![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/04/08/W--2.jpg?itok=oj4plJJV)
அருள் சத்தியநாதன்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் தமிழகத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட மற்றும் எதிர்ப்பு அரசியல் படிப்படியாக அதிகரித்து தற்போது உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணா மறைந்த பின்னர் சிறிய இழுபறியே ஏற்பட்டது. விட்டுக் கொடுக்கக்கூடிய நெடுஞ்செழியன் 'சரி போகட்டும்' என விட்டுக்கொடுத்ததும் தமிழக முதல்வரானார் கலைஞர் கருணாநிதி. நெடுஞ்செழியன் விடாப்பிடியாக நின்றிருந்தால் முதல்வர் நாற்காலிக்கான போராட்டம் நாடு சிரிக்கும் அளவுக்கு வெடித்திருக்கும். ஏனெனில் அது தூய்மையான அரசியல் நிலவிய காலம். காமராஜர், பக்தவத்சலம், பெரியார், மா.பொ.சி., ராஜாஜி போன்ற சுயநலமற்ற அரசியல்வாதிகள் வாழ்ந்த காலம்.
எம்.ஜி.ஆர் மரணத்தின் பின்னர் அ.தி.மு.க பிளவுபட்டது. சுமார் ஒரு வருட காலத்துக்கு அரசியல் போட்டா போட்டியும் இழுபறிகளும் நிலவி சட்டசபைத் தேர்தலோடு கலைஞர் தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து, இழுபறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சி இவ்விவகாரங்களில் தலையிட்டு சுயலாபம் தேட முனையவில்லை.
தற்போது தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழல் நிலவி வருவதற்கு பிரதான காரணமாக இருப்பது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசாங்கமே தவிர வேறு எந்தவொரு காரணமும் கிடையாது. ஜெயலலிதா மறைவின் பின்னர் எதிர்பார்த்த மாதிரியே அ.தி.மு.க இரண்டாக பிளவுண்டது. அதை நீடிக்கவிட்டிருந்தால் அந்த உட்கட்சி மோதல் இயல்பான கவர்னர் ஆட்சிக்கு வழிவகுத்திருக்கும். ஒரு பெருந்தலைவரின் சடுதியான மரணத்தின் பின்னர் வெற்றிடமொன்றும், அரசியல் குழப்பங்களும், அரசியல் வர்த்தகமாகிப்போன இச்சூழலில், ஏற்படுவது இயல்பு. இவ்வாறு நிகழ்கையில் மத்திய அரசு ஒரு தாயைப் போன்ற பரிவுடன் செயல்பட வேண்டும். முன்னர் அவ்வாறுதான் செயற்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த ஒருவருட காலத்துக்குள் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் அதாவது உட்கட்சி மோதல்களை ஒரு சமரசத்துக்கு கொண்டுவர முடியாத நிலையில், அனைத்தும் சுமுகமாக முடிந்திருக்கும். மக்களின் தெரிவு எதுவோ அதுவே புதிய ஆட்சியாக மலர்ந்திருக்கும்.
ஆனால் மத்திய அரசு எரிகின்ற வீட்டில் குளிர்காய முற்படுவது போன்ற ஒரு நிலையையே தற்போது எம்மால் பார்க்க முடிகிறது. ஆரம்பத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு வழங்கி சசிகலா அணிக்கு தொந்தரவுகள் கொடுத்தது, ரெய்டுகள் நடத்தியது, பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் சசி அணியில் இருந்து எடப்பாடியை பிரித்தெடுத்து பன்னீர் அணியுடன் சேர்ந்து ஆட்சியை நடத்த உதவியது, தினகரனை வழக்கில் சிக்கவைத்து அவரைத் தனிமைப்படுத்தியது, மேலும் புதிய ஆளுநரை நியமித்து மாநில அரசுகளின் வேலைகளைப் பார்க்க வைப்பது என தனக்கு வேண்டிய மாதிரி தமிழக அரசை ஆட்டிப்படைத்து வருகிறது மத்திய அரசு.
பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியலை தமிழகத்தில் முளைவிடச் செய்ய வேண்டும் என்பதும், தமிழக அரசை தன் பொக்கட்டுக்குள் வைத்துக்கொண்டு அதன் வழியாக பா.ஜ.க அரசியலை மக்களிடம் திணித்து, நன்மைகள் கிடைக்க வேண்டுமானால் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதும்தான் புதுடில்லியின் கணக்காக இருக்கிறது. எதிர்வரும் மே மாதம் கர்நாடகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருப்பதால் அடுத்த இலக்கு தமிழகம்தான் என டில்லி கருதி, செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. எதிர்வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முடியும் என்று பா.ஜ.க நினைக்கவில்லை. முடிந்தவரை எடப்பாடி அரசை அடுத்தவருட இறுதிவரை இழுத்துச் சென்று மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அரசு என்றால் அது பா.ஜ.க.வின் ஆதரவுடன் கூடிய எடப்பாடி தலைமையிலான ஆட்சிதான் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைப்பதையே நோக்கமாகக் கொண்டு தமிழகத்தில் பா.ஜ.க காய்நகர்த்தி வருகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி என்பது தற்போது கனவாக இருந்தாலும் 2025 அல்லது 30இல் அதை நனவாக்கக் கூடும் என்பது புதுடில்லி தலைமையின் சித்தாந்தம். திராவிட சிந்தனையை படிப்படியாக நீக்கினால் பா.ஜ.க சிந்தனை வளரும் என்பதே கணக்கு. மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுபவதே மாநில கவர்னர்மாரின் பிரதான கடமையாகும். மாநில அரசு அதிகாரங்களிலோ அல்லது கடமைகளிலோ தலையிடுவது மாநில ஆளுநர்களின் வேலை அல்ல. கடந்த 70 ஆண்டுகளாக ஆளுநர்கள் இவ்வாறுதான் இருந்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்களால் ஆளப்படும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பா.ஜ.க.வினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் கிரண்பேடி அப்பிரதேச ஆட்சி அதிகாரங்களில் தொடர்ச்சியாக குறுக்கீடுகள் செய்து வருவதோடு சில மாதங்களுக்கு முன் மூன்று பா.ஜ.க.வினரை சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வரின் விருப்பப்படியே உறுப்பினர்களின் நியமனம் நடைபெற வேண்டும். எனினும் புதுச்சேரி காங்கிரஸ் முதல்வரின் கருத்தைக் கேட்காமல் மூவரை கிரண்பேடி நியமனம் செய்ததும், புதுவை சட்டமன்ற சபாநாயகர் அவர்களை சபைக்குள் விட மறுத்து விட்டார். இவ் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.
புதுவையைப் போல தமிழகத்தில் அரசோடு மோத வேண்டிய நிலை ஆளுநருக்குக் கிடையாது. ஏனெனில் அம்மா அமைத்த அரசு இன்று பிரதமரின் பொக்கட்டுக்குள். எனவே தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புறோஹித் தனக்கு வேண்டிய மாதிரி செயற்பட்டு வருகிறார். மாநிலத்தின் பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்கிறார். அரசு அதிகாரிகளை அழைத்து பேசுகிறார், உத்தரவு போடுகிறார். தனியாக இன்னொரு அரசை நடத்தி வருகிறார். அ.தி.மு.க அரசு இவற்றைக் கண்டுகொள்வதில்லை. தி.மு.க.வும் ஏனைய எதிர்க்கட்சிகளும் காட்டும் எதிர்ப்புகளை பன்வாரிலால் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் டில்லி சொல்வதைப்போல, தமிழகத்துக்கான பா.ஜ.க.வின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருக்கிறார்.
அதன் மற்றொரு பகுதி தற்போது நிறைவேற்றப்படுவதாக திராவிட சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். தமிழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கல்வியாளர்களை அழைத்து வந்து அவர்களை துணை வேந்தர்களாக நியமிப்பதே அப்புதிய நடைமுறையாகும்.
