஜனாபதி தேர்தலில் மீண்டும் விளாடிமிர் புட்டின் ஜனாதிபதியாகியுள்ளார். அளிக்கப்பட்டுள்ள வாக்குகளில் அவர் 76.62 சதவீதத்தைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்டான பாவல் குருடின் 11.82 சதவீத வாக்கினையும் தொலைக்காட்சி அறிவிப்பாளரும், அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டவருமான செனியா சோப்சக் 1.66 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். மூத்த தேசியவாதியாக கருதப்பட்ட விளாடிமிர் சிரினேவ்ஸ்கி 5.68 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தார்.
புட்டினின் வெற்றி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலான வெற்றியா என்பதை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஜனாதிபதி பதவியில் புட்டின் நான்காவது தடவையாக வெற்றி பெற்றுள்ளார். முதல் மூன்று தடவையும் பெற்ற வாக்கு விகிதாசாரத்தைவிட அதிகமாக இத்தேர்தலில் பெற்றுள்ளார். இதனால் அவர் மீது அதிக விமர்சனமும் எழுந்துள்ளது. குறிப்பாக அவரது பிரசாரக் குழுவே இதற்கு அதிக காரணமென அவரது வெற்றி நிகழ்வில் உரையாற்றும் போது புட்டின் குறிப்பிட்டார். அக்குழுவின் வியத்தகு வெற்றி என்று இதனை வர்ணித்துள்ளது. அதேநேரம் வாக்குச் சாவடிகளில் பதிவான காட்சிகள் ரஷ்யாவின் சில நகரங்களில் முறைகேடு நிகழ்ந்துள்ளதை தெரியப்படுகின்றது. வாக்குச் சீட்டுக்களை அதிகாரிகள் நிரப்புவது போன்றும் சில காட்சிகள் பதிவாகியுள்தைாக ஊடகங்கள் கருத்துக் கூறுகின்றன. அவை உண்மையானவையா என்பதைப் பற்றி தெளிவான பதில்கள் இல்லை. ஆனால் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் எந்தவித முறைகேடும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவற்றோடு 109 நாடுகளைச் சேர்ந்த 1500 தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்குப்பதிவினை பார்வையிட்டுள்ளனர்.
இவற்றைவிட புட்டின் மீது பிரதான எதிர்க்கட்சி வேட்பாளாராரும் அக்கட்சியின் தலைவருமான அலெக்ஸி நவால்னி மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றதன் காரணமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது புட்டினது திட்டமிட்ட ெசயல் என்ற கருத்தினை முற்றாக நிராகரித்துவிட முடியாது. புட்டினை எதிர்த்து ஏழு வேட்பாளர்கள் களத்தில் நிறுத்தப்பட்ட போதும் எதிர்க்கட்சித் தலைவர் மீதே அதிக எதிர்பார்ப்பு மேற்குலகத்திற்கு இருந்தது. புட்டினின் வாக்கு வங்கியை தகர்ப்பதற்கு நிறுத்தப்பட்ட பல வேட்பாளர்களின் நிலையுடன் எதிர்க்கட்சித் தலைவரின் வெற்றியைமேற்குலகம் எதிர்பார்த்திருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாதென அறிவிக்கப்பட்டதுடன் மேற்கு ரஷ்யாவின் தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. தவிர்க்க முடியாது ஏனைய வேட்பாளர்களை நிறுத்திய போதும் அவர்களால் சொற்பவாக்குகளாயே பெறமுடிந்தது.
புட்டினின் வாக்குப் பலம் என்பது அரச இயந்திரத்தினை அவர் தனக்குச் சாதகமாக பயன்படுத்தியமையே என்று ஊடகங்கள் சொல்கின்றன. அது மட்டுமன்றி சுயேட்சை வேட்பாளராகவும் புட்டின் களமிறங்கியிருந்தார். செல்வாக்குமிக்க தலைவாராக அறியப்பட்டதுடன் ரஷ்யர்களிடம் காணப்பட்ட அமெரிக்க எதிர்ப்பு மனோநிலையை புட்டின் நன்கு பயன்படுத்தியிருந்தார். குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிரானவர், அமெரிக்க ஆட்சியை தீர்மானித்தவர் ஹைப்பர் சொனிக் ஏவுகணைப் பரிசோதனை மூலம் அமெரிக்காவுக்கு சவாலான உலகத்தை உருவாக்கியவர் என்பன உட்பட அமெரிக்காவுக்கு எதிரான ஆயுத தளபாடங்களை உருவாக்குவதிலும், இராணுவத்தினை கட்டி வளர்ப்பதிலும் ரஷ்யாவுக்கான மீள் உருவாக்கத்தினை நிறுத்துவதிலும் வெற்றி கண்ட தலைவராகவே புட்டின் பார்க்கப்படுகின்றார்.
ரஷ்யாவையும் ரஷ்ய மக்களையும் விளங்கிக் கொள்வது கடினமானது. அந்தமக்கள் உலகத்தில் இரு வேறுகண்டங்களின் இயல்புகளை பிரதிபலிப்பவர்கள். ஈயூரேசியாக் கண்டம் என புராதன காலத்திலிருந்தே அழைக்கப்படுகிறது. அதன் மக்களது இயல்பும் வெளிப்பாடும் அவர்களது பாதுகாப்பை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. ஒரே காலநிலைக்குள் உட்படாத தேசம். கிழக்கில் குளிரும் மேற்கில் வறட்சியும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் மக்கள் ரஷ்யர்களாவர். அவர்களது அரசியல் இருப்பினையும் உலகத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்த மைக் கிண்டர் இரு நிலக் கோட்பாட்டினை முன்வைத்தார். இதனால் ரஷ்யர்கள் எப்போது உலகத்தில் ஆதிக்கவாசிகளாக அதிலும் மேற்குலகத்தில் எதிரானவர்களை உருவாக்குவதில் முனைப்பு செலுத்துபவர்களாக உள்ளனர்.
