ட்ரம்ப்- ஹிம் சந்திப்பு சாத்தியமா? | தினகரன் வாரமஞ்சரி

ட்ரம்ப்- ஹிம் சந்திப்பு சாத்தியமா?

அமெரிக்க - வடகொரிய உச்சி மகாநாட்டுக்கான வாய்ப்புக்கள் சாத்தியமற்றதாகவே மாறிக்கொண்டு வருகிறது. ஆனாலும் வடகொரிய அரசியல் தலைமைகள் சிங்கப்பூர் உச்சி மகாநாட்டுக்கு செல்வதற்கான அணியினை அறிவித்துள்ளனர். அதனை ஐக்கிய நாடு சபை அங்கீகரித்தும் உள்ளது. ஆனாலும் அமெரிக்க தரப்பு மீள மீள வடகொரிய தலைமையை மிரட்டுகின்றது. இதனால் இவ்வுச்சி மாநாடு நிகழுமா என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. அதனை புரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

100 போர் விமானங்கள் பி– 52 ரக குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் எப் - 15 கே ரக ஜெட் விமானங்கள் ஆகியவற்றுடன் தென் கொரியா – அமெரிக்கா இணைந்து இராணுவப் பயிற்சிகளை கொரியக் குடாவில் மேற்கொண்டன. இத்தகைய இராணுவப் பயிற்சியை ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்றும் படையெடுப்புக்கான ஒத்திகை என்றும் வடகொரியா குற்றம் சாட்டியது.

ஆனால் தென்கொரியாவோ 1953 இல் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில் பாதுகாப்பு நோக்கத்திற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டதென குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அதனை வடகொரியா மறுத்துள்ளது. தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற நாடு எனத் தெரிவிக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை தீர்க்கப்படும் வரை தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடரமுடியாதென இரத்து செய்துவிட்டது. வடகொரியா பரஸ்பரம் கோபாவேசமான சொற்களை பிரயோகிக்கும் மரபினை மீள ஆரம்பித்துள்ளது. வடகொரியாவின் குற்றச்சாட்டுக்குப் பின்னால் நியாயமான காரணங்கள் உண்டென்பதை ஊடகங்களும் உலக நாடுகளின் தலைவர்களும் கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவுடனான தென்கொரிய இராணுவ ஒத்திகை என்பது பேச்சுவார்த்தை திகதி அறிவிக்கப்பட்ட பின்பு நிகழ்ந்துள்ளது. தென் -_ வடகொரியத் தலைவர்கள் சந்தித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்கு பின்பு நிகழ்ந்துள்ளது.

அந்தவகையில் பார்த்தால் தென்கொரிய – அமெரிக்கத் தரப்பின் விட்டுக் கொடுப்பும் நம்பிக்கையும் போலி என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதனடிப்படையில் அமெரிக்கா செயல்பட்டு வெற்றி கண்டுள்ளது. இது ஏற்கனவே அமெரிக்கர்களுடைய விருப்புக்குட்பட்ட அம்சமாக அமைந்திருந்திருந்தது. இரு கொரியாக்களும் ஒன்றிணைவது அமெரிக்காவின் நலன்களுக்கு பாதகமாக அமையும். அதுமட்டுமன்றி சீனாவின் இப்பிராந்தியம் நோக்கிய எழுச்சிக்கு வாய்ப்பாக அமையும். இதனை தகர்ப்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும்.

இதனை மேலும் புரிந்துகொள்ள அமெரிக்கா வடகொரியா தொடர்பில் கொண்டுள்ள உத்திகளை நோக்குவோம்

முதலில் நல்லெண்ண முயற்சியாக வடகொரியா தான் சிறைபிடித்த இரண்டு அமெரிக்கர்களை விடுதலை செய்தது. அவர்கள் அழைத்து வர வடகொரியா சென்ற அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ வடகொரியா தான் வைத்திருக்கும் அணுவாயுதங்களை வழங்க முன்வந்தால் அமெரிக்கா வாங்கிக்கொள்ளும் என்றார்.

இரண்டாவது, வடகொரியா அணுவாயுதங்களை முழுமையாக கைவிடவேண்டும் என ஒருதலைப் பட்சமாக அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆரம்பத்தில் அணுவாயுத பரிசோதனைகளை நிறுத்தவேண்டுமெனக் கூறிய அமெரிக்கா பின்பு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் பரிசோதனைகளை கைவிடவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டது. தற்போது அணுவாயுதமற்ற நாடாக வடகொரியா திகழவேண்டும் என நிபந்தனை விதிக்கின்றது.

