வடகொரிய இராஜதந்திரமும் அமெரிக்க அரசியலும் | தினகரன் வாரமஞ்சரி

வடகொரிய இராஜதந்திரமும் அமெரிக்க அரசியலும்

வடகொரிய – அமெரிக்க அரசியல் நகர்வுகள் உலக அரசியலில் புதிய அத்தியாயங்களை ஏற்படுத்துகின்றன. அதிலும் வடகொரிய தலைவர் கிம் இன் நடவடிக்கைகள் அதிகம் பிரமிப்பூட்டுவதாகவும் அரசியல் முதிர்ச்சியை காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இவரது நடத்தைகள் ஒவ்வொன்றும் உலகத் தலைவர்களுக்கு பாடமாக மாறிவருகின்றது. மறுவளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வேடிக்கையான பதிலாகவே இரு நாட்டு உறவைப் பற்றியும் உரையாடி வருகின்றார். வடகொரிய – அமெரிக்க புரிதலில் ஏற்பட்டுவரும் பிந்திய அபிவிருத்தியை அறவிடுவதே இக்கட்டுரையின் வெளிப்பாடாகும்.

முதலில் வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் ரியோங் - ஹோ ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாடிய போது தெரிவித்த கருத்துக்களை அவதானிப்போம்.

வடகொரியா மீது விதிக்கப்பட்டு வரும் தொடர் தடைகள் அமெரிக்கா மீதான அவநம்பிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தங்கள் மீது ஐ.நா சபை மற்றும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள் விலக்கப்பட வேண்டும் என்று ரி- யோங் மேலும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பொதுச்சபையில் தெரிவிக்கையில் அணுவாயுதங்களை கைவிடுதலுக்கும் அமெரிக்காவின் வற்புறுத்தல் கலந்த அணுகுமுறையே காரணமாகும். சமூகத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளுக்கும் இந்த அணுகுமுறையே காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் செயல்பாட்டின் மீது நம்பிக்கை ஏதும் இல்லாமல் எங்களது தேச பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது. இந்நிலையில் எங்கள் மீதான தடைகளை விலக்குவற்கு முன்னரே நாங்கள் அணு ஆயுதங்களை கைவிடுவதென்பது சாத்தியமில்லாத விடயமாகும். எங்களைப் பற்றி சரியாக அறியாதவர்கள் வடகொரியா மீது விதிக்கபடும் தடைகளால் எங்களது செயல்பாட்டை முடக்கிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள் என அவர் ஒரு எச்சரிக்கை கலந்த உரையை ஆற்றியிருந்தார்.

இதுவே வடகொரியத் தலைவர்களின் நிலைப்பாடாகும். எந்த ஆட்சியாளரும் தனது தேசத்திற்கு பாதுகாப்பில்லாத சந்தர்ப்பத்தில் சமரசத்திற்கு செல்ல முடியாதென்பதை தெளிவாக ரி –யோங் ஐ.நாவில் தெரிவித்துள்ளார். அணுவாயுதத்தை கைவிடுவதென்பது வடகொரியாவின் தற்கொலைக்கு ஒப்பானதாக அமையும் என்பது இப்பத்தியில் பல தடவை வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம் வடகொரியா இரண்டு இராஜதந்திர நகர்வுகளை முதன்மைப்படுத்தியுள்ளது.

01. அமெரிக்காவின் எதிர்பார்க்கையைப் போன்று உடனடியாக அணுவாயுதத்தை கைவிட முடியாது என்பதாகும். வடகொரியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத எந்த சமரசத்திற்கும் வடகொரியா செல்லாது என்பதை தெளிவுபடுத்தியது. அத்தகைய உத்தரவாதமும் வடகொரியாவின் தேசபாதுகாப்புக்கு பங்கமில்லாதது மட்டுமன்றி அதன் பங்கமில்லாததன் தன்மையின் எல்லையை வடகொரியரே தீர்மானிப்பர் என்பதாகவுள்ளது.

