![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/04/01/w0.jpg?itok=iJ8_FTb-)
மேற்கத்தேச ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் வடகொரிய ஆட்சியாளர் பற்றிய தவறான ஊகங்களை கடந்த பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வந்தன. அவை அனைத்தையும் தகர்க்கும் விதத்தில் அமெரிக்காவுடன் பேசவும் அணுவாயுதங்களையும்,ஏவுகணைகளையும் பரிசோதிக்கும் நடவடிக்கையை மட்டுப்படுத்த உள்ளதாகவும் ஜனாதிபதி உன் அறிவித்தார். இதன் பிரதிபலிப்பாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பில்லாந்தின் தலைநகரான கெல்சிங்கில் முதல் கட்டசந்திப்பு நிகழ்ந்தது. அமெரிக்கா, வடகொரிய, தென்கொரிய அதிகாரிகள் இரு நாட்கள் சந்தித்து பேசியுள்ளனர். 18 பேர் அடங்கிய குழுவின் உரையாடல் ட்ரம்ப் -ஹிம் சந்திப்புக்கான முன் முயற்சியாக கருதப்பட்டது. அந்தசந்திப்பில் வடகொரிய வெளிவிவகார அதிகாரிகளுக்கு திருப்தி இல்லாது விட்டாலும் பேச்சுக்களை குழப்பாது நடந்து கொண்டதை காணமுடிகிறது.
இத்தகைய இராஜதந்திர முயற்சியை அடுத்து தென்கொரிய தலைமை வடகொரிய தலைமையுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டுமென கோரியிருந்தது. அதனை ஏற்றுக்கொண்ட வடகொரிய ஜனாதிபதி உன் அதற்கான பூர்வாங்க நடவடிக்கைக்கு வழிவகுத்தார். அதன் பிரகாரம் இரு நாட்டுஉயர் அதிகாரிகளுக்கிடையே கடந்த வாரம் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு வடகொரியா சம்மதம் தெரிவித்தது. இதனை அடுத்து இரு நாட்டிலுமாக ஆறு அதிகாரிகள் அடங்கிய குழு உரையாடியுள்ளது. கடந்த மார்ச் 29 திகதி சமாதான எல்லைக் கிராமமான பான்முன் ஜோவில் சந்தித்துள்ளனர். இதன் போது வட–தென் கொரிய தலைவர்களது ஏப்ரல் மாத சந்திப்புக்கான ஆயத்தங்கள் பற்றிய ஆலோசனைகள் நடந்தேறியுள்ளன.
இத்தகைய வட−தென் கொரிய சந்திப்புக்கான கோரிக்கைகள் தென் கொரியாவின் தந்திரமாக அமைந்தாலும் அமெரிக்காவினது நோக்கத்தினை சரிசெய்வதற்கான சந்திப்பாகவே உள்ளது. காரணம் அமெரிக்க காங்கிரஸ் தரப்பினரது எச்சரிக்கையை அடுத்து உடனடியாகவும் முதல் சந்திப்பாகவும் அமெரிக்க ஜனாதிபதி–வடகொரிய ஜனாதிபதி சந்திப்பு அமையக்கூடாதென கருதினர். இதனாலேயே வட–தென் கொரிய சந்திப்புக்கு தயாராகின. அதில் வடகொரியாவின் நடவடிக்கை எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்தும் உரையாட வேண்டிய விடயம் பொறுத்தும் சரியான உத்திகள் வகுப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அத்தகைய நடவடிக்கையை மிக இலகுவாகவும் எந்தவித முரண்டுபிடிப்புமின்றி வடகொரியா ஒப்புதல் அளித்தமை வடகொரியத் தரப்பின் உத்தியைதெளிவாக உணர வைக்கின்றது. அதுமட்டுமல்லாது ஜப்பானையும் இணைத்துக் கொள்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்ற சாரப்பட வடகொரிய வெளிவிவகார அதிகாரிகள் தெரிவித்தமை கவனிக்கத்தக்கது. இதன் மூலம் பேச்சுவார்த்தை சாத்தியமாக வேண்டும் என்பதில் கவனமாக வடகொரியத் தரப்பு செயற்படுகிறது.
பொதுவாக சர்வதேச அரசியல் தந்திரங்களாலும் சூழ்ச்சிகளாலும் நகர்த்தப்படுவதுண்டு. அதிலும் மேற்குலகம் மிகத் தந்திரமாகவே ஒவ்வொரு நகர்வையும் மேற்கொள்ளும். அதனை எதிர்கொள்வதென்பது தனியான கலையாகும். அமெரிக்காவைப் பொறுத்தவரை போரில் சரிப்படுத்த முடியாதுள்ள ஒவ்வொரு விடயத்தையும் பேச்சுவார்த்தை மேசையில் வைத்து தந்திரத்தினால் கையாளும் திறனைக் கொண்டது. வடகொரியாவை ஈராக்,லிபியத் தலைவர்களை வீழ்த்தியது போல் வீழ்த்தி விடமுடியாது என்பதை உணர்ந்து கொண்டதன் பிரதிபலிப்பே பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. பேச்சுவார்த்தை மேசையிலேயே வடகொரியாவை கையாள முடியுமென்ற அடிப்படையில் சந்திப்புக்கள் அரங்கேறி வருகின்றன.
