![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/04/08/F-3.jpg?itok=eAoLxmH2)
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம், யாழ்.பல்கலைக்கழகம்
சீன அமெரிக்க வர்த்தக போர் இரு நாடுகளுக்குமிடையிலான அரசியலை பலியிட ஆரம்பித்துள்ளது. இதன் எல்லை மாற்றத்துக்கான அடிப்படையை ஏற்படுத்தக் கூடியதாக அமையவுள்ளது. உலக அரசியலில் முதல் இரண்டு இடத்தையும் நிரப்பி வரும் அமெரிக்காவும் சீனாவும் தமக்கிடையே மறைமுகமான ஒரு போரை இதுவரை பின்பற்றின. அதுகூட பரஸ்பரம் இருவருக்கும் இலாபகரமானதாகவே அமைந்திருந்தது. இரு நாடுகளுக்குமான வர்த்தக போட்டியின் பிரதிபலிப்புக்களை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதே ட்ரம்ப் சீனாவின் வர்த்தக கொள்கையை கடுமையாக விமர்சித்தார். ட்ரம்ப் ஒரு வர்த்தகர் என்ற அடிப்படையில் அமெரிக்காவின் வர்த்தக கொள்கையை சீனா தவறாக பயன்படுத்துகின்றது என்பதை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அமெரிக்கா ஒரு வல்லரசு என்ற அடிப்படையில் இத்தகைய கொள்கையை இரகசியமாகவும் தந்திரமாகவும் பின்பற்றுகின்ற வழமை காணப்பட்டது. ட்ரம்பின் வருகைக்கு பின்பு அவை அணைத்தும் டுவிட்டர் மூலம் அம்பலமாகியது. இரகசியங்கள் அனைத்தும் பரகசியமாக்கப்பட்டு நடைமுறைக்கு சாத்தியமற்றதாக்கியது. சீனாவின் வளர்ச்சிக்கு எதிராக சாதாரண வர்த்தகராக, முதலாளியாக, கொடுக்கல் வாங்கல் முகவராக, ட்ரம்ப் செயல்பட்டாரே அன்றி அமெரிக்க வல்லரசின் ஜனாதிபதியாக அல்ல. இதுவே அமெரிக்காவில் நிலவும் குழப்பத்திற்கெல்லாம் அடிப்படையாகும்.
சீன அமெரிக்க வர்த்தக போரின் ஆரம்பத்தினை அமெரிக்காவே தொடங்கியது. சீனாவின் முறையற்ற வர்த்தகத்தினை முடிவிற்கு கொண்டுவருவதற்கே இத்தகைய அணுகுமுறை என அமெரிக்க தரப்புக் கூறிக் கொண்டாலும் சீனாவின் இலாபத்தினை மட்டுப்படுத்துவதே பிரதான நோக்கமாகும். சீனாவின் இறக்குமதிப் பொருட்களுக்கு 60 பில்லியன் டொலர் வரையான வரியினை விதித்தது அமெரிக்கா. இதனை தவிர்க்குமாறும் குறிப்பிட்ட காலம் சீனா தாமதம் காட்டியது. அப்போதெல்லாம் ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுடனான வர்த்தகப் போரை தாம் விரும்புவதாகவும் அமெரிக்கா இத்தகைய போரில் இலகுவாக வென்றுவிடும் என்று டுவிட்டர் செய்தார்.
இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 128 பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தது. இதில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அதிகம் அடங்கியிருந்தன. இந்நடைமுறை சுமார் மூன்று பில்லியன் டொலர் மதிப்பிலான இறக்குமதி பொருட்களை பாதிக்கும் என்பதனால் வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனக் குறிப்பிட்டது. சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுமாயின் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுமெனவும் அமெரிக்காவுடன் அத்தகைய போரை முடிந்தவரை தாம் தவிர்க்க விரும்புவதாகவும் சீனா பல தடவை குறிப்பிட்டது.
இன்றைய பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரம் என்பதில் மாறுபடில்லை என்றே கூறலாம். உற்பத்தி, அதன் அளவு, தரம் அனைத்துமே சந்தையைப் பொறுத்து மாறிவிட்டது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பான உலகம் சந்தையிலேயே தங்கி வருகிறது. அதன் முக்கியத்துவம் இருபத்தியோரம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. நுகர்வோரை நோக்கிய சந்தைகளின் விரிவாக்கமும் சந்தை மையமான உலகமும் வலிமையான பொருளாதார சக்தியாக உள்ளது. இதில் வர்த்தக நிலையங்களும் வர்த்தகத்திற்கான உடன்பாடுகளும் சார்ந்த ஒரு உலக உறவு அரசியலை நிர்ணயிப்பதாக மாறிவருகின்றது. நாடுகளுக்கிடையிலே கொள்கைக்கு அப்பால் வர்த்தகமும் அதற்கான சந்தையும் உறவை தீர்மானிக்கிறது. நாடுகளின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயம் செய்கிறது. நாடுகளின் இருதரப்பு, பல்தரப்பு உடன்பாடுகளும் ஐக்கியமான அமைப்புக்களும் பொருளாதார இலாபத்தை எட்டுவதற்கானதாக அமைந்துள்ளன.
