யூதர்களை அழித்தொழிக்க ஹிட்லர் எடுத்த முயற்சிகளை சித்தரிக்கும் | தினகரன் வாரமஞ்சரி

யூதர்களை அழித்தொழிக்க ஹிட்லர் எடுத்த முயற்சிகளை சித்தரிக்கும்

குற்றுயிரும் குலையுயிருமாக யூதர்கள்

அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு குறுகிய காலம் என்பதால் அதற்கென நீண்டதொரு வரலாறும் கிடையாது. தமிழில் இருப்பதுபோல தொன்மையான பாரம்பரியம், பண்பாடு, காப்பியங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதற்கு ஏதுமில்லை. அவர்களின் பெருமை எல்லாம், பல நாடுகளில் இருந்து குடியேற வந்தவர்கள் ஒன்று கூடி தேர் இழுத்து, இன்று பொருளாதார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முன்னணியில் திகழ்வதுதான்! எனினும் அவர்கள் தமது வாழ்ந்த வாழ்க்கைச் சுவடுகளை வரலாறாக பாதுகாத்து வருகிறார்கள். அதன் ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாக மாநிலமான வொஷிங்டனில் அந்நாட்டின் வரலாறு பல்வேறு வடிவங்களில் பேணப்படுகின்றன. குறிப்பாக கறுப்பினத்தவர்களின் வரலாறு, யூவிஸ் மக்களின் வரலாறு, செவ்விந்தியர்களின் வரலாறு என தனித் தனியாக வரலாற்றுச் சுவடுகளை காட்சிப் படுத்துவதற்காகவே நூதனசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்டைய வரலாறுகள் மாத்திரமன்றி அமெரிக்காவின் கண்டுபிடிப்புக்களுக்கென்றும் நூதனசாலைகள் உள்ளன.

பெரும்பாலான நூதன சாலைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. நினைவிடங்களிலிருந்து திரும்பிய எம்மை நூதனசாலைகள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். எங்கு செல்லப் போகிறோம் என்பதைத் தெரிவுசெய்து எம்மைப் பார்வையிடுமாறு மார்க்கிரட் கூறினார். ‘நஷனல் எயார் அன்ட் ஸ்பேஸ்’ மியூசியத்தை முதலில் பார்வையிடுவதற்கு நாம் முடிவுசெய்தோம். அதற்குள் ‘புட் கோர்ட்’ உள்ளது என்றும் அங்கேயே மதிய உணவை எடுக்க முடியும் என்பதும் எமக்கு வழங்கப்பட்ட மேலதிக இனிப்பான தகவல்! நாமும் ஆர்வத்துடன் உள் நுழைந்தோம்.

உள்ளே நுழைந்ததும் ஆரம்பகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விமானங்கள் நவீன விமானங்கள் எனப் பலவகை விமானங்கள் முன்பகுதியிலேயே அந்தரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. முதன் முதலில் விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலம், விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய உடைகள், கருவிகள் என சகலதும் ஆரம்பத்திலேயே காண்பிக்கப்பட்டதால் எம்மை ஆர்வம் தொற்றிக் கொண்டது. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட விமானம், மனிதன் ஆகாயத்தில் பறப்பதற்கு எடுத்த முயற்சிகள் என ஒவ்வொன்றும் விளக்கமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் பற்றி தனியான காட்சிக் கூடமே அமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் வீடு பற்றிய தகவல்கள், முதன் முதலில் அவர்கள் எவ்வாறு விமானத்தைத் தயாரித்து அதில் பறந்தார்கள், முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் என்பன அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. விண்வெளி தொடர்பான தனிப்பட்ட காட்சிக் கூடம் எம்மைப் பெரிதும் கவர்ந்திருந்தது. சுமார் 2 மணித்தியாலங்கள் உள்ளே நேரத்தை செலவிட்டிருப்போம் நேரம் போனதும் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக அன்றையதினம் அதற்குள் இருந்த புட்கோர்ட் மூடப்பட்டிருந்தது. மதிய உணவுக்கு எப்படியும் வெளியே வரவேண்டிய தேவை ஏற்படவே வெளியேறினோம். வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் உணவகத்தில் மதிய உணவைப் முடித்துக் கொண்டோம்.