மூன்றாவது, அணுவாயுதத்தை அழிக்கும் ஒப்பந்தத்தில் சம்மதிக்கவில்லை என்றால் லிபிய ஜனாதிபதி கடாபி நிலை தான் வடகொரியா ஜனாதிபதி ஹிம்முக்கு ஏற்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். ட்ரம்ப் மட்டுமன்றி உப ஜனாதிபதி மைக் பென்ஸ் வெளிவிவகார செயலாளர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அத்தகைய எண்ணத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். கடாபியின் அழிவை எடுத்துக் கொள்ளுங்கள் நாங்கள் அவரை அழிக்க அங்கு சென்றோம். அணு உடன்படிக்கைக்கு ஹிம் சம்மதிக்கவில்லை என்றால் அந்நிலை மீண்டும் ஏற்படும். ஆனால் ஒப்பந்தத்திற்கு ஹிம் சம்மதித்துவிட்டால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். இவ்வாறு ஆத்திரமூட்டும் வார்த்தைகளை ட்ரம்ப் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார். பேச்சுவார்த்தைக்கான தலைவாரக ட்ரம்ப் தன்னை காட்டிக் கொள்ளவில்லை. ஒரு அடாவடியான அயோக்கியத் தனமான சண்டித்தனம் கொண்ட தலைவராக ட்ரம்ப் கருத்துக்களை உதிக்கிறார். வடகொரியத் தலைவரை சாதாரண மனிதனாகக் கூட ட்ரம்ப் மதிக்கவில்லை என்பதை அவரது ட்விட்டர் பக்கம் தெளிவுபடுத்துகிறது. ஹிம்மை ஒரு அடிமையாக பார்க்கும் போக்கையே ட்ரம்ப் கொண்டிருந்துள்ளார்.

ஆனால் ட்ரம்ப் குறிப்பிடும் ஒரு விடயம் கவனிக்கப்படவேண்டியது. அணுவாயுத உடன்படிக்கைக்கு இணங்காது விட்டால் கேணல் கடாபியின் நிலை ஏற்படும் என்பதாகும். இது எந்தளவுக்கு சரியானது. அதற்கான வாய்ப்பு உண்டா? என்பதை நோக்குவது அவசியம்.

ஈராக் ஜனாதிபதி சதாம் உசைனும் கேணல் கடாபியும் மேற்காசியாவில் அமெரிக்க விரோதிகளாகவே விளங்கினர். ஆனால் பிற்பட்ட காலத்தில் அமெரிக்காவுடன் இணங்கிப் போக முயற்சித்தார்கள் என்பது உண்மையே. அத்தகைய இணக்கத்தில் நம்பிக்கை கொண்ட சதாம் உசைன் வீழ்த்தப்படும் போது அமெரிக்காவுடன் இராஜதந்திர ரீதியாக கடாபி செயல்பட்டார். அத்தகைய சூழலைப் பயன்படுத்திய அமெரிக்கா தனது உளவாளிகளையும், புலனாய்வையும் ஊடுருவச் செய்து கடாபியின் நிலையை பலவீனப்படுத்திவிட்டு கிளர்ச்சியை ஊக்குவித்தது. ஆனால் உசைனிடமோ, கடாபியிடமோ, அணுவாயுதமோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதமோ இல்லாதது மட்டுமன்றி அமெரிக்க ஆயுதங்களையே வைத்துக் கொண்டு அமெரிக்காவை எதிர்த்தனர். அப்போது லிபியாவுக்ேகா, ஈராக்குக்ேகா ஆதரவு வழங்க எந்த நாடும் முன் வரவில்லை.

ரஷ்யாவும், சீனாவும் பலமான நட்பு நாடுகளாக மட்டுமன்றி அமெரிக்க எதிர்ப்புணர்வைக் கொண்டுள்ளதுடன் அவற்றின் புவிசார் அரசியல் எல்லைக்குள் உட்பட்ட நாடாக வடகொரியா காணப்படுகிறது. எனவே ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிடுவது போல் ஹிம் கடாபியாவார் என்பது கடினமான இலக்கு. சாத்தியமற்ற இலக்கு என்பதை விட மிகக் கடினமான இலக்கு ஹிம் என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஹிம்முடன் ஒப்பிடும் போது சாதாமும் கடாபியும் பலவீனமான தலைவர்கள். அமெரிக்காவின் விருப்புக்கு ஆடிவிட்டு அமெரிக்காவை எதிர்த்தவர்கள். ஹிம் தொடர்ச்சியாக அமெரிக்க எதிர்ப்பு வாதியாக காட்டிக் கொண்டவர்.

கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவினாலே அல்லது அயல் நாடுகளாலோ வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் வடகொரியாவின் ஆயுத பலம். அணுவாயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்பன குறிப்பிடக்கூடிய பலமாகும். இதனாலேயே அமெரிக்கா வடகொரியாவுக்கு நுழைவதற்கு அச்சப்படுகிறது. அதற்காகவே காலதாமதப்படுத்தியது. மேலும் அமெரிக்கா தனித்து செயல்பட வேண்டிய நிலையே கொரிய விவகாரத்தில் காணப்பட்டது. மேற்காசியா போன்று கூட்டு நடவடிக்கைக்கு ஐரோப்பா தயாரில்லை என்பதுடன் ஐ.நா பாதுகாப்பு சபையிலுள்ள இரண்டு நாடுகள் வடகொரியாவுடன் உள்ளன.

ஆனால் வடகொரியாவோ அமெரிக்காவுடன் உச்சிமகாநாட்டினை நடாத்துவதற்கான சூழலை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக வடகொரியா அணுவாயுத சோதனைத்தளத்தை அழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதனை நேரடியாக கண்டு உறுதிப்படுத்த ஜப்பானிய தென்கொரிய ஊடகங்கள் உட்பட்ட ரஷ்ய, சீன ஊடகத்தினையும் அழைத்துள்ளது. இது வடகொரியாவின் நடவடிக்கையை வெளிப்படுத்துவதாகவும் பேச்சுக்களில் கவனம் கொண்டுள்ளதையும் தெரியப்படுத்தியுள்ளது. (தொடர் 22ஆம் பக்கம்)

 

Comments