அமெரிக்காவின் உத்திகளை முறியடிக்கும் தந்திரம் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்காவின் உத்திகளை முறியடிக்கும் தந்திரம்

ன்றைய உலகப் பொருளாதாரம் உற்பத்தியை விட வர்த்தகத்திலேயே தங்கியுள்ளது. வர்த்தகமே போட்டிக்கான அரசியல் பொருளாதாரமாக உள்ளது. அரசுகளது வர்த்தக உத்திகளே பொருளாதார உத்தியாகப் பார்க்கப்படுகின்றது. வரி அறவீடு மட்டுமன்றி வரியற்ற பொருளாதாரமும் அதிக வரி அறவீட்டுப் பொருளாதாரமும் போட்டித் தன்மை பெற்றதாக மாறியுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் பதிலுக்கு பதில் வரி அறவீட்டினை பல மடங்காக்கிக் கொண்டு பரஸ்பரம் இரு நாட்டுக்குமாக பரிமாற்றத்தை நிராகரித்து வருகின்றன. அண்மையில் சீன அமெரிக்கப் போட்டியின் உச்சமான வெளிப்பாடுகள் உலக நாடுகளை ஆபத்துக்குள் இட்டுச் செல்லுமென உலக வங்கி எச்சரித்திருந்தது. இந்த சூழலில் சீனாவின் உத்தி அமெரிக்காவின் அதிக வரிக்கு மாற்றீடான தந்திரோபாயத்தை ஆரம்பித்துள்ளமை தெரிய வருகிறது. அதனை விரிவாக நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சுமார் 172 நாடுகளின் தலைவர்களையும் தொழில்துறை மற்றும் வணிகத்தினரையும் சர்வதேச அமைப்புக்களையும் கொண்ட பெரும் பிரமாண்டமான சர்வதேச இறக்குமதி பொருட்கண்காட்சி ஒன்றினை சீனா ஷங்காய் நகரில் நிகழ்த்தியுள்ளது. China International Import Export (CIIE) எனும் தேசிய கண்காட்சி எனும் தேசிய கண்காட்சி இம்மாதம் 5 10 வரை நிகழ்ந்துள்ளது. இதில் இரண்டு இலட்சம் பார்வையாளர்களும் 2900 மேற்பட்ட காட்சிப்படுத்தல்களும் 140 நாடுகளும் கலந்து கொண்டுள்ளன. இது உலக நாடுகளுக்கான சர்வதேச வர்த்தகத்தினை விருத்தி செய்வதற்கான பங்கெடுப்பினை அதிகரிப்பதற்கான தளத்தினை திறந்து வைப்பதே சீனாவின் நோக்கமென்பது சீன ஆட்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும் சர்வதேச உற்பத்திகளை காட்சிப்படுத்தவும் அதற்கான ஒத்துழைப்பை சீனா வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனூடாக பொருளாதார உலகமயப்படுத்தலை Economic Globalisation ஊக்குவிப்பதே சீனாவின் நோக்கமாகும். மேலும் உலக பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன் வர்த்தகத்திற்கான வாய்ப்புக்களை பலப்படுத்துவதையும் இலக்காக கொண்டு சீனா செயல்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய சகாப்தத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலம் எனும் முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கண்காட்சியில் சீன நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் நீண்ட உரை ஒன்றினை தொடக்க விழாவில் ஆற்றியிருந்தார். சீனா தனது சந்தையை உலகத்திற்கு திறந்து வைக்கும் மிக முக்கிய கொள்கையுடன் புதிய சுற்று தொடக்கமாக இக்கண்காட்சி அமைந்துள்ளது. உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான வேகத்தை தருவதாக இது அமையும். வெளிப்படையாக உலகளாவிய பொருளாதாரத்தை கட்டமைக்க கூட்டு முயற்சிகள் அவசியமானவை என்றார். மேலும் அவர் குறிப்பிடும் போது, அனைத்து நாடுகளும் ஒரு தலைபட்சமான பாதுகாப்பை எதிர்த்து செயல்பட வேண்டும். ஒரு தலைபட்சமான பாதுகாப்புவாதம் உலகளாவிய வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இக்கண்காட்சி சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு உறுதியளிக்கின்றது. உலகத்திற்கான சீனாவின் கதவுகள் மூடப்படாது என்றுமே திறந்திருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இக்கண்காட்சியில் ஜப்பானிய றோபோ முதல் தென் சூடானின் கைவினைத் தயாரிப்புப் பொருட்கள் வரை குவிந்திருந்தமை கவனிக்கத்தக்கது. அதாவது பல்வேறு தரத்திலான பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சீன ஜனாதிபதியின் உரையில் சுட்டிக் காட்டப்பட்ட விடயங்களில் பிரதான செய்தியாக அமைத்திருப்பது.