அடுத்து எங்கு செல்வது என எமக்குள் ஒரே குழப்பம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தை சிபாரிசு செய்ய, எம்முடன் வந்திருந்த தனேஷி, ஹொலோகோஸ்ட் மியூசியத்துக்குச் செல்வோம் என்றார். நாமும் உடன்பட்டு அதற்கு செல்லத் தீர்மானித்தோம். நான் இதற்கு முன்னர் இதுபற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஹொலோகோஸ்ட் என்றால் என்ன என தனேஷியிடம் கேட்டவாறே மியூசியத்தை நோக்கி நடந்தேன்.

ஜேர்மனியின் அதிபராகவிருந்த ஹிட்லரின் காலத்தில் ஜேர்மனியில் இருந்த யூதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப் பற்றிய மியூசியம் என விளக்கமளித்தார். இது தொடர்பில் நான் ஓரளவு கேள்விப்பட்டிருந்தேன் இதை நேரில் சென்று வரலாற்றைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமை ஆர்வத்தை மேலும் தூண்டியது.

இந்த உலகத்தில் ஆளப்பிறந்தவர்கள் என்றால் அது ஆரியர்களான ஜெர்மனியர்களே என்பது நாஸி தத்துவம். நாஸி கட்சியை ஆரம்பித்த அடோல்ப் ஹிட்லர், கடவுளால் தெரிவு செய்யப்பட்ட இனமாக யூதர்கள் உள்ளார்கள் என்ற பைபிள் வார்த்தையை ஏற்கவில்லை. யூதர்கள் ஆளப்பிறந்த அல்லது தெரிவு செய்யப்பட்ட மக்கள் கூட்டம் அல்ல. ஆரிய ஜெர்மனியர்களே ஆளப்பிறந்தவர்கள் என்ற ஹிட்லரின் அசைக்க முடியாத கோட்பாடே, அச் சமயத்தில் முக்கால்வாசி உலகை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் பேரரசின் மீதும் தனக்கு போட்டியாக வந்துவிடக் கூடிய யூத சமூகத்தின் மீதும் பயங்கர வெறுப்புணர்வாக மாறியது. இரண்டாவது உலகப் போரை அது ஆரம்பித்தது. தான் கைப்பற்றிய நாடுகளில் வசிக்கும் யூதர்களை வகை தொகையின்றி கொன்று குவிக்கவும் செய்தது. உலகில் நடந்திருக்கக்கூடிய மிகப் பெரும் திட்டமிட்ட இன அழிப்பாக யூதர்களின் மீதான ஹிட்லரின் கொலை வெறி இன்றளவும் கருதப்படுகிறது. இம் மனித அவலமே ‘ஹோலோகோஸ்ட்’ என அழைக்கப்படுகிறது.

ஹொலோகோஸ்ட் மியூசியத்துக்குள் நுழைந்ததும் அமைதி நிலவியது. மயான அமைதி என்றே அதனைக் கூறவேண்டும். பாதுகாப்புக் கடமையில் இருந்த அதிகாரிகளும் அமைதியை வலியுறுத்தினர். இரண்டாவது தளத்துக்குச் சென்றோம். இருள் சூழ்ந்திருக்க மென்மையான மின்விளக்குகள் ஒளிர சுவர்களின் இரு பக்கங்களிலும் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜேர்மனின் நாஸிப் படைகள் யூதர்களை சிறைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருப்பது, அவர்கள் பட்டினிச் சாவுக்கு முகங்கொடுத்தமை, அவர்கள் சித்திரவதைக்கு தில் அதாவது 1941 ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் யூதர்கள் என்ற ஓர் இனத்தை மாத்திரம் இலக்குவைத்து நடத்தப்பட்ட வேட்டையில் ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் மடிந்தனர். யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், குறிப்பாக ஜிப்ஸி என அழைக்கப்படும் நாடோடி இனத்தவரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். சோவியத் ஒன்றியத்தவர்,