இதனால் அணுவாயுதத்தை கைவிடுவதென்பது சாத்தியமற்றது என்பதை அமெரிக்க உணர வேண்டும் என்பதற்காகவே அவர் ஐ.நாவில் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் உரை சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டதுடன் அதற்கு மாற்றீடாக அமெரிக்காவால் உரையாற்ற முடியாத நிலையை ஏற்படுத்துவதாகவும் அந்த உரை அமைந்திருந்தது.

எனவே, ரி-யோங் இனுடைய ஐ.நா செய்தி மிகத் தெளிவாக திட்டமிட்டப்பட்டு கையாளப்பட்டதென்றாகும்.

02. அமெரிக்கா இதுவரை அணுவாயுதத்தை கைவிட்டால் மட்டுமே பொருளாதாரத்தடை தளர்த்தப்படும் என்ற வாதத்தினை உடைத்து செயல்பட வைத்துள்ளது. அதாவது பொருளாதாரத் தடை விலக்குவதுடன் வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட வேண்டும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் மட்டுமே அணுவாயுதத்தை கைவிடுவது பற்றி சிந்திக்க முடியும் என்பது பற்றி தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அணுவாயுதத்தை கைவிடுவதற்கும் வடகொரியா மீதான தடைகளுக்கும் உறவிருப்பது போல் வடகொரியா மீதான தடைகளுக்கும் வடகொரியாவின் தேசிய பாதுகாப்புக்கு அமெரிக்க மற்றும் ஐ.நா தரப்பிடமிருந்து தெளிவான உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்பதாக உள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சவால்விடும் அம்சமாக வடகொரியாவின் நடவடிக்கை அமைந்துள்ளது. ஆனால் கடந்தகாலம் போன்று எச்சரிக்கைகளோ, தாக்குதல் நடவடிக்கைகளையோ உடனடியாக அமெரிக்காவால் மேற்கொள்ள முடியாது. இத்தகைய முடியாத நிலைக்கு அமெரிக்காவை வடகொரியா தள்ளியுள்ளது. இது ஒரு சிறப்பான இராஜதந்திர அணுகுமுறையாக உள்ளது. வடகொரியத் தலைவர்கள் மிகத்துல்லியமாக அமெரிக்காவை நகரமுடியாது கையாளுகின்றார். நாலாபக்கமும் சுவர் எழுப்பிவிட்டு அடைக்கப்பட்ட நிலையே அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

இப்போது அமெரிக்காவின் திசையில் வடகொரியா பயணிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கப் பாணியில் வடகொரியா செயல்படுகின்ற போக்கு அமெரிக்காவின் அணுகுமுறைகளுக்கு ஆபத்தானதேயாகும். அமெரிக்கா நெருக்கடிகளை அதிகரிக்க பதில் வடகொரியாவும் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும். அது இராணுவ ரீதியானதே. மாறாக ஐ.நா ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமெரிக்காவின் வடகொரியா மீதான நெருக்குவாரத்தை இல்லாமல் செய்வதே நோக்கமாகும்.

அணுவாயுதத்தை வைத்துக் கொண்டு பேச்சுக்களை தொடக்கியது போல் அடுத்த கட்ட நகர்வுகளையும் வடகொரியா எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது. வடகொரியாவைப் பொறுத்தவரை அணுவாயுதம் ஒருபேரம் பேசல் சக்தியாகும். அதனை முதன்மைப்படுத்திக் கொண்டு உலக வல்லரசுகளை ஈர்ப்பதும், தனது பொருளாதார இராணுவத் தேவைகளை நிறைவு செய்வதுமாக அதன் செயல்பாடுகள் எதிர்காலத்தில் அமைய வாய்ப்புள்ளது. அதற்கான இராஜதந்திரக் களத்தை சிங்கப்பூரில் திறந்துவிட்ட கிம் படிப்படியாக உலக அரசுகள் ஒன்றிணையும் அமையத்திலும் அதனை பிரஸ்தாபித்துள்ளது. ஐ.நாவின் பொதுச்சபை என்பது வல்லரசு அல்லாத நாடுகளின் இராஜதந்திரக் களமாகும். அதனை சரிவரப் பயன்படுத்தும் அரசுகளின் அரசியல் பொருளாதார இராணுவப் பலமே வல்லரசுகளுக்கு சவாலாக மாறுவதுண்டு.