ஒரு தலைப்பட்சமான பாதுகாப்பு நடவடிக்கையால் உலகளாவிய வளர்ச்சி பாதிக்கப்படுகின்றமை உலகப் பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான கூட்டு முயற்சிகள் அவசியம்.

என்ற இரண்டு கருத்துக்களும் முதன்மையானதாக உள்ளன. இரண்டுமே அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலானதென்பதை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் சீனப் பொருட்களுக்கான வரி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அம்சம் மட்டுமன்றி மெக்ஸிக்கோவுக்கெதிரான சுவரெழுப்புதலும், ஈரான் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளும் உலகளாவிய ரீதியில் பொருளாதார பலத்தை பாதிப்பதாகவே உள்ளது. இது உலகளாவிய வளர்ச்சிக்கு தடையான சுவர்களாக உள்ளன. அதாவது சீனாவின் பொருளாதார உலகமயவாக்கலுக்கு தடையாக உள்ளது என்பதே அவரது வாதமாகும். ஒரே சுற்று ஒரே பாதையின் இன்னோர் கட்டமாகவே சீனாவின் வர்த்தக கண்காட்சி அமைந்துள்ளது.

இரண்டாவது விடயம் அரசுகளின் தனிப்பட்ட பாதுகாப்பு எப்படி உலகளாவிய வளர்ச்சியை பாதிக்கின்றது என்பதுவும் அமெரிக்கா சார்ந்த கருத்தேயாகும். ஏனெனில் அமெரிக்கா தனது பாதுகாப்புக்கான வேலிகளை அமைப்பதுவும் நாடுகளுடன் மோதுவதும் அச்சுறுத்துவதும் உலகளாவிய வர்த்தகப் பாய்ச்சலுக்கும் ஏற்றுமதி இறக்குமதிக்கும் ஆபத்தானதே ஆகும். அதனை எதிர்கொள்வதற்காகவே அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென சீனா கருதுகின்றது.

இதன் மூலம் சீனாவின் வர்த்தகம் எழுச்சியடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சீனாவே வர்த்தகத்தில் உலகளாவிய ரீதியில் முதன்மை பெற்று வருகிறது. கடந்த தசாப்தத்திலேயே இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்ட சீனா நிலையான வளர்ச்சிப் போக்கினை கொண்டிருக்கிறது. கடந்த தசாப்தம் முழுவதுமே சீனாவின் உலகளாவிய வர்த்தகப் பங்களிப்பு இரண்டாவது நிலையிலேயே காணப்படுகின்றது. இது 2040 இல் முதலாவது நிலையை தொடும் என பொருளியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். சீனாவின் இறக்குமதியும் உலகளாவிய தரத்தில் இரண்டாவது நிலையிலேயே காணப்படுகின்றது. சீனாவின் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேவைகளின் மதிப்பீடு 30 டிரில்லியன் அமெரிக்க டொலர் என்பது கவனிக்கத்தக்கது.

உலகில் சீனாவின் சந்தைக்கான பங்களிப்பு முதன்மையானதாகவே உள்ளது. சீனாவின் சந்தையை நோக்கிய உலகளாவிய நகர்வு அதிகரிப்பதென்பது அமெரிக்காவின் உபாயத்திற்கு பதிலீடானதாகும். அத்தகைய சந்தையின் வாய்ப்புக்களை வர்த்தக கண்காட்சி அதிகரிக்க செய்துள்ளது. அமெரிக்காவை நோக்கிய சீனாவின் உற்பத்திகளும் பிற தேசங்களை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் அதிக வரி அறவீட்டை தகர்ப்பதற்கான உத்தியாகவே வர்த்தக கண்காட்சி விளங்குகிறது.