சோவியத் போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், போலாந்து இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், சுயபால் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள், ஜெகோவா சாட்சியாளர் என்ற கிறிஸ்தவ மதப் பிரிவினர் என்போரும் கொலைக்களத்தில் பலியிடப்பட்டனர். இக்காலப் பகுதியில் 9 மில்லியன் தொடக்கம் 11 மில்லியன் வரையிலானவர்கள் நாஸிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யூதர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட தொல்லைகளும் படுகொலைகளும் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. ஆரம்பத்தில் யூதர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் அவர்களின் உற்பத்திகளுக்கு எதிர்ப்புக்கத் தெரிவிக்கப்பட்டன. படிப்படியாக யூதர்களுக்கு எதிரான யுத்தமாக அல்லது அவர்களை அழிப்பதற்கான திட்டமாக அது மாறியது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபடும் யூதர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து சரக்குத் ரயில்கள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக்கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. மிக அதிக எண்ணிக்கையான யூதர்கள் போலந்து வதை முகாம்களிலேயே கொலை செய்யப்பட்டனர்.

நாஸி படையின் கட்டளைக்கு அமைய ஜேர்மன் மாத்திரமன்றி ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த 20 ஐரோப்பிய நாடுகளில் இந்த இனப்படுகொலை இடம்பெற்றது.

இந்தப் படுகொலையின் போது கைவிடப்பட்ட பல நினைவுச் சின்னங்கள் வொஷிங்டனில் உள்ள மியூசியத்தில் பாதுகாக்கப்படுகின்றன. உயிரிழந்த ஆயிரக்கணக்கான யூதர்களின் சப்பாத்துக்கள், சிறைவைக்கப்பட்டிருந்தபோது அவர்கள் அணிந்த ஆடைகள், அவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்திய சரக்கு ரயிலின் ஒருபகுதி உள்ளிட்ட பல நினைவுச் சின்னங்களை நாங்கள் பார்த்தோம். மிகவும் உணர்வு பூர்வமான இடமாக அது காணப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கு நிறைந்திருப்பதுபோன்ற எண்ணத்தையும் எமக்குத் தந்தது. நெஞ்சு கனத்தவர்களாக ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே வந்தோம்.

எனது மனத்திரையில் இலங்கையின் இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வந்துசென்றன. ஆயிரக்கணக்கானவர்கள் சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்து, எறிகணைத் தாக்குதல்கள், நலன்புரி நிலையங்கள், பாதுகாப்புத் தரப்பினரின் தடுப்பு முகாம்கள் என பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தமை யாராலும் மறுக்க முடியாது. இலங்கையில் இடம்பெற்றது இனத்துக்கு எதிரான யுத்தம் அல்ல, பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனக் கூறப்பட்டாலும், பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்தது என்னவோ தமிழினம்தான்.

எந்தவொரு இனத்தையும் அழிப்பதற்கு அல்லது ஒடுக்குவதற்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றியில் முடியாது என்பது ஜேர்மனிய நாஸிப் படைகள் யூதர்களை அழிக்க எடுத்த முயற்சிகளின் மூலம் நிதர்சனமாகிறது. ஐரோப்பாவிலிருந்து யூதர்களை முற்றாக ஒழிக்க முயற்சித்தபோதும் தற்பொழுது யூதர்கள் இஸ்ரேல் என தனியான நாடொன்றை உருவாக்கி, மிகவும் பலமான உலக சக்தியாக மாறியுள்ளனர். இவ்வாறு ஒரு நாடு உருவாகுவதற்கு ஹிட்லரும் ஒரு காரணம் என்றால் அது தவறாகாது.

தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர்களின் போராட்டம் வெற்றிபெற்றபோதும் வெள்ளையினத்தவர்களுக்கு சமமான அந்தஸ்தை வழங்கும் வகையில் அரசியலமைப்பொன்றைத் தயாரித்து வெறுப்புக்கும், இன ஒதுக்கலுக்கும் தீர்வு அதையே திருப்பிச் செய்வது அல்ல என்பதை 25 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா உலகுக்கு உணர்த்தினார். இவ்வாறான உலகப் படிப்பினைகளை இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் பெற்றுக் கொள்வது காலத்தின் தேவையாகும்.

நினைவுகள் தொடரும்

Comments