இவ்வகை நகர்வில் ஒன்றாகவே உன்னின் சீன விஜயம் பார்க்கப்பட வேண்டும். தென்கொரிய பேச்சுவார்த்தை குழுவினர் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களது உரையாடலை கடந்த மாதம் மேற்கொண்டன. வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை பற்றியும் அதன் உத்தரவாதங்கள் பற்றியும் அந்தநாடுகளுக்கு எடுத்துக் கூறினர். அவ்வாறான ஒருமுயற்சியாகவே உன்னின் சீன விஜயம் அமைந்துள்ளது.
அவர் அங்குவிடுத்துள்ள அறிவிப்பானது அமெரிக்க, தென்கொரிய வடகொரியாவின் நல்லெண்ண முயற்சிக்குஒத்துழைத்தால் அணுவாயுத சோதனை விவகாரம் தீர்க்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதில் அணுவாயுத சோதனை விவகாரம் தீர்க்கப்படும் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இன்னோர் அர்த்தத்தில் பார்த்தால் அணுவாயுத பலத்தின் மீது நின்று கொண்டு நல்லெண்ண முயற்சியில் வடகொரியா ஈடுபடுவதாகவும் அதன் சோதனையை எதிர்காலத்தில் மேற்கொள்ளாது கைவிடலாம் என்றும் குறிப்பிட்டதுடன் சமாதானமான ஒத்துழைப்பு அமெரிக்க,தென்கொரியா தரப்பிலிருந்து கிடைத்தால் மட்டுமே என்பதையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. அத்தகைய தகவலை சீனாவில் போய் வெளிப்படுத்துவ தென்பது தென்கொரியாவுக்கு அமெரிக்காபோல் வடகொரியாவுக்கு சீனா என்கின்ற செய்தியையும் மறைமுகமாக தெரியப்படுத்தியுள்ளது.
அத்தகைய உறவை வெளிக்காட்டும் விதத்தில் உன் கருத்துக்கள் அமைந்துள்ள குறிப்பாக “இது தான் எனது முதல் சீனப் பயணம். வடகொரிய–சீன நட்புணர்வை மதித்து நடப்பது எனது வாழ்வின் உன்னத கடமைகளில் ஒன்றாகும்” எனக் கூறியுள்ளார். அவ்வாறே சீன ஜனாதிபதி இச்சந்திப்பினை Great hall of the people அரங்கில் ஏற்பாடு செய்திருந்தார். இது வரலாற்று முக்கியத்துவமிக்க அரங்கம் என்பதுடன் பிறநாட்டுத் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் உயரிய கெளரவமாகவும் கருதப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதே அரங்கிலே வரவேற்கப்பட்டார்.
இரு நாட்டு தலைவர்களது சந்திப்பின் போதும் அமெரிக்க - வடகொரியப் பேச்சுவார்த்தை பற்றியும் கொரியக் குடாவில் நிலவிவரும் சமாதானத்திற்கான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
எனவே அமெரிக்க–வடகொரியப் பேச்சுவார்த்தைக்கு முன்பான தயார்படுத்தல் என்பதற்கான திட்டமிடல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனை எப்படி கையாளவேண்டும் என்பதனையும் சீனப் பயணம் காட்டியுள்ளது. அமெரிக்காவுக்கும்,தென்கொரியாவுக்கும் விசேடமாகவும் உலகத்திற்கு பொதுவாகவும் செய்தியைவெளிப்படுத்திய பயணமாக அமைந்துள்ளது.
வடகொரியா மிகச்சிறியநாடு. பொருளாதாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் பலவீனமான தேசம். சர்வாதிகார ஆட்சி நிலவுவதாக மேற்கு குற்றம்சாட்டும் நாடு. வறுமையும் பொருளாதார நெருக்கடியும் அதிகமுள்ள நாடு. ஆனால் இராஜதந்திரத்தையும் இராணுவத்தையும் முதலீடாகக் கொண்டு நிமிரமுயலுகின்ற நாடு. அணுவாயுத பலத்தை வைத்துக்கொண்டு தனது தேசத்தை நிரந்தரமாக பாதுகாக்க முடியுமென்ற நிலையை ஏற்படுத்தியதுடன் அதனை பயன்படுத்தி பொருளாதார−அரசியல் உறுதிப்பாட்டை சாத்தியப்படுத்த முயலுகின்றது.
இதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி வடகொரியத் தலைவரை சந்திப்பதற்கு ஆர்வமாக உள்ளார் என்ற செய்தியை உன் சீன விஜயம் நிறைவு பெறும் சந்தர்பத்தில் தெரிவித்துள்ளார் என்பதுவும் கவனத்திற்குரிய விடயமாகும். இது உன்னின் விஜயத்தின் பாதிவழியை பூர்த்தி செய்துள்ளதை உணர்த்துகின்றது.