![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2018/07/28/pg-12-1.jpg?itok=f7ZJmmlN)
அமெரிக்க -_ ஈரான் உறவு என்றுமில்லாதவாறு மோசமான நிலையை அடைந்துள்ளது. பரஸ்பரம் இரு நாட்டு ஜனாதிபதிகளும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுகின்ற ஒரு நிலை சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலக அரசியலின் இருப்பில் எதிர் எதிர் துருவங்களான ஈரானும் அமெரிக்காவும் 1979 ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய முறுகலை எதிர்கொண்டுள்ளன. இதன் நீட்சியே அணுவாயுத உடன்பாடும் அதன் பின்னரான பதிவுகளும். அமெரிக்கா _ ஈரான் இடையே எழுந்திருக்கும் தற்போதைய நெருக்கடிக்கான காரணத்தையும் அது எதிர்கொள்ளவுள்ள சவால்களை நோக்குவதும் இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.
வடகொரியா விவகாரம் தணிந்த பிற்பாடு ஈரான் விவகாரத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதன்மைப்படுத்த தொடங்கியுள்ளார். ஈரானுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிற்பாடு ஈரான் மீதான பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றது. குறிப்பாக ஈரானின் பிரதான உற்பத்தியான கச்சாய் எண்ணெய்யை உலக நாடுகள் கொள்வனவு செய்யக்கூடாது என ட்ரம்ப் பிரசாரம் செய்து வருகின்றார். இப்பிரசாரத்தின் தீவிரம் அதிகரித்த நிலையில் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஈரான் நாட்டினுடைய உலக நாடுகளின் தூதுவர்களை சந்தித்து உரையாடிய போது பின்வரும் எச்சரிக்கையை முன்வைத்திருந்தார். ஈரானுடன் அமெரிக்கா போரிட நினைத்தால் அது அனைத்து போர்களுக்கும் ஆரம்ப்போராக இருக்கும் என்றும், சிங்கத்தின் வாலைபிடித்து விளையாடதீர்கள் மிஸ்டர் ட்ரம்ப், இதன் விளைவுகள் வருத்தத்தில் தான் போய் முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு ஹசன் ரூஹானியின் போர் என்ற வார்த்தை தனித்து இராணுவ ரீதியான நகர்விற்கான எச்சரிக்கை மட்டுமல்ல. பொருளாதாரம் சார்ந்த போர் என்பதும் அதில் அடங்கியுள்ள சர்ச்சைக்குரிய விடயம் ஆகும். ஏனெனில் ஈரானுடைய பிரதான உற்பத்தியை விற்பனை செய்யாமல் தடுப்பதன் மூலம் உலகளாவிய ரீதியில் ஈரானுக்கு நெருக்கடியை கொடுக்க அமெரிக்கா முனைகின்ற அதேவேளை சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறும் உலக சந்தையில் அதன் விலையின் அதிகரிப்பை எதிர்கொள்வதற்கு ஏற்றவிதத்தில் தனது நட்பு நாடுகளை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது.
இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச மட்டத்தில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார். அண்மையில் பிரித்தானியாவிற்கான முதல் விஜயத்தை மேற்கொண்ட ட்ரம்ப் பிரித்தானிய பிரதமர் தெரசாமேயுடன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் ஈரானுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்ததோடு அதன் மீதான பொருளாதார தடையை நியாயப்படுத்தியிருந்தார். ஹெல்சிங் மாநாட்டிலில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினோடு நிகழ்த்திய உரையாடலில் ஈரானுக்கு, ரஷ்யா வழங்கும் ஆதரவை கைவிடுவதற்கான வற்புறுத்தலை முதன்மைப்படுத்தியது மட்டுமன்றி அமெரிக்க – ரஷ்யா உறவு, ஈரான் விவகாரத்தை கையாளுவதற்கான ஒரு உத்தியாக விளங்குகின்றது என்ற விமர்சனம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிற்கு விரோதமான சக்திகளோடு ரஷ்யா கொண்டிருக்கின்ற உறவு அமெரிக்காவின் தோல்விக்கான காரணங்களாக அமெரிக்காவின் புலனாய்வுத்துறை கருதுகிறது. எனவேதான் ஹெல்சிங் மாநாட்டின் தொடர்ச்சியை ட்ரம்ப் முதன்மைப்படுத்தியிருப்பதோடு ரஷ்யா ஜனாதிபதியின் அமெரிக்க வருகைக்கான அழைப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இத்தகைய நெருக்கடிக்குள் ஈரானின் உத்திகளும் இராஜதந்திர அணுகு முறைகளும் ஐரோப்பிய ஈரானிய