அம்பேத்கர் தலித் வகுப்பைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சட்ட நிபுணர். வாழ்வின் இறுதிப் பகுதியில் பௌத்த சமயத்தில் இணைந்து கொண்டவர். தமிழகத்தில் அவர் பெயரில் ஒரு சட்டப் பல்கலைக்கழகம் உள்ளது. அதற்கான உபவேந்தரை வெளி மாநிலத்தில் இருந்து அழைத்துவந்து நியமனம் செய்திருக்கிறார் தமிழக ஆளுநர். சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயர் கொண்ட இவர் ஒரு பிராமணர். எந்த பிராமணியத்தை எதிர்த்து இந்து மதத்தை விட்டு அம்பேத்கர் விலகிச் சென்றாரோ அதே பிராமணியத்தைச் சேர்ந்த ஒருவரை அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழக திராவிடக் கட்சிகள் ஒரு செய்தியாகவே, ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொண்டிருக்கின்றன.
தமிழக இசைப் பல்கலைக்கழகத்துக்கு ஒரு மலையாளியை பன்வாரிலால் உபவேந்தராக நியமித்துள்ளார். இந்தியாவின் பிரதான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்தவாரம் தமிழக ஆளுநரால் உபவேந்தராக நியமனம் செய்யப்பட்டிருப்பவர் ஒரு கன்னடர். சூரப்பா என்பது அவர் பெயர். அண்ணா பல்கலைக்கழகத்தில் 68 சதவீதமான மாணவர்கள் தமிழகத்தின் பிற்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள் என்றும் 550 கல்லூரிகள் இப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது இவ்வளவு பெரிய, விசாலமான பல்கலைக்கழகத்துக்கு தமிழ் தெரியாத கர்நாடக மாநிலத்தவரான ஒருவரை உப வேந்தராக நியமனம் செய்யப்பட்டிருப்பது, தமிழகக் கல்வி வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நியமனங்கள் அனைத்தும் வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியாக செய்யப்படுவதாகவும் உள்நோக்கங்கள் கொண்டவையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
ஆனால் தமிழகக் கட்சிகளால் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமே தவிர வேறு எதுவும் செய்யமுடியாது. ஏனெனில் இந்திய சட்டங்களின் பிரகாரம் மாநிலமொன்றின் வேந்தர் ஆளுநரே. இணை ஆளுநராக மாநில கல்வி அமைச்சரும் நியமனம் பெறுபவர் பல்கலைக்கழக உபவேந்தராகவும் மூவர் பல்கலைக்கழகங்களின் மூன்று முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். இங்கே வேந்தரின் முடிவை அ.தி.மு.க.வின் இணை வேந்தர் ஆட்சேபிக்கப் போவதில்லை.
தற்போது நியமனம் பெற்றிருக்கும் மூவரும் பா.ஜ. ஆதரவாளர்கள் என்றே அறியப்படுகின்றனர். மூவருமே இந்துக்கள். காவியின் செல்வாக்கை படிப்படியாக உயர்கல்வி வட்டாரத்தில் உயர்த்துவதே இந் நியமனங்களின் நோக்கம் என்று திராவிடக் கட்சிகள் கருதுகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கான உபவேந்தர் தெரிவுக்காக 170 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் இறுதியில் மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களில் ஒருவராக சூரப்பாவை ஆளுநர் வேந்தர் என்ற தகுதி அடிப்படையில் இறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
'கிரேண்ட் டிசைன்' என்று சொல்வார்கள். வெகு நேர்த்தியாக வரையப்பட்ட திட்டம். வரைந்து உயிர்கொடுத்தது டில்லியை ஆளும் பா.ஜ.க நிறைவேற்ற உதவுவது அண்ணாவையும் திராவிடத்தையும் தன் பெயரில் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு இன்னொரு அடியாக உபவேந்தர் நியமனங்கள் அமைந்துள்ளன.