மேற்குலகத்திற்கு புட்டினின் வருகை ஆபத்தான செய்தியாகும். அமெரிக்கர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிகம் தலையீடு செய்த புட்டினை தோற்கடிக்க முடியவில்லை என்பது வருத்தமான தகவல். அது மட்டுமன்றி புட்டின் மேற்காசிய பிராந்தியத்திலும் கிழக்கு ஐரோப்பாவுக்குள்ளும் ஏற்படுத்திவரும் அமெரிக்காவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை ஆபத்துமிக்கதாக அமெரிக்கா கருதுகிறது. வீட்டோஅதிகாரத்துடன் நிலையான அரசாக மாறுதலடையும் ரஷ்யாவின் தலைமைத்துவத்தைஅமெரிக்காவால் அசைக்கமுடியவில்லை. இது அமெரிக்க பிராந்திய சர்வதேச நலன்களுக்கு சவாலானதாகவே உள்ளது.
இப்பத்தி எழுதப்படும் வரை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் நான்காவது தடவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. அது மட்டுமன்றி அமெரிக்கன் போஸ்ட் பத்திரிகை புட்டினுக்கு வாழ்த்துக்கு பதில் எச்சரிக்கை என்ற செய்தியை தந்துள்ளது. இதனால் புட்டினை விரும்பாத தலைவராக நினைகிறது அமெரிக்கா. பிரிட்டனுடனான உளவாளிகளது விவகாரமும் மேற்குலத்தில் புட்டினை சர்ச்சையானவராக்கியுள்ளது. அமெரிக்காவுடன் மட்டுமன்றி மேற்கு ஜரோப்பிய நாடுகளுடனும் பகைமையை கொண்டுள்ளவராக புட்டின் காணப்படுகின்றார்.
இத்தகைய அச்சம் எல்லாம் ரஷ்யாவை வல்லரசாக மாற்றிவிடும் வல்லமை புட்டினுக்கு உண்டு என்பதற்கானதே. புட்டினது இருப்பை பலப்படுத்தும் விதத்தில் சீனாவின் தலைமையும் நடந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. புட்டினை வாழ்த்தியுள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரஷ்யாவுடன் நல்ல உறவு நிலவி வருகிறது” என்கிறார். அவ்வாறே கசகஸ்தான், பெலாரஸ், வெனுசுவேலா, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நாடுகள் பனிப்போர்க் காலத்தில் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டவையாகும். ஏறக்குறைய கம்யூனிஸ கருத்துக்களால் கவரப்பட்டவை என்பதும் கவனிக்கதக்கது.
உலக ஒழுங்கில் சீனா ஒரு புதிய வடிவத்தினை உருவாக்கப் போவதாக ஜின்பிங் அண்மையில் தெரிவித்திருந்தார். அதற்கு வேண்டப்படும் முக்கிய நாடு ரஷ்யாவும் அதன் தலைவர் புட்டின் என்பதும் குறிப்பிடத்தக்கது. புட்டினது மேற்குக் எதிரான கடும்போக்கும் சீனாவின் மென்போக்கும் ஒரே திசையில் பயணிக்கின்றது.
இதனை அமெரிக்க அடங்கிய மேற்குலகத்தால் முறியடிக்க முடியவில்லை என்பதே இதன் சாரம்சமாகும். இத்தகைய இழுபறிக்குள் உலகம் இயங்கிய போதும் ரஷ்ய மேற்குலக முரண்பாட்டை பயன்படுத்திக் கொண்டு சீனா முதல்தர வல்லரசாக மாறி வருகின்றது என்பதையே அவதானிக்க முடிகின்றது.
எனவேதான் ரஷ்யாவுடனான வரலாற்றில் என்றுமில்லாத உறவென ஜின்பிங் வாழ்த்தியுள்ளார். BRICS அமைப்பின் தலைமைக்குள் வகிக்கும் சீனாவின் பங்கு ரஷ்யாவின் பொருளாதார தேவையை சாத்தியப்படுத்துகின்றது. இதனாலும் கிழக்கு ஜரோப்பாவுடனான வர்த்தக, பொருளாதார, ஒத்துழைப்பினாலும் ரஷ்யாவின் பொருளாதார தேவை சாத்தியமாகின்றது.
எனவேதான் சீனாவின் இராணுவ வளர்ச்சியும், ரஷ்யாவின் வளர்ச்சியும் ஒன்று சேர்ந்து மேற்கினை நிராகரித்து வருகின்றது. மேற்குலகத்தின் அடாவடித்தனத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் கூட்டாக இரு சக்திகளும் இயங்கி வருவதுடன் புட்டின் - _ ஜின்பிங் அணி மேற்கினை நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது. ஆட்சியிலும் இரு நாட்டுத் தலைவர்களும் ஆயுட்கால தலைவர்களாக மாறியுள்ளமை மேற்குலகின் அரசியல் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும்.
21ம் நூற்றாண்டு ஆசியாவுக்குரியது என வரையறுத்த கோட்பாட்டுவாதிகளுக்கு யதார்த்த வடிவம் கொடுக்கும் தலைவர்களாக புட்டின் - _ ஜின் பிங் காணப்படுகின்றனர்.