உறவில் பலப்படுத்தியிருப்பதோடு ரஷ்யா – சீனா-, வடகொரியா- சிரியா ஆகிய நட்பு நாடுகளோடு பலமான ஒரு அணியை அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் உருவாக்கியுள்ளது. இத்தகைய அணி சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில் மட்டுமன்றி, இராணுவ வல்லமை பொருந்திய போருக்கான அடிப்படை சக்திகள் என ஈரான் கருதுகின்றது. இதனைதான் போருக்கெல்லாம் அடிப்படையான போராக அமையும் என மறைமுகமாக ட்ரம்புக்கு தெரியப்படுத்தியுள்ளார். இது மட்டுமன்றி அவ்வகை யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அந்த யுத்தத்திற்கான அடிப்படையும் பின்புலமுமாக அமெரிக்கா மட்டுமன்றி இஸ்ரேலும் அதில் முதன்மை பெறும் நாடாக விளங்கும். இதை ஈரான் ஜனாதிபதி உள்நோக்கோடு போருக்கெல்லாம் அடிப்படை என்ற அர்த்தம் பொருள்படக் கூறினார். இவ்விடயம் பற்றி பின்வரும் சில அம்சங்களை தெளிவுபடுத்தலுக்காக முன்வைக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.
ஈரானை ரஷ்யாவிடம் இருந்து விலக்கிக் கொள்வதற்கு இஸ்ரேலிய பிரதமர் இரு தடவை ரஷ்யாவிற்கு விஜயம் செய்ததோடு கடந்த ஆறு மாத இடைவெளிக்குள் பல தடவை இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி புட்டினை சந்தித்ததற்காக ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்தார். அவ்வாறே இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார வர்த்தக இராணுவ உறவுக்கான உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜெருசலேம் தலைநகராக்கப்பட்ட போதும் சிரியா மற்றும் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திய போதும் ஜனாதிபதி புட்டின் தமது பிரதிநிதி மூலம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ஏற்பட்டு இருக்கக்கூடிய இஸ்ரேலுக்கான அச்சுறுத்தலை தணிப்பதற்கு பெரும் பிரயத்தனத்தை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியை ஹெல்சிங் மாநாடு என்று குறிப்பிடுவது தவறான கூற்றாக ஒரு போதும் அமையாது. எனவேதான் அவ்வாறு ஒரு யுத்தம் ஆரம்பிக்குமாக இருந்தால் உலகப் போருக்கான அடிப்படையை ஏற்படுத்தும் என்பதில் ஈரான் ஜனாதிபதிக்கு தெளிவு உள்ளது.
எனவே, அமெரிக்கா முன்வைத்துள்ள பொருளாதார ரீதியான நெருக்கீடு என்பது ஈரானின் பொருளாதார அடிப்படையை தகர்ப்பதற்கான உத்தியாக அமைந்தாலும் அதன் போக்கினை ஈரான் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய யூனியனுடனான உறவு ஏனைய நாடுகளுடானான வர்த்தக ஒத்துழைப்புக்கள் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகவும் எழுச்சி பெறக்கூடிய வல்லமையுடைய அரசு என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. அணுவாயுத உடன்படிக்கையை வைத்துக் கொண்டு இந்த அரசியல் விளையாட்டை சுவாரஷ்யமாக ஈரான் நகர்த்தி வருகின்றது. சிரியா விவகாரத்தில் ஈரானின் அணுகுமுறை அதன் பிராந்திய வலுவை நிலைப்படுத்தியுள்ளது. மேற்காசிய மட்டத்தில் ஈரானுக்கு நிகரான சவூதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகள் இராணுவ ரீதியில் சமவலுவை நிலைநிறுத்தக் கூடிய வல்லமை அந்த நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது என்பதை உணர முடிகின்றது. ஈரான் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியிலிருந்து அமெரிக்காவிற்கு எதிரான கொள்கையை முன்நிறுத்தியது மட்டுமன்றி ஜனநாயக ரீதியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்களுக்குள்ளாலும் அதனை நிறுவியுள்ளது. அமெரிக்கா ஈராக்கை போன்று ஈரானை அணுக முடியும் என கருதுமாயின் இது அமெரிக்காவிற்கு ஆபத்தானதாக அமையும். ஏனெனில் ஈரானின் நிலையான இருப்பையும் நீண்ட இஸ்லாமிய தேசியவாதத்தை கொண்டிருக்கக் கூடிய அரசாக மட்டுமன்றி புவிசார் அரசியல் ரீதியிலும் பிராந்திய சர்வதேச அரசியலிலும் வலுமிக்க தேசமாகவும் தன்னை கட்டி வளர்த்துள்ளது. அதனால் இலகுவில் அதனை முறியடித்துவிட முடியாது.