பங்கெடுத்த நாடுகள், பங்கெடுப்பாளர்கள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை நோக்கும் போது புதிய சந்தைகளை நோக்கிய நகர்வுக்கான வாய்ப்புக்களாகவே அமைந்துள்ளது. அமெரிக்கா உலக நாடுகள் மீது கடைப்பிடிக்கும் உத்திகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளும் நிறுவனங்களும் சீனாவை தேர்ந்தெடுக்க இக்கண்காட்சி முதலீடாக அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி புதிய தொழில்நுட்பத்தினூடாக நுகர்வாளனின் தேவைகளை திருப்திப்படுத்துதல், பலமான நகரக் கட்டமைப்பையும், உத்தரவாதப்படுத்தப்பட்ட நகர்வையும் எதிர்கால வேலைவாய்ப்புக்களையும் பகிரப்பட்ட எதிர்காலம் எனும் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தொனிப்பொருளையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நிறுவனங்களையும், தொழில் முனைவோரையும், நாடுகளின் தலைவர்களையும் கவரும் விதத்தில் கண்காட்சி கட்டமைக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் உலகத்தை ஷங்காயில் ஒன்றிணைப்பதில் ஜின் பிங் வெற்றி கண்டுள்ளார்.

அமெரிக்கர்கள் போடும் திட்டங்களுக்கும் உபாயங்களுக்கும் பதிலீடு வரைந்து கொண்டே சீனா இயங்குகிறது. மிக நீண்டகாலமாக பிரித்தானியாவினதும், அமெரிக்காவினதும் உலகமயவாக்கத்திற்குள் இயங்கிய உலகம் தற்போது சீனாவின் பொருளாதார உலகமயவாக்கத்திற்குள் அகப்பட்டுள்ளது. உலகமயவாக்கம் ஏதோ சொல்லாடலில் பொதுமைப்படுத்தப்பட்டதேயன்றி நடைமுறையில் பனிப்போருக்கு முன்பு பிரித்தானியா மயவாக்கத்தினை உலகமயவாக்கம் என்றும் பனிப்போருக்கு பின்பு அமெரிக்கமயவாக்கத்தை உலகமயவாக்கம் என கருதிய உலக நாடுகள் தற்போது சீன மயவாக்கத்தை உலகமயவாக்கம் எனக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் மயவாக்கலானது அதிகம் பொருளாதார மயவாக்கமாகவே அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் எத்தகைய பரிமாணத்தை பெறுகின்றதோ, ஆனால் தற்போது வர்த்தகத்தினையும் சந்தையையும் முன்னிறுத்திக் கொண்ட ஒரு பொருளாதார மயவாக்கம் நிகழ்கிறது. அது முழுமையாக சீனமயவாக்கமாகவே பரிணமிக்க வாய்ப்புள்ளது.

எனவே அமெரிக்க சீனப் வர்த்தகப் போட்டி சீனாவை புதிய திசையில் நகர்த்தியுள்ளது. சீனாவின் வெற்றிகரமான பாய்ச்சல் முழுமையான உலகம் தழுவிய கட்டமைப்பையும், உலகளாவிய பொருளாதார வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது. இது அமெரிக்காவின் சீனா மீதான தடைகளை மட்டுமல்ல முழு உலகத்திலும் அமெரிக்கப் பொருளாதார - இராணுவக் கொள்கைகளுக்கு சவாலானதாகும். அமெரிக்காவின் பொருளாதார - இராணுவ பாதுகாப்புக்கான நாடுகளையும் அது சார்ந்த அமைப்புக்களையும் ஜிங்பின் உரை தகர்க்க முயலுகிறது. சீனாவை மையப்படுத்திய உலகளாவிய கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கான கட்டமாகவே இதனை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

உலகப் போட்டியானது பதிலீட்டு பொறி முறைக்குள்ளால் வெற்றி கொள்ளப்படுவது வழமையானது. தற்போது அமெரிக்கா சீனா எனும் போட்டி பதிலீட்டை நோக்கி பயணிக்கின்றது. இது ஒரே சுற்று ஒரே பாதையை விடவும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது.

ஆனால் அத்தகைய சீனாவின் தந்திரோபாயத்தை இத்தகைய வர்த்தக கண்காட்சி வெற்றி கொள்ளச் செய்யும். மிகப்பிரமாண்டமான கண்காட்சியும் அதற்கான வெளிப்படுத்தலுமாகும். அந்நிகழ்வுக்கான ஒழுங்கமைப்பும் மிகப் பிரமாண்டமானதாக அமைந்துள்ளது. எனவே இது ஒரு புதிய சகாப்தம். எதிர்கால உலகத்திற்கான புதிய உபாயங்களுடன் சீனா உலகத்தை நகர்த்துகின்றது. இதனால் அமெரிக்காவின் அரசியல் - பொருளாதார இராணுவத்திற்கான நெருக்கடிகளே அதிகரிக்கும்.

 

 

 

Comments