அந்த வகைக்குள் வடகொரியாவின் இராஜதந்திர உத்தி மிக சரியான இடத்தில் சரியான சந்தர்ப்பத்தில் மேலெழுந்துள்ளது. ரி.யோங்ன் ஐ.நா பொதுச் சபை உரையாடல் தந்திரமும் எச்சரிக்கையும், பலத்தின் உணர்வையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. தேசிய பாதுகாப்புக்கு நிகரான உத்தரவாதம் என்பதை அந்தந்த அரசுகள் தான் வரையறுக்குமென்பது அரசியலின் பொதுநோக்கமாகும். ரி – யோங்ன் உரை அதிக செய்திகளை உலகத்திற்கு உணர்த்தியுள்ளது. அமெரிக்கர்கள் தவறான கணிப்புடன் வடகொரியாவை அணுகியுள்ளார்களா என சந்தேகிக்க தோன்றுகிறது. ஒரு தேசத்தின் தலைமையும் அதன் உபாயங்களும் புத்திசாதுரியமாக அமைய வேண்டும். அதற்குள்ளேயே வடகொரியர்களது எண்ணம் வரையறுக்கப்பட்டு நிகழ்ந்து வருகிறது.

வடகொரியர் இப்படியெல்லாம் சிந்தித்து செயல்படும் போது அமெரிக்க ஜனாதிபதி வடகொரியாவைப் பற்றிய மிகப் பிந்திய பதிவுகள் என்ன என்பதை பார்த்தால் அமெரிக்க மேலாதிக்கவாதம் எப்படியுள்ளது என்பதை உணரலாம்.

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் தனது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றினார். அந்த உரையில் வடகொரியத் தலைவர் கிம்முடன் தான் காதலில் விழுந்துவிட்டதாகவும், அவர் அழகான கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவை அற்புதமான கடிதங்கள், நாங்கள் இருவரும் காதலில் விழுந்துவிட்டோம் என சுவாரஸ்யமாக பேசியுள்ளார். உலகத்தில் முதல் தர வல்லரசின் முதல் தர மனிதனின் உரையின் சாரம் சுவாரசியமாக அமைந்தாலும் அமெரிக்க தலைமைக்கு அழகில்லாத செய்தியாகும். மறுபக்கத்தில் வடகொரியாவின் திட்டங்களும் உபாயங்களும் தேச நலனை நோக்கி பயணிக்க அமெரிக்க ஜனாதிபதியோ சுவாரசியமாக பேசி காலத்தினை வீணடிக்கிறார். இது அமெரிக்க பலவீனத்தை காட்டுகிறதா அல்லது தலைமையின் பலவீனமா என்பது பிரதான கேள்வியாகும்.

வடகொரியா விடயத்தில் மட்டுமல்ல ஈரான், சிரியா நாடுகளின் விடயங்களிலும் அமெரிக்காவின் அணுகுமுறை தோல்வியை நோக்கியதாகவே உள்ளது. ட்ரம்ப் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றார். தந்திரமாக நகரும் விடயங்களில் எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு அதனை பலவீனப்படுத்துகின்றார். அதில் ஒன்றே வடகொரிய விவகாரமும் அமெரிக்காவின் போக்கும்.

எனவே, வடகொரியா அணுவாயுதத்தை முன்னிலைப்படுத்தி இரண்டாம் கட்ட இராஜதந்திர நகர்வுக்கு சென்றுவிட்டது. ஐ.நா பொதுச்சபையில் ரி- யோங்ன் உரை மிக தந்திரமானது. வடகொரியாவின் இராஜதந்திரத்தை உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ள உரையாகவே கொள்ள வேண்டும்.

 

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம் யாழ்.பல்கலைக்கழகம்

 

Comments