உற்பத்தி ஒரு மூலையில் நிகழ உலகம் முழுவதும் அவ்வுற்பத்தி பொருள் விற்பனை மூலம் நுகர்வுக்கு சாத்தியமாகின்றது. இதனால் நாடுகள் தமக்கிடையிலான நட்புறவையும் புரிந்துணர்வையும் வர்த்தகத்தினை மையப்படுத்தியே தீர்மானிக்கின்றன. இத்தகைய இலக்கினை எட்டுவதற்காகவே சீனாவை நோக்கி அமெரிக்காவும் அமெரிக்காவை நோக்கி சீனாவும் உறவு வைத்துக் கொண்டன. சீனாவின் மறுசீரமைப்பு சிந்தனை முழுவதும் உலக அளவில் சீனாவின் பொருளாதார பாய்ச்சலை எட்டுவதாகவே அமைந்தது. அதனைப் பயன்படுத்தி சோசலிஸ முகாமை உடைப்பது என்ற அமெரிக்க எண்ணத்துடன் சீனாவின் சந்தையைப் பிடித்தல் என்பதும் முதன்மையான நோக்கமாக அமைந்திருந்தது.
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பாய்ச்சலானது இயந்திர உழைப்பின் பிரகாரம் உற்பத்தி மீதத்தை அதிகரித்தது. அத்தகைய அதிகரிப்பினை இலாபமாக்குவதற்கான சந்தையும் அதன் நுகர்வின் தேவையும் அமெரிக்காவின் சீனா நோக்கிய நட்புக்கு காரணமாகியது. தவிர்க்க முடியாது உலக சனத்தொகையில் முதல் நிலை நாடான சீனாவின் சந்தை அமெரிக்க உற்பத்திக்கான சந்தையாக அமைந்தது. இத்தகைய சந்தைகள் உருவாக்கிய பொருளாதார வளர்ச்சி சீன - இந்தியப் பொருளாதாரத்தை முதல் தரத்திற்கு போட்டியிட வைத்தது என்பது பிந்திய அபிவிருத்தியாகும். அதுவே அமெரிக்காவின் சவாலாகும். ஆனால் அத்தகைய சந்தையைப் பெறுவதற்கு அமெரிக்கா தனது முதலாளித்துவக் கொள்கையை சோஸலிய சந்தையுடன் இணைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனையும் கடந்து சீனாவுடன் உறவை வைத்துக் கொள்ள அமெரிக்க அதிக இழப்பீடுகளை சந்தித்தது.
குறிப்பாக சீனா முன்வைத்த நான்கு அம்ச மறுசீரமைப்புத் திட்டத்தையும் அமெரிக்க ஏற்றுக் கொண்டது. எப்படியாவது சீனாவுக்குள் புகுந்துவிடலாமென கணக்குப் போட்டு திட்டமிட்டு செயல்பட்டது. இறுதியில் சீனாவின் வர்த்தகத்திற்கும் சந்தைக்கும் அதன் அரசியல் திரைக்கு பின்னாலும் அமெரிக்காவின் முழுமையான இலக்கு சாத்தியமற்று போனது. அதற்காக அந்த உறவை முறித்துக் கொள்ள ஒபாமா வரை எந்த ஜனாதிபதிகளும் முன்வரவில்லை. காரணம் அது அமெரிக்காவுக்கு இரட்டை இழப்பை ஏற்படுத்தும் என்பதாகும். ஒன்று முற்றாக சீனாவை விட்டு வெளியேறுவது அல்லது சீனாவுக்கு கட்டுப்பட்டு அடிபணிந்து செயல்படுவது. இரண்டாவது அமெரிக்காவின் வர்த்தகம் சீனாவின் வரியறைவீட்டினால் பாதிக்கப்படும் என்பதாகும். அதாவது அமெரிக்காவிடமிருந்து அதிக உணவுப் பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையுமே சீனா இறக்குமதி செய்கிறது. ஆனால் சீனாவின் ஏற்றுமதி அவ்வாறானதல்ல. அதனால் சீனாவை விட அமெரிக்காவுக்கு உடனடிக் தாக்கம் சந்தைசார்ந்த இழப்பீடாக அமைய வாய்ப்பு அதிகமுண்டு.