ஈரான் ஜனாதிபதியின் இத்தகைய அறிவிப்பிற்கு பதிலளித்த அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் பின்வருமாறு ட்விட்டரில் குறிப்பிட்டார்.
அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் வன்முறை மற்றும் மரணங்களை காட்டி ஈரான் மிரட்டுவதை பொறுத்துக் கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும் இருக்கமாட்டாது எச்சரிக்கையாக இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு பதிலளிப்பது வேடிக்கையானதுதான். ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப் நினைப்பது போல் ஈரானின் பலம், அமெரிக்காவால் இலகுவில் தோற்கடிக்கக் கூடியதுஅல்ல. வடகொரியா மீது வைத்த அதே எச்சரிக்கை வார்த்தைகளை ஈரான் மீதும் ட்ரம்ப் முன்வைத்திருப்பது அமெரிக்காவின் எதிர்காலம் பற்றிய கேள்விகளை அதிகரித்துள்ளது. ஈரான் வலுவான அரசு என்பதைவிட ட்ரம்பின் வார்த்தைகள் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து வலுவற்றதாக உள்ளது. எல்லா சந்தர்ப்பத்திலும் முன்பின் முரணான வார்த்தைகளை வெளியிடுவதும் முன்வைக்கும் கருத்துக்களை பின்வாங்குவதும் பழமையான ஒரு அரசியல் மரபாக கொண்டிருக்கின்றார். இது அவரது முதிர்ச்சியற்ற தன்மையையும் போலித் தன்மையையும் வெளிப்படுத்துவதாகவுள்ளது. அவரது நகர்வுகள் ஒவ்வொன்றும் அமெரிக்காவின் நிலையான அரசியலை வேடிக்கைக்கு உட்படுத்துகின்றது. இவ்வாறு ஈராக், -ஈரான் தொடர்பாக முன்வைத்திருக்கும் கருத்துக்கள் எவையும் நடைமுறை அர்த்தத்தில் சாத்தியமற்ற தொன்றாகவே எதிர்காலத்தில் அமையும் என்ற நம்பிக்கை ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இதனால் வடகொரியாவை ஒபாமா கையாண்ட விதத்தைவிட மிக மோசமான விதத்தில் ட்ரம்பின் கையாளுகை அமைந்திருக்கின்றது என்று அமெரிக்க ஆய்வாளர்களே கருதுவது போல் ஈரான் விவகாரமும் எதிர்காலத்தில் அமையவாய்ப்புள்ளது. ஆனால் ஈரான் இஸ்லாமிய நாகரிகத்தை முன்னிறுத்தியிருப்பதும் அமெரிக்காவின் விடாப்பிடியான நெருக்கடிகளுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இதேபோன்று எதிர்காலத்தில் அமெரிக்காவின் அணுகுமுறை நீடிக்கும் என வாதிப்பது கடினமானது. இஸ்ரேலின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கான அமெரிக்காவின் பணி உண்மையான அமெரிக்க தேசியம் பற்றி உரையாடும் எந்த ஜனாதிபதியாலும் நிலையாக பேணமுடியாது.
எனவே, ஈரான் ஜனாதிபதிக்கும் அமெரிக்கா ஜனாதிபதிக்கும் இடையிலான முறுகல் என்பது அரசியல் மரபுகளோடும் பாரம்பரியங்களோடும் புரிந்து கொள்ளப்படுவது கடினமானது.
இலக்கு இல்லாத உரையாடல்களும் உணர்ச்சிவசப்படுகின்ற வார்த்தைகளும் உலக அரசியலுக்கு சாதகமான விடயம் அல்ல. இராஜதந்திர அணுகுமுறையும் அல்ல. வார்த்தைகளால் உத்திகளை வகுப்பதைவிட செயல்பாட்டினாலும் நடத்தையினாலும் உத்திகளை வகுக்கப்படுவதை அரசியல் நாகரிகத்தின் அடையாளம் ஆகும்.