ஜோர்தான் மக்கள் மிக நேர்மையானவர்கள் என்பதை நடைபாதையில் மரக்கறி விற்கும் சிறுவர்கள் முதல் ஒட்டக்கச் சவாரி நடத்தும் அரேபியர்கள் வரை பலரிடம் பழகிப் பார்த்தபோது புரிந்துகொள்ள முடிந்தது. ஜோர்தானியர்கள் என்ற வகையில் அவர்கள் ஒருவருக்கொருவர் சலாம் போட்டுக் கொண்டனர். மேலும் தாம் ஜோர்தானியர் என்ற கர்வம் அவர்களிடம் காணப்பட்டது. பெரும்பாலான ஜோர்தானியர் தாமும் தம்பாடும் என்றே வாழ்கின்றனர்.
ஜோர்தானில் எந்தவித வன்முறையோ, இனரீதியான மோதல்களோ வேறு குழப்பகரமான சூழ்நிலைகளோ கிடையாது. அடிக்கடி வன்முறைகள் நடைபெற்றுவரும் இப் பிராந்தியத்தில் இவ்வளவு அமைதியாக ஒரு நாடா? என்று நாம் வியந்தே போனோம். இங்கே வசிப்போரில் அரைவாசிப்பேர் வந்தேறு குடிகள். பலஸ்தீன பிரஜைகளுக்கு அங்கு தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் எந்தவித சச்சரவுமின்றி சுமுகமான நடவடிக்கைகள் அமைதியாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ளவர்களின் நேர்மைக்குக் கிடைத்த பிரதிபலனே என இதைக் கூற முடியும்.
ஜோர்தானில் உள்ளவர்கள் உடல் நலத்தைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். கண்டதையும் உண்ணாமல் உணவுகளைத் தெரிவு செய்து சாப்பிடுகிறார்கள். சத்துணவுகளே உடலுக்குப் பலம் என்றும் நோய்களுக்கான நிவாரணியாகவும் அவை இருப்பதாகவும் அங்குள்ளவர்கள் நம்புகின்றனர்.
உணவு பழக்கம் பற்றி ஒருமுறை எமது வழிகாட்டி ஹனி இப்படிச் சொன்னார்:
‘தமது உணவு பழக்க வழக்கங்களினால் தான் ஜோர்தானியர் பலம் மிக்கவர்களாகவும் நோயற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்’ என்பது அவரது கூற்று. நாம் ஒரு இந்திய உணவகத்துக்கு சென்றபோது அங்கு எமக்கு மதிய உணவாக சோறும் மரக்கறி மீனுமாக சாப்பாடு வந்தது. எனினும் எம்மோடு இருந்த வழிகாட்டியும் வாகன சாரதியும் அதனைப் புதினமாகப் பார்த்தார்கள்.
கடைசி வரை அவர்கள் சோறு சாப்பிடவில்லை. மேலதிகமாக ‘அராபியன் டிஷ்’ ஒன்றை பெற்று அதனையே சாப்பிட்டனர். அன்று அவர்களின் முகமும் சரியில்லை.
எமது பிரதான உணவு அரிசிச் சோறு ஆக இருப்பது போல அவர்களது பிரதான உணவு மாமிசமாக உள்ளது. பெரிய பிளேட்டில் அரைவாசிக்கு மேல் ஒலிவ் எண்ணெய்யில் பொரித்த செம்மறியிறைச்சி, கோழி அல்லது ஏனைய மாமிச வகைகள் இருக்கும்.
இவற்றை பல வகை ‘சோஸ்’ வகைகளோடு உருளைக்கிழங்கு சேர்த்து உண்பார்கள். எமது சப்பாத்தியைப் போன்று சற்று பெரிதான அராபியன் ரொட்டிகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஒட்டகப் பாலில் தயாரிக்கப்பட்ட தயிர் போன்ற ஒரு பதார்த்தத்தில் ஒலிவ் ஒயில் ஊற்றி அதை ரொட்டி மீது தடவி சாப்பிடுகிறார்கள்.
எமது வெள்ளரி போன்று பல்வேறு காய்கள், சலாது இலை போன்ற பல்வேறு வண்ண செலட் இலைகள் என அவர்களின் உணவு அமைகிறது. நிறைய சாப்பிடுகின்றார்கள். சாப்பாட்டுக்கு முன்பு ஏதாவது ஒரு பழச்சாறு அருந்திய பின் இறுதியாக ஒரு பழச்சாறோ அல்லது கோப்பியோ குடிக்கின்றார்கள். அவர்களது வழமையான சாப்பாட்டு மெனு இதுவே.
நாம் ஹோட்டல்களிலேயே பெரும்பாலும் சாப்பிட்டதால் வீடுகளில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு எவ்வாறு அமைந்திருக்குமோ, எமக்கு தெரியாது. எனினும் அங்குள்ள கால நிலைக்கு இந்த சாப்பாடு உறுதுணையாக அமைவதாக அவர்கள் கூறுகின்றனர்.
நிறைய இறைச்சி வகை, உருளைக் கிழங்கு பொரியல், சீஸ்வகை பாலில் தயாரான உணவு என அவர்களது உணவு அமைகிறது. நாம் இங்கு இவற்றை கொலஸ்ட்ரோல் வரும் என்ற பயத்தில் கட்டுப்படுத்திக் கொள்கிறோம். அங்குள்ள கால நிலைக்கு அது ஒத்துப் போகிறது. இவற்றால் நோய் வருவதென்பது கிடையாது என அவர்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் விடாமல் புகைப்பவர்களை செயின் ஸ்மோக்கர் என்போம். விடாப்பிடி புகையர்களை நான் அங்கே சாதாரணமாகக் கண்டேன்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் உணவகங்களிலும் சிறுசிறு கடைகளில் வேலை செய்வோரும் ஹூக்கா புகைக்கிறார்கள். ஆமாம், பெண்களும்தான்! இது அவர்களுடைய கலாசாரப் பண்பு போலவே நான் பார்க்கிறேன்.