சீனாவின் அறிவிப்பு வெளியானதும் அமெரிக்க பங்கு சந்தை சரிவை நோக்கியுள்ளது. இதனை முறையற்ற விதத்தில் சீனா ஏற்படுத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டினாலும் பிந்திய செய்தியும் அமெரிக்க புலமைசார் உரையாடலும் சீனாவுடன் பேசி முரண்பாட்டுக்கு தீர்வு காணவேண்டும் என்பதாகவே அமைந்துள்ளது. காரணம் சீனாவின் சந்தையை பெறுவதற்கு அமெரிக்கர்கள் அதிக விலை கொடுத்துள்ளார்கள். அதிலிருந்து விடுவதென்பது அந்த உத்தியுள்ள அமெரிக்கரிடமும் ஏற்படாது. உலக சந்தைக்காகவே போராடி வருகிறது. ஒரு சந்தையை பெறுவதென்பதே வர்த்தகத்தின் வெற்றியாகும். அது அரசியலிலும் பொருளாதாரத்திலும் உறுதிப்பாட்டுக்கு அத்திவாரமாகும்.
சீனா பட்டுப்பாதை வியாபாரத்திலிருந்து வர்த்தகத்திற்கான தேர்ச்சியைக் கொண்டது. பழைய பட்டுப்பாதை இந்து சமுத்திரத்தையும் ஐரோப்பா – ஆசியாக் கண்டத்தையும் ஆபிரிக்காவை இணைத்தது போல் புதிய பட்டுப்பாதை உலகம் முழுவதையும் இணைப்பதற்கான உத்தியோடு நகர்கின்றது. ஒரே சுற்று ஒரே மண்டலம் என்பதனுௗடாக உலகத்துடன் வர்த்தக உறவைப் பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இழப்பினை சீனா சரிசெய்துவிடும் என்றே கருதப்படுகிறது. அதுமட்டுமன்றி சீனாவின் யா-யா உபாயத்தினால் உலகத்தை வளைத்துப் போடுவதைப் போல் அமெரிக்காவால் முடியாது. அமெரிக்காவின் சந்தைக்கு வில்லான அரசியல் அதிகாரத்திற்கான போட்டி காணப்படுகிறது. எனவே அடிப்படையில் சீனாவுடனான வர்த்தகப் போர் உடனடியான தாக்கத்தினை அதிகம் அமெரிக்காவுக்கே கொடுக்கும். இதிலிருந்து மீள்வதற்கு உடனடியாக சீனாவுடன் நட்புறவை மீள உருவாக்க அமெரிக்க முயலும். எப்படி ரஷ்சியாவுடன் பகைத்துவிட்டு புட்டினை வெள்ளைமாளியாக அமைந்துள்ளதோ அவ்வாறே சீனாவின் களம் எதிர்காலத்தில் அமைய வாய்ப்புள்ளது. அவ்வாறு செய்ய அமெரிக்க தவறுமாயின் வர்த்தக நெருக்கடிக்குள்ளால் பொருளாதார நெருக்கடியை அமெரிக்க சந்திக்கும் நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாாது ஆகும்.
இதே போன்று சீனாவுக்கும் அமெரிக்கச் சந்தைக்கும் இழப்பீடாகவே அமையும். ஒப்பீட்டடிப்படையில் குறைவானாலும் தேர்ச்சியான நுகர்வோர், வன்நாணய பரிமாற்றம, வளர்ச்்சிக்கும் புதிய உத்திக்குமான சந்தையை இழப்பதென்பது சீன வர்த்தகத்திற்கு பாதமானதேயாகும்.
இரு நாடுகளது வர்த்தகப் போர் பரஸ்பரம் இரு நாடுகளையும் மட்டுமல்லாது உலக வர்த்தக மையத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும் அல்லது அதன் விதிகள் மீதான இறுக்கத்தினை அதிகரிக்க நிர்ப்பந்திக்கப்படும். அது முதலாளித்துவத்தின் அடுத்த உத்தியாக அமையும் போது உலக நாடுகளின் முழு உற்பத்திகளின் நிர்ணயத்தை உலக வர்த்தக மையமே கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.
எனவே இரு நாட்டுக்குமான வர்த்தகப் போர் அவற்றின் அரசியலை மட்டுமன்றி உலக அரசியலிலும் பொருளாதார தளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.