எனினும் அதனால் அவர்களுக்கு நோய் வருகிறது என்று சொல்ல முடியாது என்று எமது வழிகாட்டி சாதித்தார்.
ஒலிவ் காய்கள், ஒலிவ் எண்ணெய், சிறந்த ரக பேரீச்சம்பழம், ஒட்டகப் பால், இறைச்சி வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள், பழச்சாறு, கோப்பி என அவர்களின் அன்றாட உணவு அமைவதால் அதுவே சக்தியாகவும் உடல் உபாதைகளுக்கு மருந்தாகவும் அமைவதாக அவர்கள் நம்புகின்றனர்.
எமது சாரதி செய்யத்துடன் பேச்சுக் கொடுத்த போது அவரது சம்பளம் 300தினார் எனக் கூறினார். இலங்கை பெறுமதியின்படி 70,000 ரூபாய். எங்கள் குடும்பத்தினரின் உணவு வழக்கமும் இவ்வாறுதான் இருக்கிறது என அவர் தெரிவித்தார். அங்குள்ளவர்கள் காலையிலும் மதியமும் நன்றாக உணவு உண்பதாகவும் இரவில் வசதி குறைந்தவர்கள் மட்டுமே சாப்பாட்டைத் தவிர்ப்பதாகவும் எமது வழிகாட்டி தெரிவித்தார். அது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது.
அங்குள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். எமது வழிகாட்டியே இதற்கு சாட்சி. தமது மனைவிக்கு சற்று வயதாகி விட்டதால் அவரது அனுமதியுடன் மேலுமொரு திருமணம் முடிக்க தான் எண்ணியிருப்பதாகவும் அவர் எம்மிடம் கூறினார். அவரது இரண்டாவது மகன் திருமணமாகி தேன் நிலவுக்காக பாகிஸ்தானுக்குச் சென்றிருப்பதாகவும் அவர் கூறினார். அவர்களுக்கு பரிசுப் பொருட்களையும் அவர் வாங்கி வைத்திருப்பதாகவும் அவர் வெகு சாதாரணமாகக் கூறினார். நாம் ஒரு கலாசாரத்தில் இருந்துகொண்டு இன்னொரு கலாசாரத்தில் நிகழ்வதை சட்டாம்பிள்ளை மாதிரி இருந்து தீர்ப்பு சொல்வது சரியல்ல என்பது மட்டும் புரிகிறது.
ஜோர்தானில் நாம் 10 நாட்களைக் கழித்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளுக்குச் சென்று புதுப்புது அனுபவங்களை பெற்றோம்.
குறிப்பாக பாறைகளின் நகரமாக உலக அதிசயத்தில் இடம்பெறும் ‘பெத்ரோ’ பிரதேசம், மோயீசனின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நேபோ மலை, இயேசுநாதர் ஞானஸ்தானம் பெற்ற யோர்தான் நதிக்கரை, வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உண்டு வாழ்ந்ததாகக் கூறப்படும் இறைவாக்கினரான ஸ்நாபக அருளப்பரின் வாழ்விடப் பகுதி, அதிசய சாக்கடல், இஸ்லாமியர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதப் பிரதேசங்கள் எனப் பல முக்கிய இடங்களைக் கொண்ட நாடே ஜோர்தான்.
உண்மையில் நாம் தனியாக ஒரு பயணத்தை ஜோர்தானுக்கு மேற்கொண்டிருந்தால் இந்தளவு பிரதேசங்களுக்குச் சென்றிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே,
இப் பயணம் சாத்தியமானதற்கு காரணமான இலங்கையிலுள்ள ஜோர்தான் தூதரகம், உல்லாசப் பயணச் சபை, அதேபோன்று ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதரகம், உல்லாசப் பயணச் சபை ஆகியவற்றிற்கு நன்றி கூற வேண்டும். ஒரு புனித பயணத்துக்கு ஒப்பான இந்தப் பயணம் சாத்தியமாவதற்குக் காரணமாக இருந்த தினகரன் ஆசிரிய பீடம், மூத்த பத்திரிகையாளர் என்.எம். அமீன் ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதுவர் அப்துல் லத்தீப் லாபீர் ஆகியோர் நன்றிக்குரியவர்கள். அத்துடன் ஜோர்தான் உல்லாச பயணச்சபை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோர் எமக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பாக இருந்தனர்.
ஜோர்தான் நதிக்கரையோரமாக நாம் சென்றிருந்தபோது அங்கே கறுப்பு ஆடை அணிந்த அருட் சகோதரி ஒருவரைப் பார்த்தோம். இயேசு ஞானஸ்ஞானம் பெற்ற இடத்துக்கு அவர் எங்களை அழைத்துச் சென்றார். அங்கே செல்ல உண்மையில் அனுமதி கிடையாது. அங்கே சென்ற அவர் அங்கே இருந்த சொற்ப நீரில் கைகளை நனைத்து கைகளில் இருந்த நீரை எம்மீது தெளித்தார்.
இதை ஒரு நீர் ஆசீர்வாதமாகவே கருதினோம்.
இயேசு கிறிஸ்துவே நேரில் வந்து வழங்கிய ஆசீர்வாதமாகக் கருதி கண் கலங்கிப் போனேன்.
நான் வீட்டில் இருந்து கொழும்பு விமான நிலையத்துக்கு புறப்பட்டபோது, இந்தப் பயணத்தை மேற்கொள்ள நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி என் மனைவி என்னை வழியனுப்பி வைத்தார். அது முற்றிலும் உண்மை. (முற்றியது)